டந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது. “தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020” இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி இம்மாவட்டங்களில் 2016-க்கு முன் அனுமதி பெற்ற ஹைட்ரோகார்பன் கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளைத் திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓ.என்.ஜி.சி நிறுவன பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் எடுக்கும் பணியால் விவசாய நிலங்கள் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத நிலையில் நாசமானது, நிலத்தடி நீர் மாசுபட்டது, பல்வேறு உடல் நலக் கேடுகளைத் தோற்றுவித்தது. இதனால் ஹைட்ரோகார்பன் எடுக்க தடைகோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களைக் கட்டமைத்ததன் பலனாகவே அதிமுக அரசால் டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதை தமிழக மக்கள் ஆதரித்து வரவேற்றனர்.

படிக்க : எல்கர் பரிஷத் வழக்கு: மனித உரிமை ஆர்வலர் கோன்சால்வ்ஸ்-க்கு மருத்துவம் மறுக்கும் சிறைத்துறை!

ஆனால், அண்மைக் காலமாக நடந்த நிகழ்வுகள் மூலமாக, ஓ.என்.ஜி.சி.க்கும் கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்களுக்கும் டெல்டாவை சூறையாடக் கொடுக்கும் தனது திட்டத்திலிருந்து பாசிச மோடி அரசு பின்வாங்கவில்லை என்பதும், வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பெல்லாம் வெறுமனே மாய்மாலம் என்பதும் அம்பலமாகியிருக்கின்றன.

0-0-0

கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி மாலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், பெரியகுடி எண்ணெய் கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் வழிகாட்டுதலோடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக கலந்தாலோசனைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.

இதனையடுத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், விவசாயிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை எதுவும் கிடப்பில் போடப்படவில்லை என்றும் கூறினார்.

ஆகஸ்ட் 15 போலி சுதந்திர தினத்தன்று, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இயக்குநரான அனுராக், கந்து வட்டிக் குழுக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் காரணமாக ஓ.என்.ஜி.சி 200 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகளை, “கந்துவட்டிக்காரர்கள்” என்று இழிவுபடுத்தினார்.

இந்நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, மீண்டும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் டெல்டாவில் பல புதிய கிணறுகளை அமைப்பதற்காக ஆயத்தமாகி வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் சில தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னரும்கூட ஓ.என்.ஜி.சி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது. தற்போது அதை தீவிரப்படுத்தி டெல்டாவை மேலும் சூறையாடுவதற்காக மோடி அரசு திட்டமிட்டு வருகிறது.

0-0-0

2018 ஆம் ஆண்டு ஆய்வின்படி, காவிரிப் படுகையில் மொத்தம் 700 கிணறுகள் உள்ளதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்தது. ஆனால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் வெறும் 219 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே இருந்தன. மேலும் 183 கிணறுகளில் உற்பத்தி நடைபெறுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவிக்கிறது; ஆனால் 71 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தங்களிடம் உள்ளதாகவும், அந்த 71 கிணறுகளுக்குமே சட்டப்பூர்வமாக இயங்குவதற்கு முறையான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.

இதே சட்டவிரோத நடவடிக்கையை 2020-ஆம் ஆண்டுக்குப் பின்னும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்ந்தது. காவிரிப்படுகைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு படிப்படியாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அறிவிப்பு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாக திருப்பித் தரப்படவில்லை. அங்கு தோண்டப்பட்ட கிணறுகளும் இன்னும் அகற்றபடாமலே உள்ளன.

இவையன்றி ஓ.என்.ஜி.சி-யின் பல கிணறுகளுக்கு, செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட அனுமதி காலம் முடிந்தும், அவற்றை மூடாமல் வைத்திருக்கிறார்கள். பல கிணறுகள் அனுமதியே இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, 2016-க்கு முன் அனுமதி பெற்ற ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தவிர்த்து புதிய கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவன பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் மராமத்து பணிகள் செய்வதாக நாடகம் ஆடிக்கொண்டு பழைய எண்ணெய் வயல்களில் புதிய கிணறுகளை ஓ.என்.ஜி.சி அமைத்து வருகிறது. பழைய கிணறுகளில் உற்பத்தித் தூண்டலுக்கு அபரிமிதமான ரசாயனக் கலவையை உள்ளே செலுத்துவதன் மூலம் பழைய கிணறுகளைப் புதுப்பித்து வருகிறது. இதனால் இன்னும் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும் ஓ.என்.ஜி.சி. அங்கு தன் நாசகர வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால் வித்தியாசம் என்னவெனில், இதுநாள் வரை திரைமறைவில் கொல்லைப்புறமாகச் செய்து கொண்டிருந்தவற்றை இப்போது பகிரங்கமாகவே செய்யவும், மேலும் தனது திட்டங்களை விரிவுபடுத்தவும் துணிந்திருக்கிறது.

