பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!

தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா - கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது துருக்கி!

0

னவரி 21 அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கிக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தில் இஸ்லாமிய மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் குர்ஆன்-ஐ அதிதீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் (Stram Kurs) தலைவரான ராஸ்மஸ் பலுதன் (Rasmus Paludan) எரித்தார். இந்த சம்பவம் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வீடனை துருக்கி கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு “கேவலமான செயல்” என்றும் விமர்சித்துள்ளது.

மேலும் ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சரான பால் ஜான்சன், தான் மேற்கொள்ள இருந்த துருக்கி பயணத்தை இரத்து செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறியுள்ளது. ஸ்வீடன் அரசை கண்டித்து துருக்கியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டணியில் இணைவதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஸ்வீடன் விண்ணப்பித்தது (ஃபின்லாந்தும் விண்ணப்பித்துள்ளது). நேட்டோ கூட்டணியில் உள்ள 30 உறுப்பு நாடுகளும் அங்கீகரித்தால் மட்டுமே புதிதாக ஒரு நாடு அதில் இணைய முடியும். ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து இணைவதை துருக்கி மற்றும் ஹங்கேரி நாட்டு நாடாளுமன்றங்கள் அங்கீகரிக்கவில்லை. ஹங்கேரி வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபின்லாந்தை கனிவாக அணுகும் துருக்கி, ஸ்வீடன் இணைவதை மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

துருக்கியின் ஆட்சேபனையை எதிர்த்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவரான ராஸ்மஸ் பலுதன் குர்ஆன் பிரதியை எரித்தார். இதற்கு முன்னதாக, ஒரு போராட்டத்தில் துருக்கிய அதிபர் ரிசெப் தையிப் எர்துவான்-இன் (Recep Tayyip Erdoğan) உருவபொம்மை தலைகீழாக கம்பத்தில் தொங்கவிடப்பட்டது.


படிக்க: துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘


“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம் விரோத செயல்களை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பும் (Organisation of Islamic Cooperation), பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்துள்ளன.

துருக்கி அரசிற்கு எதிராக ஆயுதமேந்திய குர்திஷ் குழுக்கள் போராடி வருகின்றன. அதிலும் குறிப்பாக, 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆயுதமேந்தி போராடி வருகிறது குர்திஷ் தொழிலாளர் கட்சி (Kurdistan Workers Party PKK). பி.கே.கே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, துருக்கி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) சில உறுப்பினர்களுக்கும், 2016-ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட சிலருக்கும் ஸ்வீடன் புகலிடம் அளித்துள்ளதாகவும், அவர்களை துருக்கிக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் துருக்கி அரசு ஸ்வீடனிடம் கோரியுள்ளது; 120 பேரின் பெயர் பட்டியலை ஸ்வீடனிடம் கொடுத்திருக்கிறது துருக்கி.

மேலும், வருகின்ற மே மாதம் துருக்கியில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஸ்வீடனை எதிர்ப்பதன் மூலம் தேசவெறியை கிளப்பி வாக்குகளை அறுவடை செய்ய முயற்சி செய்கிறார் துருக்கி அதிபர் எர்துவான். ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை மத்திய ஆசியாவின் பிராந்திய வல்லரசான துருக்கி எதிர்ப்பதற்கு இவை மட்டும் காரணமல்ல.


படிக்க: துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !


2014-ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனின் பகுதியான கிரிமியாவை (Crimea) இணைத்துக் கொண்ட பின்பு, உக்ரைன் தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்திக் கொள்ள துருக்கி அதீத ஒத்துழைப்பு வழங்கிவருகிறது; நவீன ஆளில்லா விமானங்களை விற்பனை செய்யவும் உக்ரைனுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டது. அதேவேளையில், மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்தது போன்றதான பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ உறுப்பினரான துருக்கி மறுத்துவிட்டது.

ரஷ்யாவின் இயற்கை எரிவாயு உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. அதை மாற்றுப்பாதையில் துருக்கி வழியாகக் கொண்டு செல்லும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை (TurkStream pipeline project), உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளின் எதிர்ப்பையும் கடந்து, ரஷ்யாவுடன் துருக்கி மேற்கொண்டது. மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டில் அமெரிக்க எதிர்ப்பையும் கடந்து, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்குவதற்கே அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நேட்டோ உறுப்பினரான துருக்கி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கியுள்ளது.

நேட்டோ உறுப்பினராக இருப்பதன் மூலம் மேற்குலக நாடுகளின் கூட்டாளியாக விளங்கும் அதே வேளையில் ரஷ்யாவுடனான தனது உறவையும் பேணிக் கொள்கிறது துருக்கி. தற்போது ஸ்வீடனின் நேட்டோ இணைவை எதிர்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகளிடம் பேரம்பேசி மேலும் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு மத்திய ஆசியா – கருங்கடல் பகுதியில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனிக்கிறது.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க