1905-ன் ஒத்திகை இல்லாமல் போயிருந்தால் 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றி சாத்தியமாகி இருக்காது – லெனின்
திர்கால வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய பல நிகழ்வுகளுடன்தான் 1905-ம் வருடம் பிறந்தது. செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் புத்திலோவ் (Putilov) தொழிற்சாலையின் 13,000 தொழிலாளர்கள் ஜனவரி 3-ம் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். நகரில் இருந்த பிற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் புத்திலோவ் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்தார்கள். 7-ம் நாள் இந்த வேலைநிறுத்தம் பொது வேலைநிறுத்தமாக மாறியது.
உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தை முறியடிக்க தன் கையில் இருந்த அனைத்து அதிகாரங்களையும் ஜார் அரசு பயன்படுத்தியது. போலீசும் இராணுவமும் இணைந்த 40,000-க்கும் மேற்பட்ட படை தலைநகரில் குவிக்கப்பட்டது. போராட்டம் மேலும் பரவாமல் தடுக்க தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவி பெரும் ரத்தக் களரியை உருவாக்குவதே அரசின் நோக்கம். கூடவே அதிகார வர்க்கம் தனது தந்திரத்தை செய்தது – போலீசின் துணையுடன் போலியான தொழிலாளர்கள் அமைப்பை (Zubatov அமைப்புகள்) உருவாக்கி, அரசியல் நடவடிக்கைகள், புரட்சிகர போராட்டங்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களை திசைதிருப்புவது, பாட்டாளி வர்க்க போராட்ட இயக்கத்தை சீர்திருத்தவாத பாதையில் தள்ளுவது. குறிப்பாக, பீட்டர்ஸ்பர்க் நகரின் ரஷிய ஆலைத்தொழிலாளர்கள் சபை (Assembly of Russian Factory Workers) என்ற அமைப்பில் ஏறத்தாழ 9,000 உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த அமைப்பின் தலைவர் கபோன் என்ற கிறித்துவ பாதிரியார். உண்மையில் இவர் இரகசிய போலீஸ் ஏஜென்ட்.
கோரிக்கை மனுவை எழுதி ஊர்வலமாகச் சென்று ஜார் மன்னரிடம் சமர்ப்பித்தால் அவர் மனம் இரங்குவாரென்பது கபோனின் திட்டம். இதனை தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டனர். கருணை மனுவால் ஒரு பயனும் கிட்டாது என்று போல்சுவிக்குகள் எச்சரித்தார்கள். ஆனால் பாதிரியார் திரட்டும் ஊர்வலத்தை தடுக்க முடியாது என்று உணர்ந்த அவர்கள், தொழிலாளர்களுடன் ஊர்வலத்தில் பங்கு கொள்வது என்று முடிவுசெய்தார்கள்.
படிக்க :
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
ஜனவரி 9, ஞாயிற்றுக்கிழமை அன்று பீட்டர்ஸ்பர்க் நகரின் தொழிலாளர்கள், தேவாலய பதாகைகள், சொரூபங்கள், ஜார் மன்னரின் உருவப்படங்களை கையில் ஏந்திய படி மன்னனின் குளிர்கால அரண்மனையை நோக்கி ஊர்வலமாக சென்றார்கள். பலர், தம் மனைவியர், குழந்தைகள், முதியவர்கள் என தம் குடும்பங்களையும் ஊர்வலத்தில் பங்குபெறச்செய்தார்கள். 1,40,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்றார்கள். ஏற்கனவே முடிவு செய்தபடி, ஆயுதங்கள் ஏதும் இல்லாத அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள், ஏறத்தாழ 5,000 பேர் காயமுற்றார்கள்.
“ஆயுதங்கள் இன்றி அமைதியாக சென்ற மக்கள் மீது கொடூரமாக நடத்தப்பட்ட ரத்தத்தை உறைய செய்யும் படுகொலை இது”. இத்தகைய படுகொலைகள் மூலம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்களின் போராட்ட உணர்வை ஒடுக்கிவிடலாம், பணிந்துபோகச் செய்துவிடலாம் என ஜார் அரசு கணக்குப்போட்டது. ஆனால் அரசின் கணக்கு தவறாக முடிந்தது. ஆயுதம் ஏதும் தாங்காத, கோரிக்கை பதாகைகளை மட்டுமே ஏந்தி அமைதியாக சென்ற தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு, ஜார் மன்னர் அன்பும் கருணையும் நிறைந்தவர் என்று கண்மூடித்தனமாக இதுவரை நம்பிக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சியுற்றனர்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று போராட்டங்களில் இருந்து ஒதுங்கி வாழும் கடைக்கோடி தொழிலாளியும் கூட இப்போது ஒரு உண்மையை உணர்ந்தான். அரசிடம் கெஞ்சிக் கேட்பதாலோ கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாலோ மட்டுமே கசக்கிப் பிழியப்படும் இன்றைய கேடுகெட்ட பணிச்சூழலில் இருந்து தாங்கள் வெளியே வந்துவிட முடியாது. கையில் ஆயுதங்களை ஏந்தினால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்தான்.
புரட்சிகரப் பாதையில் இருந்து பாட்டாளிவர்க்க இயக்கத்தை தடம் மாற்ற ஜார் அரசு எடுத்த முயற்சி இப்படி பரிதாபகரமான தோல்வியில் முடிந்தது. அன்று மாலைக்குள் பீட்டர்ஸ்பர்கின் தொழிலாளர்கள் நிரம்பிய வீதிகளில் போலீசாரால் நிறுவப்பட்டு இருந்த தடைகள் யாவும் தூக்கி எறியப்பட்டன. ஜார் மன்னனுக்கு எதிரான போரில் மக்கள் திரளத்தொடங்கினர்.
ஜனவரி 9 படுகொலையை கண்டித்து மறுநாள்10-ம் தேதி லெனின் மிகவும் உணர்ச்சிமிக்க விதத்தில் தன் எதிர்வினையை ஆற்றினார். நடந்து முடிந்த படுகொலைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஆவேசமிக்க போராட்டத்தை ரஷ்யாவில் புரட்சியின் தொடக்கம் என்று லெனின் கணித்தார்.
‘ரஷ்யாவில் புரட்சி’ (Revolution in Russia) என்ற கட்டுரையை அன்றே எழுதினார். புரட்சியின் மூச்சுக்காற்றின் வெப்பம் தகிக்கும் அக்கட்டுரை, பீட்டர்ஸ்பர்க் பாட்டாளி வர்க்கத்தின் ஜனவரி 9 வீரஞ்செறிந்த போராட்டத்தை தெளிவாகவும் விரிவாகவும் சித்தரித்தது. “தாக்குதலுக்கு எதிராக தாக்குதல். வீதிகளில் ஆவேசமிக்க சண்டைகள் நடக்கின்றன, தடுப்புக்கள் தூக்கி வீசப்படுகின்றன, துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீரும் ஓசையும் பீரங்கிகளின் கர்ஜனையும் கேட்கின்றன. வீதிகளில் ரத்த ஆறு ஓடுகின்றது, விடுதலைக்கான மக்கள் போராட்டம் சூடு பிடிக்கின்றது. மாஸ்கோவும் தெற்கும், காக்கசாசும் போலந்தும் பீட்டர்ஸ்பர்க்கின் பாட்டாளிவர்க்கத்துடன் கைகோர்க்க ஆயத்தமாகி விட்டன. பாட்டாளி மக்களின் முழக்கம் இப்போது இதுதான் : “மரணம் அல்லது விடுதலை!”. லெனின் பிரகடனம் செய்தார், “புரட்சி நீடுழி வாழ்க! புரட்சியை முன்னெடுத்துள்ள பாட்டாளிவர்க்கம் நீடுழி வாழ்க!”
1905, ஜனவரி 5 அன்று நடத்திய வெகுமக்கள் போராட்டம், ரஷிய பாட்டாளி வர்க்கத்துக்கு உறுதியான பாடத்தை கற்றுக்கொடுத்தது; மிகப் பல நீண்ட வருடங்களாக அனுபவிக்கும் இழிந்த, சலிப்பான, கேடுகெட்ட இந்த வாழ்க்கை கற்றுத்தராத புரட்சிகரப் பாடத்தை இந்த ஒரே நாளில் கற்றுக்கொண்ட பாட்டாளி வர்க்கம் அவர்களை மேலும் முன்னேறத் தூண்டியது.
