திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்

அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தின் மீது நீதி விசாரணை கோரியும் அருங்குணம் பஞ்சமி நிலங்களை உண்மையான பயனாளிகள் பெயரில் வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவேற்றம் செய்யக் கோரியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அருங்குணம் பட்டியல் சமூக மக்களின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து குழு அமைத்து விசாரிக்குமாறு செய்யாறு  சார் ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த செய்தி அறிந்து அருங்குணம் கிராம மக்களை நேரில் சந்தித்தோம்.

விஷம் தெளித்து பயிர்களை அழித்த நிலங்களைப் பார்வையிட்டோம். இந்த கொடூர வன்மத்தின் பின்னே பட்டியல் சமூக மக்கள் முன்னேறி விடக் கூடாது, அவர்கள் கேள்வி கேட்கக் கூடாது என்ற ஆதிக்கச் சாதிவெறி அரசு இருப்பதை அறிந்து கொண்டோம். அரசு அதிகாரிகள் மற்றும் போலீசின் துணையோடு இந்த வன்முறை அரங்கேறி உள்ளதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அருங்குணம் பட்டியல் சமூக மக்களின் தற்போதைய இளம் தலைமுறையினர் படித்து முன்னேறி வருகின்றனர். காலங்காலமாகத் திணிக்கப்பட்ட அடிமைத்தனத்தை இனிமேலும் பொறுத்துக்கொண்டு வாழ முடியாது என உறுதியாக நிற்கின்றனர்.

இந்த லட்சிய பாதையின் வளர்ச்சியில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு ஒற்றுமையாக முன்னெடுத்த போராட்டம் தான் அருங்குணம் பஞ்சமி நில அமைப்பு இயக்கம்.

இந்த போராட்ட இயக்கத்திற்கு வந்தவாசி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோள் கொடுத்து உதவியது. அருங்குணம் கிராமத்தில் 100 ஏக்கர்  பஞ்சமி நிலங்கள் முறைகேடான வழிகளில் கைமாற்றப்பட்டு பட்டியல் சமூக மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதை இந்த இயக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.


படிக்க: பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு


நில மீட்புப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தரப்பு சமரச உடன்படிக்கையை அருங்குணம் பட்டியல் சமூக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

கடந்த ஆண்டு இறுதியில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் சாராம்சம்: அருங்குணம் பஞ்சமி நிலங்கள் முறைகேடான வழிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உண்மையான பயனாளிகள் பெயரில் வருவாய்த் துறை ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதாகும்.

அரசு தரப்பில் அளிக்கப்பட்ட முடிவின்படி பட்டியல் சமூக மக்கள் தங்களின் பெயரில் உள்ள நிலத்தில் பயிரிட்டனர். அவ்வாறு பயிரிடப்பட்ட 7 ஏக்கர்  பயிர்களான உளுந்து மற்றும் எள் செடிகள் மீதுதான் ட்ரோன் மூலம் விஷம் தெளித்து அழித்த வன்மம் அரங்கேறி உள்ளது.

இச்சம்பவம் குறித்து தெள்ளார் போலீசு நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. கிராமத்தின் வி.ஏ.ஓ தரப்பில் அடையாளம் தெரியாத நபர்கள் விஷம் தெளித்துள்ளார்கள் என்று போலீசு நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதாலேயே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். நிலத்தை முறைகேடாக அபகரித்தவருக்கு ஆதரவாக போலீசும் வருவாய்த் துறையும் துணை போனது தற்போது அம்பலமாகி உள்ளது.

தற்போது வருவாய்த் துறை ஆவணங்களில் அருங்குணம் பஞ்சமி நிலப் பகுதி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் அரசு புறம்போக்கு நிலம் என மாற்றி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அருங்குணம் பட்டியல் சமூக மக்களின் போராட்டம் பஞ்சமி நிலத்தை மீட்கும். அதற்கு நாம் தோள் கொடுப்போம்.


தகவல்
மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் பகுதி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



1 மறுமொழி

  1. சாதி வெறி பிடித்தவர்களிடம் கேழுங்கள் உன்னை உயர்ந்த சாதிஎன்று யார் கூறினார்கள் இன்றய காலத்தில் விவசாயம் செய்பவர்கள் அனைவரும் விவசாயத்தை குல தொழிலாக செய்யும் அரசால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டோர் என அழைக்கபடுபவர்களே.உண்மையில் இவர்கள் உயர்ந்தவர்களே. நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க