மோடியின் வெற்றி தனித்துப் பார்க்கக்கூடிய நிகழ்வு அல்ல. உலகின் பல்வேறு நாடுகளில் நிறவெறி, இனவெறி, மதவெறியைத் தூண்டுகின்ற பாசிஸ்டுகளும் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளும் அதிகாரத்துக்கு வருகின்றனர்.

துருக்கியில் எர்டோகன், பிரேசிலில் பொல்சானரோ, இசுரேலில் நெதன்யாகு, அமெரிக்காவில் டிரம்ப், ஆஸ்திரேலியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கின்றனர். பிரான்சில் லிபென், இத்தாலியில் மாட்டோ சால்வி, ஹங்கேரியில் விக்டர் ஆர்பன் ஆகிய வலதுசாரிகள் ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்று வருகின்றனர்.

தனது நாட்டை உலக அரங்கில் செல்வாக்குள்ள நாடாக மாற்றவிருப்பதாகச் சொல்லித் தேசவெறியைத் தூண்டுவது, தீவிரவாத ஒழிப்பு, அகதிகள் மற்றும் வெளிநாட்டினர் மீது வெறுப்பை கக்குவது, விரட்டியடிப்பது, பிற்போக்குக் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிப்பது, வேர்மட்ட அளவிலான வன்முறை அமைப்புகளைக் கட்டியமைப்பது போன்ற கூறுகளைக் கொண்ட வலதுசாரி, பாசிச கட்சிகள் உலகெங்கும் தோன்றி வளர்ந்து வருகின்றன. அண்மையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் இத்தகைய சக்திகள் கணிசமான ஓட்டுகளைப் பெற்றுள்ளன.

(இடமிருந்து) பாசிஸ்டுகள், வலதுசாரிகலின் வெற்றி : துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சானரோ, இசுரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இந்தியாவில் இது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பார்ப்பன பாசிசமும், புதிய தாராளவாதக் கொள்கையை உள்ளார்ந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் பாசிசமும் இணைந்த ஒரு ஹைபிரிட் பாசிசமாக உருப்பெற்றிருக்கிறது.

கார்ப்பரேட் பாசிசத்தைப் புதிய தாராளவாதக் கொள்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால், மோடியின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள் அவ்வாறுதான் இதனை அணுகுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாகத்தான் பணமதிப்பிழப்பு முதல் ஜி.எஸ்.டி. வரையிலான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன என்பதையும் மோடியின் வெறிபிடித்த கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு அடிப்படை அதுதான் என்பதையும் அவர்கள் பேசுவதில்லை.

அதே புதிய தாராளவாதக் கொள்கையை மனிதமுகத்துடன் அமல்படுத்த முடியும் என்பதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் கூறுகின்றனர். புதிய தாராளவாதத்துக்கு மனித முகம் சாத்தியமே இல்லை, பாசிச முகம்தான் சாத்தியம் என்பதையே இந்தியாவில்  மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காட்டுகின்றன.

பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் – மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதன் கோட்பாடுகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியாத கடைசிக் கட்டத்திற்கு ஏகாதிபத்தியக் கட்டமைப்பு வந்துவிட்டது.

இதன் கோர விளைவுகளால் மிகப்பெரிய சுரண்டலிலும் ஒடுக்குமுறையிலும் சிக்கியுள்ள மக்கள் உலகெங்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். மரபுரீதியான கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு மக்கள் தாங்களே இணைந்து போராடுகின்றனர்.

உலக முதலாளித்துவத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை திசைதிருப்பும் பொருட்டு, இசுலாமியர், அகதிகள், கருப்பினத்தவர் என ஒவ்வொரு நாட்டிலும் அதன் சூழலுக்கு ஏற்ப பலிகடாக்களைக் கண்டுபிடித்து தேசவெறி, இனவெறி, மதவெறி, நிறவெறியை அந்தந்த நாடுகளின் பாசிச சக்திகள் தூண்டுகின்றன. மக்களைச் சரியான திசையில் வழிநடத்தக் கூடிய கம்யூனிச இயக்கங்கள் பலநாடுகளில் இல்லை அல்லது செல்வாக்குடன் இல்லை. இதன் காரணமாக மக்கள் பாசிச சக்திகளின் சவடாலுக்கும் திசைதிருப்பலுக்கும் எளிதில் பலியாகிறார்கள்.

