த்தை பையன் கல்யாணத்துக்கு போக நெனச்சேன், முடியாம போச்சு. ஆறு மாசம் கழிச்சு ஊருக்கு ஒரு வேலையா போகவேண்டி வந்தப்ப ஒரு எட்டு அவனையும் பாத்துட்டு போவோமேன்னு ஒரு நெனப்பு வந்துது. வெளியூருக்கு பொழப்பத்தேடி போனவங்க சொந்தபந்தங்கள பாக்குறது குதிரகொம்பா போயிடுது. லீவு, சம்பளம், போக்குவரத்து செலவுன்னு கணக்குப் போட்டு உறவாட வேண்டிய காலமாருக்கு. சரி விடுங்க நாமே வேற எங்கேயோ திசைமாறி போறோம். (அத்தை வீட்டுக்கே போவோம்.) நடக்குற தூரந்தானே வழியில பிள்ளகுட்டிய பாத்து பேசிக்கிட்டே நடந்து போவோமேன்னு பயணப்பட்டேன்.

அத்தை வீட்டு வாசல்ல என்ன வரவேத்தது புத்தம் புது புல்லட்டு பைக்கு. புல்லட்டு பெரியகோயில் நந்திபோல நச்சுன்னு நின்னுச்சு. புல்லட்டு பளிச்சுன்னு பளபளப்பா இருந்தத பாத்தா புதுமாப்பிள்ளை சீதனமுன்னு யாரும் சொல்லாமலே புரிஞ்சு போச்சு.

வீட்டுக்குள்ள யாரையும் காணோம். பின்னாடி மாட்டுகொட்டாயி பக்கம்தான் பேச்சுக்குரல் கேட்டுச்சு. வீட்டுக்குள்ள ஃப்ரிஜ்ஜு, வாசிங்மிஷின், கிரைண்டரு, மிக்சி இப்படியான பொருளுங்க எல்லாம் பார்சல் பெட்டி பிரிக்காம மரத்தால செஞ்ச சாப்பாட்டு மேசை மேல (இதுவும் புதுசு) அடுக்கிருந்துச்சு.

வீட்டுக்குள்ள ஆளு வர்றதுகூட தெரியாமெ கன்னு போடும் பசுமாட்டுக்கு குடும்பமே பரபரப்பா வேல செஞ்சுட்டுருந்தாங்க. விருந்தாளிய உபசரிக்கிற நெலமெ அங்கயில்ல. நானும் கூடமாட கன்னுகுட்டிக்கி கொழும்பு கிள்ளி வாயில வயல (கோழைசளி) எடுத்து ஒரு வழியா கன்னுகுட்டிய எழுப்பி நிக்க வச்சுட்டுதான் எல்லாரும் வாசப்பக்கம் வந்தோம்.

புதுபொண்ணு காப்பி குடுத்தா. புதுமாப்பிள்ள கல்யாணத்துக்கு வரலன்னு வருத்தப்பட்டான்.

“அப்பறம்! என்னடா புல்லட்டு புதுமாப்பிள, மாமியார் வீட்டு விருந்தெல்லாம் முடிச்சுருச்சா” புல்லட்ட சொல்லி அவன முன்னிறுத்துனதும் கழுத்துல கெடக்கும் தங்கசெயின விட பளிச்சுன்னு சிரிச்சான். “என்னடா நம்ம பக்கங்கூடவா புல்லட்டல்லாம் சீதனமா குடுக்குறாங்க?”

“காரே குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க நீ புல்லட்ட பெரிசா பேசுற. நம்ம ஊருக்குள்ளேயே மூணு நாலு புல்லட்டுக்கு மேல வந்துருச்சு. என்ன ஒன்னு புல்லட்டுன்னா மாப்பிள்ள ஒரு லெவல்ல இருக்கனுன்னு எதிர்பாக்குறாய்ங்கெ”.

