Sunday, January 16, 2022
முகப்பு வாழ்க்கை அனுபவம் பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

-

சென்னை வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் நடந்து வந்தேன். நிழலுக்காக தேடியதில் கிடைத்த ஒரு சர்ச் வளாகத்தில் ஒதுங்கினேன். என் களைப்பறிந்து தண்ணி தந்தது மட்டுமல்லாமல் மின் விசிறியை போட்டவரைப்  பார்த்தேன். உழைப்பறிந்த ஒருவருக்கு மற்றவரின் களைப்பை புரிந்து கொள்வது மிகவும் எளிது என்பதை சொல்லாமல் உணர்த்தியது அந்தோணியின் செய்கை.

திருத்தணியை அடுத்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. 36 வயதாகும் இவருக்கு 28 வயதுடைய மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயத்தை பின்னணியாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்தோணி சென்னையில் உள்ள இந்த தேவாலயத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார்.

திருத்தணியில இருந்து இங்க எப்படி வேலை கிடைச்சு வந்திங்க?

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

திருத்தணியில உள்ள திருச்சபையில மெம்பரா இருக்கேன். நான் பிள்ளைகள வச்சுகிட்டு படுற கஸ்டம் எல்லாம் ஃபாதருக்கு தெரியும். அங்க சொல்லி வச்சுருந்ததால இங்க வேலை இருக்கு போறியான்னு கேட்டாங்க. அவங்க ஏற்பாட்டுலதான் இங்க வேலைக்கு வந்தோம்

குடும்பத்தோடவா வந்துருக்கிங்க?

ஆமா! சர்ச்சு நிர்வாகத்துலேயே பள்ளிக்கூடமும் இருக்கு. பசங்கள அதுல சேத்துருக்கேன். என் சம்சாரமும் பள்ளிக்கூடத்துல பசங்கள பாத்துக்கற ஆயா வேலை பாக்குது.

நீங்க என்னென்ன வேலை செய்றீங்க?

இந்த சர்ச்சு வளாகம் முழுசும் கூட்டி பெருக்கி சுத்தமா வச்சுக்கனும். ஃப்ரேயர் ஹால நீட்டா வச்சுக்கனும். மொத்த இடத்துக்கும் தண்ணி டேங்குல ஏத்தனும். செடிகளுக்கு தண்ணி விடனும். கேன் வாட்டர் எடுத்து வந்து ஆபிஸ் ரூம், க்ளாஸ் ரூம், ஃப்ரேயர் ஹால் எல்லா எடத்துலயும் போடனும். எலக்ட்ரிக், ப்ளம்பிங், கார்பெண்டர் வேல எதுல பிரச்சனையின்னாலும் சரி செய்யனும்.

சர்ச்சுல கல்யாணம், ஞானஸ்தானம், இப்படி ஏதாவது விசேசம் நடந்தா சாமினா பந்தல், சேரு, சமையல் பாத்திரம் எல்லாம் சர்ச்சு நிர்வாகத்து மூலமா வாடகைக்கு கொடுக்குறாங்க. அதை பொறுப்பா கணக்கு பாத்து கொடுக்கனும். திருப்பி வாங்கனும். இது போக எந்த வேலை சொன்னாலும் செய்வேன்.

உங்க சம்சாரம் என்ன வேலை பாப்பாங்க?

சம்சாரம் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், டாய்லெட் சுத்தப்படுத்தனும். பிள்ளைங்கள பாத்துக்கனும், சோறு ஊட்டனும், ஒன்னுக்கு ரெண்டுக்கு போனா அதை பாக்கனும்.

எவ்வளவு சம்பளம் குடுக்குறாங்க?

எனக்கு 5000 என் சம்சாரத்துக்கு 2000 தாராங்க.

சென்னையில் இந்த சம்பளம் உங்களுக்கு குடும்பம் நடத்த போதுமானதா இருக்கா?

