அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 9

வளர்ச்சியில் ஒரு படி

“நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு பெரிய நாய் என்னைத் துரத்தி வந்தது. நான் பயந்து போய் ஓடினேன், நாயும் என் பின்னாலேயே ஓடி வந்தது. ‘காப்பாற்றுங்கள்!’ என்று நான் கத்தினேன். திடீரென நான் தடுக்கி விழுந்தேன். நாய் என்னை நெருங்கி வந்தது, நான் பயத்தால் உறைந்து போனேன். நாயோ என் ஆடையை அன்போடு கவ்வி, நான் எழ உதவியது…”

“நான் என் நாயை பனிச்சறுக்கு வண்டியில் வைத்து சிறு குன்றிலிருந்து தள்ளினேன். நாய் குலைத்தது, பனிச் சறுக்கு வண்டி கவிழ்ந்து, நாய் தலைகீழாக வெண் பனியில் கீழே விழுந்தது. அது நாயா, வெண்பனிக் கட்டியா என்று கண்டுபிடிப்பதே கடினமாக இருந்தது…”

“ஒரு நாள் என் சகோதரன் குளியலறையில் குளித்தபடியே பாடிக் கொண்டிருந்தான். என்ன பாடுகிறான் என்று கவனித்தேன். குளியலறைக் கதவைத் திறந்தேன். அவன் உடல் முழுவதும் சோப்பு போடப்பட்ட நிலையில் கண்களை மூடியபடி தண்ணீரின் கீழ் நின்று தன் பாட்டைத் தொடர்ந்தான். நான் ‘வள் வள்’ என்று குலைத்துக் காட்டினேன். அவன் பயந்து நடுங்கி ‘அம்மா!’ என்று கத்தினான்.”

“நான் சிறுமியாக இருந்த போது என்னை சர்க்கசிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே கோமாளிகள் செய்ததைப் பார்த்து நான் மிகவும் சிரித்து ரசித்தேன்.”

“நான் சிறுமியாக இருந்தபோது தம்பியோடு கூட நர்சரிப் பள்ளிக்குச் சென்று வந்தேன். ஒரு நாள் என் அம்மா எங்களை கூட்டிச் செல்ல வந்தார். மழை பெய்ததால் நடைபாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. ‘காலைத் தூக்கு!’ என்றார் அம்மா. நான் காலைத் தூக்கி நேரே அக்குட்டையில் விழுந்தேன்.”

“நான் சிறுவனாக இருந்தபோது ஒரு சிறுவன் குளிர்ந்த நீரைக் குடிப்பதற்காக என்னை ஒரு நீரூற்றிற்கு இட்டுச் சென்றான். தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது, தொண்டையே கட்டிவிடும் போலிருந்தது. நான் பாறை மீது சற்று உயரே சென்று பார்த்தேன், அங்கு தண்ணீர் இன்னமும் குளிர்ச்சியாக இருந்தது, நான் குளிர் தாங்காது நேரடியாக என் தோழனின் தலை மீது விழ, அவன் குட்டையில் வீழ்ந்தான்.”

“ஒரு நாள் நானும் என் சகோதரனும் ஒரு மாவு மூட்டையை எடுத்து, மூட்டையைக் கிழித்து ஒருவர் மீது ஒருவர் மாவை வாரி இறைக்க ஆரம்பித்தோம்.”

”நீங்கள் எல்லாம் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டீர்கள். சிறு குழந்தைகளைப் பார்க்க விரும்புகின்றீர்களா!”

“எங்கே அவர்கள்?”

நர்சரிப் பள்ளியில் இருக்கின்றனர். நான் உங்களை அங்கு கூட்டிச் செல்லட்டுமா? நீங்கள் அவர்களை கவனித்துப் பாருங்கள். பின் அவர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வோம்!… தயாரா!.. இரண்டு இரண்டு பேராக நில்லுங்கள்… இப்படித்தான்! ஆளுக்கொரு கொடியை எடுத்துக் கொள்ளுங்கள், எப்போதும் தெருவில் செல்லும்போது கொடிகளுடன்தான் செல்வோம். வாருங்கள் போவோம்! அம்மாமார்களே, தயவுசெய்து எங்களுடன் கூட வாருங்கள்!…”

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

நர்சரிப் பள்ளி, பள்ளிக்கு அருகே, வேலிக்கு அப்பால் உள்ளது. வேலியோரமாக செடிகளும் மரங்களும் நடப்பட்டுள்ளன. நர்சரிப் பள்ளியில் குழந்தைகள் இப்போது வெளியே விளையாடுகின்றனர். செடிகளுக்குப் பின்னால் ஒளிந்த படி நின்று, அச்சிறுவர் சிறுமியர் என்ன செய்கின்றார்கள் என்று கவனிக்கும்படி என் வகுப்புக் குழந்தைகளிடம் சொல்கிறேன்.

