நடந்துகொண்டிருக்கும் மக்களவை தேர்தலை கண்காணித்துக் கொண்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், பாஜக உறுப்பினர் போல மோடிக்கு சேவை ஆற்றும் பணியை கூடுதலாக செய்துகொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து உடனடியாக ‘கடமை’ ஆற்றும் ஆணையம், இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் செய்யாத இழிவான பிரச்சாரத்தில் மோடி இறங்கியபோதும் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக, மோடி பேசியதில் எந்த குற்றம் குறையும் இல்லை என ‘நற்சான்றிதழ்’ அளித்திருக்கிறது.
படிக்க :
♦ செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள்
♦ ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !
கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவில் பேசிய மோடி, முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு காணிக்கையாக்கும்படி பேசினார். இது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக புகார் அளிக்கப்பட்டது.
அதுபோல, ஏப்ரல் 1-ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, முசுலீம் வாக்குகள் அதிகமாக உள்ள கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார். முசுலீம்கள் ராகுலுக்கு வாக்களிப்பார்கள். இந்துக்கள் பாஜக -வுக்கு வாக்களிப்பார்கள் என பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் வாயிலிருந்து வந்த இத்தகைய பிரிவினைவாத பேச்சின் மீதும் புகார் தரப்பட்டது.
பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ‘மிஷன் சக்தி’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக நேரலையில் தோன்றி அறிவித்தார்.
ஏப்ரல் 21-ம் தேதி ராஜஸ்தானில் பேசிய மோடி, ‘பாகிஸ்தானின் அணு ஆயுத தாக்குதல் பயமுறுத்தலை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; இந்தியா வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் தீபாவளியில் வெடிக்க அல்ல’ என்றார்.
வாரணாசியில் புதிய இந்தியாவில் பயங்கர வாதத்துக்கு இடமில்லை என்றார். இப்படி பிரதமருக்குரிய எந்தவித மாண்போ கண்ணியமோ இல்லாத மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அனைத்து புகார்களையும் விசாரித்த மோடியின் தேர்தல் ஆணையம், ‘நற்சான்றிதழ்’ அளித்துள்ளது. தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் அனைத்து சுயேட்சையான அமைப்புகளையும் தனது அடிவருடி அமைப்புகளாக மாற்றிவிட்ட மோடி அரசு, தேர்தல் ஆணையத்தையும் விழுங்கி செறித்துவிட்டது. இதை பிரபல கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய கருத்து படங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன் தொகுப்பு இங்கே…
கட்டுரை : – கலைமதி
நன்றி: ஸ்க்ரால்