எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
யா ஒரு நாள் என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார். என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை; கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையே தேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில் உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க முடியாது, நாங்கள்தான் உண்டாக்கவேண்டும். சாதரண மாங்கன்று ஒன்றை வாங்கி நல்ல பழம்தரும் மரக் கிளையுடன் ஒட்ட வைத்து தினம் தண்ணீர் ஊற்றவேண்டும். அந்த வேலைதான் எனக்கு தரப்பட்டது. என் சகோதரர்களின் பொறாமையை தக்க வைப்பதற்காக நான் என் ஏமாற்றத்தை வெளியே காட்டவில்லை.

தினமும் அதிகாலை சிறாப்பர் வீட்டுக்குப் போய் நான் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவேன். சிறாப்பர் என்பது அவருடைய பெயர் அல்ல. அப்பொழுதெல்லாம் வங்கிகளில் காசாளர்களை சிறாப்பர் (shroff) என்றே அழைத்தார்கள். இவர் தன் வீட்டிலும் ஒரு வங்கி நடத்தினார். ஐயா இவரிடம் காசு கடன் வாங்குவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து வட்டி வாங்கிப் போவார். அவருடைய கன்னச் சதைகள் தண்ணீர் நிரப்பியதுபோல ஊதிக்கிடக்கும். சிரித்தால் கண் இமைகள் தானாகவே மூடிவிடும். ஒரு தாரா நடப்பதுபோல போல கால்களை அகட்டி வைத்து நடப்பது வேடிக்கையாக இருக்கும். நானும் சிறுவயதில் அப்படித்தான் நடப்பேனாம். எனக்கும் ஒருகாலத்தில் வீட்டிலே பட்டப் பெயர் சிறாப்பர். பின்னர் அது வழக்கழிந்துவிட்டது.

ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது. அதற்குள் நான் விரும்பிய இரண்டு பொருட்கள் இருந்தன. ஒன்று எங்கள் சாதகக் கட்டுகள். சாத்திரியார் வரும்போது அவை வெளியே எடுக்கப்படும். இரவிரவாக வீட்டிலே சாதகம் பார்ப்பார்கள். இரண்டாவது, ஒரு தடித்த அட்டை போட்ட தொக்கையான கணக்குப் புத்தகம். குத்து விளக்கை கொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் ஐயா, வயலட் பென்சிலை நாக்கில் தொட்டு தொட்டு கணக்கு எழுத்துவார். பின்னர் கணக்குப் புத்தகம் மரப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்படும்.

மாதிரிப் படம்

ஐயாவுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. அவராக ஒரு வேலைக்குச் சென்றதில்லை. புகையிலை வியாபாரம்தான். சிப்பம் சிப்பமாக கட்டி ரயிலில் கொழும்புக்கும், கண்டிக்கும், மாத்தளைக்கும், கேகாலைக்கும் அனுப்புவார். பின்னர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை புறப்பட்டு இந்த ஊர்களுக்கெல்லாம் சென்று பணத்தை அறவிட்டு வருவார். அநேகமாக பாதி பணம்தான் கிடைக்கும். அம்மா ஏதும் தேவைக்கு காசு கேட்டால் மீதி கடன் அறவிட்ட பின்னர் தருவதாகச் சொல்வார். அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தினம் பெட்டகத்தை திறந்து கணக்குகள் எழுதிவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பார்.

ஐயாவுக்கு புத்தகங்கள் எதிரி. வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதிகமாக உபயோகம் கண்டதும் அந்தப் புத்தகம்தான். வீட்டிலே பல்லி யாராவது உடம்பிலே விழுந்து கொண்டேயிருக்கும். ஐயா உடனே பஞ்சாங்கத்தை புரட்டி பலன் பார்ப்பார். நாலு நாள் கழித்து அது எப்படி பலித்தது என்று நாலு பேருக்குச் சொல்வார். பஞ்சாங்கத்தை தவிர வீட்டிலே பாடப்புத்தகங்களும் இருந்தன. மூத்த அண்ணர் ஒருவர்தான் புதிதாக புதிய மணத்துடன் புத்தகத்தை அனுபவிப்பார். அதன் பின்னர் அது வரிசையாக ஒவ்வொரு வருடமும் கைமாறி கீழே வரும். என் முறை அணுகும்போது, முன் அட்டை பின் அட்டை எல்லாம் கிழிந்துபோய் பரிதாபமான நிலையில் தொட்டால் ஒட்டிப் பிடிக்கும் தன்மையுடன் இருக்கும். எனக்குப் பின்னர் இன்னும் இரண்டு பேருக்கு அது போகவேண்டும்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