சம்பளமுன்னு பாத்தா கொஞ்சம்தான். ஆனா சர்ச்சுல மாசத்துக்கு 4, 5 கல்யாணம் நடக்கும். அதுக்கு வர்ர வேலை ஆட்கள ரெண்டு பேர கொறைச்சுகிட்டு எங்க ரெண்டு பேரையும் போட்டுகுறிங்களான்னு அய்யா கேப்பாங்க. அதுல ஆளு ஒன்னுக்கு 500 ரூ கெடைக்கும். மாசத்துக்கு 4 கல்யாணம் நடந்தா அது ஒரு 4000 ஆச்சுங்களே!

சம்பளம் போக வேற என்னெல்லாம் செய்றாங்க?

நன்கொடையா வர்ற அரிசியில 20 கிலோ கொடுப்பாங்க. மத்தபடி குடும்பத்துக்கான செலவு நம்மளது. மூணு பிள்ளைகளுக்கும் படிப்புக்கு காசு கிடையாது. உடம்புக்கு எந்த நோயி வந்தாலும் வயித்தியம் பாக்கறதா சொன்னாங்க. அட்டை ஓடு போட்ட ரூமு குடுத்துருக்காங்க (அஸ்பெஸ்டாஸ்). கரண்டுக்கு காசு கெடையாது. இது எல்லாத்தையும் கணக்கு போட்டா முன்ன பாத்த வேலைக்கி இது எவ்வளவோ மேலு. ஆண்டவர் நல்ல வழியத்தான் காட்டிருக்காருன்னு படுது.”

இதுக்கு முன்னாடி என்ன வேலை பாத்திங்க?

சமையல் மாஸ்டரா இருந்தேன்.

அந்த வேலையை பத்தி சொல்லுங்க?

அந்த வேலையை பத்தி என்னத்தங்க சொல்றது. 8 வருசமா இந்த வேலைதான் பாத்தேன். 2000 பேருக்கு ஆடர் எடுத்து சமைப்பேன். சீசனுக்கு 4, 5 கல்யாணம் வரும். மத்த மாசத்துல 1, 2 வர்ரதே தடுமாற்றம்தான். சம்சாரமும் கூட ஹெல்பரா வருவாங்க. இருந்தும் கட்டுபடி ஆகலை.

என்ன வகை சமையல் செய்வீங்க? வருமானம் என்ன கிடைக்கும்?

சைவம் அசைவம் ரெண்டும் செய்வேன். கறியும் அரிசியும் ஒன்னா கலந்த தம் போட்ட பிரியாணி செய்ய 1 கிலோ அரிசிக்கி 70, 80 பேசுவோம். சோறு தனி கிரேவி தனியா செஞ்சு ரெடி பன்ற பிரியாணின்னா 100 ஆகும். 100 இல்லேன்னா 150 கிலோ அரிசிக்கிதான் ஆடர் கிடைக்கும். 4 ஹெல்பர் வேணும். சைவமுன்னா ஹெல்பரு இன்னும் அதிகமாகும். அவங்க சம்பளம் போக என்னத்த மிஞ்சும் சொல்லுங்க.

பெரிய ஆர்டர் எல்லாம் ஏன் உங்க கைக்கு கிடைக்கிறதில்லை?

இப்பெல்லாம் இணையத்துலேயே ஆர்டர் எடுக்குறாங்க. அந்த வசதியெல்லாம் நமக்கு கெடையாது. எனக்கு கிடைச்ச சின்ன ஆர்டர் கூட பல நேரம் நேரடியா வராம இணையத்துல உள்ள தரகருங்கதான் பேசிவிடுவாங்க. எல்லாம் தரகர் இல்லாம நடக்காது.

விவசாயி ஆன நீங்க எப்படி சமையல் கத்துகிட்டிங்க?

என்னத்தங்க விவசாயம். எங்க அப்பாதான் விவசாயம் பாத்தாரு. நான் கூடமாட எல்லா வேலையும் செய்வேன். எங்களுக்கு கொஞ்சம் நிலம் சொந்தமா இருந்துச்சு. குத்தகைக்கு கொஞ்சம் விவசாயம் செஞ்சோம். பாடு பட்டதுதான் மிச்சம். நாங்க நாலு பிள்ளைங்க வயித்துக்கு சாப்பாடு நல்ல துணிமணி வாங்கிக்க முடியாது.

