உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!

எண்ணெய் எடுக்கும் குழந்தைகளை அங்கிருக்கும் போலீசு அடுத்து விரட்டியது. யோகியின் ‘உ.பி. மாடல்’, ‘கின்னஸ் சாதனை’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் பீற்றிக்கொள்ளும் உ.பி.யின் உண்மை நிலைமையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.

த்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22.23 லட்சம் விளக்குகளை ஏற்றி ‘கின்னஸ் சாதனை’ படைத்துள்ளதாக பீற்றி கொள்கிறது சங்கிக் கும்பல். ஆனால், அகல் விளக்கிலிருந்து எண்ணெய் எடுத்து வாழ்க்கை நடத்தும் அவல நிலையில்தான் உத்தர பிரதேசத்தின் உழைக்கும் மக்கள் உள்ளனர்.

14 ஆண்டுகள் வனவாசத்தை இராமன், சீதை, இலட்சுமணன் முடித்துக் கொண்டு அயோத்திக்கு திரும்பியதைக் கொண்டாடும் நிகழ்வாக தீப உற்சவ் எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதனை 2017-ஆம் ஆண்டு ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்டு, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

படிக்க : திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | தோழர் மருது

இந்த ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாள் அயோத்தி முழுவதும் 24 லட்சம் விளக்குகளை ஏற்ற சுமார் 25 ஆயிரம் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டனர். விளக்குகளின் எண்ணிக்கையை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதுபோன்று பல்வேறு ஏற்பாடுகளுக்கு பிறகு 22.23 லட்சம் விளக்குகளை ஏற்றி, கடந்தாண்டு 15.76 லட்சம் விளக்குகளை ஏற்றியதை முறியடித்து ‘கின்னஸ் சாதனை’ படைக்கப்பட்டுள்ளது.

இதனை சாதனையாக பீற்றிக் கொண்டிருக்கும்போதுதான் உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஃஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில், நிகழ்ச்சியில் ஏற்றப்பட்ட விளக்குகளிலிருந்த எண்ணையை, ஏழை குழந்தைகள் தங்களது டப்பாக்களில் எடுத்து செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. எண்ணெய் எடுக்கும் குழந்தைகளை அங்கிருக்கும் போலீசு அடுத்து விரட்டியது. யோகியின் ‘உ.பி. மாடல்’, ‘கின்னஸ் சாதனை’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் பீற்றிக்கொள்ளும் உ.பி.யின் உண்மை நிலைமையை -உழைக்கும் மக்களின் வாழ்நிலை வறுமை மிக்கதாக இருக்கிறது என்பதனை- இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.

இந்த வீடியோவை அகிலேஷ் யாதவ் பதிவிட்டு, “தெய்வீகத்தின் மத்தியில் ஏழ்மை. வறுமை ஒருவரை விளக்குகளில் எண்ணெய் எடுக்க வைக்கும் பொழுது கொண்டாட்டத்தின் ஒளி மங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

படிக்க : கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி

உலகப் பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் 111-வது இடத்தில் இந்தியா உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் நான்கு இடம் பின்தங்கி இருக்கிறது என்று செய்தி வெளியாகி இந்திய உழைக்கும் மக்களின் வறுமை நிலையை தோலுரித்து காட்டின. ஆனால், மக்களை தங்களின் எதார்த்த நிலைமையின் மீது கவனம் செலுத்த விடாமல் தங்களின் இந்துத்துவ புதைச்சேற்றுக்குள் மூழ்கடித்து கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பல். தற்போது நடக்கவிருக்கும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் கூட, “பாஜக வெற்றி பெற்றால் முதியோர், பெண்கள் குழந்தைகளை அயோத்திக்கு இலவசமாக அழைத்து சொல்வோம்” என்று அமித்ஷாவும் ராஜ்நாத் சிங்கும் கூறியது இதற்கொரு சான்று. வறுமையை போக்குவதும் இந்துத்துவ புதைசேற்றிலிருந்து மக்களை விடிவிப்பதும் பரந்துபட்ட மக்களின் எழுச்சியின் மூலம் மட்டுமே சாத்தியம்.

ஹைதர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க