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக் கழக வளாகத்தில், “வலதிசாரிகளே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து வெள்ளை இனவெறியர்கள் கடந்த ஆண்டு நடத்திய தீவட்டி ஊர்வலம். ( கோப்புப் படம் )

மக்களுக்கு வழமையான அரசியல் கட்சிகள் எதன் மீதும் நம்பிக்கையில்லை.  நமது நாட்டில் மார்க்சிஸ்டு கட்சியைப்  போல, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சோசலிஸ்டுகள் அல்லது இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சியினரை மக்கள் வெற்றிபெற வைத்திருக்கின்றனர். மனித முகம் கொண்டு புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தப் போவதாகச் சொன்ன அவர்கள் அனைவரும் அந்த முயற்சியில் தோற்றது மட்டுமின்றி, மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டனர்.

இருப்பினும், எந்த மாற்றமாயினும் அது தேர்தல் மூலம்தான் சாத்தியம் என்று மக்கள் எண்ணுவதால், அல்லது இதைத்தவிர வேறு வழியில்லை என்று கருதுவதால், தேர்தல் ஜனநாயகம் மீதும் அதன் அமைப்புகளைச் சார்ந்தே சிந்திக்கிறார்கள். இந்த முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் யார் பதவிக்கு வந்தாலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.

நேர்மையான, ஊழல் அற்ற, தேசபக்தியுள்ள, வலிமையான, துணிச்சலான தலைவரைக் கொண்ட ஒரு கட்சி நாட்டை ஆண்டால், நாட்டின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்று நம்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கையை முதலாளித்துவ வர்க்கம் திட்டமிட்டே மக்களிடம் உருவாக்குகிறது.

எதிர்க்கட்சிகள் எல்லாம் மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகளாகவோ, மக்கள் மத்தியில் மத்தியில் அம்பலமான ஊழல், குடும்ப அரசியல் கட்சிகளாகவோ, மிதவாத இந்துத்துவா கட்சிகளாகவோ, பா.ஜ.க.வின் மிரட்டலுக்குப் பணிந்து நடக்கும் கட்சிகளாகவோ,  பதவிக்கு ஆசைப்பட்டு பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்துவிடும் கட்சிகளாகவோ அல்லது அப்படிப்பட்ட கீழ்மட்டத் தலைவர்களைக் கொண்ட கட்சிகளாகவோ தான் இருக்கின்றன.

படிக்க :
♦ நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
♦ பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன?

இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க. என்ற கட்சிக்கும் அப்பாற்பட்ட, அதனை விடவும் உயர்ந்த, வலிமை கொண்ட, நேர்மையான தலைவனாக மோடியை ஆளும் வர்க்கம் திட்டமிட்டே மக்களிடம் முன்நிறுத்தியது. மோடியின் தோல்வியையும், தவறுகளையும், மதவெறியையும், உளறல்களையும் மறைத்து கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்திய பிரச்சாரப் போருக்கு மக்கள் பலியாகிவிட்டார்கள்.

நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குள் சிந்திப்பவர்கள் இந்தத் தேர்தல் முடிவை, “மோடியின் வெற்றி, – எதிர்க்கட்சிகளின் தோல்வி” என்று சுருக்கிப் பார்க்கின்றனர். ஆனால், புதிய தாராளவாதம், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களையே பறித்து வருகிறது.

அதிகார வர்க்கமும், கார்ப்பரேட் நிர்வாகிகளும் கொண்ட தேர்ந்தெடுக்கப்படாத ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதும், அந்த  ஆணையங்களின் முடிவை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதும் புதிய தாராளவாதம் வகுத்திருக்கும் இலக்கணங்களாகும். இந்தப் பொருளில் தேர்தல் என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமியற்றுவது என்பதுமே கேள்விக்குள்ளாகிவிட்டன. இது இந்தக் கட்டமைப்பே பாசிச மயமாகிவருவதற்கான எடுத்துக்காட்டாகும்.

முதலாளித்துவக் கட்டமைப்பின் தோல்வி மற்றும் இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வி ஆகியவற்றின் அங்கமாகத்தான் தேர்தல் கட்சிகளின் தோல்வி இருக்கிறது. இங்கே நாம் அவர்களுடைய தேர்தல் தோல்வியைக் குறிப்பிடவில்லை. கொள்கை, உட்கட்சி ஜனநாயகம் ஆகியவை மருந்துக்கும் இல்லாமல், அரசு அதிகாரத்தையும் புதிய தாராளவாதக் கொள்கைகள் வழங்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு ஊழல் செய்வது, பொதுச்சொத்தை கொள்ளையடிப்பது, தரகு முதலாளிகளாக மாறுவது என்ற நோக்கத்துக்காகவே தேர்தலில் நிற்பவர்களாக எல்லா கட்சியினரும் மாறியிருக்கிறார்கள். இவர்கள் பாசிசத்துக்கு எதிராகப் போராடும்படி நிர்பந்திக்கப்பட்டாலும், அதில் உறுதியாக நிற்பார்கள் என்று சொல்ல இயலாது.

