வார வேலை நாட்களில், திருமால்பூர் ரயிலும் என்னோட நண்பன்தான். வேலை நாட்களில் அந்த நண்பனோடுதான் தினசரி பயணம். செங்கல்பட்டில் இரவு 8 மணிக்கு காஞ்சிபுரம் – திருமால்பூர் ரயிலில் உட்கார இடம் கிடைப்பதெல்லாம் அரிது. அன்று எப்படியோ, ஒரு ஓரமாக நெரிசலில் நிற்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. என் பக்கத்தில் நின்றிருந்தவர் பேச ஆரம்பித்தார்.

”இந்த ரயில் எப்பவும் இப்படித்தானா? ஒரே கூட்டமா, நிக்கக்கூட இடம்விடமாட்றாங்க? மூணு வயசுக் கொழந்தயக்கூட உட்காரச் சொல்ல மாட்றாங்க…… ரொம்ப மோசம்…” என்றார்.

இன்னிக்கு எவ்ளவோ பரவாயில்ல…. இதவிட மோசமா உள்ள நிற்கவே முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும்… உட்கார்ந்துட்டு இருக்கவங்களும் ஆயிரத்தெட்டு பிரச்சனையில வர்றாங்க, அவங்க நமக்கு இடம் கொடுத்து உட்கார வைப்பாங்கனு எதிர்ப்பார்க்கக்கூடாது. நாமளே இடத்தை உருவாக்கிக்கணும். தயவா கேட்டு உட்கார்ந்திடணும்..”னு சொன்னேன்.

பொதுவா அந்த ரயிலில் வழக்கமா போறவங்க முகம் நமக்கு தெரிஞ்சிடும். புதுசா வர்றவங்க தயங்குறதுலயே கண்டுப்பிடிச்சிடலாம்.

செங்கல்பட்டு – பாலூர் ஸ்டேஷன் வந்ததும் நின்ற இடத்திலிருந்து கீழே உட்கார்ந்தேன். பக்கத்தில் ஒரு குரல், வழக்கமா பார்க்காத முகம். “அக்கா, இங்க உக்கார்ந்துகிடட்டுமா?” திரும்பிப் பார்த்தேன்..

”இதெல்லாம் கேட்டுக்கினு இருக்ககூடாது டக்குனு உட்கார்ந்திடணும்” என்றேன். சிரித்தார்…

எல்லாரும் தேர்தலில், ஓட்டுப் போட்டதைப்பத்தி பேசிட்டுருந்தோம். எப்படித்தான் மோடி ஜெயிச்சாரோ தெரியலயே? நம்ம தமிழ்நாட்டுக்காரங்க சரியாத்தானே ஓட்டுப்போட்டுருக்கோம்…. வட இந்தியாவுலதான் தப்பு பண்ணிட்டாங்க… னு ரொம்ப கவலையாக பேசினோம்.

படிக்க:
♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !
♦ பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

பக்கத்தில் உட்கார்ந்தவர். மெதுவாக என்னிடம் “எல்லாரும் கம்பெனிக்கு போய்ட்டு வர்றீங்களா?” என்றார்.

“இல்ல.. இல்ல… எல்லாரும் ஒவ்வொரு இடத்துல வேலை பாக்கறவங்க; தனியார் கம்பெனி சிலர், ஆஸ்பிட்டல், கோர்ட், செகரடேரியேட்னு எல்லா வேலைக்கு போறவங்களும் இருக்காங்க” என்றேன்.

“சரி, நீங்க எங்க போய்ட்டு வர்றீங்க..” என்றேன்.

“குஜராத்” என்றார்.

“என்னது… வேலை செய்ய அவ்வளவு தூரமா? குஜராத்தா?” என்று அதிர்ச்சியானேன்.

“இல்ல…. இல்ல…. எங்க சொந்த ஊரே குஜராத் தான்” என்றார்.

