நெருக்கடி நிலைக் காலத்தில் அதுவரை மாநிலப் பட்டியலில் இருந்து வந்த கல்வி, பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாநில அரசு – மத்திய அரசு – இரண்டுக்கும் பொதுவானது என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், மாநில அரசு முடிவுக்கு மேலாக மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றினால், மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும் என்பதுதான் பொதுப் பட்டியலின் நிலையாகும். பல நேரங்களில் இந்த முரண்பாடுகள் ஏற்படவே செய்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பது முற்றிலும் சட்ட ரீதியாகவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மத்திய அரசோ, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றைத் திணிக்கிறது.

மாநில அளவில் மக்களின் நிலை – சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு – இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அதனைப் புறந்தள்ளி, டில்லியில் உட்கார்ந்து கொண்டு அனைத்திந்திய அளவில் ஒரே சீரான முடிவு என்பதெல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும்? இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு தட்பவெப்பநிலை, பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக்  கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?

மாநில அரசுகள் தங்கள் தங்கள் மாநிலங்களிலும் மருத்துவக் கல்லாரிகளை, தங்களின் நிதிப் பொறுப்பில் உருவாக்கி, மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும் என்று விரும்பினால், அதில் மத்திய அரசு, மருத்துவக் கவுன்சில் ஆகியவை தலையிட்டு, எம்.பி.பி.எஸ். சேர்க்கையின் மொத்த இடங்களில் 15 விழுக்காடு மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும்; முதுநிலை மருத்துவப் படிப்பு என்றால் 50 விழுக்காடு இடங்களை மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த வகையில் நியாயமானது?

மருத்துவக் கல்லூரிகள் சில மாநிலங்களில் போதுமான அளவில் இல்லையென்றால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே மாநில அரசுகள் தங்கள் தங்கள் நிதியில் இருந்து கட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களைப் பறிப்பது நேர்மையானதுதானா? மாநில அரசுகளிடமிருந்து இடங்களைப் பறித்துக் கொள்வதோடு அல்லாமல், மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின் மீதும் குதிரை சவாரி செய்வது ஆதிக்க உணர்வு அல்லவா! (நூலிலிருந்து பக்.6-7)

1919-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி கல்வி என்பது மாகாண அரசுகள் மட்டுமே அதிகாரம் பெற்றிருந்த துறையாகும் என்பதை கவனிக்க வேண்டும். 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலும் கூட, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி என்பது மாகாணங்கள் அதிகாரம் பெற்ற பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயே ஆட்சியாளரின் யதேச்சதிகார, சாம்ராஜ்ய அணுகுமுறையை விட, அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய போது, அதனை இயற்றியவர்கள் எந்த விதத்திலும் தாராளமானவர்களாக இருந்துவிடவில்லை; தேசத்தின் நலன் என்ற பெயரில், நாட்டுப் பிரிவினையைக் காரணம் காட்டி மாகாணங்களின் சுயஆட்சி அதிகாரத்தை முடமாக்கி, சீரழிக்கும் முடிவுகளை வேண்டுமென்றே அவர்கள் மேற்கொண்டனர். இவ்வாறு உணர்ச்சிக் கொந்தளிப்பான ஒரு சூழலில், காரண காரியம் அல்லால் உணர்ச்சியே மக்களை உந்தும் சக்தியாக இருந்த ஒரு காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்ட போதும் கூட தன் இரண்டாவது (மாகாணங்களின் பட்டியலில் தான், உயர் கல்வி பற்றிய சில கட்டுப்பாடுகளுடன் சேர்க்கப்பட்டிருந்தது.

… இவ்வாறிருக்கும் போது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1975-77 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், இந்தியா இருளில் மூழ்கி இருந்தபோது, கல்வித் துறை பற்றிய பதிவும் (மற்ற பல முக்கியமான துறைகள் பற்றிய பதிவுகளுடன்) 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இரண்டாம் பட்டியலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இரண்டாம் பட்டியலில் இருந்த 11-ம் எண் பதிவு நீக்கப்பட்டது. மூன்றாம் பட்டியலில் தற்போது உள்ளது போல பதிவு எண் 25 மாற்றி அமைக்கப்பட்டது. 42-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான நோக்கங்கள் காரணங்கள் பற்றிய அறிக்கை குழப்பம் நிறைந்த ஒரு பொதுவான அறிக்கையாகும்.