நாவல்களையும், வாரப் பத்திரிகைகளையும் இரவல் வாங்கி ஐயாவுக்குத் தெரியாமல் படிப்பேன். அம்மா என் பக்கம் என்றபடியால் விசயம் ஒருமாதிரி போய்க்கொண்டிருந்தது. ஒரே எதிரி தம்பிதான். ஐயாபோல அவனும் புத்தகங்களுக்கு எதிரி. என்னை எப்பொழுதாவது நாவலுடன் பார்த்தால் ஐயாவுக்கு மூட்டிவிடுவான். அப்படியிருந்தும் பாடப் புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து திகம்பரசாமியார் முழு நாவலையும் படித்துவிட்டேன்.

பஞ்சாங்கத்தில் பலன் பார்ப்பதோடு மட்டும் ஐயாவுக்கு பல்லியுடனான சம்பந்தம் முடிவுக்கு வரவில்லை. ஐயாவின் வாழ்வில் பல்லி பெரும் பங்கு வகித்திருக்கிறது. அவருக்கு இரண்டுதாரம். நாங்கள் ஏழு பேர் இரண்டாம் தாரத்துக்கு பிறந்தவர்கள். முதல் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். முதல் தார மனைவி இறந்தவுடன் பிள்ளைகளைப் பார்க்க ஐயாவுக்கு ஆள்தேவை. நல்லூரில் இருந்து ஒரு பெண்ணின் சாதகத்தை தரகர் அவசரமாகக் கொண்டு வந்தார். சொந்தக்காரர்கள் நெருக்கினார்கள். ஐயாவால் முடிவெடுக்க முடியவில்லை. கோயில் சுவரில் ஏறிக்குந்திவிட்டார். ஏதாவது ஒரு சைகை கிடைத்தால்தான் இறங்குவதாக சங்கல்பம். காலையில் ஏறியவர் மதியம் ஆகியும் இறங்கவில்லை. பின்னேரமும் மறைந்து வானத்திலிருந்து இருட்டு மட்டும் இறங்கியது. ஐயாவுக்கு பசியில் கண் மங்கியது. அப்போது ஒரு பல்லி சத்தம் போட்டது. அதுக்கும் பசி. ஐயா எதிர்பார்த்த சம்மதம் கிடைத்து பொத்தென்று குதித்தார். திருமணம் முடிந்து நாங்களும் பிறந்தோம்.

மாதிரிப் படம்

அம்மா எப்படி 15 வயதில் இரண்டாம் தாரமாக இரண்டு பிள்ளைகளுடைய ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டார் என்பது இன்றைக்கும் புதிர்தான். அந்தக் காலத்தில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்? பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவேண்டியதுதானே. மணமுடித்து வரும்போது அவருக்கு நீண்ட கூந்தல் இருந்தது என்று சொல்வார்கள். தூங்கும்போது ஒரு தலையணையில் அவர் தலையும் இன்னொரு தலையணையில் அவர் கூந்தலும் கிடக்குமாம். ஒருநாள் நான் அம்மாவிடம் நேரில் கேட்டுவிட்டேன். அம்மா ஏன் நீங்கள் சிரிப்பதில்லை. அவர் சிரித்தார்; அது முழுச் சிரிப்பு இல்லை. இரண்டாம் பரிசு பெற்ற ஒருவரின் சிரிப்பு.