மறுபக்கம், திமுக அரசும் ராமேஸ்வர் டெலி-யின் பதிலுக்கோ, அனுராக்-கின் கருத்திற்கோ எவ்வித மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் கள்ளமௌனம் காத்து வருகிறது. “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மீண்டும் ஓ.என்.ஜி.சி-யிடம் தாரை வார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதா? இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக தனது கொள்கை நிலையை அறிவிக்க முன்வர வேண்டும்” என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மை என்னவெனில், எதார்த்தத்தில் முந்தைய அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போதைய திமுக ஆட்சியிலும் சரி, டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தாததன் மூலம் இரு கட்சிகளுமே மோடி அரசின் பேரழிவு திட்டத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.செயராமன் 23.04.2022 தேதியிட்ட தனது அறிக்கையில் திமுக, அதிமுக கட்சிகளின் செயல்பாட்டை இவ்வாறு விளக்குகிறார் :

“2015-ல் 30 புதிய கிணறுகள் அமைக்க இந்திய சுற்றுச்சூழல் துறையிடம் ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றது; அன்றைய அதிமுக அரசின் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த கிணறு அமைக்கவும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார். அடுத்து வந்த திமுக அரசும் ஒரு காலத்திலும் நாங்கள் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டது.

இந்நிலையில் 2015க்கு பிறகு, காவிரிப் படுகையில் 21 கிணறுகள் அமைத்துவிட்டதாகவும், இன்னமும் அமைக்கப்பட வேண்டிய 9 கிணறுகளை அமைக்க காலநீட்டிப்பு வேண்டுமென்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இந்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து இருக்கிறது. அதுவும் காலநீட்டிப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. அப்படி என்றால், தமிழ்நாட்டில் அதிமுக அரசும், திமுக அரசும் அனுமதி கொடுக்காத நிலையில், ஓ.என்.ஜி.சி 21 கிணறுகளை எப்படி அமைத்தது?”

நாகப்பட்டினம் பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து ரூ.31,580 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைக்கத் திட்டமிட்டு, 2021 நவம்பரில் அறிவிப்பாணை வெளியிட்டது திமுக அரசு. அதாவது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான  நாகபட்டினத்தின் திருமருகல் பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து டெண்டர் கோரியது.

இந்த திட்டத்தால், கிட்டதட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகள், விளைநிலங்களை இழந்து வாழ்வாதாரத்தைக் கைவிட்டு அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. மேலும், இத்திட்டத்திற்காக முட்டம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம், நரிமணம், பனங்குடி ஆகிய கிராமங்களில் விளை நிலங்களை விவசாயிகளின் ஒப்புதலின்றி அச்சுறுத்தி கையகப்படுத்த ஸ்டாலின் அரசு முயன்று வந்தது.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

இதனையடுத்து, பெட்ரோ-கெமிக்கல் மண்டலம் அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 16-ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே வேறு வழியின்றி, போராட்டம் செய்வதாகச் சொன்ன நாளுக்கு முதல் நாள் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை வாபஸ் பெறுவதாக ஸ்டாலின் அரசு அறிவித்தது. இதுதான் திமுக அரசின் உண்மை முகம்.

காவிரி மண்டலத்தைச் சுடுகாடாக்குவதற்கான எல்லா வேலைகளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற பெயரில்லாமல் டெல்டா பகுதியை வேட்டைகாடாக பயன்படுத்தி வந்த நிறுவனங்கள், இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற பெயரிலேயே அதனை வேட்டைக்காடாக பயன்படுத்த துடிக்கின்றன. இதை நாம் அனுமதித்தால் இன்னும் சில ஆண்டுகளில் டெல்டா  படுகை “பாதுகாக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் மண்டலமாக” தான் இருக்குமே ஒழிய அது வேளாண் மண்டலமாக இருக்காது.

டெல்டாவில் ஓ.என்.ஜி.சி-இன் வருகை என்பது தொடக்கம்தான், அடுத்து வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதற்கு தயாராக உள்ளார்கள். எனவே ஒரு திட்டத்தோடுதான் பாசிச மோடி அரசு காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஒரு நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற போராட்டக் களங்களால் மட்டுமே காவிரிப் படுகையிலிருந்து இப்பேரழிவுத் திட்டங்களை விரட்டியடிக்க முடியும்.


குயிலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க