திருவண்ணாமலை சிப்காட்:
கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை ஒடுக்கும் திமுக அரசு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்கு 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதில், 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர மீதமுள்ள 2700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமான வளமான வேளாண் விளைநிலங்கள் ஆகும். விவசாய நிலங்களை ‘தரிசு நிலம்’ என்று கூறி மேல்மா, தேத்துறை, நர்மாபள்ளம், குரும்பூர், வட ஆளப்பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, அய்யவாடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களை முற்றிலுமாக தமிழ்நாடு அரசு கையகப்படுத்த உள்ளது.
படிக்க : உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!
இதை எதிர்த்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல், 125 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இப்போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
போராட்டத்தின் 125-ஆம் நாளான நவம்பர் 2 அன்று விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்குடன், டிராக்டரில் பேரணியாக செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீசு.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, போலீசு வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 பொய் வழக்குகள் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட போராட்டம் நடைபெறும் பந்தலில் தங்கியிருந்த 22 பேர் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடந்த நவம்பர் 15-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட 22 பேரில், போராட்டத்தின் முன்னணியாளர்கள் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மேல்மா சிப்காட்டை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது திமுக அரசு வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், வெளியூரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தது. அதை எதிர்த்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால், நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
படிக்க : காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை
கார்ப்பரேட் நலனுக்காக விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவி, சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கி வருவதன்மூலம் கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டிவருகிறது திமுக அரசு.
ஏற்கெனவே, மாங்கால் சிப்காட்டிற்கு எடுத்த நிலத்தில் பாதிக்கும் மேல் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் பல இடங்களில் சிப்காட்டிற்காக எடுக்கப்பட்ட நிலங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் சூழ்நிலையில் இப்படி விவசாயம் செய்யும் விளைநிலங்களை ‘தரிசு’ என்று பொய்க்கணக்கு காட்டி விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறித்து கார்ப்பரேட்களுக்கு வழங்க சிவப்புக் கம்பளம் விரித்து காத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
பதிவிடுவதற்கு முன்: திமுக அரசின் இந்நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்ததால், ஏழு விவசாயிகளில் அருள் ஆறுமுகம் என்பவரைத் தவிர்த்து மற்ற ஆறு பேரின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) உத்தரவிட்டுள்ளார். ஆனால், சிப்காட் திட்டத்திலிருந்து பின்வாங்குவதற்கான எந்தச் சுவடும் இல்லை
பொம்மி