22-5-2019

பத்திரிகைச் செய்தி

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை?

மக்களை சுட்டுக்கொன்ற கொலைகார போலீசாரே, நம்மைக் கூடி அழவிடாமல் தடுக்கும் கொடுமை தமிழகத்தில்தான் நடக்கிறது.

சட்டத்தின் ஆட்சி – தேர்தல் ஜனநாயகம் என்பதால் பெரும்பான்மை மக்களுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை. இனி அடக்குமுறைதான் ஜனநாயகம். இன்று நாட்டை ஆள்வது உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசார்தான். கண்ணுக்குத்தெரியாத மேலிடம் அவர்களுக்கான உத்திரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மேலிடம் – கார்ப்பரேட் – காவி பாசிச சக்திகள்.

தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தலுக்கு தடை உத்திரவு போடுவதும், முன்னணியாளர் வீடுகளில் நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்துவதும், முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவல் நிலையத்தில் அடைப்பதும், நினைவேந்தல் அஞ்சலி செய்யமாட்டோம் என எழுதி கேட்பதுமாக ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்தி வருகிறார்கள்.

தேர்தல் நடத்துவதும், அதில் மக்கள் வாக்களிப்பது மட்டும்தான் ஜனநாயகம். கருத்துரிமை, கூட்டம்கூடும் உரிமை, போராடும் உரிமை ஆகியவைகள் ஜனநாயக விரோதம் சட்டவிரோதம் என நடைமுறையில் அமல்படுத்தி வருகிறார்கள். போலீசார் கார்ப்பரேட் கொள்ளைக்கான கூலிப்படைதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். நினைவேந்தலைக்கண்டு போலீசார் இந்தளவிற்கு ஏன் அச்சப்பட வேண்டும்? எதற்கு இந்த பேயாட்டம்?

கடந்த ஆண்டு மே 22 இதே நாளில் சட்டப்புறம்பாக இயங்கிய நச்சு ஆலை ஸ்டெர்லைட்டை மூடக்கோரி சாதி மத வேறுபாடுகளை கலைந்து அலை அலையாக குடும்பமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்ற பொதுமக்கள் மீது போலீசார் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்தனர்.

முதல்வர் எடப்பாடி எனக்கு தெரியாது, டி.வி. பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றார். தமிழக டி.ஜி.பி. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து என புளுகினார். துப்பாக்கிச்சூடு படுகொலையை நியாயப்படுத்த ஸ்டெர்லைட் கூலிப்படை ஆட்களை வைத்து காவல் துறை அதிகாரிகளே ஆட்சியர் அலுவலகத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் சி.சி.டி.வி. படக்காட்சிகள் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.

ஆனால், இதுவரை எந்த போலீசாரும் கொலைவழக்கில் கைது செய்யப்படவில்லை. அழைத்து விசாரிக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்திரவு பெற்று மீண்டும் ஆலையை திறக்கச்சதி நடக்கிறது. அதனால்தான் தூத்துக்குடி நகரமே இன்று காக்கிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு காஷ்மீராக காட்சி அளிக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாலைவனமாகும் எனத்தெரிந்தே டெல்டா காவிரிப்படுகையில் கொலைகாரன் வேதாந்தாவிற்கு 250 கிணறுகள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டுவழிச்சாலை, கெயில், அணு உலைப்பூங்கா, பாரத்மாலா, சாகர்மாலா என தமிழகத்தைச் சூறையாட கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் பல வடிவங்களில் நீரு பூத்த நெருப்பாக அடங்குவதும் எழுவதுமாக அரசை அச்சுறுத்தி வருகிறது. ஸ்டெர்லைட் மாடலில், மக்களின் ஒன்று திரண்ட போராட்டங்கள் கார்ப்பரேட்டுக்களை காவு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய தூத்துக்குடி மாடல் அடக்குமுறைகளை போலீசார் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தமிழக மக்கள் எதிர்த்து நின்று போராடி முறியடிப்பதை தவிர வேறு வழியில்லை.

படிக்க:
மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி !
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

ஆங்கிலேய காலனி ஆட்சியில்கூட இத்தகைய அக்கிரமம் நடக்கவி்ல்லை. எதிரி நாட்டு தீவிரவாதிகளைப் போல் பொதுமக்களை சுட்டுக்கொன்ற அநீதி தமிழகத்தில் ஸ்டெர்லைட் வேதாந்தாவிற்காக நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி படுகொலை, தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்காக நம் கண்முன்னே நிற்கிறது.

போலீசின் எத்தகைய அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் நமது ஜனநாயக உரிமைகளை நாம்தான் அமல்படுத்தி நிலைநாட்ட  வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் இன்று முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் தூத்துக்குடி தியாகிகள் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என மீண்டும் வேண்டுகிறோம்.

மே 22 ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கும் அவர்களின் கூலிப்படை போலீசாருக்கும் கொடுங்கனவாக அமைய வேண்டும்.

மக்கள் அதிகாரம்

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. அந்த மக்களின் மரணத்திற்கு வினவு கூட்டங்களின் பொய்களே முக்கிய காரணம் ஆனால் அது பற்றி துளி கூட கவலையில்லாமல் அவர்களை வைத்து அரசியல் செய்கிறீர்கள் நிச்சயம் நீங்கள் மனசாட்சி இல்லாதவர்கள் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க