எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் ‘காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி’ என்றார்.

ஒக்டோபர் மாதத்து கடைசியில் கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைப்பார்கள். அது என் மனைவியை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எப்பொழுது நேரம் சொன்னாலும் புதிய நேரத்தையும் பழைய நேரத்தையும் சேர்த்தே சொல்வார். கடந்தவாரம்தான் நேரத்தை மாற்றியிருந்தார்கள். ஆனால் மனைவி ஒரு மாதத்துக்கு தொடர்ந்து நேரத்தை இப்படித்தான் சொல்வார். ‘இப்பொழுது 7 மணி, பழைய நேரம் 8 மணி.’

நாங்கள் இவ்வளவு தூரம் பயணம்செய்து போட்டியை பார்க்க தீர்மானித்ததற்கு காரணம் ஓர் ஈழத்துக்காரர் இம்முறை போட்டியில் கலந்து கொள்கிறார் என்பதுதான். அவருக்கு வயது 35. உடலழகன் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு கிடையாது. எல்லோரையும்போல தானும் தன்பாடுமாக அவ்வப்போது உடற்பயிற்சி நிலையத்துக்கு போய் வந்தார்.

அங்கே ஒருநாள் கோயிலுக்கு நேர்ந்ததுபோல கட்டுக்கோப்பாக உடம்பை வளர்த்திருந்த ஒரு வெள்ளைக்காரரைச் சந்தித்தார். அவர் ‘ஆசியாக்காரர்களுக்கு சும்மா உடற்பயிற்சி நிலையத்துக்கு வந்து போக மட்டுமே தெரியும். ஒரு போட்டிகளிலும் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டார். அப்படி அவர் ஏளனமாகப் பேசியது ஈழத்துக்காரருக்கு மனதை உறுத்தி, எப்படியும் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை.

ஐந்து தடவை கனடா தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ம்போயோ எட்வேர்ட்ஸ்

ஐந்து தடவை கனடா தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ம்போயோ எட்வேர்ட்ஸ் என்பவரை பயிற்சிக்காக ஈழத்துக்காரர் அணுகினார். அவர் இவருடைய குச்சிபோன்ற உடம்பை ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு மறுத்துவிட்டார். இவர் விடவில்லை, தொடர்ந்து தனக்கு தெரிந்த மாதிரி பயிற்சிகள் செய்துவந்தார். ஒரு வருடம் கழித்து எட்வேர்ட்ஸை அணுகியபோது மறுபடியும் மறுத்தார். இவருடைய விடா முயற்சியை தொடர்ந்து கவனித்த சாம்பியன் கடைசியில் ஒருநாள் தானாகவே பயிற்சி தருவதற்கு சம்மதித்தார். ஆனால் சில நிபந்தனைகள் இருந்தன. பயிற்சிக்காலம் முழுவதும் மாச்சத்து உணவு கிடையாது. உப்பு, சர்க்கரை இல்லை. போட்டிக்கு முன்னர் 36 மணிநேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது. உடற்பயிற்சிக்காரர்களுக்காக  விசேடமாகத் தயாரிக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும்.

ஐந்து வருடமாக தொடர்ந்து பயிற்சி எடுத்து போட்டியில் பங்குபற்றுகிறார். அதை பார்க்கத்தான் நானும் மனைவியும் ஒரு நண்பருமாக ஒட்டாவா புறப்பட்டிருந்தோம். உடல் அழகன் போட்டி நடக்கும் அரங்கத்துக்கு போய்ச் சேர்ந்தபோது ஒரு புது இடத்துக்கு வந்துவிட்டதுபோல இருந்தது. அந்த வகையான கூட்டத்தை நான் முன்னர் கனடாவில் கண்டது கிடையாது.