“அப்ப கல்யாண சந்தையில புல்லட்டு ஸ்டாட்டாயிடுச்சுன்னு சொல்லு. இருவது வருசத்துக்கு முன்ன எங்கல்யாண காலத்துலதான் வண்டின்னு ஒன்னு ஆரம்பிச்சுது. அப்பெல்லாம் அங்கொன்னும் இங்க்கொன்னுமா அதுவும் டிவிஎஸ்-50தான் வாங்கிக் குடுப்பாங்க. அப்பறம் சின்ன வண்டி (டிவிஎஸ் 50) அந்தஸ்தா இல்ல பெரியவண்டின்னு ஆச்சு. பிறகு பெருசுலயும் மாடல் சொல்ல ஆம்பிச்சாய்ங்கெ. இன்னைக்கி புல்லட்டு வரைக்கும் வந்து நிக்குதா! அடே…..ங்கப்பா”.

“அன்னைக்கி ஆரம்பக்கட்ட மொய்யி அம்பது ரூவாயா இருந்துச்சு இன்னைக்கி ஆயிரம்ரூவா வரைக்கும் வந்துருச்சு. சின்னவண்டி பெரிய வண்டியா மாறுனதுல என்ன ஆச்சர்யம்.”

”என்னடிம்மா ஒம்பொண்ணுக்கு வண்டி கேப்பாங்களோன்னு பயமெடுத்துகிச்சா. வந்ததும் வராததுமா வண்டியபத்தி விசாரண போட்ற.” என்ன வம்புக்கிழுத்த அத்தை, மகன மாடுபுடிச்சு கட்ட அனுப்பினா.

“அதுக்கில்லத்த வண்டி இல்லாமெ கல்யாணம்கற பேச்சுக்கே எடமில்லாமெ போச்சே?”

“ஆமாமா! வேலைக்கி போனாலும் வெவசாயம் பாத்தாலும் மாடு மேச்சாலும் மீச முறுக்குற சாதியில வண்டி வாங்கி வச்சாதான் கவுரவம்னு ஆகிப்போச்சு. மாப்பிள்ள கெவுருமெண்டு உத்தியோவம், பெரிய வேலை, இல்ல பம்பு செட்டோட அஞ்சேக்கரு, பத்தேக்கரு நெலமிருக்கணும். அதுக்குத்தக்கன வண்டியோட தினுசு மாறும். வசதி வாய்ப்பே இல்லேன்னாலும் நகநட்ட கொறச்சுக்கிட்டு வண்டி வாங்கி வக்கிறாங்க. மத்த சாதியில ஒன்னுரெண்டு இருக்கப்பட்டவ மட்டும்தான் வாங்கி வக்கிறான். இல்லாதபட்டவெ கூலி வேல பாத்துகிட்டு கவுரவம் பேசிட்டு திரிய முடியுமா? அடுத்த சோலிய பாத்துட்டு போயிட்றான். ஆனா ஒன்னு எந்த சாதியாருந்தாலும் கல்யாணம்னா பேச்சு பேசயில வண்டி பத்தி கட்டாயம் பேசுறாய்ங்கெ.

பசங்க இந்த வண்டிதான் வேணும்னு சொல்லி அனுப்புரானுவ.. இல்ல வண்டி வாங்குற அன்னைக்கி மாப்பிள்ளயவே கடைக்கி கூட்டிட்டு போயி புடிச்சதா வாங்கித்தாராங்க. வண்டிய மாப்பிள்ள பேருலேயே எடுக்கவும் செய்றாங்க. வண்டிக்கி பதிலா ரெண்டு பவுன சேத்து வாங்கிட்டாலாவுது அவசர ஆத்தரத்துக்கு அடகு வச்சுக்கலாம். இப்ப உள்ள பயலுவல்லாம் பொண்டாட்டி வரப்போரான்னு சந்தோசப்பட்றாங்களோ இல்லையோ வண்டி வரப்போதேன்னுதான் சந்தோசமே.

