“என்னப்பா பொசுக்குன்னு இப்புடி சொல்லிட்ட. நீ நகை தர்ரேன்னு சொன்னதாலதான காசு குடுத்தேன். இப்ப மாத்தி பேசுனா எப்புடிப்பா.”

“அக்கா நான் ஏமாத்தல! ஏமாத்துற ஆளும் கெடையாது. எங்க அப்பா காலத்துலேருந்து இங்குனக்குள்ளதான் மளிகைக்கட வச்சுருக்கோம். என்னப்பத்தி தெரியாதா ஒங்களுக்கு.”

“நீ சொல்லிதான் ஒன்னப்பத்தி தெரியனுமா என்ன? அதுயில்லப்பா நாம பாக்குற வேலைக்கும் சம்பாதிக்கிற காசுக்கும் பத்துருவா சேத்து வச்சு நகநட்டு வாங்குற நெலமையிலயா இருக்கோம்.! சிறுகசிறுக கட்டிவச்சா மொத்தமா ஒரு நக வருமேன்னு நெனச்சேன். நீ இப்புடி கைய விரிக்கிறே.”

“நாட்டு நெலமெ சரியில்லக்கா. மூனு மாசத்துல நகை வெலையெல்லாம் தாறுமாறா ஏறிப்போச்சு. யாரக்கேட்டாலும் இனிமே வெலைவாசி எல்லாம் ஒரு போதும் கொறையாதுன்றாக. நம்மப்போல ஆளுங்க நகைக்கிட்டவே நெருங்க முடியல. நகைய தவிற நம்ம பேசுனா மாறி மத்த எல்லாம் அயிட்டமும் குடுத்துற்றங்கா. இந்த வருசத்தோட இந்த வேலைய ஏறகட்டிடலான்னு இருக்கேன்”

“நீ சொல்றது சரிதான். 100 ரூவா கொண்டாந்தா ஒரு நாள் பாலு.. காயிக்கே ஆவமாட்டேங்குது. எத வாங்க? எத விடன்னு தெரியமாட்டேங்குது. போற போக்க பாத்தா நாடு கெட்டு குட்டிச்சுவரா போ..ப்பது”

என்னடா இது மளிகைக் கடையில நகை வியாபாரமான்னு எழுந்த குழப்பம், ஒரு கிலோ வெங்காயத்த பொறுக்கி எடுக்குற அடுத்த அஞ்சு நிமிச இடைவெளியில தெளிவாயிருச்சு.

கடையின் வாடிக்கையாளர்களான அப்பகுதி உழைக்ககும் மக்களை சேர்த்து தீபாவளி நகை சீட்டு போட்டுருக்காரு கடைக்காரர். கடந்த தீபாவளி தொடங்கி மாதாமாதம் கட்ட தொடங்கிய ஒரு குறிப்பிட்ட தொகைக்கி, இந்த வருட தீபாவளியின் போது கால் சவரன் நகை, ஒரு சில்வர் பாத்திரம் அதில் இனிப்பு, பட்டாசு எல்லாம் தருவதாக பேச்சு.

படிக்க:
புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை !
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !

ஆனால் சொன்னபடி நகையை கொடுக்க கடைக்காரரால் முடியவில்லை. சீட்டு பிடித்து பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட்டம் என்று வகைவகையான தொலைக்காட்சி செய்திகளை பாத்திருப்போம். இக்கடைக்காரர் அப்படியான பேர்வழியும் இல்லை.

அவர் சொல்லும் காரணம் “ரெண்டு மூனு மாசத்துல நகை விலை தாறு..மாறா ஏறிப்போச்சு. அந்த தொழில்ல இருக்கவங்கள கேட்டா நாட்டு நெலமையே சரியில்ல. தங்கம் தொழிலே படுத்து கெடக்கு. பண்டிகைக்கான சிறப்பு விற்பனை ஆர்டரே எடுக்கல. அதுக்கு முன்னமே எடுத்த ஆர்டரும் போதிய விற்பனை இல்லாம தேங்கி போயி கெடக்குன்னு நகை வியாபாரிங்க சொல்றாங்க.

நகை வியாபாரிங்க சொல்றத பாத்தா நம்ம கடைக்கி தீபாவளி மளிகை சரக்கு எடுத்தா ஓடுமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. இந்த பண்டிகை நேரத்து வியாபாரத்துல கெடைக்கும் லாபத்துல சீட்டு கட்டுனவங்களுக்கு தேவையானத வாங்கனுன்னு நெனைச்சேன் இப்ப என்ன செய்ய போறேன்னு நெனச்சா மண்ட காயிது. ஆனா கண்டிப்பா நேர்மையா நடத்துக்குவேன்.” என்கிறார் கடைக்காரர்.

சாதாரண மக்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதியில் சிறு மளிகைக்கடை நடத்தும் அவர் கடையின் தேவையை ஒட்டி வெளியில் வட்டிக்கு வாங்குவதை விட சீட்டு பிடித்தால் மாசாமாசம் ஒரு தொகை கைக்கு கிடைக்கும். அதில் வரும் பணத்தை வைத்து கடைக்கு தேவையான ஏதோ கொஞ்சம் சரக்கு எடுத்து போடலாம் என்று நினைத்துள்ளார்.