ஆண்களும் பெண்களும் முற்றிலும் வித்தியாசமானவர்களாக தோற்றமளித்தார்கள். ஆறடி உயரமாக வலுவான தேகத்தில், உடம்போடு ஒட்டிப்பிடிக்கும் டீசேர்ட் அணிந்து புஜங்கள் உருளும் உடம்போடு ஆண்கள் காணப்பட்டார்கள். வந்திருந்த பெண்களில் வயது முதிர்ந்த பெண்கள் அபூர்வம். அநேகமானவர்கள் தசைநார்கள் திரண்டு இளமையாக காணப்பட்ட பெண்கள். எங்கள் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக்கும் ஒரு தகவல் அப்போது கிடைத்தது. உடல் அழகன் போட்டியுடன் உடல் அழகிப் போட்டியும் அதே மேடையில் நடைபெறுமாம்.

டிக்கட் கொடுக்கும் இடத்தில் நிரையாக நின்றார்கள். நான் ஏற்கனவே தொலைபேசியில் என் பெயரை முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு முன்னால் ஒருத்தர் மேசையில் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு டிக்கட் கொடுக்கும் பெண்மணியிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடைய கைகள் திரண்டு ஒரு குழந்தையின் தொடைகள்போல வெளியே தள்ளிக்கொண்டு நின்றன. அவருடைய பின்பக்க காட்சியை பார்த்துக்கொண்டு வரிசை வெகுநேரம் நின்ற பிறகு டிக்கட் பெண் என்னிடம் திரும்பினார். நான் பெயரைச் சொன்னேன். கனடா வந்து இத்தனை வருடங்களாகியும் என் பெயரைச் சொன்னவுடன் புரிந்துகொண்டு டிக்கட்டுகளை தந்தது இதுவே முதல் தடவை.

படிக்க:
நான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் !
♦ உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் !

அரங்கம் நிறைந்திருந்தது. பன்னிரண்டு நடுவர்கள் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். முதலில் பெண்கள் போட்டி. அறிவிப்பாளர் பெயரைச் சொல்ல பெண்கள் நடந்து வந்து மேடையின் நடுவில்  தங்கள் அங்கங்களை பரிசீலனைக்காக நிறுத்தினார்கள். இரண்டு முக்கோணங்கள் தொடுத்த  மார்புக்கச்சும், ஒரு முக்கோண இடைக்கச்சும் அணிந்திருந்ததால் அவர்களுடைய எல்லா அங்கங்களும் துலக்கமாகத் தெரிந்தன. இந்தப் பெண்களின் கைகளும் கால்களும் மெலிந்து தசைநார்கள் இறுகிக் கிடந்தன. விலா எலும்புகள் அத்தனையும் தள்ளிக்கொண்டு நின்றதில் கொழுப்பைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. உடம்பில் எந்த பகுதியிலும் வரிகளோ சுருக்கங்களோ இல்லாமல் வயிறு மடிப்பு மடிப்பாக இறுகி சிலேட் பலகைபோல தட்டையாக காட்சியளித்தது.  நடுவர்கள் இடது தொடை, வலது புஜம், வயிறு, முதுகு என்று அங்கங்களைச் சொல்லச் சொல்ல அவர்கள் அந்தந்த அங்கங்களின் திரட்சியையும், தசை மடிப்பையும் காட்டினார்கள்.

அதில் ஒரு பெண்ணை மறக்கமுடியாது. உயரமாக தங்கமுடி புரள குதிரைபோல டக்டக்கென்று நடந்துவந்தாள். அவளைப் பார்த்ததும் அவளுடைய தசைநார்களுக்கும் எலும்புகளுக்குமிடையில் பெரும் சண்டை நடைபெறுவது தெரிந்தது. போட்டி தொடங்க முன்னரே என்னிடமிருந்த அத்தனை புள்ளிகளையும் அந்தப் பெண்ணுக்கே வழங்கினேன். நடுவர்கள் முதுகு என்றார்கள். அவள் இடதுகையால் முதுகில் வழிந்து கிடந்த பொன்முடியை தூக்கி நிறுத்திக்கொண்டு தன் வலது பக்க முதுகு தசைகளை மட்டும் இறுக்கிக் காட்டினாள். பிறகு டக்கென்று ஒரு சத்தம் கேட்டது. இடது பக்க தசைநார்களை மட்டும் இறுக்கிக் காட்டினாள். இன்னொரு டக் சத்தம். இரண்டு காந்தங்கள் ஒட்டிக்கொள்வதுபோல இரண்டு பக்க முதுகும் ஒட்டிக்கொண்டது. சபையினரின் கைதட்டல் எழுந்தது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல அவளுக்கே முதலிடம் கிடைத்தது.