நீ நாலு நல்லது கெட்டதுக்கு வந்து போனாதானே ஊரு நடப்பு புரியும். எங்க வந்தா செலவாயிரும்னு லீவு கெடைக்கல ரயிலு கெடைக்கலன்னு சாக்கு சொல்ற”

“ஆத்துல தண்ணி வல்ல. அண்ணாந்து பாத்தா மழையுமில்ல. வயக்காடெல்லாம் வறண்டு கெடக்கு. ஆனா ஊருக்குள்ள வருசா வருசம் வஞ்சகமில்லாமெ திருவிழா நடத்துறிங்க. புல்லட்டு நகநட்டுன்னு கல்யாணம் பண்றீங்க. எப்புடின்னுதான் எனக்கு புரியல.”

“ஊருக்கூரு நெறையா பசங்க வெளிநாடு மெட்ராஸ்சுன்னு வேல பாக்குறாய்ங்க. அவங்கெ ஒண்ணு சேந்து திருவிழா நடத்துறாய்ங்க. எம்மருமகளோட அண்ணெ சிங்கப்பூர்ல டிரைவரா வேலபாக்குது. அவங்கப்பா வெவசாயம் பாத்துகிட்டே லாரி செட்டுக்கு வேலைக்கி போறாரு. வீட்டுல நாலு கறவமாடு நிக்குது. அதெல்லாம் ரெண்டு மூணு வருசத்துல கடனடச்சுரலாம். வெள்ளாமெ வெளச்ச இல்லன்னு ஊர காலி பண்ணிட்டுப் போகவா முடியும்.

எம்பொண்ணு கல்யாணத்துல மாப்பிள்ள வீட்டுல காரு வேணும்னாங்க. அம்புட்டு தொகைய எங்களால பொறட்ட முடியாதுன்னு சொல்லி எம்புள்ள வேலபாக்குற கம்பனி மூலமா லோனு போட்டு பாதி காசு குடுத்தான் மீதிய மாப்பிளவீட்ல போட்டு காரு வாங்கிகிட்டாங்க. பொண்ணு வீட்டுல குடுக்க முடியுமா முடியாதான்னெல்லாம் யாரு யோசிச்சிட்டிருக்கா.”

“அது கெடந்துட்டு போகட்டும். ரெண்டு பசங்க உள்ள வீட்டுக்கு எதுக்கு மூணு வண்டி. எங்க கிட்ட இருக்கு வேண்டான்னு சொல்லலாம்ல”

“அதத்தான் பொண்ணு வீட்டுலயும் சொன்னாவொ. எதுக்கு தேவயில்லாமெ.. வண்டிக்குப் பதிலா பணத்த குடுத்துர்ரம்னு. இந்த பயலுவ அடங்குனாங்கெலா. இந்த வண்டிதான் வேணும்.. ட்டப ட்டப ட்டபன்னு சத்தம்போடும் ஒனக்கு ஒன்னும் தெரியாது வாய மூடு கெழவினுடாங்க. அவனே போயி மாடலு பாத்து ஓட்டி பாத்துல்ல பொண்ணூட்டுல ஒத்துகிட்டு வந்தான்.”

”வரப்போற பொண்ணு கொண்டு வரப்போரா. எதுக்கு நாமெ தேவயில்லாம இப்ப வண்டி வாங்கனுமின்னு மூணு வருசத்துக்கு முன்னையே தலப்பாடா அடிச்சுகிட்டேன். அதையும் இந்த கிறுக்கு பசங்க கேக்கல. இப்ப ஒன்னுக்கு மூணா திண்ணையில நிறுத்தி வச்சுருக்காய்ங்கெ.” பணமா வாங்கிருந்தா அவசரத்துக்கு உதவிருக்குங்கற ஆத்தரத்துல அரிசி பொடச்ச அவனோட அப்பத்தா பொலம்ப ஆரம்பிச்சுட்டா.

”என்ன அப்பத்தா… நீ வண்டியெல்லாம் கொண்டு வராமெ தாத்தாவெ ஏமாத்தி கல்யாணம் கட்டிகிட்ட அப்புடிதானே” ஆத்தா பொடச்ச அரிசில நாலு வாயில அள்ளி போட்டேன்.

“காடு வாவாங்குது வீடு போபோங்குது.. முதுகு கூனி மூணு வருசமாச்சு.. இதுக்கு அப்புறம் கேளு ஏங்கல்யாண கதைய.”

