ல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு சொல்வழக்கு தமிழ்நாட்டில் உண்டு. டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள், அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் என்று பலவகையில் அறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும் அது பொருள்வசதி படைத்தவர்களுக்கே என்ற நிலைமைதான் இன்றும் உலகெங்கும் நிலவிவருகிறது. அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டிய மருத்துவ சேவை இன்று உலகெங்குமுள்ள வியாபார / வர்த்தகக் களங்களில் பிரதானமான ஒன்றாக மாறிவிட்டது.

கரடுமுரடான, சாலை வசதிகளே இல்லாத ஊர்களில் 108 ஆம்புலன்சையா இயக்க முடியும். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் இன்று அதுதான் நிலை. இருப்பினும் அப்படியே இருந்துவிட முடியுமா என்ன? மருத்துவ சிகிச்சைக்காகத் தவிக்கும் உயிர்களை அழைத்துச் செல்ல வருகிறது பிரத்யேகமான மிதிவண்டி மற்றும் மின்சார இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்.

உகாண்டாவில் கிபிபி என்ற கிராமத்தில் வசிக்கும் சாண்டரா நய்காகா, தான் கருத்தரித்த காலங்களில் சிகிச்சை மேற்கொள்வதற்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சென்று வந்ததை நினைவூட்டுகிறார்.

உகாண்டாவில் பேறுகால மரணங்களும், குழந்தைகள் இறப்பு விகித எண்ணிக்கையும் மிக மிக அதிகம். நாளொன்றுக்கு 15 பெண்கள் பிரசவகால பிரச்சினைகளினால் இறக்கின்றனர். நய்காகா தான் கருத்தரித்திருக்கும் போதும் இது போன்று நடந்து விடுமோ என்று அச்சப்பட்டுள்ளார்.

இப்படி தாய்மார்களிடம் ஒருவித அச்சம் நிலவிவந்த சூழலில்தான் 2018-ம் ஆண்டு First African Bicycle Information Organization (FABIO) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவச மிதிவண்டி ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தியது. இப்பகுதியில் உள்ள இரண்டு சுகாதார மருத்துவமனைகளுக்கு இப்பகுதி மக்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதுதான் இவர்களின் இலக்கு.

படிக்க:
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

இப்போது நய்காகா-வும் இந்த மிதிவண்டி ஆம்புலன்ஸ் திட்டத்தினால் பலனடையும் நூற்றுக்கணக்கான பெண்களில் ஒருவராகிறார். பெண்கள் மட்டுமன்றி வயதானவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். வாகனங்கள் நுழைய வசதியற்ற பகுதிகளில் இதுபோன்ற மிதிவண்டி ஆம்புலன்சின் தேவை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

உகாண்டாவிலுள்ள 121 மாவட்டங்களில் ஏறக்குறைய 77 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவிவருகிறது. இதில் 7% சதவீத மக்களுக்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. இந்தப் பற்றாக்குறை தான் ஃபேபியோ நிறுவனத்தின் மிதிவண்டி ஆம்புலன்ஸ் தயாரிக்கும் முன்முயற்சிக்கு அடிகோலியிருக்கிறது. 2006-ம் ஆண்டு உகாண்டாவின் வடக்குப்பகுதியில் போரினால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களுக்காக இந்த சேவையைத் துவங்கியிருக்கிறது ஃபேபியோ நிறுவனம். ஆரம்பம் முதலே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், உள்ளூரிலேயே பராமரிக்கக்கூடிய அளவுக்கு எளிதானதாகவும் இருக்கவேண்டுமென்று திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

“எங்களால் தயாரிக்கப்படும் மிதிவண்டி ஆம்புலன்ஸ் அனைத்துமே உள்நாட்டில் உருவான மற்றும் உள்ளூர் சந்தையில் கிடைக்கக்கூடிய உதிரிப்பாகங்களை வைத்தே இயங்கக்கூடிய அளவில் தயார் செய்து வைத்துள்ளோம். எனவே பராமரிப்பதும், உதிரிகளை மாற்றுவதும் எளிது” என்கிறார் ஃபேபியோ நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கட்டேசி நஜ்ஜிபா. உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு என்று நகைச்சுவையாகக் கூறுகிறார் கள அதிகாரி ஜெரேமியா பிரையன் நுகூட்டு.