“அப்படியா? எப்படி தமிழ் இவ்ளோ சரளமா பேசறீங்க…. ஆளப் பாத்தா குஜராத்தி மாதிரி தெரியல, தமிழ்ப் பொண்ணு மாதிரி.. எப்படி? உடை, மொழி எதுலயும் கண்டுபிடிக்க முடியலயே, உன் பொண்ணும் தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கா… எப்படி..?” என்று ஆர்வமானேன்

“8 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்காரு இங்க வேலை தேடி வந்தாரு…. தனியார் கம்பெனியில வேலை. வந்த ஒரு வருசத்துல என்னையும் கூட்டிட்டு வந்துட்டாரு. அப்பத்துல இருந்து நானும் இங்கத்தான் இருக்கேன், அதனால தமிழ் நல்லா பேசுவேன். கூலி வேலைக்கும் போயிருக்கேன்” என்றார்.

“பேரு?”

“சரிதா…”

“இப்ப எதுக்கு குஜராத் போய்ட்டு வர்றீங்க….”

“சொந்தக்காரங்களப் பார்த்துட்டு, வீட்டுக்காரரோட சர்டிபிகேட் ஒண்ணு எடுத்துட்டுவர.. போயிட்டு வர்றோம்.”

“பிரதமர், மோடியோட ஊர் குஜராத் தானே? உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா?” என்றேன்

“நிஜமாவே, தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா. இங்க இருக்கற வசதி, வேலை, மனுசங்க அங்க இல்ல… அங்க எந்த வேலையும் இல்ல.….

புடவைக்கு சமிக்கி, பூ டிசைன் போட்ற வேலை செய்வேன்…. அப்போ டெய்லி 30 ரூபாத்தான் கூலி தருவாங்க….. அதுக்கே, வேலை செய்யறவங்க வீட்டுக்குள்ள போகக்கூடாது…. ரொம்ப கட்டுப்பாடா இருப்பாங்க…  இதுதான் இந்தியா, எல்லா இடத்துலயும் இப்பிடித்தான் இருக்கும்னு நினைச்சேன்.

ஆனா, தமிழ்நாடு சூப்பர்க்கா! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…! இங்க, எங்க வீட்டுக்காரு தனியா இருக்கும்போது யாரும் அவருகிட்ட பழகலயாம், நான் வந்ததுக்கப்புறம் எல்லாரும் நல்லா பழகுறாங்க…. யாரும் இங்க, ‘வீட்டுக்குள்ள வராதேனு’ சொல்லறது இல்ல.

நானும், சென்னை – படப்பையில இருக்குற பீர் கம்பெனியில வேலைப் பார்த்தேன். ரெண்டு கொழந்தைங்களும் இங்கத்தான் டெலிவரி ஆச்சு…. அப்ப, இங்க இருக்கவங்கதான் பாத்துட்டாங்க…..  இப்ப காஞ்சிபுரம் பக்கத்தல வெம்பாக்கத்துல வாடகைக்கு இருக்கோம். ரொம்ப நல்லா இருக்கோம்க்கா. குஜராத்துல அவ்ளோ கஷ்டப்பட்டோம்” என்றார்.

என் பக்கத்திலிருந்தவர்… “ஆமா.. குஜராத்துல, மோடிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிட்டு இங்க வந்து நல்லா இருப்பீங்க…..! முதல்ல உங்கள காலி பண்ணி உங்க ஊருக்கு பேக் பண்ணணும்.! இங்க வந்து செட்டிலாயிட்டு பேல்பூரி; பஞ்சு மிட்டாய்; ஜஸ் எல்லாம் வித்து பொழச்சிட்டு அங்கப்போய் மோடிக்கு ஓட்டு போட்டுட்டு வருவீங்க… முதல்ல உங்கள உங்க ஊருக்கே தொரத்துனாத்தான் மோடியோட வில்லத்தனம் புரியும்” என்றார்.

அதற்கு, சிரித்தவாறே பதிலளித்தார் சரிதா;

“இந்த வாட்டி நான் ஓட்டு போடலக்கா, கார்டு இல்லக்கா…

அங்கயும் நரேந்தர மோடிக்கு கிராமத்துல ஆதரவு வயசானவங்க, எங்க மாமியார்; மாமனார்; மாடி வீடு வெச்சிருக்கரவங்களுக்குத்தான் அவர பிடிக்கும். ஏன்னா சாமி, பகவான் மேல அவ்ளோ பக்தியானவங்க… அவர பகவானா பாக்குறாங்க! குடிசைல வாழறவங்களுக்கும், எங்கள மாதிரி கூலி வேலை செய்யறவங்களுக்கு மோடிய புடிக்காது..

“ஆனா ஒரு விஷயத்துல எனக்கு நரேந்தர மோடி பிடிக்கும்..” என்றார்.

“ஏன்?”

“குஜராத்துல வேல இல்ல, ரொம்ப கஷ்டம்.. ன்றதாலத்தானே நாங்க தமிழ்நாடு வந்தோம். அவருதானே எங்கள எங்க ஊரவிட்டு இங்க, அனுப்பினாரு…. இப்ப, எனக்கு தமிழ் தெரியும்… இங்க இருக்கவங்க சொந்தக்காரங்க மாரி ஆயிட்டாங்க. எங்க பொண்ணுங்களும் குஜராத்தி, தமிழ் இங்கிலீஷ்னு படிக்கறாங்க, எங்க பொண்ணு தமிழ்லதான் நிறைய மார்க்கு வாங்கும் 90-க்கு மேல வாங்குது… இதுக்கெல்லாம் காரணம் நரேந்தர மோடிதான்!” என்றார்.

அதற்கு, முருகன் கோயிலுக்கு போயிட்டு வரும் செல்வி, என்பவர்…

“ஒண்ணு மோடிய பிடிக்கணும், இல்ல தமிழ்நாட்ட பிடிக்கணும், தமிழ்நாட்டுக்கு மோடிய பிடிக்காது. மோடிக்கு தமிழ்நாட்ட பிடிக்காது. இது எங்க நிலம…” என்றார் அவர்.

“உங்க பொண்ணு பேர் என்ன?”

“மொத பொண்ணு காவ்யா, ரெண்டாவது திவ்யா…”

“உங்க குஜராத்துல வைக்கிற பேரு மாதிரி இல்லயே?”

“ஆமா..ங்க்கா, தமில்நாட்டுல இருக்கோம் குழந்தைகளுக்கு, நாம தமிழ் பேருதான் வைக்கணும்னு அவங்கப்பா சொல்லிட்டாரு…

ரேஷன் கார்டுக்கூட எங்களுக்கு வாடகை வீடு விட்டவங்க வாங்கிக் குடுத்தாங்க…. இருந்தாலும் இந்த வாட்டி எலக்க்ஷனுக்கு ஓட்டுப்போடல…  ஓட்டர் கார்டு இல்ல, அதுவும் இங்கேயே வாங்கித்தறேனு சொல்லியிருக்காங்க…” என்றார்.

படிக்க:
♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !
♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !

மேலும் “இங்க, நாங்க….வேலை செஞ்சு நல்லா சாப்பட்டுக்கினு….. எங்க பொண்ணுங்கள இங்கிலீஷ் மீடியம் படிக்க வைச்சிக்கினு நல்லா இருக்கோம். காரணம் தமிழ்நாடு வந்ததாலத்தான். அதனாலே தமிழ்நாடு பிடிக்கும், தமிழ்நாட்டுக்கு அனுப்பி வெச்ச நரேந்தர மோடியும் பிடிக்கும்.

குஜராத்துல இவ்ளோ வசதி, வேலை எல்லாம் இல்லக்கா…. எங்க அம்மா, அப்பா, மாமா, மாமி அவங்கள இங்க வரச் சொன்னா வரமாட்டாங்க…. வயசானாவங்க, ஆனா….. தம்பி, மச்சினனை கூட்டிப்போக சொல்றாங்க, மெதுவா அவங்களும் இங்க வந்துடுவாங்க….

இங்க எல்லாம் ரொம்ப சூப்பருக்கா…. குஜராத்து ரொம்ப மோசம்….. ட்ரேயினுலக்கூட ஜன்னல்ல, டாப்புலலாம் போவாங்க… சுத்தமே இருக்காது. அங்க…நிம்மதியா மூச்சுக்கூட விட முடியாது. இப்ப அப்படித்தான் மூணு நாளா அந்த டிரெயின்ல வந்தேன்” என்றார்.

“என்ன சாப்பிட்டீங்க… மூணு நாளா ?”

“சாப்பாத்திதான்… சாப்புடுறீங்களா… இன்னும் இருக்கு…” என்றார்.

“என்னாது, மூணு நாளுக்கு முன்ன சுட்ட சாப்பாத்தி இன்னும் இருக்கா?  நீ சொன்னதேப்போதும்…. எங்கிட்ட ஜில் வாட்டர் இருக்கு வேணுமா?” என்றேன்.

“ஆ… எப்படிக்கா? ஜில் வாட்டர்…”னு ஆச்சர்யத்தோட வாங்கிக் குடித்துவிட்டு தன், மகளுக்கும் கொடுத்தார். ரொம்ப தேங்க்ஸ்க்கா…. தமிழ் நாட்டுல எல்லாரும் நல்லா பேசுறீங்க, பழகுறீங்க..” என்றார்.

‘அதானே மோடிக்கு பிரச்சனை?’ என்று நினைத்தேன்…

“வெம்பாக்கம் போக எந்த ஸ்டேஷன் இறங்கணும்?” என்றார்.

“காஞ்சிபுரம் பழைய ரயில்வே ஸ்டேஷன் இறங்கி, ஷேர் ஆட்டோல பஸ்ஸ்டாண்டு…போயி…”

“அங்க இருந்து எனக்கு தெரியும்கா…” என்றார்.

அவர், இறங்கி… மறையும்வரை  எனக்கு, பை சொல்லி மறைந்தார்.

குஜராத் மாடல் வளர்ச்சி அது இதுன்னு ஐஞ்சு வருசமா எத்தனை ரீல் விட்டு பேசுனாங்க.. ஆனா கூட வர்ற ஒரு குஜராத் பொண்ணுகிட்ட இருந்தே இப்பிடி உண்மை வெளிவந்தா நேருல போய் பாத்தா அந்த ஊரு எப்படி இருக்கும்?

காமாட்சி

2 மறுமொழிகள்

  1. “பிரதமர், மோடியோட ஊர் குஜராத் தானே? உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா?” என்றேன்.
    நிஜமாவே, தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா. இங்க இருக்கற வசதி, வேலை, மனுசங்க அங்க இல்ல… அங்க எந்த வேலையும் இல்ல.….ஆனா, தமிழ்நாடு சூப்பர்க்கா! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…!“குஜராத்துல வேல இல்ல, ரொம்ப கஷ்டம்.. ன்றதாலத்தானே நாங்க தமிழ்நாடு வந்தோம். இப்ப காஞ்சிபுரம் பக்கத்தல வெம்பாக்கத்துல வாடகைக்கு இருக்கோம். ரொம்ப நல்லா இருக்கோம்க்கா. குஜராத்துல அவ்ளோ கஷ்டப்பட்டோம்” என்றார். குஜராத்துல இவ்ளோ வசதி, வேலை எல்லாம் இல்லக்கா….இங்க எல்லாம் ரொம்ப சூப்பருக்கா…. குஜராத்து ரொம்ப மோசம்….. ட்ரேயினுலக்கூட ஜன்னல்ல, டாப்புலலாம் போவாங்க… சுத்தமே இருக்காது. அங்க…நிம்மதியா மூச்சுக்கூட விட முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க