செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ளது வழுக்கம்பாறை கிராமம். இங்கு ஊருக்குள் கவுண்டர் சாதியினரும் ஊருக்கு வெளியே இருளர் இன மக்களும் வாழ்ந்து வருகின்றன. இருளர் இன மக்களின் சடலத்தை இடுகாட்டில் புதைப்பதற்கு கவுண்டர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டி, சாலையில் சடலத்தை வைத்து இன்று காலை முதல் இருளர் இன மக்கள் போராடி வருகின்றனர்.

வழுக்கம்பாறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை ஏரிக்கரையில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் ஜந்து ஆறு தலைமுறைகளாகவே அடக்கம் செய்து வருகின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே இருளர் இன மக்கள் இடுகாட்டிற்கு செல்லும் வழியில் கவுண்டர் சாதியை சார்ந்தவர்கள் நிலம் இருப்பதால், “நாங்கள் வழிவிடமாட்டோம். கலெக்டரிடம் மனு கொடுத்து அனுமதி வாங்கிவா, உங்கள் சடலத்தை எங்கள் வழியாக எடுத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று பலமுறை பிரச்சினை செய்துள்ளனர். ஒவ்வொருமுறையும் அவர்களுடன் பிரச்சனை செய்துதான் சடலங்களை அடக்கம்செய்து வந்துள்ளனர் இருளர் இன மக்கள்.

படிக்க :
♦ திண்ணியம் – வாயில் மலம் திணித்த ஆதிக்கசாதி வெறியர்கள்
♦ தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !

சடலத்தை எடுத்துச் சென்றால் ஆள்வைத்து அடிப்பது, நான்கு பேர் தான் செல்லவேண்டும் என மிரட்டுவது, இழிவான வகையில் பேசுவது என தொடர்ந்து கவுண்டர் சாதியினர் இருளர் சாதியைச் சேர்ந்தவர்களின் மீது தாக்குதல் தொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (03-03-2021) இறந்த முதிய பெண்மணி ஒருவரின் சடலத்தை அவ்வழியே எடுத்துச் செல்ல முயன்ற போது அனுமதி மறுத்துள்ளனர்.

இருளர் இன மக்களுக்கு என இடுகாட்டை அரசு ஒதுக்காத சூழலில், ஏரிக் கரையில் உள்ள புறம்போக்கு நிலத்தில்தான் இம்மக்கள் இறந்தவர்களைப் புதைத்து வந்தனர். இந்நிலையில் ஊர்ப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த நிலம் புறம்போக்கு நிலம் இல்லை என்றும் தாம் பட்டா போட்டிருப்பதாகவும் கூறி அந்த நிலத்திலும் புதைக்க அனுமதி மறுத்துள்ளார்.

தங்களது சமூக மக்களை புதைப்பதற்கு இடுகாட்டுக்குக் உடலைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும்படியும், கவுண்டர் சாதியினரின் பகுதி வழியாகக் கொண்டு சென்றால் தாக்குதல் தொடுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரி இறந்தவரின் உடலை வைத்து சாலையில் போராட்டம் நடத்தத் துவங்கினர்.

இடுகாடு பிரச்சினை தொடர்பாக பல முறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
“பலமுறை மனு கொடுத்துவிட்டோம். மனு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஏதுவும் நடக்கப்போவதில்லை, சமிபத்திய ஆறு சாவிற்கும் எங்களுக்கு இதே போராட்டம்தான் நடக்குது, இதுக்கு ஒரு முடிவே தெரியல, சாவு இன்று ரோட்டில் அனாதையாக கிடக்கிறது நாங்கள் ஏங்கு சென்று புதைப்போம்?” என்கிறார்கள் இக்கிராமத்து பெண்கள்

“கலெக்டர் வரும் வரை நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம், ஜேசிபி எடுத்து வந்து எங்களுக்கான வழியை ஒதுக்கி நிரவித்தரும் வரை, சுடுகாட்டுக்கான நிலத்தை ஒதுக்கிதரும் வரை நாங்கள் போகமாட்டோம். காலங்காலமாக இதேக் கொடுமையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் இங்கேயேதான் இருப்போம், பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம், எங்களுக்கு வழிவேண்டும், நாங்கள் போவதை யாரும் தடைசெய்யக்கூடாது”என்றார் இறந்தவரின் சகோதரர்.

காலையில் தொடங்கி நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் போலீசு வந்து கலைந்து செல்லும்படி மிரட்டியது. அதற்கு அடிபணியாமல் உறுதியாக நின்று போராடினர் இப்பகுதி மக்கள். இன்று பிற்பகலில் அங்கு வந்த மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருளர் சமூக மக்கள் தங்களுக்கு உடனடியாக இடுகாடு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முறையான பாதை அமைத்துத்தரப்பட வேண்டும் என்றும் கூறினர்.

இடுகாட்டுக்கு இடத்தை ஒதுக்க உடனடியாக ஆவண செய்வதாக உறுதி செய்ததை ஒட்டி உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். வெறும் வாய்ப் பேச்சு மட்டும் பேசி இடம் ஒதுக்க மறுத்தால் மீண்டும் சாலையில் இறங்கிப் போராட தயங்கமாட்டோம் என்று கூறுகின்றனர் இருளர் இன மக்கள்.

வெறுமனே இடம் ஒதுக்கீடு செய்து இந்தப் பிரச்சினையை தீர்த்து விடுவதோடு தமது கடமையை முடித்துக் கொள்ள விழைகிறது மாவட்ட நிர்வாகம். இடுகாட்டுக்கு செல்லும் பாதையை மறித்து தாக்குதல் தொடுத்த கவுண்டர் சாதி வெறியர்களைக் கைது செய்வதோடு, இடுகாட்டு புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டுக் கொண்டவரையும்  அதற்குத் துணைநின்ற அதிகார வர்க்கத்தினரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.


வினவு செய்தியாளர்
திருவண்ணாமலை

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க