துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!

எர்டோகன் பிற்போக்கு பாசிஸ்ட் எனில், கிலிடாரோக்லு மிதவாத போர்வையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு பாசிச ஆதரவாளர். எர்டோகனின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் கிலிடாரோக்லுவை ஆதரிக்கின்றனர்.

லகம் முழுவதும் பல நாடுகளில் பாசிசக் கட்சிகளும் பாசிஸ்டுகளும் ஆட்சி செய்து வரும் நிலையில், துருக்கியில் இசுலாமிய அடிப்படைவாத பாசிஸ்ட் ரெசெப் தையிப் எர்டோகன் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, பாசிசத்திற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகளுக்கு சொந்த மாற்று ஜனநாயகத் திட்டத்தின் தேவையை உணர்த்துகிறது.

சென்ற மே 12, 18 தேதிகளில் இரண்டு சுற்றுகளில் நடைபெற்ற துருக்கி அதிபருக்கான தேர்தலில், இசுலாமியமதப் பிற்போக்குவாதி பாசிஸ்ட் ரெசெப் தையிப் எர்டோகன் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 52.18 சதவிகித வாக்குகளைப் பெற்றார். சென்ற அதிபர் தேர்தலில் அவர் பெற்ற வாக்கு விகிதத்திலிருந்து எந்த பெரிய வேறுபாடும் இல்லையெனினும், சென்ற முறை முதல் சுற்றிலேயே அறுதிப் பெரும்பான்மை பெற்று அதிபர் பதவியைக் கைப்பற்றிய எர்டோகன் இந்த முறை இரண்டாவது சுற்றில்தான் அறுதிப் பெரும்பான்மை பெறமுடிந்தது.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுவாத மக்கள் கட்சி சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 17.2 சதவிகிதம் கூடுதலாகப் பெற்றபோதும், இதன் வேட்பாளர் கெமால் கிலிடாரோக்லு 47.82 சதவிகித வாக்குகளைப் பெற்று தோல்வியுள்ளார்.

முதல் சுற்றில் எர்டோகன், கிலிடாரோக்லு, சினான் ஒகன், மொகர்ரம் இன்ஸ் ஆகிய நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்தனர். இவர்கள் முறையே, 49.52, 44.88, 5.17, 0.43 சதவிகித வாக்குகளைப் பெற்றனர்.

இரண்டாவது சுற்றில் வாக்காளர்கள் 3 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. வெளிநாட்டில் வாழும் துருக்கியர்கள் அதிக அளவில் வாக்களித்ததால் எர்டோகன் அருதிப் பெரும்பான்மை பெற்றார்.

துருக்கியின் தேர்தல் களம்

2020-இல் ஏற்பட்ட கொரானா பெருந்தொற்றை சரியாக கையாளாததால் 3 லட்சம் மக்கள் இறந்தனர். 2022-இல் இருந்து மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி, விலையேற்றத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் முக்கியமாக, இந்த ஆண்டு 2023 பிப்ரவரியில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் சுமார் 50 ஆயிரம் பேர் இறந்தனர். இது உண்மையில் ஒருலட்சத்து 50 ஆயிரம் பேராக இருக்கும் என்று அஞ்சப்பட்டது. குறிப்பாக, கார்ப்பரேட் வர்க்கங்களுக்கேற்ப கட்டுமனங்களில் செய்த முறைகேட்டினால்தான் இவ்வளவு மக்கள் இறப்பதற்கு காரணமானது என்பதால் ஆளும் எர்டோகன் மீது மக்கள் கடும் அதிருப்தில் இருந்தனர்.

தற்போதைய தேர்தலில் எர்டோகன் வெற்றி பெறவே முடியாது என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி மேலோங்கியிருந்த போதும், எர்டோகன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அரசியல் சாசனத்தை மீறுதல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தல், போலீசு ஆட்சியை நிறுவி அடக்குமுறைகளை அதிகரித்தல், அரசு வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டுதான் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார் எனினும், இது, எதிர்க்கட்சிகளின் ஓட்டாண்டித்தனத்தை பளிச்சென காட்டிவிட்டன.

பாசிசத்தின் இருபிரிவுகளுக்குடையிலான போட்டி

1999-இல் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்த பொருளாதார நெருக்கடி, 2000-01 ஆகிய ஆண்டுகளின் பொருளாதார வீழ்ச்சி, தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த குடியரசுவாத நீதிக் கட்சிகளின் ஊழல், முறைகேடுகள், அக்கட்சியில் ஏற்பட்ட பிளவு ஆகியவை காரணமாக குடியரசுவாத நீதிக் கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி மேலோங்கி இருந்தது.

2001-இல்தான் எர்டோகனின் இசுலாமிய அடிப்படைவாத பிற்போக்கு தன்மை கொண்ட, “நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி” தொடங்கப்பட்டது. கம்யூனிச எதிர்ப்பு, ஜனநாயக எதிர்ப்பை தனது இயல்பாகக் கொண்ட எர்டோகன் அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.