குழந்தைகள் வேலியோரமாக அமருகின்றனர். சிலர் புல் தரையில் உட்காருகின்றனர், சிலர் முழங்காலிட்டுப் பார்க்கின்றனர். ஒவ்வொருவரும் செடிகளின் மத்தியில் சிறு ஓட்டையைக் கண்டுபிடித்து அதன் வழியாகப் பார்க்கின்றனர். நான், பதுங்குகுழியில் உள்ள கமாண்டரைப் போல் ஒவ்வொரு சிறு கூட்டத்தையும் அணுகி, விவரங்களைச் சேகரிக்கிறேன், அவர்களோடு சேர்ந்து கவனிக்கிறேன்…

சிறு குழந்தைகளின் குறும்புகளையும் விளையாட்டுகளையும் பார்த்ததும் என் வகுப்பினருக்கு சிரிப்பு தாளவில்லை. அவர்கள் தம்மைப் பெரியவர்களாகக் கருதினர். நான் அவர்களை ஒருபுறமாக கூட்டிச் சென்றதும் அவர்கள் சகல விதமான வெளிப்பாடுகளின் மூலமாயும், இந்தச் சிறுவர்கள் எவ்வளவு ஆனந்தமானவர்கள் என்று எனக்கும் பரஸ்பரம் ஒவ்வொருவருக்கும் கூறுகின்றனர்.

“ஒருவன் சிறு விளையாட்டுச் சம்மட்டியால் மணலை வாளியினுள் எடுத்துப் போட்டு, உடனேயே எல்லாவற்றையும் கொட்டினான், என்ன முட்டாள் தனம்!”

“சிறுவன் சிறுமியைத் துரத்திக் கொண்டு சென்றான். அவள் கல்லையெடுத்து அவன் மீது வீச விரும்பினாள். ஆனால், நல்ல வேளையாக தாதி ஆசிரியை சரியான சமயத்தில் வந்தாள்…”

“அங்கே, ஒரு சிறு விளையாட்டு வீட்டினுள் ஐந்து சிறுவர்கள் நுழைந்தனர், பின்னர் மிகக் கஷ்டப்பட்டுதான் அவர்களால் வெளிவர முடிந்தது…”

“ஒரு சிறுமி ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் விளையாடவில்லை, மற்றவர்களுக்கும் விளையாடத் தரவில்லை. பொம்மையைப் பிடுங்க ஆரம்பித்ததில் தலைபிய்ந்து வந்தது…”

“ஒரு சிறுவன் கார் செல்வதைப் போல் ஓடிக் கொண்டேயிருந்தான், மிகச் சிரிப்பாக இருந்தது…”

“இரண்டு சிறுவர்கள் ஓடியதில் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டு கீழே விழுந்தனர். ஒருவன் எப்படிக் கத்தினான் தெரியுமா! ‘அம்மா!’ ”

“அவர்கள் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள். நீங்கள் எங்களை மீண்டும் இங்கே கூட்டி வருவீர்களா?”

”கண்டிப்பாகக் கூட்டி வருவேன். உங்களுக்குத் தான் பெரியவர்களாக இருக்க அவ்வளவு விருப்பமாக உள்ளதே! உங்களை விடச் சிறியவர்களாக உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்கும் போது, அவர்கள் மீது அக்கறை காட்டுகையில் நீங்கள் பெரியவர்களின் கடமையை உணருகின்றீர்கள், இந்த உணர்வு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக நீங்கள் பெரியவர்களாவீர்கள்! ஆனால் இப்பாதை நீண்டது, பெரியது. நீங்கள் பெரியவர்களாக உதவும் பொருட்டு நானும் மற்ற ஆசிரியர்களும் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டிவரும்!…”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க