அண்ணா பல்கலைக்கு உயர்சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து :
அண்ணா பல்கலைக்கு உயர்சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து (Institute Of Eminance – IOE) வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் ஒரு கோரிக்கை கடிதத்தை முன் வைத்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படாமல் IOE அந்தஸ்து வழங்க வேண்டுமென அதில் கேட்டுக் கொண்டுள்ளது.
இட ஒதுக்கீடு காவலனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள எடப்பாடி அரசு எழுதியுள்ள இந்தக் கடிதத்தின் மூலம் உயர்சிறப்பு கல்வி நிறுவனத்திற்கான முக்கியமான நிபந்தனைகளை மறைக்க எத்தனிக்கிறது. இத்தகைய உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்தின் மூலம், அண்ணா பல்கலைக்கழகம் “நிதி சுயாதீனமாகச் செயல்படுவதோடு, கட்டணம், ஆசிரியர் சேர்க்கை போன்றவற்றையும் சுயாதீனமாக” செய்துகொள்ள முடியும். அதாவது இனி அண்ணா பல்கலைக் கழகம் நிர்ணயிப்பதுதான் கட்டணம்; அவர்கள் நிர்ணயிக்கும் தகுதிதான் இறுதியானது. இதை மறைத்துவிட்டு இவர்கள் இடஒதுக்கீட்டுக்குப் பிரச்சினை வந்துவிடாதே என்று நாடகமாடுகின்றனர்.
***
பாலியல் வழக்காம் : இந்து தமிழ்திசையின் யோக்கியதை !
“பாலியல் வழக்கின் இறுதி குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய வேண்டும்” – இது 17-10-2019 அன்று வெளிவந்த இந்து தமிழ் திசை நாளிதழில் 9-ம் பக்கத்தில் வந்துள்ள செய்தியின் தலைப்பு.
இது ஏதோ ஒரு பாலியல் வழக்கு குறித்த செய்தியின் தலைப்பு போலத் தோன்றுகிறது அல்லவா? ஆனால் இது தமிழக சட்டப் பேரவையின் துணைத்தலைவரும் அதிமுகவைச் சேர்ந்தவருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் சம்பந்தப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு பற்றிய செய்திதான். இப்படி சம்பந்தப்பட்டவர்களின் பெயரைச் சொல்லி தலைப்பு போடாவிட்டாலும் பரவாயில்லை. “பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு” என்று தலைப்பு போடக் கூட தமிழ் இந்துவுக்கு ஏன் தயக்கம் ?
உட்செய்தியிலும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே “பொள்ளாச்சி” என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளது. அதுவும்கூட “பொள்ளாச்சி போலீசு வழக்கு பதிவு” என போலீசின் ஊரைக் குறிக்க பயன்படுத்தியிருக்கிறது.
ஊரையே உலுக்கிய சம்பவத்தின் தொடர்ச்சியை மக்களுக்குத் தரவேண்டியது ஒரு ஊடகத்தின் கடமை. ஆனால் அதை மூடி மறைக்கும் தமிழ் இந்துவின் செயல் எத்தகையது?
படிக்க:
♦ ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !
♦ கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !
***
எது நீதிமன்ற மாண்பைக் கெடுக்கும் செயல், திரு. ரஞ்சன் கோகாய் ?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைத்து வாதங்களும் நேற்றோடு (16.10.2019) முடிவடைந்துவிட்டன. தீர்ப்பு என்னவென்பதை முன் கூட்டியே சில வாரங்களுக்கு முன்னர் உ.பி பாஜக அமைச்சர் சொன்னதும், நேற்று பாஜக ஆதரவு ஊடகங்கள் சொன்னது குறித்தும் வாசகர்கள் அறிந்திருக்கலாம்.
இறுதி நாள் வாதங்கள் நடைபெற்ற நாளான நேற்று, இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமர் பிறந்த இடம் தொடர்பாக சில வரைபடங்களையும், நூல்களையும் ஆதாரமாகக் காட்டினார். இதற்கு முசுலீம்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், கடும் கண்டனத்தைத் தெரிவித்து, “இது (பொய்யான ஆவணங்களை ஆதாரமாகக் கூறுவது) நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்” என்றார். அதோடு அந்த ஆதாரங்களின் நகல்களை கிழித்து எறிந்தார்.

அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “வழக்கறிஞர்கள் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் எழுந்து போய்விடுவோம். நீதிமன்ற அறையின் மாண்பைக் காக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.
அது சரி, ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை இந்துக்களின் நம்பிக்கை என்ற பெயரில் வழக்காகக் கொண்டுவந்து, அந்த நம்பிக்கைக்கு “ஆதாரம்” என்று ஒன்றைக் கொண்டுவந்து காட்டுவது நீதிமன்றத்தின் மாண்பை அவமதிப்பதாக தலைமை நீதிபதிக்குத் தெரியவில்லை. நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் அக்குப்பைகளைக் கிழித்ததுதான் நீதிமன்ற மாண்பை அவமதித்து விட்டது போலும்..
நல்ல நீதிமன்றம் ! நல்ல மாண்பு ! போலோ, ஜெய் ஸ்ரீராம் !
***
கொல்லைப்புறம் வழியே தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் பாஜக :
14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டிருக்கிறதாம். இதற்காக இம்மாத இறுதியில் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது என அறிவித்துள்ளது என்.சி.இ.ஆர்.டி (NCERT).
இந்தக் கமிட்டி இப்போது மாற்றி அமைக்கவுள்ள பாடத்திட்டத்தை புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன் இந்தப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் தேசியக் கல்விக் கொள்கை வரைவு மீதான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முன்னரே பாடத்திட்டத்தை அதன்படி மாற்றுவது என்பது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல நரித்தனமானது.
இதே போன்றுதான் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளபடி 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனும் திட்டத்தை பின்வாசல் வழியாக அரசாணை வெளியிட்டு நிறைவேற்றியிருக்கிறது தமிழக அடிமை எடப்பாடி அரசு!
பின்வாசல் வழியாக மக்கள் விரோத செயல்களை நிறைவேற்றிவரும் சங்க பரிவாரத்தை வேரறுக்காமல் விடிவு இல்லை !
– நந்தன்