“அச்சத்தில் இந்திய இராணுவம்” என்ற தலைப்பில் 15.05.2019 தேதியிட்ட தினமணி நாளிதழில் தலையங்கம் வெளியாகியிருக்கிறது. தினமணி குறிப்பிடும் அச்சம், காஷ்மீர் போராளிகளோ அல்லது பாகிஸ்தானால் ஏவிவிடப்படும் எல்லை கடந்த பயங்கரவாதிகளோ இந்திய இராணுவத்தின் மீது தொடுத்துவரும் தாக்குதல்களால் ஏற்படும் அச்சம் அல்ல. மாறாக, இந்திய இராணுவத்தின் கைகளிலுள்ள “சரக்குகளால்” ஏற்பட்டுவரும் அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.

அதாவது, இந்திய இராணுவம் பயன்படுத்தும் ரவைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்கள் தரமற்றவையாகவும், காலாவதியாகிப் போனதாலும் இந்திய இராணுவச் சிப்பாய்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.

“அரசின் இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது இராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்.எம். அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்.எம். குண்டுகளை இராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல இராணுவ வீரர்கள் பயிற்சியின் போது காயமடைந்தார்கள் என்பதுதான்.”

“சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறு சில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும் இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் இராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன” என இராணுவமே பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாகக் கூறுகிறது, அத்தலையங்கம்.

“இந்திய அரசால் நடத்தப்படும் 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகளைவிட, சிவகாசியில் தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் தரமானவை” என்பதுதான் இந்திய இராணுவம் எழுதியிருக்கும் கடிதத்தின் பொருள். இந்த ஒப்பீடை நாகரீகம் கருதிச் சொல்லாமல் விட்டுவிட்டது, தினமணி.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன? விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.

நமத்துப் போன குண்டுகளை, ரவைகளை இந்திய இராணுவத்திடம் கொடுத்துச் சுடச் சொல்லுவதற்கு யாரைப் பொறுப்பாக்க வேண்டும்?

தற்பொழுது நாட்டை ஆளும் பா.ஜ.க. ஆட்சியாளர்களைப் பொருத்தவரை, முந்தைய காங்கிரசு ஆட்சியாளர்கள் தேசப் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையில்லாதவர்கள். இராணுவக் கொள்முதல் அனைத்திலும் ஊழல் செய்வதைத் தவிர, அவர்களுக்கு வேறு நோக்கம் கிடையாது.

ஆனால், 56 இஞ்ச் மார்பு கொண்ட மோடி அப்படிப்பட்டவர் அல்ல. பாகிஸ்தான் மற்றும் முசுலீம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு நாட்டை வலிமைமிக்கதாக மாற்றுவது குறித்துத்தான் அவர் பிறந்த தினத்திலிருந்தே சிந்தித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கொண்டுவந்தார் என்றெல்லாம் உச்சி முகரப்படும் மோடி ஆட்சியிலும் இந்திய இராணுவம் பலவீனமாக இருக்கிறதே, அது ஏன் என்று பரிசீலித்திருக்க வேண்டும். மாறாக, தினமணியின் தலையங்கம் இன்றைய ஆட்சியாளர்களையும், முந்தைய ஆட்சியாளர்களையும் ஒரே தட்டில் வைத்து “நடுநிலையாக” விமரிசிக்கிறது. தினமணியின் இந்த நடுநிலைக்கு, அரசாங்க விளம்பரம் தடையின்றிக் கிடைக்க வேண்டுமே என்ற அச்சம் காரணமாக இருக்கக்கூடும்.

இந்திய இராணுவம் தரமற்ற ரவைகளையும் குண்டுகளையும் பற்றி மூக்கைச் சிந்தினால், தினமணி தலையங்கமோ, அதற்கு அப்பாலும் சென்று, “இராணுவத் தளவாடங்களில் மட்டுமல்ல, நமது விமானப் படையும் பல சவால்களை எதிர்கொள்கிறது. பாலாகோட் தாக்குதல் இந்திய விமானப் படையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களுக்கு நமது பழமையான மிக்-21 போர் விமானங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதையும் மீறித்தான் நமது விமானப் படையினர் பாலாகோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்” என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனக் கண்ணீர் வடித்திருக்கிறது.