அரசியல் புலம்பெயர்ந்தவராக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த லெனின், ரஷ்யாவில் நடந்து வந்த நிகழ்வுகளுடன் தன்னை நெருக்கமாக பிணைத்துக் கொண்டார், ஒவ்வொரு புதிய நடவடிக்கையையும் நெருங்கிப் பார்த்து ஆய்வு செய்து அது பற்றி விளக்கினார். புரட்சி வெடிப்பதற்கு நீண்ட காலம் முன்பாகவே அப்படியான ஒரு புரட்சி தவிர்க்க இயலாதது என்பதையும் அப்புரட்சியில் ரஷிய மக்கள் அனைவரும் பங்கு பெறுவார்கள் என்பதையும் சரியாக கணித்து சொன்னார். எதிர்காலத்தில் வெடிக்கப்போகும் மக்கள்போராட்டக்களத்திற்கு ஆயத்தமாகும் வகையில் கட்சியை உயிர்ப்புடன் வைக்க ஓய்வு ஒழிச்சல் இன்றி பணியாற்றினார், இப்போருக்கு பாட்டாளிவர்க்கமே தலைமை ஏற்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
ரஷிய பாட்டாளிவர்க்கத்தின் வீரஞ்செறிந்த இப்புரட்சி உலகளாவிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின்மீது ஏற்படுத்த உள்ள உறுதியான தாக்கத்தை லெனின் தீர்மானமாக வலியுறுத்தினார். “உலகப் பாட்டாளி வர்க்கம், ரஷிய பாட்டாளிவர்க்கம் என்ன செய்யப்போகின்றது என்று பேரார்வத்துடன் எதிர்பார்க்கின்றது” என்று எழுதினார்.
படிக்க :
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !
“ரஷ்ய பாட்டாளிவர்க்கம் உறுதியுடன் முன்னெடுத்து ரஷ்யாவின் ஜார் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்போது அந்த நிகழ்வு உலக நாடுகளின் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களின், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள உழைக்கும் மக்களின் போராட்ட நடவடிக்கைகளை அது பற்றச் செய்யும்”. போல்ஷெவிக் செய்திஏடுகளிலும் கட்சி அமைப்புகளுக்கு அவர் எழுதிய கணக்கற்ற கடிதங்களும் ரஷ்யாவில் அவரை சந்தித்து உரையாடி வெளிநாடுகளுக்கு திரும்பும் அவரது தோழர்கள் சொல்லும் செய்திகளும் புரட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சிக்கு உதவின, வழிகாட்டின.
முதலாம் ரஷ்யப் புரட்சியின் குணாம்சத்தையும் அதன் வரலாற்று அம்சங்களையும் விளக்கி கூறியுள்ளார். அதன் குணாம்சத்திலும் இலட்சியத்திலும் இப்புரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிதான்; ஜார் மன்னனின் அரசாட்சியை தகர்ப்பதும் தனியார் நிலவுடைமையையும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களையும் ஒழித்துக்கட்டுவதும் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதும் இப்புரட்சியின் இலட்சியம். அது முதலாளித்துவ ஜனநாயக குணாசம்சத்தைக் கொண்ட புரட்சிதான், ஆனால் அப்புரட்சிக்கு தலைமை ஏற்றதும் வழி நடத்தியதில் முன்னால் நின்றதும் பாட்டாளிவர்க்கமே. விவசாயி வர்க்கமும் அவர்களின் நண்பர்களும், ரஷிய தேசிய இனம் அல்லாத எல்லைப்புற பிரதேசங்களின் பிற தேசிய இனங்களின் பாட்டாளிகளும் புரட்சிக்கு ஆதரவளித்தனர், இப்பெரும் மக்கள் திரள் இப்புரட்சியில் தங்களை இணைத்துக்கொண்டது.