ஆண்கள் போட்டிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது என் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைப் படித்துப் பார்த்த நான் திடுக்கிட்டேன். போட்டியில் பங்குபற்றும் ஈழத்துக்காரர் அனுப்பியிருந்தார். ‘அவசர உதவி தேவை.  மேடைக்கு வரவும்.’ அவர் முதல் நாளே வந்துவிட்டார். போட்டியாளர்கள் எல்லோரும் பொய் கண்டுபிடிக்கும் கருவி சோதனையில் பாஸாக வேண்டும். அதில் தோல்வியுற்றால் அவர்களுடைய ரத்தத்தில் போதைப்பொருள் சேர்ந்துள்ளதா என்பதை பரிசீலித்துப் பார்ப்பார்கள். ஏதோ பிரச்சினையென்று  நெஞ்சில் பயம் ஏறியது.

என்னுடன் பயணித்த நண்பர் இளவயதுக்காரர்;  உயரமாய் வாட்டசாட்டமாய்  இருப்பார். அவரை மேடைக்குப்போய் பார்த்துவர அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் சிரித்துக்கொண்டே திரும்பினார். போட்டியாளர்கள் முழு உடம்பையும் மழித்து, ஒருவித கறுப்பு எண்ணெயை பூசி போட்டியில் கலந்துகொள்வார்கள். அந்த எண்ணெய் தேய்த்துவிட வேண்டியவர் வரவில்லை. எண்ணெய் பூசினால்தான் தசைநார் மடிப்புகள் மேடை ஒளியில் துல்லியமாகத் தெரியும். நண்பர் அந்த வேலையைத்தான் தனக்கு தெரிந்த அளவுக்கு செய்துமுடித்துவிட்டு திரும்பியிருந்தார்.

எனக்குப் பக்கத்தில் பயில்வான்போல தோற்றமுள்ள ஒருவர் உட்கார்ந்து பெண் போட்டியாளர்களை உரக்கக் கூவி அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுமல்லாமல் ‘இன்னும் கொஞ்சம் நடுவுக்கு நகர், பின் பக்கத்தைக் காட்டு, காலை முன்னுக்கு மடி, புஜங்களை மேடையை நோக்கி திருப்பு’ என்று கத்திக்கொண்டே இருந்தார்.  இவர் ஒரு பிரபல பயிற்சியாளர் என்பதை நான் பின்னால் அறிந்துகொண்டேன்.

காந்தத்தைப்போல முதுகை ஒட்டவைத்த பெண், போட்டி முடிந்த பின்னர் சபையினுள் நுழைந்தார். அவர் போட்டிக்கு தரித்த முக்கோண உடைக்கு மேலே முன்பக்கம் பூட்டாத மேலங்கி ஒன்றை அணிந்திருந்தார். பயிற்சியாளரை நெருங்கியதும் அவர் அந்தப் பெண்ணின் இரண்டு கொலரையும் பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். பின்னர் அதைத் தொடர்வதற்காகவோ என்னவோ இருவரும் அவசரமாக வெளியேறினார்கள்.

ஆண்களுக்கான போட்டி தொடங்கியபோது அது முற்றிலும் வேறு விதமான காட்சியாக அமைந்தது. அவர்கள் மல்லர்கள் நடந்துவருவதுபோல கால்களை அகலமாக வைத்து மேடையில் தோன்றினார்கள். அவர்களுடைய தொடைகள் பலாக்காய்கள் காய்த்ததுபோல தொங்கின. புஜங்கள் தனித்தனியாக உயிர் பெற்றது போல சும்மா நடக்கும்போதே திரண்டு திரண்டு உருண்டன. கைகளை மடக்குவதும், கால்களை சுழட்டுவதும், வயிற்று தசைகளை ஓடவிடுவதும், முதுகை புத்தகத்தை திறப்பதுபோல அகலிப்பதுமாக பலவிதமான வித்தைகளை ஒவ்வொருவரும் சளைக்காமல் செய்து காட்டினார்கள்.