பிறகு அப்பா கூட சேந்து விவசாய கூலி வேலைக்கி போனேன். நண்பர்களோட சேந்து பெயிண்டிங் வேலைக்கி போனேன். 18 வயசு ஆச்சு என்னடா பொழப்பு இது கையுக்கும் எட்டாமெ வயித்துக்கும் பத்தாமென்னு வெறுத்துப் போயி வீட்ட விட்டு வேலை தேடி வெளிய வந்தேன். ரயில்வே கேண்டின்ல வேலைக்கி சேந்தேன்.

சமையல் தெரியாதப்ப எப்படி கேண்டின்ல வேலைக்கி சேந்திங்க?

சமையல்காரரா சேரல. கேண்டின்ல உள்ள சாப்பாட்ட ரயில் பயணிகள்ட்ட விக்கற சேல்ஸ் மேனா வேலைக்கி சேந்தேன்.

அதுல எப்படி மாச சம்பளமா?

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

மாச சம்பளமா? வயித்தெரிச்சல கெளப்பாதிங்க. ஒரு சாப்பாட்டுக்கு 2, 3 ரூபா கெடைக்கும். ஒரு நாளைக்கி 200 அல்லது 300 கிடைக்கும். விஜயவாடவுல இருந்து சென்னைக்கி வர்ர ரயில்ல, நாங்க அஞ்சு பேரு சேந்து இந்த வேலையை பாத்தோம். லாப நஷ்டத்த பிரிச்சு எடுத்துக்குவோம். சாப்பாட்டுக்கு மூனு மணி நேரத்துக்கு முன்னமே யாருக்கு என்ன சாப்பாடு தேவையின்னு ஆர்டர் எடுத்து ஸ்டேசன்ல இருக்குற கேண்டினுக்கு போன்ல சொல்லிருவேம். தயாராயிரும்.

சாப்பிடறவங்கள பாத்துட்டு பக்கதுல இருக்கவங்க திடீர்னு சிலபேர் சாப்பாடு கேப்பாங்க. அதுக்காக கூடுதலா 100 சாப்பாடு எடுப்போம். ஆர்டர் குடுத்த சிலபேர் பாதி வழியிலேயே இறங்கிருவாங்க. இல்ல வேணாம்னு சொல்லுவாங்க. மிஞ்சுன சாப்பாட்ட வந்த வரைக்கும் லாபன்னு அன்ரிசர்வேசன்ல கூட பாதி விலைக்கி தருவோம். இப்படி எது வேணுனாலும் நடக்கும் சூழ்நிலைக்கு தகுந்தபடி லாப நஷ்டம் வரும். உத்தரவாதமா எதுவும் சொல்ல முடியாது.

விக்கலேன்னா சாப்பாட்ட என்ன செய்வீங்க?

குப்பையில போட வேண்டியதுதான். ஆனா எடுத்த சாப்பாட்டுக்கு பைசா கொறையாம தெண்டம் கட்டியாகனும். பழக்கப்பட்டதால முன் பணம் கட்டாம கேண்டின் மாஸ்டர் மேற்பார்வையில சாப்பாடு எடுத்துக்கலாம். ஆனா எத்தன சாப்பாடு எடுக்குறோமோ அத்தனைக்கும் நாமதான் பொறுப்பு. விக்கலேன்னு திருப்பிக் கொடுக்க முடியாது. கொஞ்சமா எடுக்க வேண்டியதுதானேன்னு திட்டுறது மட்டும் இல்லாமெ மறு நாளைக்கி சாப்பாடு குடுக்க மாட்டாங்க.

இது என்னங்க கொடுமையா இருக்கு?