நடுநிலையாகத் தேர்தலை நடத்தப் பொறுப்பேற்றிருக்கும் தேர்தல் ஆணையமோ கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் கைப்பாவையாகவே இயங்கியது. இந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திர தில்லுமுல்லு குறித்த புகார்கள், மதவெறிப் பேச்சுகள், பண விநியோகம் உள்ளிட்ட எல்லா வகையான தில்லுமுல்லுகளுக்கும் தேர்தல் ஆணையம் துணை நின்றது.  தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று ஓட்டுக்கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்கும் நிலையும் ஆணையத்துக்குள்ளேயே பிளவு ஏற்படும் நிலையும் வந்து விட்டது. பாசிசத்தை முறியடிக்கத் தேர்தல்தான் வழி என்று கூறும் கட்சிகளுக்கு, “தேர்தல் மூலம் பாசிசத்தை முறியடிக்க முடியாது” என்ற உண்மையை தேர்தல் ஆணையமே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உணர்த்தியிருக்கிறது.

எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு மோடி அரசு மேற்கொள்ளும் எல்லா முறைகேடுகளுக்கும் தேர்தல் ஆணையம் மட்டுமின்றி நீதித்துறையும் துணை நிற்கின்றன. ரபேல் ஊழல், சகாரா ஊழல், லோயா மர்ம மரணம் ஆகியவை தொடர்பான வழக்குகள் அனைத்திலும் அப்பட்டமாக மோடி அரசுக்கு ஆதரவாகவும் முறைகேடாகவும் உச்ச நீதிமன்றம் நடந்திருப்பதும் அம்பலமாகியிருக்கின்றன. உச்ச  நீதிமன்ற தலைமை நீதிபதியின் மீதான பாலியல் குற்றச்சாட்டும், குற்றம் சாட்டிய பெண்ணை நீதிபதியும் போலீசும் இணைந்து வேட்டையாடியதும் நீதித்துறையின் “மாண்பை” சந்தி சிரிக்கச் செய்திருக்கின்றன.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகங்கள், பாசிசத்தின் தூண்களாகவே செயல்பட்டிருக்கின்றன. இந்த தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் அப்பட்டமாக மோடியின் பிரச்சார பீரங்கிகளாகவே இயங்கின. பா.ஜ.க. செய்திகளுக்கு முன்னுரிமை தருவது என்பது மட்டுமல்ல, பிரைம் டைம் எனப்படும் நேரத்தில் மோடியை விளம்பரப்படுத்துவதற்கு தரப்பட்ட நேரத்தில் நான்கில் ஒரு பங்கு கூட ராகுல் காந்திக்கு தரப்படவில்லை.

அதுமட்டுமின்றி மோடி சரஞ்சரமாக அவிழ்த்துவிடும் பொய்களை ஊடகங்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. ஊடக அறத்திற்கு எதிராக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்வி, பதில்களை வைத்துக்கொண்டு இயல்பாக பேட்டி எடுப்பது போல ஊடகங்கள் நடித்தன. இவை போதாதென்று நமோ டி.வி. என்றொரு சானல் தொடங்கப்பட்டு அது எந்த விதிக்கும் கட்டுப்படாமல் சட்டவிரோதமாக இயங்கியது. 24 மணிநேரமும் தேர்தல் பிரச்சாரம் செய்தது.

இந்த நாடாளுமன்ற அரசியலின் எல்லைக்கு வெளியே ஆர்.எஸ்.எஸ். இன் பயங்கரவாத கொலைப்படைகள் இயங்குகின்றன. சங்கப் பரிவார அமைப்புகள் துப்பாக்கிப் பயிற்சி நடத்துகின்றன. இவையனைத்தும் போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றம் ஆகியோருடைய பார்வையின் கீழ் வெளிப்படையாகவே நடந்த போதிலும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் எதையும் அரசின் உறுப்புகள் தடுப்பதில்லை.

படிக்க :
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
♦ மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !

மொத்தத்தில் அரசியல் சட்டத்தின்படி ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கப் பொறுப்பேற்றிருக்கும் அமைப்புகள் எனக் கூறப்படும் அரசின் உறுப்புகள், பாசிசத்தின் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றவே தவிர, அதனை ஒடுக்குவதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ எள்ளளவும் பயன்படவில்லை. இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியை பாசிசம் தனது நோக்கத்துக்கு எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான சமீபத்திய சான்றுகள் இவை.

எதிர்க்கட்சிகளின் தேர்தல் தோல்வியைக் காட்டிலும் நமது கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை அரசுக் கட்டமைப்பின் இந்தத் தோல்விகளே.

தமிழ்மணி

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க