பாகிஸ்தானில் உள்ள சுமார் 400 இந்து கோவில்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு அவற்றை மீண்டும் புனரமைத்து இந்துக்கள் வசம் ஒப்படைப்பதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது. இவ்வாறு கோவில்கள் புனரமைக்கப்படும் நடவடிக்கை ஒவ்வொரு கட்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் பகுதியில் சுமார் 428 பெரிய கோவில்கள் இருந்துள்ளன. இவற்றில் சுமார் 408 கோவில்கள் பல்வேறு சந்தர்பங்களில் ஆக்கிரமிப்பாளர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் சிறு பொம்மை கடைகள், உணவகங்கள், பள்ளிக் கூடங்கள் போன்றவை செயல்பட்டு வந்துள்ளன. சில இடங்களில் அரசு அலுவலகங்களும், மதரசாக்களுமே கூட ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்களில் செயல்பட்டு வந்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள இந்து உரிமை இயக்கம் நடத்திய சர்வே ஒன்றின் படி சுமார் 408 கோவில்கள் 1990-களுக்கு பின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பான்மையான கோவில்கள் 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கு எதிர்வினையாகவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்தே இக்கோவில்களை மீட்டு புனரமைத்துக் கொடுக்க வேண்டி கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் இம்ரான்கான் பாகிஸ்தான் அதிபராக தெரிவு செய்யப்பட்ட பின் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்த சில நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பாக் ஊடகங்கள் சொல்கின்றன. சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் பிறந்த இடம் பாகிஸ்தானுக்குள் உள்ளது. இந்நிலையில் குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு இந்தியாவில் உள்ள சீக்கிய மக்கள் அவரது பிறந்த இடத்திற்கு புனித யாத்திரை செல்ல கர்தார்பூர் சாலையை திறக்க ஒப்புக் கொண்டது பாகிஸ்தான் அரசு.

படிக்க:
நூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?
♦ பாகிஸ்தானும் சிறுபான்மையினரும் : மோடிக்கு பாடம் நடத்தும் இம்ரான் கான் !

இந்த வரிசையில் 1992-ல் நடந்த கலவரத்தை அடுத்து சியால்கோட்டில் மூடப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான தேஜா சிங் சிவாலையா கோவிலை முதலில் புனரமைக்க முடிவெடுத்துள்ளது அந்நாட்டு அரசு. அதோடு பெஷாவரில் உள்ள கோரக்நாதர் கோயிலும் புனரமைக்கப்பட இருக்கிறது. மீட்கப்பட வேண்டிய, புனரமைக்கப்பட வேண்டிய கோவில்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வருடத்திற்கு குறைந்தது இரண்டு கோவில்களை புனரமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அரசு. 2019 ஜனவரி மாதம் கைபர் பக்தூன்வாலா மாகாண அரசு அங்குள்ள புராண இந்து கோவில் ஒன்றை பஞ்ச தீர்த்தம் என அடையாளப்படுத்தி பாரம்பரிய இடமாக அங்கீகரித்துள்ளது.

சமீபத்தில் (2019-ல்) பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றின் படி சிந்து மாகாணாத்தில் 11 கோவில்களும், பஞ்சாபில் 4 கோவில்களும், பலூசிஸ்தானில் 3-ம் கைபர் பக்துன்வாலாவில் இரண்டு கோவில்களும் மொத்தம் 20 கோவில்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றோடு பிரிவினையின் போது மூடப்பட்ட சர்தார் தேஜா சிங் சிவாலயம் இந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள சாரதா பீடத்திற்கு இந்தியப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை அனுமதிப்பதையும் ஆலோசித்து வருகின்றது. அசோகரின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கோவில் ஒன்றில் சாரதா பீடம் செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி 6-ம் நூற்றாண்டிற்கும் 12-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் கோவில் ஒரு பல்கலைகழகமாகவும் செயல்பட்டுள்ளது.

லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆளுயர சிலை.