நடுவர்கள் இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்கள் அல்ல. அவர்கள் தசைநார்களின் பருமனையோ அவை உருளும் லாவகத்தையோ கணக்கில் எடுப்பவர்களாகத் தெரியவில்லை. ஒரு உடம்பில் தசைநார்கள் சரியான விகிதத்தில் விருத்தியாகி இருக்கின்றனவா என்பதை கவனித்தார்கள். 5′ 5″ உயரமான ஓர் ஆணின் எடை 160 றாத்தலாக இருக்கவேண்டும். அதற்குமேலான ஒவ்வொரு அங்குல உயரத்துக்கும் எடை 5 றாத்தல் கூடவேண்டுமென்பது விதி. தசைநார்கள் உடம்பு முழுக்க சீராக விருத்தியடைந்திருக்கிறதா என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். சிலருக்கு கைகள் வளர்ச்சியடைந்திருக்கும் ஆனால் அதே அளவுக்கு முதுகு தசைகள் வளர்ச்சியடைந்திருக்காது. மனித உடம்பில் 640 தசைநார் முறுக்குகள் இடது பக்கம் 320, வலது பக்கம் 320 என்று இருக்கும். இதிலே ஆகக்கூடிய தசைநார்களை சீராகவும் முழுமையாகவும் பெருக்கியிருக்கிறார்களா என்பதைத்தான் நடுவர்கள் பரிசீலிப்பார்கள். அத்துடன் அவற்றை ஒருவர் கவர்ச்சியாக வெளிப்படுத்தும் திறமை பெற்றவராயும் இருத்தல் அவசியம்.

போட்டியில் பங்குபற்றிய அத்தனைபேரும் வெள்ளைக்காரர்கள். இரண்டே இரண்டு கறுப்பு இனத்தவர். ஒரேயொரு தமிழர். போட்டியாளர் ஒவ்வொருவரும் மேடையில் தோன்றும்போது பெரும் கூச்சல் எழும். அவருடைய பயிற்சியாளர், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும்.

ஈழத்துக்காரர் மேடையை நோக்கி கணுக்கால் வெள்ளத்தில் நடப்பதுபோல அசைந்து அசைந்து வந்தபோது மூன்றே மூன்று குரல்கள் எழும்பின. அது எங்களுடையதுதான். நடுவர்கள் உத்திரவுப்படி அவர் மேடையில் சுழன்று சுழன்று தேகத்தில் ஐந்து வருடங்களாக பாடுபட்டு வளர்த்துப் பழக்கிய தசை மடிப்புகளையும், திரட்சிகளையும் பல நிலைகளில் பல கோணங்களில் காட்டினார். கறுப்பு எண்ணெயில், மேடையில் பிரகாசித்த குவிய விளக்குகளின் ஒளியில், நண்பரின் தசைக் கட்டங்கள் எல்லாம் நல்லாய் கூராக்கிய கத்திபோல பளிச்சுப் பளிச்சென்று ஒளிவிட்டன. ஆறுதசைக் கட்டம், எட்டு தசைக்கட்டம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே மேடையில்  அவை எல்லாம் மிகச் சாதாரணமாகத் தோன்றின.

தேசிய விருதுபெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றதாலோ என்னவோ ஈழத்துக்காரரின் அசைவுகள் கச்சிதமாக மேடையில் வெளிப்பட்டன. ஒரு கட்டத்தில் இப்படியெல்லாம் மனித உடலில் சாத்தியமா என்று வியக்கத் தோன்றியது. நடுவர்கள் நெஞ்சை அகலிக்கச் சொன்னார்கள். இவர் நெஞ்சை விரித்ததும் ஒரு வண்ணத்துப்பூச்சி இரண்டு செட்டைகளையும் விரித்ததுபோல அவருடைய மார்பு இரண்டு மடங்காகப் பெருகியது. சபையினர் ஒருகணம் பிரமித்துப் போனது அப்பட்டமாகத் தெரிந்தது.

