திமுக அரசால் கட்டப்பட்ட பெண்ணையாற்றுப் பாலம் மூன்றே மாதத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாக தமிழ்நாடு அரசிற்குக் கோரிக்கை வைத்து வந்தனர்.
அக்கோரிக்கையின்படி கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் 16 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.15.90 கோடி செலவில் உயர்மட்டப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி இப்பாலத்தைத் திறந்து வைத்தார்.
கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் துயரைச் சந்தித்தனர்.
மேலும் சாத்தனூர்ர் அணை நிரம்பியதால் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் தீவுகள் போல மாறியதோடு மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஆடு, மாடுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே துயரிலிருந்த மக்களுக்கு மூன்று மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட உயர்மட்டப்பாலம் முற்றிலுமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தின் உறுதித்தன்மை குறித்தும், பாலம் கட்டப்பட்ட முறை குறித்தும் கிராம மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
படிக்க: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்: எதிர்பாராதது என்பது அயோக்கியத்தனம்
திமுக அரசானது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் செ.தேவராசிடம் இருந்து மழுப்பலாக ஒரு அறிக்கை மட்டும் வெளியானது. அதில் “நீரியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர் வெளியேற்றம் என்பது 54,417 கன அடியாகும். ஃபெஞ்சல் புயல் காரணமாக, சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், பாலத்தின் மேற்பரப்பில் 4 மீ., உயரத்தில் தண்ணீர் சென்றுள்ளது. நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால், பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இது ஒரு சப்பைக்கட்டான பதில் என்றாலும் இந்த அறிக்கை திமுக அரசின் மற்றொரு பொய்யை அம்பலப்படுத்திவிட்டது. நீர்வளத் துறை சாத்தனூர் அணையிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாகக் கூறியிருந்தது. ஆனால், ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டதற்கு, 2 லட்சம் கன அடிக்குக் கூடுதலாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டதே காரணம் என்று நெடுஞ்சாலைத் துறை தற்போது தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அணையிலிருந்து 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. எனவே, நான்கு மாவட்டங்களைத் தீவுகளாக மாற்றிய இழிபுகழ் திமுக அரசையே சாரும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram