ந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மட்டும் தோற்றுப்போகவில்லை. கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரத் தாக்குதல்களும் மற்ற பிற அடக்குமுறைகளும் அவர்களை மோடிக்கு எதிராக வாக்களிக்க வைக்கும் என்றும் மக்கள் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பார்கள் என்றும் ஜனநாயக சக்திகள் பலரும் கொண்டிருந்த எதிர்பார்ப்பும்தான் தோற்றுப்போனது.

இந்தத் தேர்தலில் மோடியின் பிரதாபங்களைக் குறித்துப் பேசுவது மட்டுமே பிரச்சாரம் என்றவாறு அமைந்திருந்தது பா.ஜ.க.-வின் தேர்தல் பிரச்சாரம். இதன் காரணமாக விவசாய நசிவு மட்டுமல்ல, இந்திய மக்கள் கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்த வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டன

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்பொழுது, மந்த்சௌர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மீதுதான் பா.ஜ.க. அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால், இத்தேர்தலில் மந்த்சௌர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுதிர் குப்தா காங்கிரசைத் தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அம்மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்த ஜபல்பூர், சாகர், ரத்லம் தொகுதிகளையும் பா.ஜ.க.-தான் கைப்பற்றியிருக்கிறது.

மகாராஷ்டிராவின் திந்தோரி தொகுதியில் இருந்துதான் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த விவசாயிகள், பழங்குடியினரின் மும்பய்ப் பேரணி தொடங்கியது. எனினும், இத்தொகுதியிலும் பா.ஜ.க.தான் வெற்றி பெற்றிருக்கிறது.

இத்தொகுதிகள் மட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டம் நடந்த இராசஸ்தானின் கோட்டா, புந்தி, ஜலவார் தொகுதிகளிலும்; மகாராஷ்டிராவின் வார்தா, கோந்தியா, அகோலா தொகுதிகளிலும், கரும்பு விவசாயிகள் ஆதித்ய நாத் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய உ.பி.யின் கைரானா தொகுதியிலும் பா.ஜ.க.தான் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த விவசாயிகளுள் 52 சதவீதத்தினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் 44 சதவீத விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த விவசாயிகளுள் 34 சதவீதத்தினரும், பழங்குடியின விவசாயிகளுள் 41 சதவீதத்தினரும் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக இந்து குழுமம் – லோக் நிதி இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. (இந்து, மே 28, பக்.9)

நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் பிரச்சினையைக் காது கொடுத்துக்கூடக் கேட்டதில்லை. டெல்லியில் அரை நிர்வாணக் கோலத்தில் போராடிய தமிழக விவசாயிகளைச் சந்திக்க மறுத்த மோடி, நடிகை பிரியங்கா சோப்ராவைச் சந்தித்து அளவளாவியது நாடெங்கும் கடும் கண்டனத்திற்குள்ளானது. எனினும், சராசரியாக 40 சதவீத விவசாயிகள் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்தற்குக் காரணம், தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ரூ.6,000 விவசாய நிதியுதவி, பாலகோட் தாக்குதல் குறித்த பா.ஜ.க.வின் பிரச்சாரம், மோடி மீதான தனிப்பட்ட ஈர்ப்பு, மாநில அரசுகளின் மீதான அதிருப்தி உள்ளிட்டுப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

மேலும், கடந்த மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச எரிவாயு அடுப்புத் திட்டம், கிராமப்புற மின் இணைப்புத் திட்டம், கிராமப்புறங்களில் கழிவறைகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டம் ஆகியவை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு கிராமப்புற ஏழைகள் மத்தியில் மோடிக்கு ஆதரவான மனோநிலையை உருவாக்கியிருப்பதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படிக்க :
♦ சத்தீஸ்கர் : சேமிப்புக் கிடங்குகளான ஸ்வச் பாரத் கழிப்பறைகள் !
♦ தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

கடந்த ஐந்தாண்டு கால மோடியின் ஆட்சியில் 20,000 கிராமங்கள்தான் மின்மயமாக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆட்சிகளில் 6.3 இலட்சம் கிராமங்கள் வரை மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், பா.ஜ.க.வோ, மோடியின் ஆட்சியில்தான் இந்தியக் கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டதாக அண்டப் புளுகைப் பிரச்சாரம் செய்தது.

இலவச எரிவாயுத் திட்டம் என்பது உண்மையில் இலவசமே கிடையாது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மைய அரசு மானியம் அளிப்பதில்லை. கடன்தான் அளிக்கிறது. இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழைக் குடும்பப் பெண்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்பிவிட்டனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

மீண்டும் விறகடுப்புக்கே திரும்பிச் செல்லும் உத்திரப்பிரதேச பெண்கள் (மாதிரிப் படம்)

பாலகோட் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் தோல்வியடைந்ததை  சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தும், “அது யாருமே செய்யாத சாதனை” எனப் பீற்றிக் கொண்டார், மோடி.

மோடி உறுதியானவர், பாலகோட்டில் “எதிரியின் வீடு புகுந்து” அடித்தவர், அவர் பிரதமரான பின்னால்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஒரு கவுரவம் வந்திருக்கிறது, அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் யாரும் எதிர்க்கட்சிகளில் இல்லை என்ற கருத்து இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு விட்டது.

இப்பிரச்சாரத்திற்கு மட்டும் ஏறத்தாழ 5,600 கோடி ரூபாய் அரசுப் பணம் செலவிடப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சசிதரூர். மோடி நிறைவேற்றாத வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டினாலும், அவற்றை நிறைவேற்றக் கூடியவர் மோடிதான் என்று பலர் கூறியிருக்கின்றனர்.

தேர்தல் பரப்புரையைப் பொருத்தவரை, 2014-இல் மோடி அளித்த வாக்குறுதிகளான 15 இலட்சம் ரூபாய், 2 கோடிப் பேருக்கு வேலை, விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை ஆகியவற்றில் ஒன்றைக்கூட மோடி நிறைவேற்றவில்லை என்பதையும்; ரஃபேல் ஊழலையும் அம்பலப்படுத்தி “சவுக்கிதார் சோர் ஹை” என்று மேடைதோறும் பிரச்சாரம் செய்தார் ராகுல் காந்தி.

ராகுல் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் மோடி பதிலளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, 2014- முழங்கிய விகாஸ் (முன்னேற்றம்) என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லை. மாறாக, புல்வாமா தாக்குதலை வைத்து தேசவெறி, மதவெறியைத் தூண்டினார். “மோடி எதிர்ப்பு ஒன்றுதான் எதிர்க்கட்சிகள் அனைவரின் கொள்கை” என்றார். “அனைவரும் ஊழல் கட்சிகள், ராகுல் ராஜா வீட்டு வாரிசு, நான் கீழிருந்து உழைத்து முன்னேறிய செயல்வீரன்” என்று தன்னைக் காட்டிக் கொண்டார்.

எதிர்க்கட்சிகளைப் பற்றிய நம்பிக்கையோ, மதிப்போ மக்களுக்கு இல்லை என்ற எதிர்மறைக் காரணமும் மோடிக்குச் சாதக மாகியிருக்கிறது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை தி.மு.க.வுக்குச் சாதகமாக அமைந்தது. வட மாநிலங்களிலோ, எதிர்க்கட்சிகள் மீதான இந்த அவநம்பிக்கை பா.ஜ.க வுக்குச் சாதகமான வாக்குகளாக மாறியிருக்கிறது.

அம்பானி, அதானிகளின் எடுபிடியாகச் செயல்பட்டு வரும் மோடி, தன்னை ஏழை, நடுத்தர மக்களின் பிரதிநிதியாகச் சித்தரித்துக் கொண்டதை நம்பும் அளவுக்கு அரசியல் பாமரத்தனம் மக்களைப் பீடித்திருந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மக்கள் மந்த புத்தி உள்ளவர்களாக, பகுத்தறிந்து பார்க்கும் திறன் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் பாசிஸ்டுகள் விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி, மக்களை அறிவில்லாதவர்களாக மாற்றுவதற்கென்றே அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். அதற்கான நிறுவனங்களையும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, “முன்னேற”த் துடிக்கும் “இந்து” இளைஞர்களிடம் மோடி பற்றிய பிரமை கடவுள் நம்பிக்கையைவிட மேலோங்கி இருப்பதாகத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல் பாமரத்தனம்தான் மோடி ஆட்சியின் தீமைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சாதி, மத, தேசியப் பெருமிதத்தின் அடிப்படையிலோ அல்லது வெற்று நம்பிக்கையின் அடிப்படையிலோ மோடிக்கு வாக்களிக்கும் மனோநிலையைப் பெரும்பாலான வாக்காளர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பாமரத்தனம்தான் மோடி ஆட்சியின் அலங்கோலங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, அவரைச் சகலகலா வல்லவனாகப் பார்க்கும் அறியாமையின் அடிப்படையாகவும்  இருக்கிறது.

அன்பு

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

4 மறுமொழிகள்

  1. நீங்கள் தமிழ்நாட்டுப் பாமரன் தானே? அப்படித்தான் இருக்கும் உங்கள் கருத்தும். ஏன் இவ்வளவு அவசரம்? இன்னும் 5 வருடங்கள் உள்ளனவே.

  2. கட்டுரை ஆரம்பித்த போது இருந்த நேர்மை பின்பு இல்லை வெறும் குறை சொல்வதாகவே இருக்கும் இந்த கட்டுரை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை இதன் பின்னே இருக்கும் கருத்து என்னவெனில் மோடி எதிர்ப்பு மட்டுமே இது மறுபடியும் அவருக்குத்தான் வெற்றியை கொடுக்குமே தவிர நீங்கள் தோல்வியடைவது உறுதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க