அது கூறுகிறது, அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள ஜனநாயக அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அழுத்தம் தரப்படும் சூழலில் செயல்பட வேண்டி இருப்பதால், பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக சுயநல சக்திகள் தங்களின் சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன. கல்வியை இரண்டாம் பட்டியலில் இருந்து மூன்றாம் பட்டியலுக்கு மாற்றுவதற்கு உறுதியான காரணம் எதுவும் கூறப்படவில்லை . இந்த 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகும். இந்தத் திருத்தத்தின் உள்ளடக்கம், நோக்கம் பற்றி முழுமையாக வெகு சிலரே அறிந்திருந்தனர்.

இவ்வாறு 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் செய்யப்பட்ட திருத்தங்களில் சில 43 மற்றும் 44-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களில் செயலிழக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட போதும், கல்வியோ, மாநில அரசின் அதிகாரம் பற்றிய வேறு எந்தப் பதிவோ மாநிலங்களின் இரண்டாம் பட்டியலுக்கு மாற்றி அளிக்கப் படவில்லை. அதன் பின்னர், அரசமைப்புச் சட்டத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட சில நீதித்துறை விளக்கங்கள் காரணமாக, மத்திய அரசு மேலும் மேலும் அதிக அதிகாரங்களை பெற்றதாகவும், மாநிலங்கள் மேலும் மேலும் பலவீனமானவைகளாகவும் ஆக்கப்பட்டன. (நூலிலிருந்து பக்.38-40)

இதிலே இரண்டு தவறுகள் நடந்துவிட்டன. ஒன்று கல்வியை மாற்றிய முறை தவறானது. இட்லருடைய பாராளுமன்றமும், முசோலினியின் சட்டமன்றமும் எப்படி அடிமைத்தனத்தில் இருந்தனவோ, அதைப் போன்றுதான் நெருக்கடி காலத்தில் இந்திராகாந்தியின் நாடாளுமன்றமும் செயல்பட்டது. எனவே, ஜனநாயக முறையில் விவாதம் எதுவும் நடத்தப்படாமல், கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, இப்படி மாற்றம் செய்வதற்கு முன்னதாக கல்வியாளர்களையோ, அறிஞர் பெருமக்களையோ மய்ய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இப்படி, மாபெரும் இரண்டு தவறுகளைச் செய்துதான் கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றி விட்டார்கள்.

1976-ல் இந்த மாற்றம் கொண்டுவந்து இன்றைக்கு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் என்ன நன்மை கிடைத்தது? என்ன தீமை விளைந்தது? நாம் அனுபவத்தில் ஆய்ந்து பார்க்கலாம். அதைப் பற்றிய புத்தகம் ஏதாவது கிடைக்குமா? என்று தேடிப்பார்த்தேன். ஆனால் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. இந்திய அரசியல் அமைப்பைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்களில், ஒரு சிலவற்றில் மட்டுமே இந்த மாற்றம் பற்றி மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்த மாற்றத்தை வரவேற்றும்; இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் தான் குறிப்பிட்டுள்ளார்கள். ஒருவர் கூட இதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதவில்லை என்பதை நீங்கள் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும். (நூலிலிருந்து பக்.57)

படிக்க:
இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !
கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…

1950-ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம் குறைபாடுகள் மலிந்த, மாநிலங்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கிற அரசமைப்புச் சட்டமாகத்தான் உருவாயிற்று. எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆய்வு செய்த அரசியல் அறிஞர் கே.சி.வியர் கூட்டாட்சி அரசு (Federal Government) என்ற தனது புத்தகத்தில் இந்தியாவை அரைக் கூட்டாட்சி நாடு என்று உருவகப்படுத்தினார்.

ஆனால், கடந்த 61ஆண்டுகளாக மத்திய அரசால் இயற்றப்படுகின்ற சட்டங்களும், சட்டத் திருத்தங்களும், ஏற்கனவே குறைந்து வருகிற மாநில அரசுகளின் அதிகாரங்களை மேலும் மேலும் குறைப்பதாகவே உள்ளன. அரைக் கூட்டாட்சி முறையிலிருந்து விலகி, மத்திய அரசு அதிகார குவிப்பின் மய்யமாகவே தற்போது உருவெடுத்து வருகிறது. (நூலிலிருந்து பக்.63-64)

நூல் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் ?
ஆசிரியர்கள் : ஆசிரியர் கி. வீரமணி, டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ. இராமசாமி, பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1, (50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி,  சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8163
மின்னஞ்சல் :info@periyar.org

பக்கங்கள்: 80
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க