நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த 2014-ம் ஆண்டைவிட அதிகமான ஓட்டுக்கள் பெற்றதோடு சுமார் 300 இடங்களையும் பெற்றிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பிரதமர் நரேந்திர மோடி முழுத் திருப்தியடைவதற்கான அனைத்து நியாயங்களும் இந்த தேர்தல் முடிவுகளில் உள்ளன.
இத்தேர்தல் முடிவுகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது குறித்து மற்ற அனைவரையும்விட மோடிக்கு நன்றாகத் தெரியும். கடந்த தேர்தல் பரப்புரையின் போது தாம் அளித்த வளர்ச்சி குறித்த வாக்குறுதிகள் குறித்து தனது தற்போதைய பரப்புரையில் பேசுவதை மிகக் கவனமாகத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக இந்துக்களின் மனதில் முசுலீம்களைப் பற்றிய பயத்தை விதைப்பது, பயங்கரவாதத்தை வீழ்த்தக் கூடிய தகுதி கொண்ட ஒரே தலைவனாகத் தம்மையே விளம்பரப்படுத்திக் கொள்வது என்ற வகையிலேயே அவரது பரப்புரை அமைந்தது.
மேலும், புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் பலியான துணை இராணுவப் படையினரை தனது தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தி அவர்கள் பெயரில் வாக்குகளைச் சேகரிக்கும் அளவிற்குத் தரமிறங்கினார். இந்த இழிவான தந்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்குத் தெரியவில்லை. இது பாஜகவுக்கு கை கொடுத்தது.
வார்தா-வில், மோடி நேரடியாக மதத்தின் அடிப்படையில் இந்து வாக்காளர்களிடமிருந்து வாக்குச் சேகரித்தார். குறிப்பாக மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரை பயங்கரவாதக் குற்றங்களுக்காக விசாரித்ததன் மூலம் இந்துக்களின் நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறி வாக்கு சேகரித்தார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை, “சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியிலிருந்து போட்டியிடுகிறார்” என்று கூறி ஏளனம் செய்தார் மோடி. முசுலீம்கள் இந்தியாவின் சரிசமமான குடிமக்கள் இல்லை என்பதாக சித்தரித்தார்.
மோடியின் இத்தகைய முனையாக்கம் செய்யப்பட்ட அறிக்கைகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காட்டப்பட்டன. அவை பாஜக-வின் பிரச்சார இயந்திரத்தால் நாடு முழுவதும் பரப்பப்பட்டது, அந்த நஞ்சு பரவலாகவும், விரிவாகவும் மக்களுக்குச் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும், வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமை வழங்குவது குறித்த பாஜக-வின் பரப்புரைக்கு இது வலு சேர்க்க உதவியது.
படிக்க:
♦ 4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
♦ மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !
இந்தியாவின் தேர்தல் பரப்புரை சட்டங்களை பகிரங்கமாக மீறும் இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து மோடியைத் தடுப்பது குறித்தோ, கண்டிப்பது குறித்தோ தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது. இது இவ்வாறிருக்க, மோடியும் அமித்ஷாவும் குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யாசிங்கை போபாலில் வேட்பாளராக நிறுத்துமளவுக்குச் சென்றனர். அவரை வேட்பாளராக்கியது, இந்துத்துவ ஆதிக்கத்தை மட்டும் குறியீடாகக் காட்டவில்லை, கூடுதலாக முசுலீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் குறியீடாகக் காட்டியது.
(பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட) மூத்த போலீசு அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் படுகொலையை, போபால் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பின்னர் பிரக்யாசிங் ஆதரித்தார். ஏனெனில் கார்கரேதான் முசுலீம்களைக் கொல்ல வெடிகுண்டு வைத்த வழக்கில் பிரக்யாசிங்கைக் கைது செய்தவர். அடுத்ததாக காந்தி படுகொலையை ஆதரித்து இவர் விட்ட அறிக்கை, மோடியையே மிரளச் செய்தது. மோடி பிரக்யாசிங்கிடமிருந்து தன்னை விலக்கிக் காட்டிக்கொண்டார்.
அப்போதும்கூட கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியலின் மீதான விமர்சனத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார் மோடி. பிரக்யா சிங்கைப் போல மோடிக்கும் காந்திக்காகவோ அவரது கொள்கைகளுக்காகவோ ஒதுக்குவதற்கு நேரம் கிடையாது. ஆனால் காந்தியை களமிறக்கச் சாத்தியமான இடங்களில் அவரைப் பயன்படுத்துவது மற்றும் காந்தி கொலையை நியாயப்படுத்துவதை தவிர்ப்பதையும் தனது நடைமுறைத் தந்திரமாகக் கொண்டுள்ளார் மோடி.
மோடி விரும்புவது போல, பாஜக-வின் இந்த தேர்தல் வெற்றியை பாரதத்தின் வெற்றி என்று யாராவது அழைக்க முடியுமா ? அப்படி அழைப்பது போபாலில் பிரக்யாசிங் தாக்கூரின் வெற்றியை இந்தியாவின் வெற்றி என்று ஏற்றுக் கொள்வது போல் ஆகிவிடும் அல்லவா ? மோடி தேர்தலுக்கு முன்னரே பிரக்யாசிங்கிடமிருந்து விலகியிருந்ததை விட இனி இன்னும் அதிகமாக விலகி இருப்பார் என்று அனுமானித்துக் கூறுகின்றனர்.