2002-இல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலின்போது, எர்டோகன் மதவாதத்தை தூண்டியதற்காக அரசுப் பதவிகளை வகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தார். இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 3 இலட்சம் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். இருப்பினும், 2002 தேர்தலில் எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி 550-க்கு 363 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. கிரிமினல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டு 2003-இல் எர்டோகன் பிரதமராக்கப்பட்டார்.

அக்கட்சி தொடங்கப்பட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கான ஆறு பொதுத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்து வந்துள்ளது.


படிக்க: பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!


2003-ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து எர்டோகன் மக்கள் அறிந்த தலைவராக உள்ளார். 2014-இல் முதல் முறையான அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 21 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தின் முக்கியமான பதவியில் இருக்கிறார். அந்தவகையில், எர்டோகன் துருக்கியின் மிகவும் ஆதிக்கம்பெற்ற ஒரே அரசியல் தலைவர்.

இவருக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசுவாத மக்கள் கட்சியானது, துருக்கியின் மாபெரும் ஜனநாயகவாதத் தலைவரான முஸ்தபா கெமால் அடாடர்க்-ஆல் தொடங்கப்பட்ட கட்சியாகும். அவரது இறப்புக்குப் பின்னர், அக்கட்சி தனது மதசார்ப்பற்ற, ஜனநாயகத் தன்மையைக் கைவிட்டது. இரண்டாம் உலகப் போரில் அச்சுநாடுகளுடன் சேர்ந்து கொண்டது. அதன் பின்னர், ‘பலகட்சி ஜனநாயகம்’ என்ற பெயரில் கேடுகெட்ட ஆட்சி முறை 1946-இல் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்து அமெரிக்கா மற்றும் இசுலாமிய மதவாத பிற்போக்குவாதிகளுக்கு அடிபணிந்து ‘சீர்த்திருத்தங்கள்’ என்ற பெயரில் அரசியல் சாசனத்தை பல்வேறு வகைகளில் திருத்தியது.

அன்றுமுதல் உட்கட்சிப் பூசல், ஆட்சிக் கவிழ்ப்பு, தொடர்ச்சியாக கட்சியில் பிளவுகள், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அதிகரித்தல், கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு சாதகமான முறையில் அரசியல் சட்டங்களைத் திருத்துதல் போன்றவை காரணமாக இசுலாமிய அடிப்படைவாதிகள் கை மேலோங்கியது மட்டுமின்றி, 1980-இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து அனைத்து கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1987-இல் கட்சிகளுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர், பல கட்சிகள் உருவாகின. குடியரசுவாத நீதிக் கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் அறுதிப் பெரும்பான்மை பெரும் நிலையை இழந்தது. இருப்பினும் மதசார்பின்மையை குடியரசுவாத நீதிக்கட்சி தொடர்ந்து பின்பற்றுவதாக அறிவித்தது.

உட்கட்சியில் ஏற்பட்ட குழப்பமும், பொருளாதார ரீதியாக கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு ஆற்றிய சேவையை கட்சியின் மதசார்பின்மையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைத்ததும் இசுலாமிய அடிப்படைவாதிகள், இந்த குடியரசுவாத நீதிக் கட்சிக்கு எதிராக தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு வழிவகை ஏற்படுத்தியது. இக்காலகட்டத்தில் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்கள், கம்யூனிச எதிர்ப்பு குழுக்கள் பலவும் பலமடைந்தன.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


மேலே குறிப்பிட்டது போல 1999-இல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், 2000-01 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கிராமப்புற மக்களிடம் நிலவும் மதவாத பிற்போக்குத்தனம் ஆகியவற்றைக் கைப்பற்றி, எர்டோகன் தலைமையிலான நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. துருக்கியை பிராந்திய வல்லரசாக்குவது, ஒட்டமான் பேரரசின் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவுவது என்ற தேசியவெறி, இசுலாமிய வெறியூட்டி ஆட்சியைத் தக்கவைத்து வருகிறார் எர்டோகன்.

அன்றிலிருந்து, பாசிசத்திற்கு எதிரான தனது அரசியல் கையாளாகாத் தனத்தை காட்டி வந்த குடியரசுவாத மக்கள் கட்சி, எர்டோகனின் பாசிசத்திற்கு மாறாக, வேறொரு பாசிசக் கொள்கையை ஆதரித்து வருகிறது. தனக்கு இருக்கும் மிதவாத ஜனநாயகப் போர்வையை அதற்கு சாதகமாக்கிக் கொள்கிறது. அந்தவகையில், அமெரிக்காவுக்கு பட்டவர்த்தனமான ஆதரவு, நெட்டோவுடன் கூட்டணி, ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களின் சுரண்டலுக்கு அடிபணிதல், தீவிர பாசிஸ்டுகளுக்கு ஆதரவு ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுகிறது. எர்டோகனுக்கு எதிராக இந்தக் கட்சியை போலி கம்யூனிஸ்டுகள், குர்திஸ் தேசிய இன இயக்கங்கள் எல்லாம் ஆதரிப்பதால் அவையும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்திருக்கின்றன.

