முஸ்லீம்களையும் தலித்துக்களையும் பாதித்துவரும் ஒரு மிகப்பெரிய அவலத்தை “தி ஹவர் ஆஃப் லிஞ்சிங்” (“The Hour of Lynching”) என்ற ஒரு ஆவணப்படத்தில் ஷெர்லி ஆபிரகாம் (Shirley Abraham) மற்றும் அமித் மாதேசியா (Amit Madhesiya) இருவரும் விளக்குகிறார்கள்.

இராஜஸ்தான் எல்லையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நுஹ்-மேவத் பகுதியில் உள்ள கோல்கான் கிராமவாசியான ரக்பர் கான், 2018, ஜூலை மாதத்தில் இரண்டு பசுமாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்றதற்காக படுகொலை செய்யப்பட்டார். உடனடியாக அவரது குடும்பத்திலும்; அவர் சார்ந்த மியோ முஸ்லீம் சமூகத்திலும் என்ன விளைவுகளை அது ஏற்படுத்தியது என்பதை ஆவணப்பட இயக்குனர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். “நாங்கள் நாய்கள் மற்றும் பூனைகளைப் போல வேட்டையாடப்படுகிறோம்” என்று அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூறினார்.

இந்த ஆவணப்படத்தை கார்டியன் (Guardian) இணையதளத்திலும் காணலாம்.

இந்தப் படுகொலைகளில் தங்களுக்கு பங்கு எதுவும் இல்லையென்று உள்ளூர்வாசிகள் கூறினாலும் எந்த விலை கொடுத்தாவது பசுக்களைப் பாதுகாப்போம் என்று கூறினார்கள். “இந்துக்களுக்காக முஸ்லீம்களைத் தியாகம் செய்வோம்” என்று உள்ளூர் கூட்டமொன்றில் ஒரு தலைவர் சூளுரைத்தார்.

கிராமப்புற இந்தியாவில் மறைந்துவரும் நடமாடும் திரையரங்கம் (Cinema Traveller) குறித்தும்; (பா.ஜ.க) அரசு ஆதரவுடன் இல்லாத சரஸ்வதி ஆற்றை தேடும் (Searching for Saraswati) ஆய்வு குறித்தும் இந்த இயக்குனர்கள் ஏற்கெனவே ஆவணப்படம் எடுத்துள்ளனர். இலாப நோக்கமற்ற செய்தி நிறுவனமான புலிட்ஸர் சென்டரும் (Pulitzer Center) காட்சிக்களம் (Field of Vision) நிறுவனரும் புகழ் பெற்ற சிடிசன்ஃபோர் (Citizenfour) ஆவணப்படத்தின் இயக்குனருமான லாரா பாய்ட்ராஸ் (Laura Poitras) ஆகியோர் ஆவணப்படத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

படிக்க:
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி
♦ மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !

கண்மூடித்தனமான பசு வழிபாடு காரணமாக சிறுபான்மையின விவசாயிகளை அடிப்பது; படுகொலை செய்வது தொடர்பான சம்பவங்கள் ஏற்கனவே ஆனந்த் பட்வர்த்தனின் “காரணம்” (Reason), “படுகொலை தேசம்” (Lynch Nation) போன்ற ஆவணப்படங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. பசுவின் பெயரால் நடக்கும் கொலைகளின் எதார்த்தத்தை ரக்பரின் பயங்கரமான படுகொலை மூலம் புரிய வைக்க முடியும் என்று ஆவணப்பட இயக்குனர்கள் இருவரும் நம்புகிறார்கள்.

ரக்பர் கானின் படுகொலை மூலம் இனி சட்டம் – சமூக ஒழுங்கு அல்லது பரந்துப்பட்ட மக்களின் மனசாட்சி உள்ளிட்டவை, இனிமேலும் முஸ்லீம் மக்களுக்கு அடைக்கலம் அளிக்காது..! என்று உணர்த்தப்பட்டுள்ளதாக ஒரு மின்னஞ்சல் நேர்காணலில் ஆவணப்படத்தின் இயக்குனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட ரக்பர் கானின் புகைப்படம் (நன்றி – த கார்டியன்)

ரக்பரின் குடும்பத்திற்கு அவர் மரணித்த விதம் இன்னும் கனவு போல இருக்கிறது. ஒரு முஸ்லிம் கைம்பெண் பர்தா அணிந்து செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய அவரது மனைவி பணிக்கப்பட்டிருந்தார். அவர்களது மூத்த மகளான சகிலா குடும்பத்திற்கு உதவி செய்ய தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டாள். அவர்களது குடும்பம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளையில் சதிகாரக் கும்பல் அக்கொலைக்கு நியாயம் கற்பிக்க முயன்றது. இதன் மூலம் இந்து தேசியவாத அரசியல்வாதிகள், அவர்களது அடியாட்படைகள் மற்றும் பசுப்பாதுகாப்பு குண்டர்கள் தங்களது வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஆவணப்பட இயக்குனர்கள் கூறினார்கள்.

படுகொலை நடந்த இடத்தின் பின்னணி மற்றும் மியோ (Meo) முஸ்லீம் சமூக மக்களைப் பற்றிய ஏராளமான தகவல்கள் அந்த 16 நிமிட ஆவணப்படத்தில் இடம் பெறவில்லை. “அப்பகுதியின் வரலாற்றைப் பற்றி ஒருவர் பார்ப்பாரானால் முகலாயர்களை எதிர்த்த முஸ்லீம் இராஜ்புத்திர ஆட்சியாளர்களைப் பற்றியும்; வெள்ளையர்களை எதிர்த்து விடுதலைப்போரில் ஈடுபட்டதைப் பற்றிய கதைகளையும் பெருமையாக கூறுகிறார்கள் என்று ஆவணப்பட இயக்குனர்கள் கூறுகிறார்கள். எது நாட்டுப்பற்று என்று இன்று கருதப்படுவதைப் பொறுத்தது அது. அவர்களது வரலாற்றைப் பற்றிய புதிய தகவல்கள், நம்முடைய புரிதலை மேம்படுத்தியிருந்தாலும் அவற்றை ஆவணப்படத்தில் சேர்க்க தேவைப்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

ஆவணப்பட இயக்குனர்கள் நடத்திய நேர்காணலை தங்களுடைய செயல்பாடுகளை ஊதிப்பெருக்கும் வாய்ப்பாக பசுக்குண்டர்கள் பார்த்தனர். தாங்கள் செய்வதை சரியென்று கருதும் போக்கு அவர்களிடம் இருந்ததாக இயக்குனர்கள் கூறுகின்றனர். தாங்கள் செய்யும் வேலையின் அவசியத்தின் பேரில் நம்பிக்கையுடனே அவர்கள் புகைப்படக்கருவியை எதிர்நோக்கினார்கள். கடமை அழைத்ததன் பேரிலேயே வினையாற்றுகிறோம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.


கட்டுரையாளர்: Nandini Ramnath
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க