ஞ்சை டெல்டா, 2018 நவம்பர் மாதம் இதே நாட்களில் கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது. பயிர்கள் அழிந்து, வீடுகள் இழந்து, உண்ண உணவின்றி புயல் தனது கோர தாண்டவத்தால் மக்களை தத்தளிக்கவைத்தது. அது ஏற்படுத்திய வலி இன்னும் டெல்டா மக்களின் நினைவுகளில் இருந்து நீங்க மறுக்கிறது.
தமிழகத்திற்கே சோறு போட்ட மக்கள்- ஆண்டு முழுக்க உழைப்பையே தமது வாழ்க்கையாக கொண்டவர்கள் – உணவின்றி நிற்கதியாக நின்றதும், இதர மாவட்ட மக்கள், டெல்டா மாவட்ட மக்களின் வலியை பகிர்ந்துக்கொள்ள கொடுத்தனுப்பிய நிவாரணப் பொருட்களை வாகனங்களை மறித்துச் சூறையாட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர்.
அத்தகைய பெருந்துயரம் இன்றும் வந்துவிடுமோ என்ற அச்சத்தை எதிர்நோக்கிதான் தற்போது வந்த பெருமழையையும், புயலையும் மக்கள் அணுகுகின்றனர். அத்தகைய பெரும் அழிவை ஏற்படுத்தாவிட்டாலும், இன்னும் இந்த ஆண்டு முடியும்வரை, “கண்டத்திலிருந்து” தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும், அச்சமும் மக்கள் மனங்களில் நிறைந்தே உள்ளது.
படிக்க :
நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !
தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !
தமிழநாட்டில் வடகிழக்கு பருவமழை மிக குறுகிய நாட்களில் அதிக மழை பெய்துள்ளது. காவேரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் பெய்த மழையின் சராசரி அளவை விட 59% சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு ஆகும். இதனால் டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை நடப்பாண்டில் 6 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சம் ஏக்கரில் நடவு செய்த விவசாய நிலங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. மேலும் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடுவதற்காக நடப்பற்றிருந்த நாற்றுகள் முற்றிப்போய் பறித்து நடமுடியாத நிலையில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. இதனால் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கபடும் அபாயம் உள்ளது.
குருவை சாகுபடி முற்றிலும் நாசமானது
டெல்டா பகுதியை சுற்றியுள்ள, மன்னார்குடி, நீடாமங்களம், தஞ்சாவூர், திருத்துறைபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட 20,000 ஏக்கருக்கும் மேற்பட்ட குறுவை நெல் பயிர் அறுவடை நிலையில் மழை வெள்ளத்தால் சூழ்ந்து முற்றிலும் நாசமாக போய் உள்ளதை ஆங்காங்கே நாம் கண்கூடாகக் காணமுடிகிறது.
இன்னொருபுறம் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடிக்கு அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தவில்லை. குறுவை சாகுபடி தொடங்கும் போதே ஒன்றிய அரசு பயிர் காப்பீடு இல்லை என்று அறிவித்த நிலையில் ஏக்கருக்கு ரூ. 30,000-த்திருக்கும் மேல் செலவு செய்துவிட்டு எந்த இழப்பீடும் இல்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருகின்றனர் குறுவை விவசாயிகள்.
சில இடங்களில் அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததன் விளைவாக வீணாகி போய் முளைத்து கிடைக்கின்றன. ஒரு வழியாக புயலில் இருந்து தப்பித்துவிட்டோம் என நினைத்து அறுவடை செய்த விவசாயிகள் கொள்முதல் நிலையங்களால் கண்ணீர் விடும் நிலைக்கு சென்றுள்ளனர்.
தத்தளிக்கும் குடிசை வீடுகள், கால்நடைகள்
கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் பெய்த கனமழையால் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், அரசு காலனி வீடுகள், தொகுப்பு வீடுகள், நீரில் சூழந்து உள்ளன. நீர் மேலாண்மை பாதிக்கப்பட்டு ஆறுகளில் உடைப்பு, சட்டர்ஸ்கள், தடுப்பணைளில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இவற்றை புதிதாக புனரமைக்க வேண்டிய நிலையே உள்ளது. (தமிழக அரசு தூர்வாரும் பணியை மேல் பூச்சாக செய்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)
கால்நடைகள் மழையின் காரணமாக உணவின்றி இறந்து போயுள்ளன. கூலி விவசாயிகள், நகர்ப்புற கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு போகமுடியாமல் வீடுகளில் முடங்கி உணவுக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை உள்ளது.
இது வெறும் இயற்கை பேரிடர் மட்டும்தானா?