ஐயாவுக்கும் எங்களுக்குமிடையே நிறையத் தூரம் இருந்தது. அவர் என்னைத் தூக்கியது நினைவில் இல்லை. தலையை தடவியது கிடையாது. நான் பெரிய குளப்படிக்காரன் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். சின்ன வயதில் வீட்டில் உள்ள பொருள்களை உடைத்துவிடுவேன். ஒருமுறை அம்மாவுடைய வெண்கலக் குடத்தை போட்டு நெளித்துவிட்டேன். இன்னொரு தடவை ஐயா அருமையாகப் பாதுகாத்த சுவிஸ் மணிக்கூட்டை உடைத்தேன். ஆனால் ஐயாவால் மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் செய்தேன். எங்களிடம் மிகப் பழமையான கருங்காலி மரத்தில் செய்த கட்டில் ஒன்று இருந்தது. நாலு பக்கமும் நுளம்பு வலை போடுவதற்கு வசதியாக மரத்தூண்கள் இருக்கும். ஒருநாள் இந்த மரத்தூணை எவ்வளவு தூரத்துக்கு வளைக்கலாம் என்று பரீட்சித்துப் பார்த்தபோது அது படாரென்று பெரிய சத்தத்துடன் முறிந்தது. ஐயாவின் கண்களில் முதலில் கோபமும் பின்னர் சோகமும் தெரிந்தது. அது பரம்பரையாக வந்த கட்டில். அவருடைய மனதில் அது எத்தனை பெரிய துயரத்தை உண்டாக்கியிருக்கும். நான் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன். ஆனால் அவர் என்னை தண்டிக்கவே இல்லை. அதன் பின்னர் ஐயா வெளியே புறப்படும்போது வீட்டில் அத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் தனியே அழைத்து இப்படி சொல்வார். ‘சுவர், தூண்கள், கூரை பத்திரம். நான் திரும்பும்வரை பார்த்துக்கொள். உடைத்துவிடாதே.’

படிக்க:
பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !
♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! – மாநாடு நிகழ்ச்சி நிரல்

ஒரு தடவை எனக்கு ஒரு ரூபா கிடைத்தது. வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் எனக்கு கொடுத்தது. அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய காசு. நான் அதுவரை சில்லறைக் காசுகளைத்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு தாளாக ஒரு ரூபா கிடைத்திருந்தது. மூளையில் கனவு தொடங்கிவிட்டது. ஆங்கிலப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து ஒவ்வொருநாளும் தொட்டுப் பார்ப்பேன். இந்தச் செய்தி ஐயாவின் காதுகளுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது.

ஏதோ அவசரத்துக்கு அவர் என்னிடம் ஒரு ரூபா கடன் கேட்டார். ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. திரும்பக் கிடைக்குமா என்ற அச்சமும் என்னை திக்குமுக்காட வைத்தது. என் முழுச் செல்வத்தையும் கேட்கிறார். எப்படி மறுக்கமுடியும்? அந்த புதுத்தாளை ஒருமுறை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன். கொடுத்த கணமே பெரும் சோகம் என்னைக் கவ்வியது. ஒரு வாரம் கழித்து ஐயாவிடம் கடனைக் கேட்டேன். அடுத்த வாரம் என்றார். பொறுத்திருந்து அடுத்த வாரமும் கேட்டேன். ‘இப்ப அவசர வேலையாக இருக்கிறேன். பிறகு கேள்’ என்றார். இப்படி தினம் நான் கேட்பதும் ஒவ்வொருவிதமான பதில் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கடிதம் எழுதிப் பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. ஆறு மாதம் ஓடிவிட்டது. அவர் ஒருநாள் மரக்கட்டிலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது மடக்கினேன். ‘என்னுடைய காசு’ என்றேன். ’என்ன காசு?’ என்றார். எனக்கு தலை சுழன்றது. வீடு சுழன்றது. என்ன விளையாடுகிறாரா? அவருக்கு மறந்துவிட்டது. என் முகத்தை திருப்பி ஐயாவுடன் நான் பலநாள் பேசவில்லை. நான் கோபத்தில் அவருடன் பேசவில்லை என்பது ஐயாவுக்கே தெரியாது.

கொழும்பு, கண்டி போன்ற வெளியூர்களுக்கு ஐயா போகும்போது வீடு பெரும் தடல்புடலாக இருக்கும். அம்மா சுழன்று சுழன்று வேலை செய்வார். ஐயாவுக்கு வேண்டிய பலகாரங்களைச் சுட்டு பெட்டிகளில் அடைப்பார். சூட்கேசை இரண்டுநாள் முன்னரே அடுக்கினாலும் ஐயா மறுபடியும் அடுக்குவார். ஐயா திரும்பும்வரைக்கும் அம்மா பதற்றமாகவே இருப்பார். ஒருமுறை ஐயா போய் பல நாட்களாக கடிதம் இல்லை. திடீரென்று ஒருநாள் தந்தி வந்தது. அம்மா குழறி அழத்தொடங்கினார். தந்தியின் வாசகம் இதுதான். ‘நான் அநுராதபுரம் ரயில் ஸ்டேசனில் சேமமாக இருக்கிறேன்.’ அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் பாதி வழியில் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விட்டனர். இந்தச் செய்தி எங்களுக்கு தெரியாது. ஐயா சிறு காயத்துடன் தப்பி காட்டு வழியில் நடந்து அநுராதபுரம் ஸ்டேசனில் நின்று தந்தி கொடுத்திருக்கிறார். ஐயா வீட்டுக்கு வந்த பின்னரும் அம்மாவின் அழுகை ஒருவாரமாக ஓயவில்லை.

அபூர்வமாக ஐயா சந்தோசமாக இருந்திருக்கிறார். பெரிதாக குடிக்கும் பழக்கம் இல்லை. கள்ளுக்கொட்டில் போனதே கிடையாது. வீதியிலே ஆடி ஆடி நடந்தது கிடையாது. எப்பொழுதாவது அவருடைய வெளியூர் வியாபார சிநேகிதர்கள் வந்தால் டவுனுக்கு போய் பிராண்டி வாங்கிவந்து நண்பரும் அவருமாக மரக்கட்டிலில் உட்கார்ந்து குடிப்பார்கள். மகிழ்ச்சி அப்படியே துள்ளும். தொடையிலே தாளம்போட்டு பாட்டுப் பாடுவார். எங்களை கைகாட்டி அருகில் வரும்படி கூப்பிடுவார். நாங்கள் போகமாட்டோம். இவர் வேறு யாரோ என்று எங்களுக்குத் தோன்றும்.

படிக்க:
பாதங்கள் சொல்லும் பாடம் !
♦ உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்

ஒருவர் வாழ்ந்த மிக நீண்ட வாழ்க்கையில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே நினைவில் வருகின்றன. சிதறியிருக்கும் புள்ளிகளை தொடுத்து ஒட்டகம் உண்டாக்குவதுபோல இந்தச் சம்பவங்களின் கூட்டுத் தொகைதான் என் ஐயாவின் வாழ்க்கை. எங்கள் வீட்டில் நிறைய பலாமரங்கள் இருந்தன. அவற்றைக் கயிறு கட்டி இறக்கி ஊர்க்காரருடன் பங்குபோடுவோம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கொடுக்கு கட்டிக்கொண்டு மரம் ஏறினார். ஒரு பக்கம் கத்தியையும், மறுபக்கம் கயிற்றின் நுனியையும் செருகியிருந்தார். இதுவே அவருக்கு முதல் தடவை. உச்சக் கொம்பில் பெரிய பழம் தொங்கியது. கயிற்றினால் காம்பைக் கட்டினார். ஒரு கிளையின் மேலால் கயிற்றை கீழே விட்டார். ஐயா கயிற்றை இழுத்துப் பிடிக்க அண்ணர் காம்பை வெட்டினார். பலாப்பழம் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. கயிற்றுக் கட்டுக்கு மேலே வெட்டாமல் அண்ணர் கீழே வெட்டிவிட்டார். அண்ணரின் கால்கள் நடுங்கின. அவருக்கு கீழே நூறு அடி காற்று. அப்பொழுது ஐயா சொன்னது மறக்க முடியாதது. ‘சரி, மகனே. கத்தியையும் கயிறையும் ஞாபகமாக மேலே எடுத்துப்போனாய். மூளையை மட்டும் கீழே விட்டுவிட்டாய். சரி, களைத்துப் போயிருப்பாய். மெதுவாக இறங்கு.’ அருமையான பழம் சிதறிப் போனதில் ஐயாவுக்கு பெரும் கோபம்.

