“வளர்ச்சி – மதவெறி ஆகியவற்றை தேவைக்கேற்பவும், மக்களின் மனநிலைக்கு ஏற்பவும் பார்ப்பன பாசிஸ்டுகள் மாற்றி மாற்றி பயன்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். இந்த நிகழ்ச்சிப் போக்கில் அதன் அரசியல் அடித்தளம் விரிவடைந்திருக்கிறதே அன்றி, குறையவில்லை. மதச்சார்பின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துவதே ஆபத்து என்ற நிலைக்கு காங்கிரசு தள்ளப்பட்டிருக்கிறது. அதாவது, பார்ப்பன பாசிச அரசியல், வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும்  நிலைக்கு உயர்ந்திருக்கிறது.”

“இந்த உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, விவசாயிகளின் கோபம், வேலையில்லா இளைஞர்களின் கோபம், பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. போன்ற தாக்குதல்கள் சிறு தொழில் முனைவோரிடம் ஏற்படுத்தியிருக்கும் கோபம் ஆகியவற்றை மட்டும் முதன்மைப்படுத்திப் பார்ப்பதும், இந்தக் கோபமே சங்க பரிவாரத்தை வீழ்த்திவிடும் என்று நினைப்பதும், பார்ப்பன பாசிச அபாயத்தை குறைத்து மதிப்பிடுவதும், முடிந்தது மோடி மாயை என்று  குதூகலிப்பதும் அசட்டுத்தனம்”

– என்று ம.பி., இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வியுற்றபோது எழுதியிருந்தோம்.

தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியைத்தான் அளித்திருக்கும். எனினும் இந்த முடிவு முற்றிலும் எதிர்பாராததா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பசு  வளையம் என்றழைக்கப்படும் பாஜக வின் செல்வாக்கு மிக்க மாநிலங்களின் மக்கள் மீது, பணமதிப்பழிப்பு முதல் ஜி.எஸ்.டி வரையிலான தாக்குதல்கள் ஏற்படுத்திய வலி அவர்களை இந்துத்துவத்தின் கருத்தியல் செல்வாக்கிலிருந்து விடுவித்து விடும் என்பதுதான், மோடியின் தோல்வியை விரும்பிய அனைவரின் நம்பிக்கை. அது பொய்த்துவிட்டது. பாலாகோட் தாக்குதல் தந்த மயக்கம் மக்களை வென்று விட்டது.

மாயாவதி அகிலேஷ் கூட்டணிக்கு எதிராக பாஜக அமைத்திருந்த மற்ற சாதிகளின் கூட்டணியும் உ.பி. மக்கள் மனதில் வேரோடியிருக்கும் இந்துத்துவ நஞ்சும் வென்று விட்டன.

மமதா கட்சியின் ரவுடியிசத்தை எதிர்கொள்வதற்கு பாஜக தான் பொருத்தமான கட்சி என்று நினைத்து, மார்க்சிஸ்டு கட்சியின் வாக்கு வங்கிகளாக இருந்த மக்களே பாஜக வுக்கு வாக்களித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அது எளிமைப்படுத்தப்பட்ட கூற்று. இந்துத்துவ சக்திகள் சித்தாந்த ரீதியில் முறியடிக்கப்படாத காரணத்தினால், வங்கத்தில் அவர்களது கருத்தியல் செல்வாக்கு அதிகரித்து விட்டதைக் காணமுடிகிறது.

எஞ்சியிருப்பவை தமிழகமும் கேரளமும்தான்.

2014-ல் ஆளும் வர்க்கம் என்ன நோக்கத்துக்காக மோடியை தெரிவு செய்ததோ அதை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. புதிய தாராளவாதக் கொள்கையின் மூர்க்கமான தாக்குதல்களையும், கார்ப்பரேட்டுகளிடம் நேரடியாகவே அரசு அதிகாரத்தைக் கையளிக்கும் விதத்தில், அரசுக் கட்டமைப்பே மாற்றியமைக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

தேர்தல் கமிஷன், உச்சநீதிமன்றம், சிபிஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, இராணுவம், கல்வி, கலை, ஊடகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இந்துத்துவா சக்திகளின் சேவகர்களாக மாற்றப்பட்டுள்ளன. அவை இந்துத்துவ பாசிச காலாட்படைகளின் கொலைகளுக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கின்றன. அல்லது விலை போகின்றன. அந்த வகையில் இந்த அரசுக்கட்டமைப்பு நிலைகுலைந்து திவாலாகியிருப்பதும், ஊழல் – கிரிமினல் மயமாகியிருப்பதும் இந்துத்துவ சக்திகளுக்கு சாதகமாக இருக்கிறது. சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லீம்களை அரசியலிலிருந்தும் மைய நீரோட்டத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பது, ஐந்தாண்டு மோடி ஆட்சியில் ஒரு புதிய எதார்த்தமாகவே மாறிவிட்டது.