லெனின் பின்னாட்களில் கூறியதுபோல் உண்மையில் சில அம்சங்களின் அடிப்படையில் அப்புரட்சி ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியே; எவ்வாறு? புரட்சிக்கு தலைமை ஏற்றது பாட்டாளிவர்க்க சக்தியே, புரட்சியை நடத்திய விதமும் பாட்டாளிவர்க்க அணுகுமுறையுடன்தான் இருந்தது, முக்கியமாக வேலை நிறுத்தங்கள், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி ஆகியவற்றை சொல்ல வேண்டும். பாட்டாளிவர்க்கம் தன் கொள்கை அளவிலும் நடைமுறையிலும் புரட்சிகரமானது, மன்னாராட்சிக்கு எதிரான தன் அணுகுமுறையில் மிக மிக உறுதியானது, சமரசம் செய்து கொள்ளாதது. அத்தகைய உறுதி கொண்ட பாட்டாளிவர்க்கமே ஜார் அரசை தூக்கி எறிந்து முழுமையான புரட்சியை நடத்திட முடியும்; அந்த வெற்றியை அடைய வேண்டும் எனில் பாட்டாளிவர்க்கத்தின் பின்னால் விவசாயவர்க்கம் அணிதிரள வேண்டும், இரண்டு வர்க்கங்களும் கைகோர்த்து இணைந்து புரட்சியை நடத்த வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் இதற்கு முன் நடந்த முதலாளித்துவ புரட்சிகளில் இருந்து ரஷ்யப்புரட்சி குறிப்பிடத்தக்க விதத்தில் எங்கே வேறுபடுகின்றது என லெனின் குறிப்பாக சொல்கின்றார். முதலாளித்துவம் ஏற்கனவே ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாக நிலைபெற்றுவிட்ட, ஜார் ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய வலிமையான தனிப்பட்ட அரசியல் சக்தியாக பாட்டாளிவர்க்கம் வளர்ந்துவிட்ட புதிய வரலாற்று சூழலில் பிறந்த முதல் மக்கள் புரட்சி இப்புரட்சி.
புரட்சியின் தொடக்க கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்தின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் இலக்குகளை லெனின் நிர்ணயித்தார். புரட்சியானது புதிய சூழ்நிலைகளில் கட்சியின் நடவடிக்கைகளை வரையறுக்க செய்தது, மக்களுக்கு புதிய வழிகளில் சமூகத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியிருந்தது. கட்சி அணிகளை பரந்த அளவில் திரட்டுவதற்கும், புரட்சிகர நடவடிக்கைகளை தொடங்குவதை ஊக்குவிப்பதற்கும், இளம் தலைமுறையினரை தயக்கமின்றி முன்னே கொண்டு வருவதற்கும் கட்சி அணிகள் பாடுபட வேண்டும்.
பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப்படை என்னும் பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும் எனில், இன்று பிறந்துள்ள புதிய, புரட்சிகர சூழலின் பின்னணியில் கட்சியின் வேலைகளையும் வெகுமக்களின் தலைமைப்பாத்திர அணுகுமுறைகளையும் மறு ஒழுங்கமைவு செய்ய வேண்டும். “எந்த அளவுக்கு வெகுமக்களின் இயக்கம் பரவுகின்றதோ அந்த அளவுக்கு பல்வேறுபட்ட வர்க்கங்களின் உண்மையான குணாம்சம் வெளியே தெரியும், பாட்டாளிவர்க்கத்தை அணி திரட்டி தலைமை தாங்கும் பொறுப்புள்ள அமைப்பு என்ற அடிப்படையில் கட்சியின் பொறுப்பு என்னும் சுமை அதிகரிக்கும்” என்று லெனின் எழுதுகின்றார்.
உழைப்பாளர்களின் கட்சி என்ற அடிப்படையில் கட்சி செய்ய வேண்டிய அடிப்படை வேலையும் கடமையும் எவை என்று லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவது என்ன? பாட்டாளிவர்க்க சக்திகளை அணித்திரட்டுவது, ஒருங்கிணைப்பது, வெளிப்படையான வெகுமக்கள் போராட்டத்திற்கு, சர்வாதிகாரம் பொருந்திய அரசை தகர்க்கும் பொருட்டு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு அவர்களை ஆயத்தம் செய்வது.
மக்களை அணித்திரட்டும் மகத்தான பணியில் போல்ஷெவிக் செய்தி நிறுவனமும், மிக முக்கியமாக லெனினை ஆசிரியராக கொண்ட விப்பர்யோத் (Vperyod) செய்தியேடும் பாராட்டத்தக்க பங்கை ஆற்றியுள்ளன.