எனினும் அதனால் ஒருபலனும் இல்லை. குஜராத்தில் பிரவின் தொகாடியா ஒதுக்கப்பட்டதைப் போல பிரக்யாசிங் ஒதுக்கி வைக்கப்படலாம் அல்லது அவர் ஒரு அமைச்சராகக் கூட நியமிக்கப்படலாம். மோடியின் நோக்கம், இந்த நாட்டின் இரத்த ஓட்டத்திற்குள் ஒரு நச்சுக் கிருமியைச் செலுத்துவதுதான். அந்த வேலை நிறைவேறிய பின்னர், ஒவ்வொரு நோய் பரப்பிகளின் தலையெழுத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கவையல்ல..
மோடியின் கண்கவர் வெற்றியின் மூன்று பிற அம்சங்கள் குறித்து நாம் கவலை கொள்ளவேண்டும். நினைத்துப் பார்க்கமுடியாத அளவிலான பணபலத்தை பயன்படுத்தியிருப்பதுதான் முதல் அம்சம். இந்த மிகப்பெரும் பணபலம் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றாற்போல அவரது பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நண்பர்களின் அடையாளத்தை பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்கேற்ற புதிய விதிமுறைகளை தாமே எழுதிக் கொண்டார்.
இந்தக் கார்ப்பரேட்டுகள்தான் இந்தத் தேர்தலில் பாஜகவின் பகட்டான பிரச்சாரத்திற்கு பின்னிருந்து படியளந்தவர்கள். இதன் மூலம்தான் எக்கச்சக்கமான விளம்பரங்கள், சட்ட விதிகளை மீறி தேர்தல் சமயத்தில் திடீரென முளைத்து, தேர்தல் ஆணையத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு, தேர்தலுக்குப் பின் மறைந்து போன 24 X 7 பிரச்சாரச் சேனல் என்று பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது பாஜக. பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் படியளந்தார்கள் என்பது நமக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லையாதலால், (பொருளாதார) கொள்கைகளின் மூலமாக எவ்விதத்தில் அவை திருப்பி செலுத்தப்படும் என்பது குறித்து குறிப்பிட்டுக் கூறுவதும் கடினமானது.
இரண்டாவதாக, ஊடகங்களின் பெரும் பிரிவு மோடி வழிபாட்டை சந்தைப்படுத்தியதோடு, மோடி அரசாங்கத்தின் பல்வேறு ‘திட்டங்களின்’ சாதனைகளை மிகைப்படுத்தி விற்பனை செய்தனர். மோடி மற்றும் அமித்ஷா நடத்திய பேரணிகளுக்கு அளவுக்கதிகமான நேரத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒதுக்கினர்.
இதைத்தாண்டி கடந்த ஐந்தாண்டுகளாகவே, பாஜகவின் பிரிவினைவாத மற்றும் வேற்றுமைவாத நிகழ்ச்சி நிரலை சந்தைப்படுத்த உதவியதன் மூலம், பொதுமக்களை சீரழித்ததோடு, அரசாங்கத்தின் தோல்வியுற்ற கொள்கைகளின் மீதான விமர்சனக் கண்ணோட்டத்தை மழுங்கடிக்கச் செய்வதில் பெரும் ஊடகங்கள் பாஜகவுக்கு பேருதவி செய்தன. ஊடகத்தின் இப்பிரிவினர்தான் லவ் ஜிகாத் முதல் அயோத்தி பிரச்சினை வரையிலான சங்கப் பரிவாரத்தின் மதவாதக் கருத்துக்களையும், தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பாஜக-வின் மிகைப்படுத்தப்பட்ட சுயபிரச்சாரத்தையும் கடத்தும் குழலாகச் செயல்பட்டனர்.
”மோடியின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களே நடந்ததில்லை” என்பது போன்ற நிர்மலா சீதாராமனின் சவடாலைப் போன்று, அமைச்சர்களின் அப்பட்டமான பொய்களும் கேள்விக்கிடமற்றுக் கடந்து போக அனுமதிக்கப்பட்டன. புல்வாமாவில் நடந்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி குறித்து எவ்விதக் கடுமையான கேள்விகளும் கேட்கப்படவில்லை. அதேபோல இந்திய விமானப்படையின் மிக் ரக விமானத்தை இழந்து, இந்திய விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு, சொந்த ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய அவலங்களை உள்ளடக்கிய பாலகோட் பதிலடித் தாக்குதல் குறித்தும் எவ்விதக் கேள்விகளும் கேட்கப்படவில்லை.
மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஊடகங்கள் அவதூறு வழக்குகளாலும், சிபிஐ அல்லது வரி விசாரணை போன்றவைகளாலும் குறி வைக்கப்பட்டன. சில பத்திரிகையாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் தங்கள் பணியை இழந்தனர். வேறெங்கும் வெளிப்படுத்த முடியாத விமர்சனங்களின் மூலமாக இருக்கும் சமூக வலைத்தளங்களை மிரட்ட, இந்த நாட்டின் கணிணி சட்டங்கள் தொடர்ச்சியாக கட்சி செயல்பாட்டாளர்களாலும் போலீசாராலும் நாடு முழுவதும் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டன.
