“ஐ லவ் யூ.” – இதுவரை என்னிடம் யாரும் சொல்லாத வார்த்தையை சொல்லிச்சு அந்தப் புள்ள.

இட் அது, பட் ஆனால், வாட் என்ன, மீனிங் அர்த்தம். இத திருக்குறள் மாதிரி ஒரு ரைமிங்கா பள்ளி வயசுல சொல்லி பழகின ஞாபகம். அம்புட்டுதான் நம்மோட ஆங்கில மொழி அறிவு. நெலமெ இப்புடி இருக்க ஒரிசா, ஹிந்தி, ஆங்கிலம் அத்தனையும் பேசுற அந்த புள்ளய பாத்ததும் பத்தடி தூரம் ஒதுங்கத்தான் தோணுச்சு. பெறவு வேற வழியில்லாம நெருங்கி பழக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுப் போச்சு.

“ஹாய் ஆண்டி. குட்மார்னிங்”

மொதமொத அந்த புள்ள வாயால இந்த வார்த்தைய கேட்டதும் கடும் கோவம் எனக்கு. பத்து வயசு இடைவெளிதான் இருக்கும் ரெண்டு பேத்துக்கும். அதுக்கு போயி ஆண்டின்னா கோபம் வராதா பின்னே. சரி ஆரம்பத்துலேயே முகத்த காட்ட வேண்டான்னு… வேண்டா வெறுப்பா சிரிச்சுகிட்டே தலையாட்டி வச்சேன்.

ஆனா அந்த புள்ள “ஆண்டி”ன்னு கூப்புட்டா அம்புட்டு அழகாருக்கும்.

பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல. மொழி பிரச்சனையால அக்கம் பக்கம் பழகாம ஒண்டியாவே பொழுத கழிச்சிருக்கு இந்த புள்ள.

ஹாய், குட்மார்னிங், ஹவ்வார் யூ, பை….ய்ய்ய்…. இப்புடியே மூணு வாரம் ஓடிருச்சு. அன்னைக்கும் வழக்கம் போல பை….ய்ய்…. சொல்லிட்டு வெளிய போனாங்க கணவன் மனைவி ரெண்டு பேரும். போன ரெண்டு மணி நேரத்தில அந்த பொண்ணுக்கு கால் பாதத்துலேருந்து முட்டி வரைக்கும் மாவு கட்டு போட்டு கைத்தாங்கலா கூட்டிட்டு வந்தாரு வீட்டுக்காரு.

இங்கிலீஷுல “ஆண்டி வலி தாங்க முடியல ஆண்டி…..” ஓன்னு ஒரே அழுக.

ஒரு நிமிசம் என்ன செய்றதுன்னு புரியல. கனத்த ஒடம்பு வேற எப்புடியோ நானும் அவங்க கணவருமா சேந்து அந்த பொண்ண மாடிக்கி தூக்கிட்டோம். அன்னைக்கிக் கூட லீவு இல்லாமெ அலுவலகம் போக வேண்டிய நிர்பந்தம் அவங்க வீட்டுக்காரருக்கு. அடுத்து வந்த நாட்கள்ல அந்த பொண்ணுக்கு வாங்கிங் ஸ்டிக் உதவியோட சேத்து என்னோட உதவியும் கொஞ்சம் தேவப்பட்டுச்சு.

என்ன ஒரு பிரச்சனன்னா ஒருத்தர் சொல்றத ஒருத்தர் புரிஞ்சுக்க ரொம்ப செரமப்படுவோம். அந்த பொண்ணு தமிழ கொல பண்றது மாறி நானு ஆங்கிலத்த கொல பண்ணுவேன். ஒரே நாடு ஒரே மொழின்னு சொல்றாங்கலே அப்புடி இருந்துருந்தா இப்புடி ஒரு சோதன நமக்கு வந்துருக்காதேன்னு கூட அந்த சமயம் தடுமாறிப் போனேன். ஆனா தட்டுத்தடுமாறி புரிஞ்சுகிட்டு நாங்க பேசுன பேச்சு சுவாரசியத்தையும் எங்களுக்குள்ள ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணிச்சு.

படிக்க:
நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !
♦ பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

“ஆண்டி வீடு ராசி இல்ல அதான் காலு அடிபட்டுடுச்சோன்னு தோனுது.”

“வீடு ராசியான வீடுதான். அதுனாலதான் சின்னதா அடிபட்டுருக்குன்னு நெனச்சுக்குங்க” இத கேட்டதும் சிரிச்சுபுட்டா அந்த புள்ள.

“நீங்க பாசிட்டிவ் திங்கா.. பேசிறீங்க ஆண்டி”

“பாசிட்டிவா நெனச்சா மனசுக்கு தேவையில்லாத பயம் இருக்காதுல்ல”

“எங்களுக்கு முன்ன இந்த வீட்டுல இருந்தவங்க பிரச்சன இல்லாமெ நல்லாருந்தாங்களா ஆண்டி?”

