“ஈயம் பூசலையோ ஈயம், அம்மா… ஈயம் பூசலையோ ஈயம்…” இப்புடி ஒரு குரல கேக்காதவங்க இருந்துருக்க முடியாது. பெரும்பாலும் புருசன் பொஞ்சாதியா சேந்துதான் இந்த தொழிலுக்கு வருவாங்க. பல்லிளிச்ச பழய வெங்கல, பித்தள பாத்தரத்த ஊர் பொம்பளைங்க ஈயம் பூசித்தர சொல்லி அவங்ககிட்ட குடுப்பாங்க. பத்து பாத்திரத்துக்கு குறையாம சேந்ததும் அந்த தெருவுக்கு மத்தியிலேயே பட்டறைய போடுவாரு தொழிலாளி.

ஒரு சின்ன கை கடப்பாறையால ரெண்டுமூனடி தூரத்துல ரெண்டு குழிய தோண்டுவாரு. எலி பொந்துவளைப் போல செஞ்சு ரெண்டு குழியையும் இணைப்பாரு. ஒரு குழியில நெருப்பும் இன்னொரு குழியில ஆட்டுத்தோலால செஞ்ச காத்தடிக்கும் பையயும் பொருத்துவாரு. பக்கத்துல கொஞ்சம் தண்ணிய ஊத்தி சேறு கொழச்சு காத்து வெளிய போகம நெருப்புக்கு மட்டும் போறப்போல மண்ணு பூசுவாரு. பக்கத்து வீட்டுல கொஞ்சம் நெருப்பு வாங்கி குழியில போடுவாரு. பட்டறை ரெடியாயிரும்.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரம்மா குடுத்த அத்தன பழய பாத்தரமும் புத்தம் புதுசா பளபளக்கும். அதுக்காக அவரு பயன்படுத்துன ஈயம் சேதாரமாகி சின்னசின்ன நட்சத்திரமா மண்ணுல மின்னும். நீயா நானான்னு அடிச்சுகிட்டு விளையாட்டு பிள்ளையா அத பொறுக்குனத இன்னைக்கி நெனச்சாலும் அத்தன சந்தோசம். மன்னிச்சுக்குங்க, மறந்து போன ஒரு தொழில மறுபடியும் கண்ணுல பாத்ததும் சிறுபிள்ள விளையாட்டு பருவமும் சேந்தே ஞாபகத்துக்கு வந்துருச்சு.

தண்ணி பானைக்கி ஈயம் பூச சென்னை புறநகரத்துல உள்ள அஹமதுல்லா அண்ணன் கடைக்கி போயிருந்தேன். ஒரு பொட்டிக்கட சைசுல தம்மாத்துண்டு எடத்துல அகழ்வாராய்ச்சியில கண்டுபிடிச்சது போல தேஞ்சு, கருத்துப்போன நாலஞ்சு பண்டபாத்தரம் இருந்துச்சு. நடுவே இருக்கும் எடத்துல சாணை பிடிக்கும் எந்திரம் தரையோட சேத்து புதைக்கப்பட்டிருந்துச்சு. பாத்தரத்தோட துருவு அழுக்கச் சுரண்டும் துடுப்பு கத்திக்கி சாணை ஏத்திட்டுருந்தாரு அஹமதுல்லா.

copper vessel polishing workers photos (1)
அஹமதுல்லா

கடைக்கி வெளிய ஒரு பெரியவரு ஈயம் பூசும் நெருப்பு கணக்குற அடுப்புல பாத்தரத்த சூடேத்திட்டுருந்தாரு. சின்ன காத்தாடிய வச்சு கரண்டு மூலமா காத்த உள்ள அனுப்புற டெக்னாலஜியோட அந்த வேல நடந்துட்டு இருந்துச்சு. ஈயம் பூசுன மூணு பித்தளப் பாத்தரம் வெய்யில்ல காஞ்சுட்டுருந்தது.

இருசக்கர வண்டியில கணவன் மனைவி ரெண்டுபேரு ஒரு உருளி குண்டானுக்கு ஈயம் பூச வந்தாங்க.

“இதுக்கு ஈயம் பூசி மெருகு போடனும் எவ்வளோ கேப்பீங்க”

“ரெண்டுக்கும் சேத்து 900 ஆகும்மா”

இருதரப்புக்கும் கூலி படியல. பேரம் பேசுனத பாத்ததும் அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் நம்ம பானைக்கி எம்புட்டு தரலாங்கற முடிவுக்கு வர தோதா இருக்குமேன்னு ஒதுங்கி நின்னுட்டேன்.

“இவ்ளோ காசு குடுத்து இத செய்றதுக்கு நானு புதுசாவே வாங்கிருவனே” வந்த அம்மா சொன்னத கேட்டதும் நெருப்புல போட்ட ஈயம் கணக்கா பொங்கிட்டாரு அஹமதுல்லாண்ணே.