மலைப்பகுதிகளில் நோயாளிகளை அழைத்துச் செல்வது மிகவும் சிரமமான ஒன்று. மிதிவண்டியை ஓட்டும் போது பின்புறமிருந்து ஒருவர் தள்ளினால் தான் அது சாத்தியமாகும் என்கிறார் மிதிவண்டியை ஓட்டிவரும் ஹரித் முக்காசா. இந்தப் பிரச்சினையைக் கையாளுவதற்கென்றே ஃபேபியோ நிறுவனம்,  மின்சார இரு சக்கர வாகன ஆம்புலன்சைத் தயாரித்திருக்கிறது.

மிதிவண்டி ஆம்புலன்சுகள் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. இவர்களுடைய அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ளும்போது ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது

இலகு ரக வாகனங்கள், ஆம்புலன்சுகள் செல்ல முடியாத சாலைகளில் இதுபோன்ற மிதிவண்டி ஆம்புலன்சுகளே மக்களை சுமந்து செல்ல உதவுகின்றன

மலைப்பாங்கான பகுதிகளில், மின்சார பேட்டரிகள் உதவியுடன் இயங்கும் இருசக்கர வாகன ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே பயணித்த நய்காகா இப்போது எளிதில் மருத்துவ சிகிச்சை பெறமுடிகிறது

கிபிபி மருத்துவ சிகிச்சை மையத்தில் தன் குழந்தையின் எடை பார்க்கும் தாய் மற்றும் செவிலியர் ஜோசுவா முசோம்பா. உகாண்டாவில் 1,00,000 குழந்தைகள் பிறக்கும்போது அவற்றில் 336 குழந்தைகள் இறக்கின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பல பெண்கள், சிகிச்சைக்காக வரும் போது, வழியிலேயே இறந்துவிடுகின்றனர். இதைத் தடுப்பது தான் எங்கள் நிறுவனத்தின் பிரதான நோக்கம் என்கிறார் ஃபேபியோ-வின் துணை நிர்வாக இயக்குனர் கட்டேசி நஜ்ஜிபா

சாண்ட்ரா நய்காகா மருத்துவ ஆலோசகர் ஜூலியட் நமூஸ்வா-விடம் ஆலோசனை பெறுகிறார். அருகில் செவிலியர் ஜோசுவா முசோம்பா. நாளொன்றுக்கு 15 பெண்கள் பிரசவகால பிரச்சினைகளால் இறக்கின்றனர்.

கிழக்கு உகாண்டாவின் ஜிஞ்சா மாவட்டத்தில் அமைந்துள்ள கிபிபி மருத்துவ சிகிச்சை மையம். மிதிவண்டி ஆம்புலன்ஸ் சேவை இங்கு எளிதாகக் கிடைக்கிறது.

ஏழு மாத கர்ப்பிணியும், இரு குழந்தைகளுக்குத் தாயுமான தெரேசா நம்முடு (வயது 26) தான் மிதிவண்டி ஆம்புலன்ஸ் மூலம் உதவி பெற்றதை நம்முடன் பகிர்கிறார். ‘இரவு 8.30 மணியிருக்கும், என் உடல்நிலை மிகவும் மோசமானது, கணவரும் அருகிலில்லை, நானே நேரடியாக ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு அழைத்தேன். சரியான நேரத்தில் அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர்.

ஹரித் முக்காசா தன் சக உதவியாளருடன் சேர்ந்து ஒரு நோயாளியை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மருத்துவமனையில் அனுமதிக்கத் தூக்கிச்செல்லும் காட்சி. உகாண்டா முழுவதும் 7% சதவீத மக்களே ஆம்புலன்ஸ் சேவையைப் பெறுகின்றனர்.

ஜெரேமையா பிரையன் நுகூட்டு, ஃபிரான்ஸ் ஸ்டீகல் மற்றும் ஜார்ஜ் சீகல் (ஃபேபியோ நிறுவன நிர்வாக இயக்குனர்) புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஆம்புலன்சுக்கு இறுதிவடிவம் கொடுக்கின்றனர். உகாண்டாவிலுள்ள 121 மாவட்டங்களில் ஏறக்குறைய 77 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவிவருகிறது

ஆம்புலன்ஸ் வாகன உதிரிபாகங்களை வெல்டிங் செய்து இணைக்கும் ஜெரேமையா பிரையன் நுகூட்டு. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை வைத்து தயாரிக்கப்படுவதுதான் இந்த ஆம்புலன்சின் கூடுதல் சிறப்பு.

கட்டுரையாளர்: Caleb Okereke
தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க