ரியானா மாநிலம் கொல்கன்வ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்பர்கான், வயது28. தனது கிராமத்திலிருந்து இராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள லால்வண்டி எனும் கிராமத்தின் வழியாக ஜூலை 20 அன்று நள்ளிரவு நேரத்தில் தமது நண்பர் அஸ்லாம் கானுடன் சேர்ந்து இரண்டு பசுக்களை ஓட்டிக் கொண்டு நடந்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த உள்ளூர் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரிலான இந்துமத வெறி குண்டர்கள், பசுக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி இருவரையும் தாக்க ஆரம்பித்தனர்.

ரக்பர்கான் படுகொலை
ரக்பர்கான்

இதில் அஸ்லாம் கான் அக்கும்பலிடமிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தனியாகக் கிடைத்த ரக்பர்கானை கடுமையாகத் தாக்கியிருக்கிறது, அக்கும்பல். அவர் மயக்கமுற்று விழவே, உடனடியாக அப்பகுதி விசுவ இந்து பரிசத்தின் பசுப்பாதுகாவலர் பிரிவின் தலைவர் நவல் கிசோர் சர்மாவிடம் இடத்தையும் நடந்த சம்பவத்தையும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியது அக்கும்பல்.

போலீசு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தவரையில், நள்ளிரவு சுமார் 12.41 மணியளவில் விசுவ இந்து பரிசத்தின் பசுப் பாதுகாவலர் பிரிவின் தலைவரான நவல் கிசோர் சர்மாவிடமிருந்து லால்வண்டியில் பசுக்கடத்தல் சம்பவம் நடைபெறுவதாக சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு அலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து சர்மாவை வரவழைத்து, அவரோடு சேர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசு பார்த்ததாம். அங்கு புழுதியில் காயத்தோடு கிடந்த ரக்பர்கானை மீட்டு  என்ன நடந்தது ? என அங்கேயே சுருக்கமாகக் கேட்டுவிட்டு அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு போலீசு அவரை அழைத்துச் சென்றதாம். இதுதான் அந்த முதல் தகவலறிக்கையில் உள்ள விவரம்.

ஆல்வார் தாக்குதல்
ரக்பர் கான் மனைவி மற்றும் உறவினர்கள்

ரக்பர்கானின் மரணம் குறித்து களத்தில் விசாரித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, சம்பவம் நடக்கும்போது அங்கிருந்த சர்மாவிடமும், சுகாதார மையத்தில் இருந்த மருத்துவரிடமும், தேநீர் விற்பனையாளர் ஒருவரிடமும் நள்ளிரவில் நடந்த அச்சம்பவங்களின் தொடர்ச்சி குறித்து விசாரித்துள்ளது.

அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் போலீசின் முதல் தகவலறிக்கையில் கூறியவற்றிற்கு முரணாக உள்ளதாகக் குறிப்பிடுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

ரக்பர்கான் தாக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையில் பிணமாகக் கொண்டு போய் சேர்க்கப்பட்டது வரையிலான சம்பவத் தொடர்ச்சியில் உடனிருந்தவர்கள் அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட தகவலின்படி, நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசு, பசுப் பாதுகாவலர் மதவெறி கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்ட ரக்பர் கானை தூக்கி, அருகில் உள்ள ஊர்ப்பகுதிக்குச் சென்று தண்ணீரை அவர் மீது ஊற்றி, அங்கேயே அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது.

பின்னர் அந்த ஊரிலிருந்த கிசோர் என்னும் ஒருவரை அழைத்து பசுக்களை அருகில் உள்ள சுதாசாகர் கோசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து விட்டு, ரக்பர்கானை போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. கோசாலைக்கு கிசோருடன் சென்ற சர்மா, திரும்பவும் போலீசு நிலையம் வந்து பார்த்த போது ரக்பர்கான் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

பின்னர் ரக்பர்கானை அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் வண்டியை நிறுத்திய போலீசார், தேநீர் குடித்துவிட்டு பொறுமையாகச் சென்றுள்ளனர். அதிகாலை 4.00 மணியளவில் ரக்பர்கானின் இறந்த உடலை சுகாதார நிலையத்துக்கு எடுத்து வந்ததாகக் கூறியிருக்கிறார் அங்கு பணியிலிருந்த மருத்துவர்.

இந்து மதவெறி பிடித்த பசுப் பாதுகாவலர்களின் தாக்குதலாலும், இந்துத்துவ கிரிமினல்தனம் ஊறிய காக்கி உடைக் கிரிமினல்களின் தாக்குதலாலும் ரக்பர்கான் கொல்லப்பட்டுள்ளார். இதனை மூடி மறைக்க ரக்பர்கான் ஒரு பசு கடத்தல்காரர் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இராஜஸ்தான் போலீசும், அரியானா போலீசும் திட்டமிட்டு காய் நகர்த்தத் தொடங்கியுள்ளன.

இந்தப் பச்சைப் படுகொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழத் தொடங்கியும், கல்லுளிமங்கனார் மோடி அவர்கள் வழக்கம் போல வாயைத் திறக்கவில்லை.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய கிரிமினலான ஆர்.எஸ்.எஸ்.-ன் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார், இதுகுறித்துக் கூறுகையில், பசுவைக் கொன்று தின்பது குறைந்தால், பசுவின் பெயரிலான கொலைகள் வெகுவாகக் குறைந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.

இந்திரேஷ்குமார் எச்சரிக்கை
இந்திரேஷ்குமார்

இந்தப் பழமையான புழுத்த கிரிமினல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக கிரிமினல் கும்பலும் சொல்லவிளைவது என்னவெனில், ”வட இந்தியாவிலிருக்கும் சத்திரிய, வைசிய, சூத்திர ’இந்துக்களை’ மதத்தின் பெயரால் வெறியேற்றி, இரண்டொரு கலவரத்தையாவது நடத்திதான் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறத் திட்டமிட்டிருக்கிறோம். உன்னால் ஆனதைப் பார் என்பதுதான்.

மோடியின் திருட்டு மவுனமும், இந்திரேஷ்குமாரின் ஊத்தைப் பல் வசனமும் இந்து மத வெறியர்களுக்குக் கொலை செய்யும் தைரியத்தையும், நாம் எதிர்கொள்ளவிருக்கும் பாசிச அபாயத்திற்கான எச்சரிக்கையையும் தருகின்றன. மாட்டின் பெயரால் இங்கே மனிதர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. மோடி அரசால் ஆளப்படும இந்தியா ஒரு காட்டுமிராண்டி நாடு என்பதற்கு இனியும் என்ன ஆதாரம் வேண்டும்?

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க