கெயில் குழாய் பதிப்பதற்காக, பசுமை நிறைந்த வயல்களில் ஊடுருவி நிற்கும் பொக்லைன் இயந்திரங்கள்.

2014 இல் மோடி பதவியேற்ற சில நாட்களுக்குள் புனே நகரில் மொகிசின் ஷேக் என்ற பொறியாளர் தாடி வைத்திருந்த ஒரே குற்றத்துக்காக அடித்தே கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் பல கொலைகள் நடந்து விட்டன. குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, பயங்கரவாதக் கொலைக் குற்றவாளியான பிரக்யா தாகூர் போபாலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

இதோடு ஒப்பிடத்தக்க வகையில் தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகள் யாரும் விசாரிக்கப்படக்கூட இல்லை என்பது மட்டுமல்ல, அந்த படுகொலையின் சூத்திரதாரியான வேதாந்தா நிறுவனத்துக்கு காவிரி டெல்டாவில் 274 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் வங்கிக் கொள்ளை, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மானியம், வரிவிலக்கு, அதானி அம்பானிகளின் சமஸ்தானமாக இந்தியாவை மாற்றும் நடவடிக்கைகள், சகாரா, ரஃபேல், எலக்டொரல் பாண்டு முறை உள்ளிட்ட ஊழல்கள் போன்றவை பற்றி விவரிக்கத் தேவையில்லை. இன்னொருபுறம் விவசாய விளைபொருள் விலை வீழ்ச்சி, தற்கொலைகள், விளைநிலங்கள் ஆக்கிரமிப்பு, வேலையின்மை பன்மடங்கு அதிகரித்திருப்பது போன்ற பிரச்சினைகளும் உள்ளன.

கொல்கத்தாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை கண்டித்து போராடும் டெக்ஸ்டைல்ஸ் வணிகர்கள்

மேற்சொன்ன பிரச்சினைகளில் எண்ணற்ற மக்கள்திரள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. பசுக்குண்டர்கள் முதல் லவ் ஜிகாத் வரையிலான பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் அறிவுத்துறையினர் பலர் போராடியிருக்கிறார்கள். கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

ஆனால், எதிர்க்கட்சிகள் எனப்படுவோர் இவை தொடர்பாக செய்த போராட்டங்கள் எத்தனை? இன்று தேர்தல் நேரத்தில் அனைத்தையும் பட்டியலிடுபவர்கள், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

அத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுத்தப்படாதவரை, அவர்கள் புல்வாமாவுக்கும் பாலாகோட்டுக்கும் பலியாவதைத் தடுக்க முடியாது. பாசிஸ்டுகளை முறியடிப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை.

நாடு முழுவதும் சுமார் 39,000-க்கு மேற்பட்ட இடங்களில் ஷாகாக்களையும், இரகசிய கொலைப்படைகளையும், குண்டு தயாரித்துக் கொடுக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் தன் கையில் வைத்திருக்கும் ஒரு பாசிச இயக்கத்தை வாக்குச் சீட்டின் மூலம் விரட்டி விடலாம் என்று எண்ணுவது அப்பாவித்தனம்.

படிக்க:
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ

மோடி தோற்றிருந்தால் அந்தளவில் நல்லதுதான். அதே நேரத்தில் மாற்றாக வருகின்ற கூட்டணி தமக்குள் பதவிக்காக மோதிக்கொண்டு மக்கள் மத்தியில் மதிப்பிழப்பதும், அதனைத் தொடர்ந்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதும் நடக்கக் கூடியவையே. அவசரநிலை ஆட்சிக்காக நாடே இந்திராவை வெறுத்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் ஜனதா கட்சியில் நடந்த குளறுபடிகள், 1980-ல் அவரை மீண்டும் பதவிக்கு கொண்டு வந்து விட்டன.

இன்று நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைகிறோம் என்பது உண்மைதான். அந்த இருளைக் கிழிக்கும் மின்னலை உருவாக்க வல்லவை மக்களின் போராட்டங்கள் மட்டும்தான். அத்தகைய போராட்டங்கள்தான்  மக்களையும் இந்துத்துவ மாயையிலிருந்து விடுவிக்கும்.