சாவு இல்லாத வீடு எங்கருக்கு சொல்லுன்னு கேக்கனும்போல தோனுச்சு. ஓட்ட இங்கிலீசுல கேட்டு அர்த்தம் தப்பா போச்சுன்னா. அப்புடி வேண்டான்னு தோணவே

“இந்த ஏரியாவுல மழை வெள்ளம் புகுந்து 2016-ல எல்லார் வீட்டுலயும் எந்த  பொருளும் எடுக்க முடியாமெ சேதமா போச்சு அப்ப எல்லா வீட்டுக்கும் ராசிதான் காரணம்னு சொல்விங்க போலருக்கே?”

“சரிதான். ஸ்பீடு பிரேக் இருந்தத கவனிக்காமெ வண்டி ஓட்டுனது எங்க தப்புதான். ஆனா எங்க அம்மா ஒத்துக்கல ஊர்லேருந்து கெளம்பி வர்ராங்க. கணபதி ஹோமம் பண்ணனுங்குறாங்க. அவங்க ஓல்டு டைப் இதெல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்க ஆண்டி. யாராவது ஒரு நல்ல ஐயரு தெரிஞ்சா சொல்லுவீங்களா?

நல்ல சாப்பாட்டு கட எங்கருக்கு, காய்கறி கட எங்கருக்குன்னு கேட்டது போல பொசுக்குன்னு கேட்டுருச்சு அந்த புள்ள.

“ஆத்தா அந்த இலாக்காவுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் எனக்கு அதெல்லாம் தெரியாது. நானு கோயிலுக்கே போறது கெடையாது.. ஆள விடுதாயி”-ன்னு ஓடியாந்துட்டேன்.

மாதிரிப்படம்

அடுத்த வாரம் கணபதி ஹோமம் க்ஷேமமா முடிஞ்சது. பூரி ஜெகநாதர் கோயில் பிரசாதமும் சேத்து வீட்டுக்கு எடுத்து வந்தாங்க அவங்க அம்மா.

“சாரி ஆண்டி” “எதுக்கு” “உங்க நம்பிக்கைய மதிக்காமெ நடந்துகிட்டதுக்கு. அம்மாவுக்கு தெரியாது நீங்க சாமி கும்பிட மாட்டிங்கன்னு பிரசாதம் குடுத்துட்டாங்க.”

“அய்யய்யோ இதுல என்ன இருக்கு. நீங்க சாமி பிரசாதமா நெனச்சு குடுத்திங்க.. நானு தின்பண்டமா நெனச்சு வாங்கிகிட்டேன். இதுல என்ன இருக்கு அதுக்காக நீங்க குடுக்காமெ இருந்துட போறீங்க. எனக்கு எந்த பிரச்சனையும் கெடையாது.”

அடுத்து வந்த ஆயுத பூசை, கோகுலாஷ்டமி எல்லாத்துக்கும் வீட்டுக்கு பலகாரம் வந்தது. கடகடன்னு நாளு ஓடிச்சி நடைபயிற்சி போனோம். ஒவ்வொரு நாளும் ஒரு வித பேச்சு எங்களுக்குள்ள.

“ஆண்டி தமிழ் நாட்டுல கலைஞர், அம்மா ஜெயலலிதா இவங்களதான் நெறைய பாக்க முடியுது .. மோடிய எங்கயுமே பாக்க முடியலையே ஏன்?”

“தமிழ் நாட்டுல திராவிட அரசியல்தான் மக்கள் மத்தியில செல்வாக்கு. அவங்க ரெண்டு பேருமே திராவிட கட்சிய சேந்தவங்க. மோடி மதவாத கட்சி மதத்த அடிப்படையா வச்சு பிரிவினைய ஏற்படுத்துறவரு.. அதனால அவரு செல்வாக்கு இங்க எடுபடல.

இன்னொரு முக்கியமான காரணம் பெரியாரு. இது பெரியாரு பெறந்த மண். இங்க சாதி மத அடிப்படையில ஆள் சேக்குறது அவ்வளவு ஈசியான காரியம் கெடையாது.”

பெரியாரா? பெரியாருன்னா யாரு அவருக்கு அரசியல்ல என்ன ரோலு?

“தனித்தனியா பிரிச்சு சொல்ல தேவையில்ல ஈசியா புரிஞ்சுக்கனுன்னா  பி.ஜே.பி-க்கி முதல் எதிரி தமிழ்நாட்டுல பெரியாருதான். தாடியும் கைத்தடியுமா முதுமையான ஆளு பெரியாரு இன்னைக்கி அவரோட கருத்து இளைஞர்கள் மத்தியில…” ஆர்வமா சொல்ல ஆரம்பிக்கும் போது நாங்க ஒரு கோயில கடந்து போனோம்.

“சாரி ஆண்டி ஒரு நிமிசம் வெய்ட் பண்ணுங்க சாமி கும்பிட்டு வந்தர்ரே”ன்னு வழியில இருந்த புள்ளையாரு கோயிலுக்குள்ள பொசுக்குன்னு போயிருச்சு அந்த பொண்ணு.