லெனின் எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் அறிக்கைகளும் தொழிலாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. புரட்சியில் போல்ஷெவிக்குகளின் நடைமுறைத்தந்திரத்தை வரையறுக்கும் பணியில், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு திட்டமிடுவது, நடத்தி முடிப்பது ஆகியவற்றுக்கான தலைமைப் பாத்திரத்தை கட்சியே ஏற்க வேண்டியதன் அவசியத்தை லெனின் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
இந்த அவசியமான பணியில் ஈடுபட்டபோது, கோட்பாடு, உலகைப்பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை ஆகியவற்றில் கட்சியின் தலையாய கொள்கைகள், உறுதிப்பாடு ஆகியவற்றின் மீது லெனின் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். 1905 ஏப்ரல் மாதம் அவர் எழுதினார்: “புரட்சியின் இன்றைய சகாப்தத்தில், கோட்பாடு குறித்த கேள்விகளை சந்திக்காமல் நழுவுவதும் அல்லது அரைகுறை அறிவுடன் இருப்பதும் கோட்பாடு விசயத்தில் மிக மோசமாக வெறுங்கையுடன் இருப்பதையே குறிக்கும்; ஒரு சோசலிஸ்ட் ஆனவனுக்கு இதற்கு முன் எப்போதும் தேவைப்படாத அளவுக்கு தெளிவான சிந்தனையும் உலகம் குறித்த பார்வையும் அவசியமாகின்றது, அத்தகைய தகுதி இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை அவரால் கட்டுப்படுத்த முடியும், சூழ்நிலைகள் அவரை கட்டுப்படுத்தக்கூடாது.”
படிக்க :
முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!
ஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்
புரட்சிக்காலத்தில், வெகுமக்களின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி, கிளர்ச்சியை முறையாக ஒருங்கமைத்து நடத்துவது ஆகிய கேள்விகளின் மீது தனிக்கவனம் செலுத்தினார். க்ரூப்ஸ்காயா எழுதினார்: “மார்க்ஸும் எங்கெல்சும் புரட்சி, கிளர்ச்சி ஆகியன குறித்து எழுதிய அனைத்தையும் இலியிச் மீண்டும் வாசித்தார், ஊன்றி வாசித்தார், ஆழ்ந்து சிந்தித்தார், மட்டுமின்றி போர்க்கலை குறித்து எழுதப்பட்ட பல நூல்களை வாசித்தார், ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் நுட்பங்கள், அதை ஒருங்கிணைப்பது ஆகியன குறித்து ஆழமாக வாசித்தார். மற்றவர்கள் ஊகிப்பதை விடவும் இந்த தளங்களில் அவர் மிக ஆழமான கவனம் செலுத்தினார்.”
பாரிஸ் கம்யூன் அனுபவம் லெனினை மிகவும் ஈர்த்த ஒன்று. இது குறித்த அறிவை சமூக ஜனநாயகவாதிகளுக்கும் முன்னணி பாட்டாளிகளுக்கும் புகட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பாரிஸ் கம்யூனில் பங்கு வகித்த ஜெனரல் க்ளூசேரட் (Cluseret) பாரிஸ் கம்யூன் அனுபவங்கள் பற்றி எழுதிய தெருச்சண்டை (Street Fighting) என்ற நூலில், கம்யூன் வீரர்கள் அரசுப்படைகளுடன் தெருவில் நடத்திய சண்டைகள் குறித்து பொதுவாகவும் திரட்சியாகவும் எழுதியிருந்தார். இந்த நினைவுக்குறிப்புக்களின் ரஷிய மொழியாக்கத்தை அவர் தொகுத்தார், விப்பர்யோத்தில் வெளியானது. மட்டுமின்றி, கம்யூனின் புகழ்பெற்ற ஜெனரல் க்ளுசேரட்டின் நினைவுக் குறிப்புக்கள், சுருக்கமான வரலாறு ஆகியவற்றுக்கு ஒரு முன்னுரையும் எழுதினார். 1905 மார்ச் 5 (18) அன்று, ஜெனீவாவில் இருந்த ரஷ்ய அரசியல் குடிபெயர்ந்தோர் காலனியில் நடந்த ஒரு கூட்டத்தில், பாரிஸ் கம்யூன் பற்றி ஒரு குறிப்பை வாசித்தார். “இன்றைய கணத்தில் நாம் அனைவரும் கம்யூனின் தோள்களின் மீது நிற்கின்றோம்” என்று செவிமடுத்த அனைவருக்கும் நினைவூட்டினார்.
மூலம்: Lenin: a biography என்ற நூலின் 5ஆவது அத்தியாயம் The first assault on the Tsarist autocracy, Progress Publishers
முகநூலில் தமிழில்: மு இக்பால் அகமது
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க