படிக்க:
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
♦ யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !

“வாங்கி பாருங்க. அந்த காலத்து சுத்தமான இந்த செம்பு இன்னைய விலைக்கி உங்களால வாங்க முடியுமான்னு பாருங்க.

மண்பாத்தரத்துல சமையல் செஞ்ச காலம் போயி வெங்கலம், செம்பு, பித்தளன்னு வந்ததும் இருக்கப்பட்டவங்க வீடுகள்ள இது மாதிரி உலோகத்துல ஆன பாத்தரமெல்லாம் இருந்துச்சு. சோறு சாப்புட வெங்கல கூம்பா, பித்தள தட்டுல்லாம் இருக்கும். இந்த பாத்தரங்களெல்லாம் அந்த காலத்துல எங்களப்போல பத்தருங்க செஞ்சு குடுப்பாங்க. எங்க அப்பா காலத்துல அதுக்கு ஈயம் பூசி பேரு வெட்டி குடுக்குற பழக்கமெல்லாம் இருந்துச்சு. அந்த பாத்தரத்தோட தரமே வேற புதுசா வாங்குறத ஈசியா சொல்றீங்க.”

“நீங்க சொல்றதும் சரிதான். இது எங்க அம்மா காலத்துலருந்து பொழங்குன பாத்தரம், ஈயம் மட்டும்தான் போச்சு. கையில அம்புட்டு பணமில்ல. அதனால மெருகு போட வேணாம், ஈயம் மட்டும் பூசி குடுங்க அதுக்கு எம்புட்டு கூலியோ அத வாங்கிக்கிடுங்க. நானு நல்லா புளி போட்டு பளபளப்பா தொலக்கிடுறேன்.”

copper vessel polishing workers photos (6)இது எதையுமே காதுல வாங்காமெ நெருப்போட போராடிட்டிருந்தாரு அந்த மனுசன். தகதகன்னு எரிஞ்ச அடுப்புல அந்த குண்டான எடுத்து குப்பற கவுத்தாரு பிறகு இடுக்கியால திருப்பி ஈயத்த ஒடச்சு குண்டாங்குள்ள போட்டு சுண்ணாம்பு போல ஒரு பொடிய எடுத்து போட்டதும் இதுவரைக்கும் உணராத ஒரு கெட்ட நாத்தம். ஈயம் உருகி திரவமாச்சு. ஒரு கையால பாத்தரத்த நெருப்புல சுத்திகிட்டே மறு கையால அடுப்புக்கு காத்தடிச்சாரு. அடுப்புல கொதிக்கிற ஈயத்த கந்த துணியால பாத்திரம் முழுக்க பூசினாரு. அந்த சூடு தாங்காமெ அந்த பெரியவரு மணல்ல கெடந்த புழுவா நெளியறத பாக்கும்போது கண்ணு கலங்கிருச்சு.

“என்னம்மா அங்க வேடிக்க பாத்துட்டே நிக்கிறிங்க உங்க பாத்தரத்த குடுங்க”

“பாவம் வயசானவரு. யாராச்சும் சின்ன வயசுக்காரங்களா வேலைக்கி வச்சுக்கலாமேண்ணே.”

“யாருக்கு இந்த வேல தெரியும். ஆந்திராவுல இருந்து அழைச்சுட்டு வந்து வச்சுருக்கேன். இந்த தொழிலையே ஊத்தி மூடிட்டாங்க. பாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. எங்க அப்பாவுக்கு பிறகு நான்.. இந்த வேலைய செய்றேன், எம்பிள்ள இந்த வேலை பாக்கல.

copper vessel polishing workers photos (3)இங்க சுத்த வட்டாரத்துல விசாரிச்சு பாருங்க. ஈயம் பூசவோ; மெருகு போடவோ; ஓட்ட ஒடச அடைக்கவோ தனியா கடையே கெடையாது. வெளி வேல போக பக்கத்துல உள்ள பாத்தர கடைக்கி வேல செஞ்சு குடுக்கறதால ஏதோ என் தொழில் ஓடுது. கும்பகோணம், தஞ்சாவூரு பக்கம் பித்தள பாத்தரம் செய்றதால அவங்கள நம்பி கொஞ்ச பேரு இந்த தொழில செஞ்சுட்டு இருக்காங்க. அதுவும் இன்னும் கொஞ்ச காலம்தான். இனிமே தனியா கடபோட்டு தொழில் செய்யிற வாய்ப்பு இல்ல. பெரிய நிறுவனமா இருக்கவங்க கிட்ட கூலியா வேல செய்ய வேண்டியதுதான்.

பாத்தரம் ஓட்ட ஒடசலாயிட்டா சனங்க போட்டுட்டுதானே வாங்க நெனைக்கிறாங்க. பழக்க வழக்கம் மாறிப்போச்சுண்ணே.