படிக்க:
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !
♦ நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

தன்னுடைய முறைக்காக இவர் மேடைக்கு வெளியே காத்திருந்தபோது மற்ற போட்டியாளர்கள் இவரை துச்சமாக மதித்தனர்; மனரீதியாக கலைக்க முயன்றனர். ஒருவர் இவர் புஜத்தின் பருமனை ஆராய்ந்துவிட்டு அது இன்னும் முழுமையாக முதிர்ச்சியடையவில்லை என்றார். இன்னொருவர் கண்ணாடியின் முன் நின்று தன் கைகளை மடக்குவதும், நெஞ்சை அகலிப்பதும், கால்களை பக்கவாட்டில் சுழட்டுவதுமாக தன் பிம்பத்தில் தானே மயங்குவதுபோல நின்றார். எல்லாம் இவரை பயங்காட்டும் முயற்சிதான். நண்பர் ஒன்றையும் சட்டை செய்யாமல் தன் முறைக்காக காத்திருந்தார். இவையெல்லாம் அவர் பின்னால் சொல்லி தெரிந்துகொண்டது.

முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று தொடங்கியபோது இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் மேடையில் ஒரு நிமிடம் அளிக்கப்பட்டது. அவர் தேர்வுசெய்த ஒரு பாடலுக்கு, நடன அசைவுகள் மூலம் தன் அங்கத்திலுள்ள அத்தனை தசைநார்களையும் இசைக்கேற்ப முறுக்கிக் காட்டவேண்டும். இரண்டாவது சுற்றில் ஈழத்துக்காரருக்கு நிறையக் கைதட்டல் கிடைத்தது. நடுவர்கள் முடிவை அறிவித்தார்கள். கிழக்கு ஒன்ராறியோ உடலழகன் போட்டியில் ஈழத்துக்காரர் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்திருந்தார்.

வெற்றிபெற்ற மூன்று பேரும் மேடையில் நின்று படம் பிடித்துக்கொண்டபோது  அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்ததை அவதானித்தேன். பின்னால் அது என்னவென்று ஈழத்துக்காரரை விசாரித்தபோது பக்கத்தில் நின்றவர் தனக்கு மயக்கமாகி வருகிறதென்றும் தான் விழுந்தால் தன்னை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார். அதற்கு ஈழத்துக்காரர் என்ன பதிலிறுத்தார் என்று கேட்டேன். ‘எனக்கும் மயக்கம் வருகிறது. நான் விழுந்தால் நீங்கள் பிடியுங்கள்’ என்று தான் அவரிடம் சொன்னதாகக் கூறினார். இந்த மேடைகளில் மயங்கி விழுவது பலமுறை நடந்திருக்கிறது. சராசரி மனித உடம்பில் கொழுப்பு 20 வீதம் இருக்கும். உடலழகன் போட்டியாளர்கள் கொழுப்பு சத்தை நாலு வீதத்துக்கு குறைத்துவிடுவார்கள். சத்து வீதம் அதற்கு கீழே போனால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

போட்டி முடிந்த பின்னர் ஈழத்துக்காரரை மேடைக்கு பின்னால் சென்று சந்தித்தோம். உடைமாற்றி மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்தார். அரை மணித்தியாலத்திற்கு முன்னர் திரும்பியும் பாராதவர்கள் இப்பொழுது அவரை சூழ்ந்து வாழ்த்தினார்கள். நான் அவரைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை காட்டினேன். ஓர் இரும்புச் சிலையை கட்டிக்கொண்டதுபோல இருந்தது. ஒருவருக்குச் சொல்லவேண்டிய ஆகச் சிறந்த வாழ்த்து புறநானூறில் வருகிறது. ‘என்னுடைய வாழ்நாளும் சேர்த்து நீ வாழவேண்டும்.’ அதற்கு முற்றிலும் தகுதியானவராக அவர் அப்போது எனக்கு தோன்றினார்.

