தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஒரே ஆயுதம் தி.மு.க. தான் என்று ஜனநாயக சக்திகள் பலரும் நம்பிக்கையோடு கூறுகிறார்கள். அந்த நம்பிக்கையை நாம் குற்றம் கூற வரவில்லை. வெறும் நம்பிக்கை மட்டும் பா.ஜ.க.யை வீழ்த்தி விடாதல்லவா?
ஆனால், பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதுதான் விவாதிக்க வேண்டிய விடயமாக உள்ளது.
அண்மையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில், “சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது” என்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது காவி கும்பலால் பேசுபொருளாக்கப்பட்டது. சங்கப்பரிவாரங்கள் உதயநிதி பேசியதைத் திரித்து வெறுப்பு அரசியல் செய்ய முயன்றனர். குறிப்பாக, “இந்துக்களை இனப்படுகொலை செய்வோம்” என்று உதயநிதி பேசியதாகத் திரித்து, சங்கிகள் வடமாநிலங்களில் பொய் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், உதயநிதி தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல், தான் சொன்னதில் தவறில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். இதன் காரணமாக, இந்திய அளவில் சனாதனம் விவாதப்பொருள் ஆனது. பெரியாரும், அம்பேத்கரும் சொன்ன கருத்துகளைப் பலரும் படிக்கத் தொடங்கினர்; தேசிய அளவில் ஊடகங்களில் பெரியார், அண்ணா, தி.மு.க.வின் வரலாறு, சமூக நீதி தொடர்பான கருத்துகள் பரப்பப்பட்டன. இவை ஒவ்வொன்றையும் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
ஆனால், இந்த விசயத்தில் தி.மு.க. உறுதியான நிலைப்பாட்டை எடுத்து உதயநிதியை ஆதரிக்கவில்லை. மாறாக, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “உதயநிதி கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும்” என்று கூறினார்.
படிக்க: விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? || திமுக அரசை சாடும் வெற்றிவேல்செழியன்
தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடக்கத்தில், “உதயநிதியின் கருத்து திரித்துப் பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்றார். ஆனால் ஓரிரு நாட்கள் கழித்து, “சி.ஏ.ஜி. அறிக்கை குறித்துப் பேச வேண்டிய நேரம், சனாதனம் குறித்த விவாதத்தில் நம்மை மடைமாற்றுகிறார்கள்” என்று நிகழ்ச்சிநிரலை மாற்ற முயன்றார். ஆ.ராசா தவிர வேறு எந்த தி.மு.க. தலைவரும் உதயநிதி கருத்தை ஆதரித்துப் பேசவில்லை.
அடுத்து, “நீட்” தேர்வு தொடர்பான விசயத்திலும் தி.மு.க.வின் நிலைப்பாடு அடையாளப் போராட்டங்கள் என்ற வரம்பைத் தாண்டிச் செல்லவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வால் மாணவர் ஜெகதீஸ்வரனும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து ஜெகதீஸ்வரனின் நண்பரும் மருத்துவ மாணவருமான ஃபயாஸ்தின் நீட் தேர்வைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க. என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி பேசியதும் ஊடகங்களில் பேசுபொருளானது. இந்த நெருக்கடியின் விளைவாக அந்த சமயத்தில், “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி” அடையாளப் போராட்டங்களை நடத்தியது, தி.மு.க.
எடப்பாடி ஆட்சியில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பி வைத்து, நீட்டுக்கு எதிராக குரல்கொடுப்பதுபோல பாசாங்கு செய்து வந்தது, அ.தி.மு.க. ஒன்றிய அரசோ, தமிழ்நாட்டின் சட்டமன்றத் தீர்மானத்தை ஒரு துரும்பாகக் கருதி ஒதுக்கிவிட்டது. ஆனால், “நீட்டை ரத்து செய்வோம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இருந்து தி.மு.க.வை நோக்கி கேள்விகள் எழுவதால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது, தி.மு.க.
தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த கோரிக்கை, நீட் தேர்வை ரத்து செய்வதாகும். அந்த கோரிக்கைக்காகத் தன்னளவில் போராட்டம் நடத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை நிர்பந்திக்கவோ, மாணவர்கள் போராடுவதை ஆதரிக்கவோ தி.மு.க. தயாராக இல்லை.
தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கும் பா.ஜ.க. அரசைப் பணிய வைக்க ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகச்சிறந்த சான்றாகும்; மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிராக நடந்த ஹரியானா-பஞ்சாப் விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் மற்றொரு சான்றாகும். ஆனால், பா.ஜ.க.விற்கு நெருக்கடி கொடுக்காமல் நீட்டிற்கு எதிராகப் போராடுவது போல நாடகமாடுகிறது தி.மு.க. மேலும், நீட் தீர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதைவிட, நீட்டுக்கு எதிரான மக்களின் உணர்வை அறுவடை செய்து கொள்ளும் தேர்தல் கணக்குகளை மனதில் வைத்தே தி.மு.க.வின் அடையாள எதிர்ப்புகளும் உள்ளன.