இப்படித் தனது வாசகர்களின் செண்டிமென்டை டச் செய்த பிறகுதான், தினமணிவாள் தனது புத்தியைக் காட்டியிருக்கிறார். இந்திய விமானப் படையின் பலவீனத்தை உடைத்து, அதை உடனடியாகப் பலமாக மாற்றும் நோக்கில்தான் மோடி அரசு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த விமானக் கொள்முதல் விவாதப் பொருளாகி இருப்பது இந்திய இராணுவத்தைக் கவலைக்குள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிடும் தினமணி, போஃபர்ஸ் ஊழலைக் காட்டி ரஃபேல் ஊழலை இப்படி நியாயப்படுத்தத் துணிகிறது:

“இதற்கு முன்னால் போஃபர்ஸ் வாங்கியது விவாதப் பொருளாக்கப்பட்டாலும், 1999 கார்கில் போரில் பாகிஸ்தானிய ஊடுருவிகளை அகற்ற அந்தப் பீரங்கிகள்தான் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் (இராணுவ அதிகாரிகள்) சுட்டிக் காட்டுகிறார்கள். விமர்சனங்களை எழுப்பி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களை வாங்குவது தடுக்கப்பட்டால், அதனால் இந்தியாவின் பாதுகாப்பு பேராபத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.”

“126 போர் விமானங்களை வாங்கும் முந்தைய ஒப்பந்தம் கைவிடப்பட்டு, 36 விமானங்களை மட்டுமே வாங்கும் புதிய ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது? இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தை ஓரங்கட்டிவிட்டு, பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் அதீத அக்கறை காட்டியது ஏன்? இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பதிலாக அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் சலுகை காட்டப்பட்டது? டஸால்ட் நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை என்ற முடிவு ஏன் எடுக்கப்பட்டது?” என்றபடியான கேள்விகளை, விமர்சனங்களையெல்லாம் விட்டுவிட்டு, ரஃபேல் விமானம் திறன்மிக்கதா, இல்லையா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும் என மறைபொருளாக உபதேசிக்கிறது தினமணி.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !

“கோழி எப்படி இருந்தா என்னடா, குழம்பு ருசியா இருக்கான்னு மட்டும்தான் பார்க்கோணும்” என்ற கவுண்டமணியின் நகைச்சுவைக்கும் தினமணியின் தர்க்கத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது.

ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, “அவ்விமானத்தின் திறன், தகுதி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலிக்க முடியாது. ஏனென்றால், அத்தகைய தொழில்நுட்ப அறிவு மாண்புமிகு நீதிபதிகளுக்குக் கிடையாது” என வாதாடியது மோடி அரசு. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே அந்த உரிமை மறுக்கப்பட்ட பிறகு, சாமானிய மக்கள் ரஃபேல் விமானத்தின் தகுதி, திறன் குறித்து முடிவு செய்ய முடியுமா? எனவே, அவ்விமானத்தின் தகுதி, திறன் குறித்து சாமானிய மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு ஒரு போருக்காகக் காத்திருக்க வேண்டும் போலும். ஆனால், அந்த எதிர்காலப் போரை இந்திய அரசு யார் மீது தொடுக்கும்? பாகிஸ்தான் மீதா, அல்லது தமது சமூகப் பொருளாதார உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கி வரும் இந்திய மக்கள் மீதா?

குஜராத்தில்… “நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன? விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைப் பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த வேட்பாளராகத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் முன்னிறுத்தியபோது, தினமணிவாள், “இன்னும் எத்துணை காலத்திற்குத்தான் குஜராத்தில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகளைப் பற்றியே பேசி, மோடியைக் குற்றவாளியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? குஜராத்தில் அவர் கொண்டுவந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள்” என வக்காலத்து வாங்கி தலையங்கம் தீட்டியிருந்தது.

“நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.

கீரன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க