“வாங்குறதுக்கு தக்கன எல்லா மனுசங்க வாழ்கையிலயும் மாறிடலையே. இன்னமும் எத்தன பெத்தவங்க; பெத்த பொண்ணுக்கு சீர் செய்ய முடியாமெ பழய பாத்தரத்த மெருகு போட வர்ராங்கன்னு தெரியுமா?. நாங்க இல்லாட்டி இவங்க எல்லாம் பெரிய பெரிய பாத்தர கடைங்கள்ள கேட்டதுக்கு பாதியா பாத்தரத்த போட்டுட்டு புதுசு வாங்கி தானே ஆகனும். நாங்க மட்டும் இல்ல… எல்லா சிறு தொழிலுக்கும் இந்த நெலமதான்.”

படிக்க:
புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை !
♦ தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா ! சரிதாவின் வாக்குமூலம் !

“செம்பு, பித்தள, பாத்தரத்துல தண்ணி வச்சு குடிச்சா நல்லதுன்னு சொல்றாங்களே சரியாண்ணே?”

“செம்பு, பித்தள, வெங்கல பாத்தரத்த அப்புடியே சமயலுக்கோ சாப்புடுறதுக்கோ பயன்படுத்தினா சாப்பாடு கெட்டு போயிடும் அப்புடி பயன்படுத்த கூடாதுண்ணுதான் ஈயம் பூசுனாங்க. இப்ப பள்ளிக்கூடத்துக்கு தண்ணி கொண்டு போக செம்புல தண்ணி பாட்டுல வாங்குறாங்க. கைய உள்ள விட்டு நல்லா புளி போட்டு சுத்தமா தொலக்குற அண்டாவுலயே களிம்பு வாசன வரும். தண்ணி பாட்டிலெல்லாம் யோசிச்சு பாருங்க.

பொழங்குறதுக்கு ஈசியாருக்குன்னு எல்லாரும் கலர்கலரா பிளாஸ்டிக்குக்கு மாறுனீங்க. இப்ப பிளாஸ்டிக்கு கெடுதல்.. நோயி வருதுன்னு சொன்னதும் பழசுக்கு திரும்புரிங்க. பிளாஸ்டிக் நல்லது, செம்பு – பித்தள நல்லதுன்னு விக்கிறவங்க மார்கெட் பன்றாங்க. எது நமக்கு தோதுவாருக்கும்னு நீங்க முடிவு பண்ணுங்க.”

“சரிங்கண்ணே ஏதேதோ பேசிகிட்டு வந்த வேலையே மறந்து போச்சு. இதுக்கு ஈயம் மட்டும் பூசனும் பாத்தரம் சின்னதுதான், கொஞ்சம் பாத்து விலைய சொல்லுங்கண்ணே”

copper vessel polishing workers photos (7)

“ஒரு கிலோ ஈயம் மூணாயிரம், அடுப்பு கரி கிலோ அறுவது ரூவா, அப்புறம் நவச்சாரப்பொடி, கந்ததுணி, அதுபோக கடைவாடக, கரண்டு பில்லு பிறகு ஒரு கூலி ஆளு இம்புட்டு மொதலீடு போட்டு இந்த வேலைய செய்றேன். இப்ப நீயே பாத்து ஒரு விலைய சொல்லும்மா.”

“கோவிச்சுக்காதண்ணே.”

“நா.. என்னாத்துக்கும்மா கோவிச்சுக்க போறேன். ஒரு நாளைக்கி ஆளு சம்பளம், வாடக, பொருள் வாங்கன்னு எல்லாம் போக எனக்கு வருமானம்னு நாநூறு ஐநூறு வந்தாலே பெருசு. காலையில ஒம்பது மணிக்கு கடைய தொறந்து ராத்திரி ஏழு எட்டு மணிக்கி சாத்துறேன். நாப்பது வருசமா இந்த தொழில செய்றேன். ஒரு பொண்ண கட்டிக் குடுத்து; ரெண்டு பசங்கள படிக்க வச்சுருக்கேன். சொந்தமா சின்னதா ஒரு வீடு கட்டிருக்கேன்.

இந்த வேல பாத்து நான் ஒன்னும் காரு பங்களான்னு ஆயிடல. ஆனா எங்கிட்ட நூறுவா குடுக்க நூறு கேள்வி கேக்குறீங்க. ஆனா பெரிய கடைங்களுக்கு போயி, பாத்தரத்துல ஒட்டின ஸ்டிக்கர்ல உள்ள விலைய நயா பைசா கொறைக்காம அப்புடியே குடுத்துட்டு வாய பொத்திகிட்டு போறீங்க. அத நெனச்சாதான் வேதனையா இருக்கு.”

உழைத்து களைத்த உள்ளத்துக்கு பக்கபலமா பேசாமே பத்துருவா பணத்துக்கு பேரம் பேசிட்டோமேங்குற குற்ற உணர்வோட வெளியேறினேன்.

சரசம்மா

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க