‘தனிமையான போராட்டத்தில் உங்கள் எதிராளிகளை வெல்வீர்கள்’ என்றேன். அவர் ‘இந்தப் போராட்டம் என் எதிராளியை வெல்வதற்கு அல்ல. என் உடம்பை வெல்வதற்கு’ என்றார்.

வெற்றியை கொண்டாட உணவகத்துக்கு போகலாம் என்று தீர்மானித்தோம். யானை போன வழி பாதை என்பார்கள். உணவகத்தை நோக்கி அவர் நடந்தார். அங்கே உண்டான பாதையில் நாங்கள் பின்னால் சென்றோம். கடந்த 18 மாத காலமாக அவர் பயிற்சியாளர் வகுத்த உணவுப் பட்டியல் பிரகாரம் உணவருந்தினார். உப்புச் சேர்க்காத, சர்க்கரை கலக்காத, ஊட்டச்சத்து நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட உணவு. கடந்த 36 மணிநேரமாக அவர் சொட்டு நீர் பருகவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்றுதான் முதன்முறையாக அவர் சாதாரண உணவை உட்கொண்டார். உணவுத் தட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரவர அவர் உணவை ருசித்து ருசித்து சாப்பிட்ட காட்சி மறக்கமுடியாதது.

எங்களைச் சுற்றி அந்த உணவகத்தில் போட்டியாளர்களும் நடுவர்களும் வென்றவர்களும் தோற்றவர்களும் இரண்டு கைகளாலும் நிறுத்தாமல் சத்தமெழுப்பியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பரிசாரகி சன்னமான உடை தரித்து, மீன் வலை காலுறையில் பெரிய பெரிய உணவு தட்டங்களை குடைபோல தலைக்குமேல் தூக்கியபடி விரைந்தாள். குருவிக்கூட்டிலிருந்து தலை நீட்டும் குஞ்சுபோல அவள் வெண்கழுத்து பின்னே நீண்டு சாய்ந்திருந்தது. அமெரிக்க கொடி வரைந்த ரீசேர்ட் அணிந்த ஒருத்தர் மேசையை தட்டி பல உணவுகளுக்கு ஆணை கொடுத்தார். பயில்வான்களும் அவர்கள் காதலிகளுமாக உணவகம் நிரம்பியிருந்தது. அடிக்கடி இரண்டு பாம்புகள் முத்தமிடுவதுபோல முன்னால் வளைந்து முத்தமிட்டுக்கொண்டார்கள். அடுத்த நாள் விடியாமல் போகக்கூடும் என்பதுபோல அவசரமாக அத்தனை தட்டங்களையும் அந்தக் கூட்டம் தின்று தீர்த்தது.

‘உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று கேட்டேன். அவர் பதில் கூறாமல் நீண்டநேரம் யோசித்தார். முகத்தில் தாடை எலும்புகள் எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன என்பது துலக்கமாகத் தெரிந்தது. முள் சரியான இடத்துக்கு வந்ததும் ரேடியோ பாடுவதுபோல அவர் பதில் சொல்லத் தொடங்கினார். திடீரென்று பேசினாலும் ஏற்கெனவே சிந்தித்ததையே சொன்னார் என்று நினைக்கிறேன். ‘எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது’ என்றார்.

‘போட்டி மனநிறைவை தந்ததா?’ என்றேன். அவர் ‘இது ஒரு மோசமான போட்டி. டென்னிஸ் போலவோ, கொல்ஃப் போலவோ இன்னொருவருடன் சேர்ந்து ஆடும் ஆட்டம் அல்ல.  3-4 மணிநேரம் தினமும் உடற்பயிற்சி செய்து தயாரிக்கவேண்டும். அந்த நேரத்தை என் குடும்பதினரிடம் இருந்துதான் நான் திருடினேன். கட்டுப்பாடான உணவுப் பழக்கம்; மிக மிகத் தனிமையான உழைப்பு. பல நேரங்களில் உங்கள் மீதும், உலகத்தின் மீதும் வெறுப்பு ஏற்படும். உடலை வருத்திப் பிழிந்து கிடைத்த வெற்றிதான் இது’ என்றார்.