7 மறுமொழிகள்

 1. இனி தான் தோழர்களுக்கு வேலை அதிகம், தோற்ற இடமான தமிழ்நாட்டை பழிவாங்க மோடி முழு சக்தியை பயன்படுத்துவான், கேரளாவை கூட அவ்வளவாக தொட மாட்டான், ஏனென்றால் இது பெரியார் மண், முதல் முறையாக இதனை நான் ஒத்துக்கொள்கிறேன். தி.மு.க போன்ற அரைவேக்காடுகளை நம்பி பிரயோஜனமில்லை, பிஜேபியோடு சந்தர்ப்பவாத கூட்டணி என்று விலைபோகலாம்.. ஆகவே, மக்கள் அதிகாரம் தோழர்கள் தமிழ்நாட்டை எப்படியாவது காப்பாற்றவும்.. நன்றி

 2. வினவு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கும்பல்கள், திராவிட கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் ஆகியவற்றை நினைத்தால் ஜெயகாந்தன் சிறுகதையில் வரும் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது.

  நந்தவனத்தில் ஓர் ஆண்டி
  அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
  கொண்டு வந்தான் ஒரு தோண்டி
  அதைக் கூத்தாடி கூத்தாடி
  போட்டுடைத்தாண்டி.

 3. கம்யூனிஸ்ட் பாசிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் தோல்வி, இனி கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா உருவாகும், கம்யூனிஸ்ட்களின் தேசவிரோதம், போராட்டம் என்ற பெயரில் மக்கள் விரோதம், ஹிந்து விரோதம் போன்ற செயல்கள் மக்களிடம் கம்யூனிஸ்ட்கள் மீது வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்திய மக்கள் இனியும் கம்யூனிஸ்ட்களை நம்ப தயாராக இல்லை.

 4. கருப்பு பணத்தை வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு GST மூலம் இழப்பு (அந்த கருப்பு பண முதலைகளை வினவு கூட்டங்கள் ஆதரிக்கிறது)
  தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளை கட்டி இருப்பது ஊழல் அரசியல்வாதிகள், அந்த அரசியல்வாதிகள் NEET தேர்வை மாநில உரிமை அது இது என்று சொல்லி எதிர்க்கிறார்கள் (அந்த ஊழல் கூட்டத்திற்கு வினவு கூட்டங்கள் ஆதரவு)
  பணமதிப்பிழப்பு கருப்பு பணம் வைத்து இருந்தவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பெரிய இழப்பு அதனால் அதை வைத்து மிக மோசமான பிரச்சாரங்களை செய்தார்கள், ஆனால் மக்கள் இந்த பயங்கரவாதிகளின் பிரச்சாரங்களை நம்பவில்லை.
  NGO என்று சொல்லி பெரும் பணத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்கி இங்கே அதை அரசுக்கு போராட்டங்கள், பிரிவினைவாதம், தேசவிரோதம், மதம் மாற்றங்கள் செய்வது போன்ற காரியத்திற்காக கணக்கு காட்டாமல் வைத்து இருந்தார்கள், பிஜேபி அரசு அதை தடை செய்தவுடன் கிறிஸ்துவ அமைப்புகள், வினவு கூட்டங்கள் மற்றும் பல தேசவிரோத கூட்டங்கள் பிஜேபி அரசு மீது பல பொய்களையும் வெறுப்பையும் காழ்புணர்வையும் தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் சாதாரண மக்கள் இவர்களின் பொய்களை நம்பவில்லை.
  தூத்துக்குடியில் பொய்களை சொல்லி மக்களிடம் பயத்தை உண்டுபண்ணி போராட்டத்தை தூண்டிய தலைவர்கள், வன்முறை வெடிக்கும் என்று தெரிந்தவுடன் காணாமல் போய் விட்டார்கள். போராட்டத்தை தூண்டிய அயோக்கியன் ஒருவனுக்கும் சிறு காயம் கூட இல்லை.
  சபரிமலை ஐயப்பனை வைத்து ஹிந்து மதத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்.
  இது எல்லாம் போதாது என்று வினவு கூட்டங்கள் பாக்கிஸ்தான் சீனாவிற்காக கொஞ்சம் கூட வெட்கம் மனசாட்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தது.

  இவைகளை எல்லாம் பார்த்த மக்கள் கம்யூனிஸ்ட்கள் என்றாலே வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள், கம்யூனிஸ்ட்கள் நம்வர்களும் இல்லை நல்லவர்களும் இல்லை.

 5. மணிகண்டன் நீங்களே குற்றம் சாட்டி நீங்களே தீர்ப்பு எழுதிவிட்டீா்கள். கம்யூனிசம் நம்முடையது இல்லை என்றால் பாசிசம் ஜெர்மன் இறக்குமதி இல்லையா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க