ரயில்வே சாப்பாட்ட ஏலத்துக்கு எடுத்தவன் சும்மா விடுவானா? நாம சாப்பாட்ட வித்துட்டு காசு தர்ர வேலையாளுதான். நஷ்டப்படாம லாபம் பாக்கிறவன் அவன்தான். எடுத்த சாப்பாட்டுக்கு காசு கட்டாம தப்பிக்கவே முடியாது.

இதுக்கு இடையில் எப்படி சமையல் கத்துகிட்டிங்க?

சாப்பாடு குடுக்கறது, நம்ம கிட்ட காசு வாங்கறது இதுக்கு எல்லாம் இன்சார்ஜ் கேண்டின் மாஸ்டர்தான். அவரை தாசா பண்ணிகிட்டு சமையல் கட்டு வரைக்கும் போவேன். கூடமாட ஒத்தாசை பன்னுவேன். காய் நறுக்குவேன், அரிசி கழுவுவேன், மாவு பெசஞ்சு குடுப்பேன். இதுக்கெல்லாம் காசு கிடையாது. விக்காத சாப்பாட்டுக்கு மறு நாள் காசு குடுக்குறேன்னு சொன்னா சரி போடான்னு சொல்வாரு அவ்வளவுதான்.

இருவது வயசுல இந்த வேலைக்கி போனேன். அப்படியே அவர் கூட இருந்து சமையலையும் கத்துகிட்டேன். கல்யாணம் வேற ஆச்சு. இதுலேயே இருந்தா சரிபட்டு வராதுன்னு வெளிய வந்தேன்.

எந்த வயசுல உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?

இருவத்தி ஆறு வயசுல கல்யாணம் ஆச்சு. காலையில 4 மணிக்கி வேலைக்கி போனா ராத்திரி மணி 1, 2 ஆயிரும் வீடு திரும்ப. சம்சாரம் சொன்னுச்சு “நீ மட்டும் சிரமப்படுற உனக்குதான் சமையல் தெரியும்ல நீ வந்துரு நானும் உதவியா வேலை செய்றேன் விசேசங்களுக்கு சமைப்போம்”ன்னு சொன்னதும் கரண்டிய கையில எடுத்துட்டேன்.

இத்தன வேலை செஞ்சதுல ஒரு மன அமைதிங்கறதே இருக்காது. சம்பாதிக்கிறது ஒரு மடங்குன்னா கடன் ரெண்டு மடங்கா இருக்கும். கடனை அடைக்கனும் பிள்ளைங்க படிப்பு அதுங்களுக்கு தேவையான நல்லது கெட்டது எதுவுமே முடியாம பரபரன்னு ஓடிகிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல வாழ்க்கையே வெறுத்து போச்சு. பிள்ளைங்கள பெத்துட்டு வாழ்கைய வெறுத்துட்டு ஓட முடியுமா அதுங்களுக்காக வாழந்து தானே ஆகனும்.

இங்க வேலைக்கி வந்த பிறகு மனசு கொஞ்சம் அமைதியா இருக்கு. சம்சாரம் மொகத்துல சிரிப்ப பாக்குறேன். பிள்ளைங்க இங்கிலீசு படிப்பு படிக்கிறாங்க. எல்லாத்துக்கு மேல ஆண்டவர் கூட இருக்குற பாக்கியம்.

சர்ச்சுக்கு வர்ரவங்க, விசேசங்கள் செய்றவங்க உங்களுக்குன்னு எதுனா தனியா குடுப்பாங்களா?

தேவாலயத்துக்கு நன்கொடை தருவாங்க. நமக்கு தரமாட்டாங்க. நமக்கு யாரும் சும்மா கொடுக்க வேண்டாங்க. ஒழைச்சதுக்கு கொடுத்தா போதும். உள்ளது ஒட்டுனா போதும்.

– சரசம்மா

  1. நல்ல ஒரு தரமான நேர்காணல், பண்பட்ட மனிதன், நேர்மையானவர், ஒவ்வொரு வேலையாக பார்த்து எது சரியானதோ அதை பிடித்துக்கொண்டார் குழந்தைகள் வளர்ந்து படித்து வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்- நன்றி வினாவுக்கு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க