தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

நீங்கள் உயிர்விட்ட நாளில் நீங்கள் சரிந்திட்ட மண்ணில் நாங்கள் எழுவோம் ! மீண்டும் எழுவோம் ! தூத்துக்குடியின் தியாகிகளே !

மோடி அரசை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனமான வேதாந்தாவின், கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்தார்கள் தூத்துக்குடி மக்கள். அதற்காக தமது இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிரச் செய்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள் ! அந்தத் தியாகிகளை கவுரவிக்க, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா குழுமத்தை துரத்தியடித்திட உறுதி பூணுவோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த மே 22 நாளை நாம் மறக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணியாக வந்த மக்களை துப்பாக்கிச் சூடு மூலம் ஒடுக்கியது போலீசு. கொல்லப்பட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதி மறுக்கிறது அரசு!

  • மே 22 – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்!
  • மக்கள் அதிகாரம் சார்பில் சென்னையிலும் மதுரையிலும் நடத்தவிருந்த தியாகிகள் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு தடை விதித்திருக்கிறது தமிழக போலீஸ்.
  • வாயில் சுட்டுக் கொலை செய்தவர்கள், அழவும் கூடாது என்று நம் வாயை மூடுகிறார்கள். அழுது பயனில்லை.. தமிழகமே, ஆர்த்தெழு!

தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்..

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள்:

தூத்துக்குடியின் … தியாகிகளே! – உயிர்
மூச்சை விதைத்த போராளிகளே …

நாங்கள்
சுவாசிக்கும் கா…ற்று – நீங்கள்
விட்டுச்சென்ற மூச்சு
உங்கள் மரணத்துக்கு – அணி
திரள்கிறோம் வீதியில்
நீதி கேட்டு

வேதாந்தா – அதை வென்றுவிட்டோமென்று
உலகம் புகழ்வது கேட்கிறது !
அந்தப் பெருமிதமெல்லாம் உங்களது …
நன்றி சொல்கிறோம் உங்களுக்கு …

அன்று – உங்களை துளைத்த
அந்த துப்பாக்கிகள்
இன்று – எங்களையும் குறி பார்க்கிறது
அன்று சுட்டுக்கொலை செய்ய
அனுமதி தேவையில்லை- இன்று
வாய்விட்டு அழதிட போலீஸ் அனுமதி

எத்தனை நேரம் அழுவீர்கள்?
எத்தனை பேர் கூடி அழுவீர்கள்?
எந்த இடத்தில் அழுவீர்கள்?
என்ன சொல்லி நீங்கள் அழுவீர்கள்?
அழுதிட ஆயிரம் கட்டளைகள்…
இடுவதோ வாயில் சுட்டவர்கள்…

கண்ணே வெனிஸ்டா, கண்ணே
ஸ்னோலின்- உன்
கனவுகள் இனி எங்கள் நெஞ்சில் …
நீங்கள் உயிர்விட்ட நாளில் …
நீங்கள் சரிந்திட்ட மண்ணில் …
நாங்கள் எழுவோம் ! மீண்டும் எழுவோம் !
தூத்துக்குடியின் தியாகிகளே!

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க