முந்தைய காலங்களில் இந்திய அரசுடன் பாகிஸ்தான் முரண்பட்டுக் கொள்ளும் போதெல்லாம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுவதும், அவர்களது வழிபாட்டு ஸ்தலங்கள் தாக்கப்படுவதும் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானில் உள்ள மதச்சிறுபான்மையினரின் மீது அக்கறை செலுத்த துவங்கி உள்ளது அந்நாட்டு அரசு. கோவில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி லாகூர் கோட்டைக்கு வெளியே மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆளுயர சிலை ஒன்றைத் திறந்துள்ளது. அதே போல் சியால்கோட்டில் உள்ள சுமார் 500 ஆண்டு பழமையான பாபா-தே-பெர் குருத்வாராவையும் இந்திய பக்தர்களுக்காக திறந்து விட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறாக பதிவிட்டிருந்தார் இம்ரான் கான் : “புதிய பாகிஸ்தான் என்பது முகமதலி ஜின்னாவின் பாகிஸ்தானாக இருக்கும். இந்தியாவைப் போல் அல்லாது நாங்கள் சிறுபான்மையினர் சம உரிமையோடு நடத்தப்படுவதை உத்திரவாதப்படுத்துவோம்”. இந்த இடத்தில் பாகிஸ்தானில் பிடிபட்ட விமானி அபிநந்தனை விடுவித்த நடவடிக்கையையும் பொருத்திப் பார்க்கலாம்.

படிக்க:
பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்
♦ இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

***

ந்த நடவடிக்கைகளின் ஊடாக பாகிஸ்தான் அரசுக்கு அங்குள்ள சிறுபான்மை இன மக்களின் மேல் புதிய பாசம் பீறிட்டு அடிப்பதாக ஏற்பதா? இல்லையா? என்கிற விவாதத்தை ஒரு புறம் தள்ளி வைப்போம். மோடி இந்தியாவில் பதவி ஏற்ற பின் சிறுபான்மை இன மக்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள், தலித் மக்களின் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்கொடுமைகள், பசுகுண்டர்களின் தீவிரவாத தாக்குதல்கள் என்கிற வரிசையில் சமீபத்தில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு வரை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிப் போக்கின் அங்கமாக புரிந்து கொள்ள முடியும்.

அதே நிகழ்ச்சிப் போக்கின் பிற அம்சங்களாக “காந்தி தற்கொலை” “கோட்சே புனிதர்” வரலாற்றை திரிப்பது, வரலாற்று நூல்களை சிதைப்பது என மோடி அரசு செயல்பட்டு வருகின்றது. மேற்குலக பொதுபுத்தியில் “தாலிபானிய கொடுமைகள்” குறித்து என்னென்ன விசயங்கள் பதிவாகி உள்ளனவோ அவையெல்லாம் இந்தியாவில் அரங்கேறி வருகின்றன. அதே சமயத்தில் பாகிஸ்தானோ தான் சிறுபான்மை மக்களின் நண்பன் என்கிற பதிவை ஏற்படுத்த பிரயத்தனம் செய்கிறது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் எதார்த்தத்தில் எந்தளவுக்கு மேற்கொள்ளப்படும், அவற்றின் வெற்றி எப்படி இருக்கும், அந்நடவடிக்கைகளுக்கு அங்குள்ள மத்தியகால பிற்போக்கு முல்லாக்களின் அரசியல் எதிர்வனை எப்படி இருக்கும் என்பதெல்லாம் எதிர்காலத்தில் தெரியவரும். ஆனால், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் என்பது கிறுக்குப் பிடித்த முல்லாக்களால் நடத்தப்படும் ஒரு தாலிபானிய தேசம் என்று இத்தனை ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த பிரச்சாரங்களை புஸ்வாணமாக்கி உள்ளார் இம்ரான் கான். அதே நேரம் “தாலிபானிய மூளை” நாக்பூரில் தான் உள்ளது என்பதையும் அதன் வழிகாட்டுதலில் தான் இந்தியா நடத்தப்படுகின்றது என்பதை பசுகுண்டர்கள் மெய்பித்து வருகின்றனர்.


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : சப்ரங் இந்தியா.

1 மறுமொழி

  1. இதனை படித்து விட்டு , பார்த்தீர்களா 60 ஆண்டுகள் பாகிஸ்தான் செய்யாததை இப்போது செய்கிறது இதற்க்கு காரணம் எங்கள் மோடி தான் என்று காவி நாய்கள் எல்லாம் மோடி புராணம் பாடுமே . இம்ரான் கான் ஓரளவிற்கு ஜனநாயகத்தை மதிக்க தெரிந்த மனிதர் என்று இந்த முட்டா புன்னகைகளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க