ஒருமுறை என்னிலும் அந்தக் கோபம் திரும்பியது. எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசை. ஆனால் வீட்டில் இருந்த ஐயாவின் சைக்கிளை பார்க்கலாமே ஒழிய தொடமுடியாது. ஐயாவை பார்க்க ஒருத்தர் தொலை தூரத்திலிருந்து அடிக்கடி வருவார். அவர் தன் சைக்கிளை யானை கட்டுவதுபோல பெரிய சங்கிலியால் கட்டி ஒரு மரத்துடன் இணைத்துவிடுவார். ஒருநாள் அவர் வந்தபோது ஐயா இல்லை. வழக்கம்போல சைக்கிளை கட்டாமல் சாய்த்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார். அந்தத் தருணம் கடவுளால் அருளப்பட்டது. அதை தவறவிட்டால் வாழ்நாள் முழுவதும் துக்கிப்பேன். நான் சைக்கிளை மெதுவாக உருட்டி வெளியே கொண்டுவந்து ஏறி ஓட்டினேன். எங்கள் கிராமத்தில் எங்கே சுற்றினாலும் 3, 4 தெருக்கள்தான். நான் பல சாகசங்கள் செய்தபடி தெருக்களில் ஓட்டினேன். இருந்தும், எழும்பியும், குனிந்தும், குனியாமலும், கையை விட்டும், விடாமலும், நின்றும், நில்லாமலும், மிதித்தபடியும், மிதிக்காமலும் வேகமாக ஓட்டினேன். தூரத்தில் ஐயா வருவது புழுதியில் தெரிந்தது. சைக்கிளை திருப்பினேன்; அது திரும்பவில்லை. பிரேக் பிடித்தேன் , அது பிடிக்கவில்லை. என் சைக்கிள் ஐயாவின் சைக்கிளோடு மோதி, ஐயா மல்லாக்காக விழுந்தார். நான் குருவிபோல சட்டென்று எழும்பி மறைந்துவிட்டேன்.

அன்று நான் வீட்டுக்கு திரும்பவில்லை. மாலையாகும் வரைக்கும் வீதிகளில் சுற்றினேன். பசி தாங்க முடியாமல் மெதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். ஐயா காத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கால் செருப்பைக் கழற்றி என்னை அடிக்க வந்தார். நான் வீட்டைச் சுற்றி மூன்று தரம் ஓடினேன். பின் நாளில் இந்தச் சம்பவதை விவரிக்கும்போது நான் இப்படி எழுதினேன். ‘சப்பாத்தை தூக்கிக்கொண்டு ராசகுமாரன் சிண்டரெல்லாவை துரத்தியதுபோல அப்பா என்னை துரத்தினார். எவ்வளவு துரத்தினாலும் ஐயாவின் செருப்பு என் முதுகை சந்திக்கவே இல்லை.’

ஐயாவுக்கு வயதானபோது அவரால் வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. நிறுத்தலாம் என நினைத்தார், அனால் பொருட்களைக் கடனாக வாங்கியவர்களின் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. எத்தனை முயன்றும் பணத்தை மீட்க முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கத் தொடங்கினார்கள். ஐயாவுக்கு வேறு வழியில்லை. மூன்று தலைமுறை கண்டு வந்த பெரிய காணி ஒன்றை விற்று கடனை அடைத்தார். அப்பொழுது நான் கணக்காளர் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒருவாறு விசயம் புரிந்தது. 30 வருடமாக ஐயா செய்த வியாபாரம் நட்டத்தில்தான் ஓடியது. அவர் வியாபாரம் செய்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆரம்பத்திலேயே காணியை விற்றிருந்தால் அந்தக் காசிலேயே எங்கள் காலத்தை ஒட்டியிருக்கலாம். இதை நான் ஐயாவிற்கு சொல்லவே இல்லை. அவர் மனது கஷ்டப்பட்டிருக்கும். வீட்டிலே ஓர் ஆண்மகன் எப்படி சும்மா இருப்பது? வியாபாரம் செய்வதுபோல ஒரு பாவனை இருக்கவேண்டும். அப்பொழுதுதானே மரியாதை.