மழைக்காலங்களில் இவ்வாறு இருக்கையில், இதே டெல்டா மாவட்டங்கள், கோடைகாலங்களில் குடிநீர் திண்டாட்டத்தில் சிக்குவதும், அதற்கு பெண்கள் போராட்டாங்களை நடத்தி வருவதையும் இணைத்தே பார்க்க வேண்டியுள்ளது. இதுவரை சென்னை வெள்ளம், கடலூர் புயல் பாதிப்பு, ஒக்கி புயலால் தென் மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்ததும், புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பதும் நடந்து வந்தன. ஒரு சில மாவட்ட மக்கள் பாதிப்படைந்தால், மற்ற மாவட்ட மக்கள் நிவாரண உதவியை செய்து வந்தனர்.
அரசும் கண்துடைப்புக்கு ‘நிவாரணப் பணியை செய்ய முடிந்தது’. ஆனால் இப்பிரச்சினை தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருவதை நம்மால் உணர முடிகிறது, புதிய போக்காக மாறி வருகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.. ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சென்னை அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சில தென் மாவட்டங்களில் என பெருத்த பாதிப்பை ஒருசேர சந்திக்க தொடங்கியுள்ளன. கடந்த காலங்களைப்போல் இயற்கை பேரிடர் என்று கடந்து செல்ல முடியவில்லை.
இந்தியா முழுக்க, உலக முழுக்க இதன் பரிமாணம் விரிவடைந்தே செல்கிறது. ஏகாதிபத்தியங்கள் – கார்ப்பரேட்டுகளின் லாபவெறியால் புவி வெப்பம் அதிகரிப்பது, பூமி பந்தையே நெருக்கடியில் தள்ளும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது. அதன் விளைவை தென் கோடியில் உள்ள ஒரு விவசாயியையும் விடாமல் தாக்குகிறது.
மக்களின் கோரிக்கை
சென்னை முதல் குமரி வரை சென்று மக்களுக்கு ஆறுதல் கூறிவருகிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களுக்கு தேவை ஆறுதல் மட்டுமல்ல, உரிய நிவாரணங்களை வழங்கிட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஏக்கருக்கு 30,000-மும் உயிரிழந்த கால்நடைகளுக்கு, கூலி தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கின்றனர் மக்கள்.
ஆனால் தமிழக அரசோ ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்குவதாக தெரிவித்துள்ளது. இது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது. ஒரு ஹெக்டேர் என்பது 2.471 ஏக்கருக்குச் சமம். அதாவது ஹெக்டேருக்கு ரூ. 74,130 என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கும் செவி மடுக்காமல் வெறும் ரூ. 20,000 மட்டுமே வழங்குவதாக  ‘பெருந்தன்மையுடன்’ அறிவித்துள்ளது தமிழக அரசு. ஏக்கர் கணக்கில் சொல்வதெனில் விவசாயிகளின் கோரிக்கையான ஏக்கருக்கும் ரூ.30000 என்பதைப் புறக்கணித்து ஏக்கருக்கு வெறும் ரூ. 8094 மட்டுமே நிவாரணமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது மாநில அரசு. இது மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மேலும் இருளை நோக்கித் தள்ளுவதாகவே அமையும்.
படிக்க :
1905 புரட்சி : 1917 அக்டோபர் புரட்சிக்கான ஒத்திகை !!
‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !
தமிழக அரசு!
• வெள்ளத்தால் நாசமான நெற்பயிர் – ஏக்கருக்கு ரூ. 30000 வழங்கு!
• மந்தமான கொள்முதல் நடக்கும் “நெல் கொள்முதல் நிலையங்களை” உடனே முறைப்படுத்து!
• புயலால் வேலையின்றி முடக்கப்பட்ட, விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கு!
• வடிகால்கள், ஏரி, குளங்கள், தடுப்பணைகள், ஆறுகள், வடிகால்களை சீர் படுத்து!
உழைக்கும் மக்களே!
• வெறும் இயற்கை பேரிடர் மட்டுமல்ல! ஆண்டுதோறும் நாம் சந்திக்கும் தொடர்ச்சியான வாழ்நிலை பிரச்சினையாக இவை உருமாறிவருகின்றன!
• பருவநிலை மாறுபாடு – புவி வெப்பநிலை அதிகரிப்பு – கார்ப்பரேட்டுகளின் லாபவெறியால் இயற்கை பேரழிகள் தொடர்கின்றன!
• தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் கையில் அரசு அதிகாரத்தை வென்றெடுப்பதே இறுதி தீர்வு!

கந்தசாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க