திரும்பி வந்ததும் “தமிழ் நாட்டுல கோயிலெல்லாம் நீட்டா சுத்தமா இருக்கு ஆண்டி எங்க பக்கம் கோமாதான்னு கோயிலுக்கு மாட்ட நேந்துவிட்டு பராமரிப்பு இல்லாம கோயில் வளாகம் பூறா சாணிய போட்டுவச்சு வர்ரவங்க அத மிதிச்சி ஒரே அசிங்கமா கெடக்கும். உங்க கோயில் சூப்பரா இருக்கு.”

படிக்க:
நூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்
♦ இந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் ! கருத்துப்படம் !

“மோடிதான் பசு புனிதம் அதோட கழிவு தீர்த்தம், மாடெல்லாம் வெட்ட கூடாதுன்னு சொல்றாறே?”

“மோடி வளர்ச்சின்னு பேசுறாரு மாட்ட பொருளாதாரமா பாக்க மாட்டேங்குறாரு. சம்திங்க ராங்க்”

“கேக்கனுன்னு நெனச்சேன் கணபதி ஹோம பூஜைக்கி எம்புட்டு காசு வாங்குனாரு ஐயரு”

“அதிகமாதா கேட்டாங்க பிறகு நாங்களும் ஒங்காளுங்கதான் பாத்து கேளுங்கன்னு அம்மா சொன்னதுக்கப்புறம் வந்தவங்க கொஞ்சம் கொறச்சுகிட்டாங்க.”

“ஐயரா நீங்க” மனசுகுள்ள படக்குன்னுச்சு எப்புடிடா நம்ம வீட்டு சாப்பாட்ட சாப்புட்டாங்க. ரொம்ப ஆச்சாரம் பாப்பாங்களேன்னு தோனுச்சு. அந்த பொண்ணே எம்மன ஓட்டத்த புரிஞ்சுகிச்சு.

“அம்மாதான் ஓல்டு டைப்பு ஆண்டி. பூஜா ஹோமம் அப்புடி இப்புடின்னு ஓவரா பண்ணுவாங்க. எனக்கு ஒங்களாட்டமும் இருக்க முடியல அம்மாவாட்டமும் இருக்க முடியல.. ரெண்டுக்கும் நடுவுல. வெளியூர் வேல, ப்ரண்ட்ஸ், பார்ட்டி அப்புடி இப்புடி கல்ச்சர் மாறி போச்சு. வீட்டுல நான்வெஜ் சமைக்கிறதில்ல ஆசப்பட்டா ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுப்போம். கேக்க கூச்சமாருக்கு ஆண்டி. இந்த ஏரியாவுல நல்ல பிரியாணி எங்க கெடைக்கும்.”

“இப்பதான் எது வேணுமோ ஆர்டர் பண்ணுனா வீட்டுக்கே வருதே அப்பறமென்ன கவலை.”

“என்னோட ஹஸ்பெண்ட் ஃபேமிலி விவசாய பின்னணி. அவருக்கு தேவைக்கி அதிகமா இப்புடியெல்லாம் செலவு பண்ணா பிடிக்காது. எங்க அம்மா வீட்டுசைடுல மாச சம்பளம், பிசினசுன்னு கொஞ்சம் ஆடம்பரம். ஆரம்பத்துல எனக்கு அவர் கூட ஒத்து போக செரமமா இருந்துச்சு. போகப்போக எளிமைய புரிஞ்சுக்க அரம்பிச்சுட்டேன். இப்ப சந்தோசமா இருக்கேங்க ஆண்டி.”

“கேக்கவே ஆனந்தமா இருக்கு இதே சந்தோசம் உங்க வாழ்க்க பூறா இருக்கனும்”

“தேங்க்யூ! தமிழ்நாடுல எனக்கு ஒரு ப்ரண்ட்டு கெடச்சதுல ரொம்ப ஹாப்பி இருக்கு. ஐ லவ் யூ ஆண்டி”

இத்தன வயசுல மொதமுறையா அந்த வார்த்தைய கேட்டதும் கூச்சம் கலந்த சந்தோசத்தோட வீட்டுக்கு போனேன்.

– சரசம்மா

1 மறுமொழி

  1. சரசக்கா, மீ டூ – ஐ லவ் யூ….

    அதென்னமோ தெரியல…. ஆண்டி இண்டியன் ன்னு சொன்னாங்கூட சந்தோஷமா ஏத்துக்கிற மனசு. ஆன்டி ய மட்டும் ஏத்துக்கவே மாட்டேங்குது. ரொம்ப அன்பானவங்கச் சொன்னாக்கூட நோ தான்.

    ஆன்டிக்கு முன்னாடியெல்லாம் நாங்க, எல்லாரையும் அக்கா, அண்ணான்னுத்தான் கூப்பிடுவோம். இப்பத்தான், எல்லாரையும் ஆன்டி, அங்கிள்னு அல்லல் படுத்துறாங்க….

    எப்படியோ, மொழி தெரியாதவங்களையும் அன்பால நம்முடன் இணைச்சிக்க முடியும்னு சொல்லிட்டீங்க…. இதப்போல வாரத்துக்கு ஒருக்கா வந்தீங்கனா நல்லா இருக்கும்ல… பைய்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க