மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்
எண் :1, அண்ணா நகர்,
சிவாஜிநகர் வழி, தஞ்சை-1
அலை பேசி: 9443188285
பத்திரிகைச் செய்தி
19-05-2019
நாகை மாவட்டத்தில் சீர்காழி மாதானம் முதல் செம்பனார் கோயில் மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க விவசாய நிலங்களையும், நெற்பயிர், பருத்தி போன்ற பயிர்களையும் விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நாசம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து சட்டப்பூர்வமாக புகார் கொடுத்தவர்கள் மீதே பொய் வழக்கு போட்டு, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இரணியனை செம்பனார் கோயில் போலீசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கெயில் நிறுவனத்தின் சட்ட விரோத, மக்கள் விரோத, நடவடிக்கைக்குத் துணை போவது மட்டுமின்றி பொய் வழக்குப் போடும் காவல் துறையின் செயலை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்கைத் திரும்பப்பெற்று தோழர் இரணியனை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
குழாய் பதிக்கவே இவ்வளவு நாசம் என்றால் வேதாந்தாவும், ஓஎன்ஜிசியும் தோண்டப் போகும் கிணறுகளால் எவ்வளவு நாசம் ஏற்படப் போகிறது என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே அரசின் குறிக்கோளாக மாறிவிட்டது. எடப்பாடி அரசு முற்றிலும் மக்கள் விரோத அரசாகச் சீரழிந்து விட்டது.
படிக்க:
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
♦ அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?
தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டைப் பாதுகாக்க 15 பேரை சுட்டுக் கொன்ற எடப்பாடி அரசு அதே வேதாந்தாவின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக இப்போது டெல்டா விவசாயிகளை வேட்டையாடத் தொடங்கிவிட்டது. டெல்டாவைப் பாதுகாக்கப் பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம் மீது டெல்டா முழுவதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு முடக்குவதுடன், தொடர்ந்து கருத்துரிமையையும் தடுத்து வருகிறது காவல்துறை.
டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குழாய் பதிப்பு இவற்றை எதிர்க்கும் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால் மட்டுமே இதனை முறியடிக்க முடியும். உதட்டளவிலான எதிர்ப்பு எந்தப் பலனையும் தராது. தனித்தனியாகப் போராடுவது மக்களை சிதறடிக்கவே பயன்படும். திட்டவட்டமாகக் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் அமைப்புகள் டெல்டாவை பாதுகாப்பதில் அத்தகைய அக்கறையைக் காட்டாததும், முயற்சியில் ஈடுபடாதததும் கவலைக்குரிய ஒன்று. எனவே கருத்தொற்றுமையுள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஒன்று சேர்ந்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். இதற்கான முயற்சியை தன்னளவில் மக்கள் அதிகாரம் மேற்கொள்ளும்.
தங்கள்
காளியப்பன்
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி மக்களை கொன்றாகி விட்டது, அடுத்து டெல்டா மக்களை அழிக்க இந்த தேசவிரோத ஆட்கள் கிளம்பி வந்து இருக்கிறார்கள்… மக்கள் இவர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தேச வளர்ச்சிக்கு எதை செய்தாலும் அதை போராட்டம் என்ற பெயரில் குலைத்து மக்களை அழிவில் தள்ளுவதே வினவு கூட்டங்களின் நோக்கம்.
தூத்துக்குடி மக்களிடம் சொன்ன சுற்றுசூழல் பொய்களை போல் டெல்டா மக்களிடமும் பொய்களை சொல்லி வினவு கூட்டங்கள் ஏமாற்றுவார்கள், கடைசியில் சீமான், திருமுருகன் காந்தி, மக்கள் அதிகார தலைவர்கள், சர்ச் எல்லோரும் ஓடி ஒளிந்துகொள்வார்கள் ஆனால் மக்கள் தான் துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த பொய்யர்களின் பேச்சுக்களை யாரும் நம்ப கூடாது.