‘அல்லும் பவலும் ரவ தூங்காம பச்ச புள்ள மாதிரி காவந்து பண்ணிக்கிட்டிருக்கோம்… நடவு நட்டு நாலு நாளு கூட ஆவல. அதுக்குள்ள நட்ட வயல்ல மிஷினை கொண்டாந்து ஏத்துறானுவொ… கேட்டாக்க, ஓஎன்ஜிசி காரனாம், கொழா பதிக்கிறானாம். நீ என்ன மயித்த வேணும்னாலும் பண்ணிக்க.. இது எங்க நிலம்டா… நாங்க பொண்டாட்டி தாலிய வித்து வெள்ளாமுட்டு வெப்போம், நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா? என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?’

அந்த விவசாயி கொலைவெறியில் பேசுகிறார். அதில் நியாயமும் இருக்கிறது. நடவு வயலில் பொக்லைன் இயந்திரங்கள் செல்லும் காட்சியே மனதை நடுங்கச் செய்கிறது.

பயிரில் ஆடு, மாடு தெரியாமல் வாய் வைத்துவிட்டாலே ரசாபசமாகும். வாய்ச் சண்டையில் ஆரம்பித்து, மம்புட்டியில் அடித்து மண்டை உடைவது வரை நிகழும். இவர்கள் ஓர் இயந்திரத்தையே உள்ளே விட்டு நாசம் செய்கிறார்கள். அந்த நிலத்தின் விவசாயியிடம் ஒரு வார்த்தைக் கேட்கவில்லை.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் இருக்கும் முடிகொண்டநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று (16-05-2019) இப்படி இரண்டு விவசாயிகளின் வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கியுள்ளனர். மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும் இந்த அட்டூழியம் தொடர்கிறது. இதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களும் தொடர்கின்றன.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயுவை குழாய் வழியாக மேமாத்தூர் கொண்டு சென்று சேர்ப்பதுதான் திட்டம். இதற்காக, மாதானம் முதல் மேமாத்தூர் வரையில் 29 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்கிறது கெய்ல் நிறுவனம். தற்போதைய குழாய் பதிப்பு இதற்காகத்தான்.

படிக்க :
♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஆனால் நிலத்துக்கு சொந்தக்கார விவசாயிகளிடம் கேட்க வேண்டாமா? அவர்களின் அனுமதி பெற வேண்டாமா? பத்து போலீஸ்காரர்களை துணைக்கு வைத்துக்கொண்டு என்ன வேண்டுமென்றாலும் அழிச்சாட்டியம் செய்யலாமா? இவர்கள் எந்த கேட்டு கேள்வியும் இல்லாமல் நிலத்துக்குள் மிஷினை விட்டு ஏற்றுவார்கள். விவசாயிகள் வக்கீலை பிடித்து கோர்ட்டுக்கு ஓடி தடையுத்தரவு வாங்க வேண்டுமா?

ஆனால், இந்தக் குழாய் பதிப்புக்கு வேறு சில, பரந்த – நீண்டகால நோக்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய பெட்ரோலியத் துறையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

தற்போது ஓ.என்.ஜி.சி.யும், கெய்லும் மேற்கொள்ளும் இந்த உள் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நாளை பயன்படப்போவது வேதாந்தாவுக்குதான். சொல்லப்போனால், ஓ.என்.ஜி.சி., கெய்ல் ஆகிய இரு அரசு நிறுவனங்களும், அரசின் நிதியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி வேதாந்தாவுக்குத் தேவையான மாதிரி களத்தை செப்பனிடும் பணியைதான் செய்து கொண்டிருக்கின்றன.

இன்னும் வேதாந்தா வரவில்லை. வந்தால் இந்தப் போராட்டங்களை அரசு இத்தனை மென்மையாக எதிர்கொள்ளாது என்பது மட்டும் நிச்சயம்.

நன்றி : முகநூலில் – பாரதி தம்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க