ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், டிசம்பர் 1-ஆம் தேதி கரையைக் கடந்தாலும், அதன் பின்னரும் தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் வடமேற்கு உள்மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழையானது தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி – ஊத்தங்கரை பகுதியில் இதுவரை கண்டிராத அளவிற்கு 10 மணி நேரத்திற்குள் சுமார் 50 செ.மீ. மழை பெய்ததன் விளைவாக பெருவெள்ளம், ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையமே அடித்துச் செல்லப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக, சாத்தனூர் அணையிலிருந்து 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதை அடுத்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக, தற்போதுவரை தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள கோர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்குகிறது. திடீரென வெள்ள நீர் திறந்துவிடப்பட்டதால், நான்கு மாவட்டங்களில் ஆங்காங்கே மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர்; சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோர சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. புதுச்சேரியிலும் வெள்ளப் பாதிப்புகள் மிக மோசமான அளவில் கிராமங்களைப் பாதித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் வெள்ளப் பாதிப்புகளை “எதிர்பாராதது” என்று தமிழ்நாடு அரசு குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, அனைத்து மாநில அரசுகளும் புயல் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம், இவ்வாறே குறிப்பிடுகின்றன. இது, அயோக்கியத்தனமாகும். மக்கள் விரோத மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடாகும்.

புவி வெப்பமயமாதலின் விளைவாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, புயல்களின் தன்மை மாறியுள்ளது; மழை பொழியும் அளவு மிகவும் அதிகரித்துள்ளது; மூன்று நாட்களில் பொழிய வேண்டிய மழை மூன்று மணி நேரத்தில் பொழிகிறது; இவ்வாறு, புயல், வெள்ளம், காற்று மாசு, காட்டுத்தீ, வெப்ப அலை போன்ற அனைத்தின் தன்மைகளையும் ஆய்வு செய்யும் சுற்றுச்சூழலியலாளர்கள், இவற்றை “காலநிலை நெருக்கடி”, “காலநிலை அவசரநிலை” என்று அழைக்கின்றனர்.

இருப்பினும், இந்திய அரசோ, மாநில அரசுகளோ இந்த காலநிலை நெருக்கடியைக் கணக்கில் கொண்டு புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில்லை; அதற்காக எந்தக் கொள்கைகளையும் இதுவரை வகுத்துக் கொள்ளவில்லை.

இதனால், கேரளா வயநாடு நிலச்சரிவு, மும்பை மழை வெள்ளப் பாதிப்புகள் என எந்த இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும் இந்திய அரசும் மாநில அரசுகளும் எதையும் கற்றுக்கொள்வதில்லை. இப்போது, ஃபெஞ்சல் புயலிலிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதையே ஆட்சியாளர்களின் அறிவிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் ‘திராவிட மாடல்’ அரசைப் பொறுத்தவரை, வெள்ள நீர் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதையே வரலாற்றுச் சாதனையைப் போல பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், வெள்ள நீர் வடிகாலை மேம்படுத்தும் பணியை முழுமையாக செய்யவில்லை என்பதைத்தான், சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் காட்டுகின்றன.

அதேபோல, புயல் வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்ததைத் தாண்டி, ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இயல்புக்கு மாறானதாக அனைத்து புயல் மழை வெள்ளங்களும் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

சாத்தனூர் அணையிலிருந்து முன்னெச்சரிக்கையின்றி இரண்டு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வழக்கமாக எதிர்ப்பார்க்கும் வகையில், புயலின் வேகம் இல்லை, நின்று நிலைத்து வலுவாக மழை பெய்து வருகிறது என்பதை ஓரிரு நாட்களிலேயே உணர முடிந்தது; இந்நிலையில், முன்கூட்டியே ஏரிகள், ஆற்றோரங்களில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியிருக்க முடியும். இதுபோன்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் எதுவும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை.

ஆனால், வெள்ளப் பாதிப்புகள் வந்த பின்னர், பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவது, நிவாரணங்களை அறிவிப்பது என்பதை மட்டுமே ஆட்சியாளர்கள் செய்துவருகின்றனர். அரசு அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட மக்களை நிர்கதியாக கைவிட்டுவிட்டு, ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த விசயத்தில், எந்த மாநில அரசுகளும் விதிவிலக்கல்ல. தற்போது தமிழ்நாடு தி.மு.க. அரசும் அவ்வாறே நடந்து கொண்டிருக்கிறது.

பாசிச மோடி அரசோ, மாநில அரசுகள் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதில்லை; வெள்ளப் பாதிப்புகளுக்கு பேரிடர் நிவாரண நிதி அளிப்பதில்லை; அதுவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் தென்மாநிலங்களையும் திட்டமிட்டே வஞ்சித்து வருகிறது.

இத்துடன், தமிழ்நாடு போன்ற தொழில்வளர்ச்சிப் பெற்ற மாநிலங்களில் இருந்து அதிகபடியான ஜி.எஸ்.டி. வரியைப் பெற்றுக்கொண்டு, அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கிறது. மாறாக, இந்த மாநில அரசுகளுக்கு மத்திய தொகுப்பு நிதியில் இருந்து அற்பத் தொகையையே ஒதுக்குகிறது. இவ்வாறு, இந்த மாநிலங்களை இந்திய அரசு அப்பட்டமாக கொள்ளையடிப்பதால், இந்த மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன. இதுவும் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு தடையாக அமைகின்றன.

ஆகையால், மக்கள்நலனை முற்றாகப் புறக்கணிக்கின்ற, மக்களைக் கொள்ளையடிப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல் இருக்கும் வரை மக்கள் உரிமைகளை நிலைநாட்ட முடியாது. அக்கும்பலை விரட்டியடிப்பது உழைக்கும் மக்கள் முன்னே உள்ள முதன்மையான கடமையாகும்.

மேலும், பாசிச பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் அதற்கெதிரான காங்கிரசு-தி.மு.க-வின் இந்தியா கூட்டணி கட்சிகளும் மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. இதனால், காலநிலை நெருக்கடி தீவிரமடைவது மட்டுமின்றி, அதன் பாதிப்புகளையும் மக்களே சுமக்க வேண்டியதாகிறது.

ஆகவே, மக்கள் விரோத, சுற்றுச்சூழலை அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்கைகளை கைவிடுவது; காலநிலை மாற்றத்தால் தீவிரமாகும் இயற்கை பேரழிவுகளிலிருந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் வாழ்விடங்களை மாற்றியமைப்பது; பேரிடர் உணர்திறன் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு மாற்றுவது போன்ற சூழலியல் நெருக்கடியில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மாற்றுக் கொள்கைகள் இன்று அவசியமானதாக உள்ளது. இந்தக் கொள்கையை முன்வைத்து, இவற்றை நடைமுறைப்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகளை நிர்பந்தித்து, மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதே இதுபோன்ற பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தீர்வாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க