இதுமட்டுமின்றி, குடியரசுவாத மக்கள் கட்சியில் சென்ற முறை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மொர்ரம் இன்ஸ், 2021-இல் இக்கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கினார். இந்த 2023 தேர்தலில் பல வண்ண போலி கம்யூனிஸ்டு கட்சிகள், பல துருக்கிய தேசியவாத கட்சிகள், பல சிறுபான்மை குர்து இனவாதக் கட்சிகள், பசுமைவாதக் கட்சிகள், பாரம்பரியவாதக் கட்சிகள், தொழிலாளர் கட்சிகள் என அனைவரின் ஆதரவோடு போட்டியிட்டும் குடியரசுவாத நீதிக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

துருக்கி மக்களின் தேவை எது?

துருக்கியின் மக்கள் அனைத்து வகையிலும் இசுலாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கின்றனர். எர்டோகனின் அகண்ட துருக்கிக் கொள்கையை எதிர்க்கின்றனர். சிரியா மீது போரும் வேண்டாம், சிரிய அகதிகளுக்கு ஆதரவு தரவும் வேண்டாம் என்பதுதான் மக்களின் நிலை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேட்டோ கூட்டமைப்பில் துருக்கி அங்கம்வகிப்பதை துருக்கி மக்கள் எதிர்க்கின்றனர். உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ நடத்தும் போரை துருக்கி மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், கிலிடாரோக்லு நேட்டோ ஆதரவு நிலைடுத்தார். நோட்டோவுடன் மேலும் தனது ஒருங்கிணைப்பை அதிகரிப்பதாக தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.

எர்டோகனின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக குடியரசுவாத நீதிக் கட்சி தொழிலாளர்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை. இவ்வாறு ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார் கிலிடாரோக்லு. எர்டோகன் இசுலாமிய அடிப்படைவாத பாசிஸ்ட் எனில், இவரை இசுலாமிய அடிப்படைவாத பாசிசக் கட்சிகள் “துரோகி” என்று தூற்றி வருகின்றனர்.

துருக்கியின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அகதிகள் பிரச்சினையாகும். சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் நாட்டின் மக்கள் துருக்கியில் குடிபெயர்ந்து வந்துள்ளனர். எர்டோகன் இவர்களுக்கு குடியுரிமை அளிப்பதாக தேர்தலில் வாக்குறுதியளித்தார்.


படிக்க: துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !


கிலிடாரோக்லு-வோ 10 லட்சக்கணக்கான சிரிய அகதிகளை நாடு கடத்துவதாக வாக்குறுதியளித்தார். மேலும், எல்லை மீறிய பயங்கரவாதிகளை ஒடுக்கப்போவதாகவும் உறுதியளித்தார். இதன் மூலம், எர்டோகனுக்கு எதிராக அதிருப்தியைக் கிளப்பும் தீவிர இசுலாமிய அடிப்படைவாத பாசிசக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டார்.

மொத்தத்தில், எர்டோகன் பிற்போக்கு பாசிஸ்ட் எனில், கிலிடாரோக்லு மிதவாத போர்வையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு பாசிச ஆதரவாளர். எர்டோகனின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் கிலிடாரோக்லுவை ஆதரிக்கின்றனர்.

மக்களோ சமூக மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால், கிலிடாரோக்லுவும் போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் எர்டோகன் எதிர்ப்பு என்ற போர்வையில் அவரைவிட கொடிய இசுலாமிய பாசிஸ்டுகளை வளர்த்துவிடும் கேடுகெட்ட வேலையைச் செய்து வருகிறார்.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது, அகதிகளுக்குரிய உரிமைகளை அங்கீகரிப்பது, சிறுபான்மை குர்து தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரிப்பது, அமெரிக்க-நேட்டோ ஆதரவை நிராகரிப்பது, சொந்தநாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, கார்ப்பரேட் வர்க்கங்கள் அதிகாரம் செலுத்தும் வகையிலான, பாசிசம் அரங்கேறுவதற்கு காரணமான அரசியல் சாசனத்தை, உழைக்கும் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் திருத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்று பாசிச எதிர்ப்பு ஜனநாயகத் திட்டத்தை முன்வைத்துப் போராட வேண்டியது புரட்சிகர சமூக மாற்றத்தை நேசிக்கின்ற, பாசிசத்தை எதிர்க்கின்ற கட்சிகள், அமைப்புகளின் இன்றைய அவசர அவசியமான கடமையாகும்.

தங்கம்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க