மூன்றாவதாக, தேர்தல் கமிசனின் செயல்பாடுகள் நினைவு தெரிந்தவரையில் மிகவும் அதிகமான அளவிற்கு கட்சி சார்பானதாக இருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் நடத்தை விதிகளை மோடியும் பாஜகவும் பகிரங்கமாக மீறியதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்குக்கு அபாயம் இருப்பதாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 -ஐப் பிரயோகித்து பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது மட்டுமல்லாமல், அங்கு பிரதமரின் பேரணிகளை அனுமதிக்கும் வகையில் நேரத்தை வெட்டிச் சுருக்கிக் கொண்டது தேர்தல் ஆணையம்.
இவையனைத்தையும் இணைத்துப் பார்த்தால், இவ்வகையான வெற்றியால் இந்தியாவிற்கு என்ன பலன் ? மோடியும் பாஜகவும் கடந்த ஐந்தாண்டுகளாக சாதித்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொன்றும் தேர்தலால் தற்போது அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு, நாட்டை மதவாதமாக்குவதற்கான அடித்தளமும் இடப்பட்டுள்ளது.
மேலும் மையப்படுத்தப்பட்ட முடிவெடுத்தல் (Centralised Decision Making), தான்தோன்றித்தனமான கொள்கை முடிவுகள், பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான பெரும் சலுகைகள், சுதந்திர ஊடகங்களின் மீதான பெரும் வெறுப்பு மற்றும் மாற்றுக் கருத்துக் கொண்டோரின் மீதான சகிப்பின்மை ஆகியவற்றிற்கும் அடித்தளமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டுள்ளது.
படிக்க:
♦ மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேச விரோத நடவடிக்கைகள் மீது கூடுதலான, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறார். இது ஒரு உதாரணம்தான். இனி வரும்காலங்களில் அரசு இயந்திரத்தின் உறுப்புகள் மீதான மோடி அரசாங்கத்தின் போர் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மத்திய – மாநில உறவுகள், நீதித்துறை ஆகிய இரண்டு அரண்கள்தான் மோடியின் பல்வேறு முயற்சிகளையும் தாண்டி கடந்த ஆட்சியில் ஓரளவு தப்பின. இந்த இரண்டு அரண்களை நோக்கிதான் இனி மோடி திரும்புவார். “தனது புதிய பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாநிலங்களில் பணிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசிற்கு வழங்க முயற்சிப்பார். இதனைச் செய்து முடிக்க நிதிக் கமிசனை தனது ஒடுக்கும் தடியாக உபயோகிப்பார்” என்று பிரபல பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார். நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதன் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் நீதித்துறையில் தனது தடத்தைப் பதிப்பார்.
எதிர்க்கட்சிகள் வீரியமான பரப்புரைகளைச் செய்தால்மட்டுமே, இந்த பயங்கரமான நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகப் போராட முடியும். அமித்ஷா அமைத்திருக்கும் இந்த தேர்தல் பொறியை வெறுமனே சாதிய மற்றும் குழு அடிப்படையிலான கூட்டணிகள் மூலம் போரிட முடியாது.
பாஜகவின் நடைமுறைத் தந்திரமானது, துருத்தி நிற்கும் சாதியப் பற்றுறுதியை உடைத்து, அனைத்து சாதியினரையும் இந்துக்களாக மாற்றுவதாக இருக்கிறது. இதற்கு முன்னர், மண்டல் கமிசன் அரசியல் இந்த கமண்டல அரசியலுக்கு எதிராக அறிவார்ந்த சாதியக் கணக்கீட்டை வைத்து முறியடித்தது. ஆனால் இன்றைய நிலைமையில் அப்படிச் சாத்தியமில்லை.
பாஜக வாக்காளர்களை இந்துக்களாக (மற்றும் முசுலிம்களாகப்) பார்த்தால், எதிர்க்கட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் இருக்கும் விவசாயிகளிடம், பெண்களிடம், இளைஞர்களிடம் தம்மைக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இது இன்னுமொரு விவாதத்திற்குரிய விசயமே!
கட்டுரையாளர் : சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர்
“தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?”
Western world is the winner. Not India, nor BJP. Anyone who keenly observe the Indian continent politics will simply understand this.
Poor Indians.
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?
Western world is the winner. Anyone who keenly observe Indian continent politics will simply understand this. As an Indian we are failed again.
இந்த அபாயகரமான சூழலில் இந்து மதவெறி ஃபாசிஸ்டுகள் மற்றும் சீமான் போன்ற தமிழ் ஃபாசிஸ்டுகளை எதிர்க்கும் வல்லமை ‘மக்கள் அதிகார’த்திற்கு உண்டு என்று நம்பும் மக்கள் அந்த நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்க.
இந்தியாவின், இந்திய மக்களின் வெற்றி….