படிக்க:
ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்
♦ சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

ஐயாவுக்கு ஓர் அண்ணர் இருந்தார். பெரிய ஐயா என்று அழைப்போம். அவர் என்ன செய்தார் என்பது தெரியாது. எந்த நேரமும் அவருக்கு ஒரு தேவை இருக்கும். மிக உயரமாக, மேல் சட்டை அணியாமல் முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிப்பார். கைகளைத் தொட்டால் மரப்பட்டை போல இருக்கும். ஏதாவது உதவி கேட்டு வருவார். ஒரு நாள் இரவு சூள பிடித்துக்கொண்டு இலைகளை மிதித்தபடி அவசரமாக வந்தார். அப்பொழுதுதான் முதன் முதலாக சூள் என்னவென்று பார்த்தேன். தென்னம் பாளையை கீறி பற்றவைத்த தீப்பந்தம் அது. ஐயாவுடன் ஏதோ சத்தமாக பேசிவிட்டு யோசனையுடன் திரும்பினார். தீப்பந்தத்தில் அவர் நிழல் பின்னால் விழுந்தது. அது ஏதோ சோகச் செய்தி சொன்னதுபோல பட்டது.

அடுத்தநாள் அதிகாலை பெரும் ஆரவாரம் கேட்டு எழுந்தேன். எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓட நானும் ஓடினேன். தண்டவாளத்தை தாண்டியதும் ஒரு பெரிய மரத்தின் உச்சியில் பெரிய ஐயா தூக்கில் தொங்கினார். அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. எப்படி அத்தனை உயரம் ஏறினார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. ஒருத்தருக்கும் கேடு நினைக்காத மனிதப் பிறவி அவர். ஐயாவின் கண்களில் நீர் வழிந்ததை முதல்முறை பார்த்தேன். இரண்டாவது தடவை அம்மா இறந்தபோது கண்ணீர் விட்டார். பெரிய ஐயாவுக்கு ஏதோ துயரம் இருந்தது. ஐயா அதைத் தீர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. மிக உயரத்தில் ஒற்றைக் கயிற்றில் அவர் உடல் ஆடியது மறக்கமுடியாத காட்சியாக நிற்கிறது.

ஒட்டுமாங்கன்று எப்பொழுது காய்க்கும் என்று ஐயா பார்த்துக்கொண்டே இருந்தார். அது காய்க்க முன்னரே ஓர் இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். ஐயாவை அவருடைய மரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். ஒரு காலத்தில் தண்டவாளத்தை ஒரு கையால் தூக்கியவர், ஊரில் பிரபலமான சண்டியனை ஒற்றை விரலால் நெஞ்சில்தொட்டு நிறுத்தியவர். அவர் உடலை பார்த்து திடுக்கிட்டேன். சதைகள் உருகி வெறும் எலும்புக்கூடுதான் எஞ்சியிருந்தது. 31-ம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தை திறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன. ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன்.

அப்பொழுது சாட்டர்ட் கணக்காளர் பரீட்சையில் சித்தியடைந்து நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே ஐயாவின் கணக்குப் புத்தகத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது. கணக்காளர் படிப்பில் ஒற்றை பக்க கணக்கு, இரட்டைப் பக்க கணக்கு என இரண்டு வகை இருந்தது. இரண்டுக்கும் இடைப்பட்ட கணக்குத்தான் ஐயாவுடையது. அவராக உண்டாக்கியது. புத்தகத்தில் சிட்டை கணக்குகள், ரசீதுகள், காசு வரவுகள், செலவுகள், கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் என சகலதும் இருந்தன. ஆனால் என்னுடைய கணக்காளர் மூளையில் ஒன்றும் ஏறவில்லை. ஒருவருடைய பெயரை எழுதி வெட்டியிருப்பார். அவர் கடனை தந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா?

ஒவ்வொரு மாதமுடிவிலும் கோடு இழுத்து புதிய மாதம் தொடங்கியது. எப்படி இந்தப் புத்தகம் அவருக்கு உதவியது என்பது புரியவே இல்லை. திடீரென்று ஒரு பக்கத்தில் வரவேண்டிய கணக்குகள் இருந்தன. அதிலே 10 – 15 பேர்கள். அந்தக் கடன்கள் வந்தனவா என்றும் தெரியவில்லை. அடுத்த பக்கத்தில் கொடுக்கவேண்டியவர்கள் கணக்கு. பெயர்களை வரிசையாக படித்துக்கொண்டே வந்தேன். பல பெயர்கள் எனக்கு தெரிந்த பெயர்கள்தான். ஒரு பெயரில் கண் நின்றது. சிறாப்பர் – ரூ 1.00. அதன் பின்னர் என்னால் ஒன்றுமே படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடினேன்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க