”கல்யாணம்னா நெல்ல விக்கணும், வெறகு ஒடைக்கனும், பலகாரபச்சனம் செய்யனும், வர்ரவங்களுக்கு ஆக்கி எறக்கி போடனும் அம்புட்டு வேல இருக்கும். இப்ப என்னடிம்மா தாயி தகப்பன தவிர அத்தனையும் ரெடியா டவுனு மார்கெட்டுல கெடைக்கிது வாங்குனமா வச்சமான்னு நோகாமெ வேல முடிச்சுடுது. காசிருந்தா போதும் உக்காந்த எடத்துல இருந்தே கல்யாணத்த முடிச்சுபுடலாம். இப்புடி வந்து காலாட்டிகிட்டு பேச முடியிது.

எங்க காலத்துல ஊருக்குள்ள பந்தல போட்டு நாலு சாதிசனத்துக்கு சாப்பாடு போட்டு பொண்ணுக்கு காது, கழுத்த மூடி எதாவது ஒன்னுரெண்டு தட்டுமுட்டு சாமென எடுத்துவச்சு கல்யாணத்த முடிச்சுடுவாங்க. வண்டி கொண்டியல்லாம் அப்ப ஏது.

எங்க அப்பா எனக்கொரு பசுமாடு சீதனமா குடுத்தாரு. அந்த மாடு ஒம்பது கன்னுகுட்டி போட்டுச்சு. அதோட பேரப்புள்ளைங்க எத்தனங்கற கணக்கெல்லாம் மறந்தே போச்சு. எங்கள விட மாட்டுக்குதான் அம்மாம்பெரிய கொட்டக போட்டுருந்தோம். அதுங்க போடும் சாணிய வெள்ளாமெ காலத்துல பத்து நாளைக்கி அள்ளனும், அம்மாபெரிய எருக்குழி நெறையா சாணி கெடக்கும். பொண்ணு போறடத்துல சூழ்நில எப்படிருக்குமோன்னு பசுமாட்டதான் சீதனமா குடுப்பாக. எங்கப்பாரு குடுத்த மாட்டெ நாங்க வளத்தோம் மாடு எங்குடும்பத்த வளத்துச்சு. ஒங்க வண்டி என்னத்த செய்யும்.”

“வம்புழுத்து வாய புடுங்குனது போதும் உள்ள போயி சாப்புடு.” என்று வழியனுப்பினா அப்பத்தா.

படிக்க:
ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!
கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !

வரதச்சணை கூடாதுன்னு சட்டந்தான் சொல்லுது. நடப்புல பாத்தீங்கன்னா கல்யாண விருந்துல ஒன்னு ரெண்டு அயிட்டம் கொறைஞ்சாலும் நகை நட்டு, வீட்டு சாமான், பைக்குன்னு ஒன்னும் குறையக்கூடாதுங்கிறதுதான் இப்போதைக்குக் கிராமத்து சட்டம். இல்லாதப்பட்டவங்க கூட கடன கிடனை வாங்கி வண்டிய வாங்கிக் கொடுக்குறாய்ங்க. கட்டுன புடவையோட வந்தா போதும்னு சினிமா வசனமெல்லாம் ஊர்ப்புறத்துல டிவியில மட்டும்தான் ஓடுது. பொண்ணை பிடிச்சிருக்கா, பையன பிடிச்சிருக்காங்கிறத விட சீர்வரிசை செட்டு பட்ஜெட்டு என்னங்கிறதுதான் முக்கியமா போச்சு. விவசாயம் ஒரு பக்கம் அழியுதுன்னா, இன்னொரு பக்கம் நுகர்வுக் கலாச்சாரம் விவசாயிங்க கிட்ட இருந்த எளிமையான பண்பாட்ட கூட அழிச்சிட்டு வருது! கடைசியில புடுபுடுன்னு புல்லட்டுல ரெண்டு குடம் தண்ணி எடுக்குறதயும் நீங்க கிராமப்புறங்கள்ள பாக்கலாம்!

சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க