எனக்கு பேராசிரியர் ரோபர்ட் கேர்ன்ஸ் நினைவுக்கு வந்தார். அவர் கண்டுபிடித்த கார் கண்ணாடி துடைப்பானை ஃபோர்ட் கார் கம்பனி திருடிவிடுகிறது. பேராசிரியர்,  ஃபோர்ட் கம்பனிமீது வழக்கு தொடுத்து 12 வருடங்களாக நீதிக்காக போராடுகிறார். அவருக்கு வேலை பறிபோகிறது; மனைவி பிள்ளைகள் அவரை விட்டு விலகுகிறார்கள். நண்பர்கள் உதாசீனம் செய்கிறார்கள். அப்படியும் விடாமல் தனித்து நின்று போராடி பேராசிரியர் வெல்கிறார். ‘தனிமையான போராட்டத்தில் உங்கள் எதிராளிகளை வெல்வீர்கள்’ என்றேன். அவர் ‘இந்தப் போராட்டம் என் எதிராளியை வெல்வதற்கு அல்ல. என் உடம்பை வெல்வதற்கு’ என்றார்.

பகீரதன் விவேகானந்

நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டோம். பனிக்காலம் தொடங்கிவிட்டாலும் சில மரங்கள் தங்கள் கடைசி இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந்.

ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும்.

கனடாவில் வெளியாகும் 9 தமிழ் பத்திரிகைகளில் ஒன்றுகூட இதுபற்றி எழுதப்போவதில்லை. நடைமுறையில் இருக்கும் உச்சபட்ச வேக விதிகளை புறக்கணித்து எங்கள் கார் இடையில் ஓர் இடமும் நிற்காமல் ஓடியது. நாங்கள்  ரொறொன்ரோ வந்து சேர்ந்தபோது இரவு நேரம் 11.00 மணி. பழைய நேரம் 12.00 மணி.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

3 மறுமொழிகள்

  1. வாழ்த்துக்கள் பகீரதன் விவேகானந் !

    ///கனடாவில் வெளியாகும் 9 தமிழ் பத்திரிகைகளில் ஒன்றுகூட இதுபற்றி எழுதப்போவதில்லை.///

    இங்கு தமிழகத்தில் வெளிவந்துள்ளதை அவருக்கு தெரிவியுங்கள்.

    • “வாழ்த்துக்கள் பகீரதன் விவேகானந் !

      ///கனடாவில் வெளியாகும் 9 தமிழ் பத்திரிகைகளில் ஒன்றுகூட இதுபற்றி எழுதப்போவதில்லை.///

      இங்கு தமிழகத்தில் வெளிவந்துள்ளதை அவருக்கு தெரிவியுங்கள்.”

      Well said.

  2. நம்மூரில் நான் பார்த்த சிலர் ஜிம்மில் நிறைய நேரம் ஒதுக்குபவர்கள் வேலைக்கு சென்றால் தன் உடல் குறைந்துவிடும் என உழைக்க தயங்குவார்கள்.

    துணைவியாரின் தோழி ஒருத்திக்கு இப்படித்தான் மாப்பிள்ளை கட்டுமஸ்தனாக இருந்தார். அப்பொழுதே பழைய அனுபவங்களை சொன்னேன்.

    அதே போலவே அவர் உழைக்க தயங்கிய ஆளாக தான் இருந்தார். பல மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை. பிறகு ஜிம்மில் மாஸ்டராக இணைந்ததாக கேள்விப்பட்டேன்.

    முத்துலிங்கம் அவர்களுடைய கதைகள் விசேசமானவை. தொடர்ந்து வெளியிடுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க