பத்திரிகைச் செய்தி

20-5-2019

மே – 22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவு நாள் !
அழுவதற்கும் அனுமதி இல்லை ! ஆனால் இது ஜனநாயக நாடு !

அன்பார்ந்த நண்பர்களே !

கடந்த ஆண்டு மே 22 அன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழக மக்கள் அனைவரின் கடமையும் உரிமையுமாகும்.

மக்கள் அதிகாரம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் அனுமதி கோரி இருந்தோம். போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

“மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், பிறகு ஏதேனும் ஒரு நாளில் நடத்துவதற்கு அனுமதி கோரினால் பரிசீலிப்பதாகவும்” எடப்பாடி அரசின் காவல்துறை கூறியிருக்கிறது.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !
♦ சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

தேர்தல் காலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா, கருணாநிதி, காமராஜர், காந்தி ஆகியோரின் நினைவு நாட்கள் வருமானால், அவற்றையும் வேறொரு தேதியில் நடத்திக் கொள்ளுமாறு எடப்பாடி அரசு உத்தரவிடுமா?

தூத்துக்குடி படுகொலை என்பது தனது சொந்த மக்களுக்கு எதிராக தமிழக அரசு நடத்தியிருக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலை. பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவை எதிர்த்து அமைதி வழியில் போராடி வென்றிருக்கும் தூத்துக்குடி மக்களை உலகமே பாராட்டுகிறது. அந்த மக்களை தலையிலும் வாயிலும் சுட்டுக் கொன்றது மட்டுமல்ல, அந்தத் தியாகிகளின் நினைவையும் கூட கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறது இந்த அரசு.

மக்கள் அதிகாரம் சார்பில் மே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் நினைவேந்தல் நடத்துகிறோம்.

அழுவதற்குக்கூட அனுமதி மறுக்கும் இந்த அடக்குமுறை அரசைக் கண்டிக்குமுகமாக, வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தவுள்ளோம்.

ஒவ்வோர் ஊரிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் புகைப்படங்களை வைத்து அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி !

தோழமையுடன்,


வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க