படிக்க:
தமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019
♦ ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !

கடைக்காரருக்கு வெளியில் கடன் வாங்காததால் அந்த வட்டி மிச்சம்… கடை சரக்கு விற்பனையில் கிடைக்கும் லாபம் ஒரு லாபம். தீபாவளி பண்டு சீட்டுக்காக ஒரே இடத்தில் வாங்கப்படும் நகை, சாமான், பலகாரம் இதில் கொஞ்சம் லாபம் கிடைக்கும். இதற்கென தனிப்பட்ட உழைப்பு முயற்சி என்பது பெரிதாக இல்லை. வெளியில் கடன் வாங்கி வட்டி கட்டாமல் வாடிக்கையாளரிடம் இப்படி ஒரு தொடர்பு வைத்திருந்தால் நம்பிக்கையும் வளரும், கிடைக்கும் லாபத்தில் வாடிக்கையாளர்களுக்கு பவுனும், பரிசும் கொடுக்கலாம் என்பது அவர் எண்ணம்.

பெரிய பெரிய சிட்பண்ட்ஸ் கம்பெனியை நம்பாத மக்கள் இதுபோல் சிறு மளிகைக் கடை நடத்துபவர்களை மிகவும் நம்பிக்கைக்கு உறியவர்களாக பார்க்கிறார்கள். எப்படி இந்த நம்பிக்கை என்று கேட்டால்  “நம்ம அண்ணாச்சிதானே எங்கே போயிரப்போராரு” என்ற உரிமையும் உறவும் அவர்களுக்குள் இருக்கிறது. அதனால் இது போன்ற சிறு கடைகளில் இப்படியான தீபாவளி சீட்டு, அம்மாவசை பண்டு என்பதெல்லாம் சாதாரண நடைமுறையின் ஒன்றாக இருக்கிறது.

மாதிரிப் படம்

அதனால் தான் சாதாரண கூலி வேலை செய்பவர்கள் இது போல் கூட்டாக சேர்ந்து தங்களுக்குள் குழு சீட்டு போட்டு கொள்கிறார்கள். கொத்தனார் சித்தாள், துப்புறவு தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள், கிராமத்தில் வயலில் கூலி வேலை செய்பவர்கள் என தங்களுக்குள் பண்டிகை சீட்டு போட்டு கொள்கின்றனர். இதில் மாச சீட்டு மூறையும் உண்டு மாசாமாசம் ஏலம் விட்டு குழுவில் அவசர தேவை யாருக்கோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது வெளியில் வாங்கும் வட்டி கடனை விட குறைவானதாக இருப்பதாக சொல்கிறார்கள்.

சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துப் பாட்டுக்கே சரியாப்போகும் குடும்பத்தில் என்னைக்கு காசு சேத்து நகை வாங்குவது அதுற்கு வாய்ப்பில்லாத போது இது போலா நகைசீட்டு போடுவதும் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாக குருவியைப் போல் சேர்ப்பதும் சாதாரண மக்களின் நடைமுறை.

மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒரு கூலி தொழிலாளி எப்புடி வயித்தக்கட்டி சேமிச்சாலும் ஒரு வருசத்துக்கு கால் சவரன் வாங்குவது என்பது குதிரை கொம்புதான். நகரத்து கூலி தொழிலாளியா இருந்தாலும் சரி கிராமத்து சிறு விவசாயியா இருந்தாலும் சரி அவர்கள் வாழ்கையில் நகை என்பது அழகுக்கான பொருளல்ல அடகுக்கான பொருள். அவசர தேவைக்கு உதவும் ஆபத்பாந்தவன்தான்.

ஒரு சிறு விவசாயி நாற்று விட்டுவிட்டு நடவு செலவுக்கு மனைவியின் காதையும் கழுத்தையும் தான் முதலில் பார்ப்பான். உழவு உழுவ ஆரம்பித்து அறுவடை வரைக்கும் அடுத்தடுத்து மனைவியின் நகை ஒவ்வொன்றாக உருவப்படும். பிறகு அறுவடை முடிந்ததும் அடகு கடையில் இருந்த நகை மனைவியின் ஆபரணமாக மாறும்.

எளிய மக்களுக்கு ஆசையும் அடிப்படை தேவையுமாக இருக்கும் நகையை இந்த முறையில் வாங்குவது வழக்கம். அதற்கும் வேட்டு வைக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது இன்றைய பொருளாதார பிரச்சனை. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் சாதாரண மக்களின் அடுப்படி அஞ்சறை பெட்டிவரை கைவைத்தது இந்த அரசாங்கம். அறியாத மக்கள் என்ன செய்வதனெ தெரியாது நின்றனர். அதேபோல் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் வல்லுனர்கள் சொல்லும் புள்ளி விவரங்கள் எதுவும் இந்த மக்களுக்கு புரியாது.

ஆனால் விற்கும் விலைவாசிக்கும் கையில் இருக்கும் இருப்புக்கும் எதை வாங்குவது எதை தவிர்ப்பது என குழம்பும் மக்கள் அவர்களை அறியாமலே “நாடு கெட்டு குட்டிச் சுவராப் போ..ப்பது” என உணர வைக்கிறது.

– சரசம்மா

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க