அடுத்து, நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசாங்கம் அக்டோபர் 2-ஆம் தேதி சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டது. இந்த விசயம் ஆளும் பா.ஜ.க. கும்பலுக்கும் பார்ப்பன சங்கப் பரிவார கும்பலுக்கும் நெருக்கடியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. “சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதி ரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்தும் செயல்” என பிரதமர் மோடியே திருவாய் மலர்ந்தார்.
பீகாரைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. பீகார் மாநில அரசாங்கம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின்னரும், “ஒன்றிய அரசுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை” என்று கூறி ஒன்றிய பா.ஜ.க. அரசை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்கிறார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின். மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்.
சாதிவாரி இட ஒதுக்கீட்டின் முக்கிய அம்சமான சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகநீதி வழங்குவதற்கு அடிப்படையானதாகும் என்பதுதான், சமூக நீதி பேசும் கட்சிகளின் நிலைப்பாடாகும். இதனை பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வதைவிடக் கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியுமா? தனது அதிகாரத்தில் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவதைவிடுத்து, அப்பட்டமாக சந்தர்ப்பவாத நிலையெடுத்து செயல்படுகிறது, தி.மு.க.
படிக்க: செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!
ஒன்றிய அரசை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி கேட்டதன் மூலம், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதில் ஆர்வமாக இருப்பது போலவும், பா.ஜ.க.விற்கு எதிராக கம்பு வீசுவதாகவும் காட்டிக்கொள்ள இந்த நாடகத்தை நடத்தி வருகிறது, தி.மு.க.
சமூகநீதி அரசியலின் முன்னோடியாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க.வின் நிலை இதுதான்.
தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஜவஹர் நேசன், கடந்த ஜூன் மாதத்தில் அக்குழுவிலிருந்து விலகினார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கை, அக்குழுவில் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களையும் புதிய கல்விக் கொள்கை குறித்த தி.மு.க. அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தியது.
தமிழ்நாட்டு மக்களின் உயிர்த் தியாகத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில், “சிறப்புச் சட்டம் இயற்றப்படும்” என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசாங்கம் தற்போது வரை நிறைவேற்றாமல் மௌனம் காத்து வருகிறது.
தி.மு.க.வின் இப்படிப்பட்ட செயல்பாடுகள், பா.ஜ.க. எதிர்ப்பு என்பதில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதப் போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பவாத நடவடிக்கையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவே செய்யும். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தவே செய்யும். இந்த வாய்ப்பை பா.ஜ.க. கும்பலும், தி.மு.க., பா.ஜ.க. இரண்டையும் எதிர்ப்பதாக சவடால் அடித்துத் திரியும், பா.ஜ.க.யின் பினாமிகளான எடப்பாடி, சீமான் கும்பல்களும்தான் அறுவடை செய்துகொள்ளும்.
பத்தாண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்கள், ஊழல், அராஜகம், அடக்குமுறைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான பா.ஜ.க.வின் செயல்பாடுகள் ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடம் தீராத மோடி எதிர்ப்பலையை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாகத்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.
தி.மு.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் எனக் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது சங்கப் பரிவார கும்பல். அதற்காக நாள்தோறும் அவதூறுகளையும், பொய்களையும் பரப்பி தி.மு.க.வையும் தி.மு.க. அரசாங்கத்தையும் தாக்கி வருகிறது. ஆனால், தனது ஆட்சிக்கு எந்தவித ‘கெட்ட’ப் பெயரும் வந்துவிடக் கூடாது என்று தற்காப்பு நிலையில் இருந்து கொண்டு பா.ஜ.க.வை சந்தர்ப்பவாதமாக அணுகுகிறது தி.மு.க.
“தி.மு.க.வை விமர்சித்தாலே பாசிசம் வந்துவிடும்” என்று தி.மு.க. ஆதரவு ஜனநாயக சக்திகள் கருதுவது தவறான விளைவுகளுக்கே வழிவகுக்கும். நாம் மக்கள் நலனில் ஊன்றி நின்று தி.மு.க.வின் ஒவ்வொரு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையும் உறுதியாக விமர்சிக்க வேண்டும். அதுதான் தி.மு.க.வை சரியான நிலைப்பாடு எடுப்பதை நோக்கி நிர்பந்தப்படுத்தும். கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் மற்றும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக, “12 மணிநேர வேலை” குறித்த முன்மொழிவை தி.மு.க. அரசாங்கம் திரும்பப்பெற்றுக் கொண்டது அதற்கு ஒரு சான்றாகும். தி.மு.க.வை நிபந்தனையற்ற முறையில் ஆதரிக்கும் ஜனநாயக சக்திகள் இது குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது.
இனியன்
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube