2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க., எதிர்பாராதவிதமாகத் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர்கள், பா.ஜ.க. ஆதரவு பத்திரிகைகள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட அனைவரும், “சாதி அரசியலை இந்திய மக்கள் புறக்கணித்துவிட்டதாக” அறிவித்தனர்.

அவர்கள் இப்படிக் கூறியதற்குக் காரணம், சாதி அரசியலின் மையமான உ.பி.யிலும், பீகாரிலும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து நின்ற அகிலேஷ் யாதவ் – மாயாவதி கூட்டணியும், லாலு பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கூட்டணியும் இந்தத் தேர்தலில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்திருப்பதுதான். தனது வெற்றியைச் சாதி- கடந்த, அதற்கும் மேலே வர்க்கம் கடந்த வெற்றியாகவும் பீற்றி வருகிறது, பா.ஜ.க.

எதிர்க்கட்சிகள், குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி ஆகியவை குறிப்பிட்ட சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள்தான் என்பதை பா.ஜ.க. சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

உ.பி.யில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட சமாஜ்வாதிக் கட்சி- பகுஜன் சமாஜ் கட்சி – ராஷ்டிரிய லோக் தள் கட்சிகளின் கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ்- வாக்குகளையும்; பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து நின்ற லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள்-காங்கிரசு கூட்டணி, தமது வெற்றிக்கு யாதவ், முஸாஹர், கோய்ரி, மல்லா, குஷ்வாஹா உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும், முசுலீம்களின் ஓட்டுக்களையுமே பிரதானமாக நம்பியிருந்தன.

“தேசிய”க் கட்சியான காங்கிரசும் கூட இத்தேர்தலில், அக்கட்சி தனித்துப் போட்டியிட்ட உ.பி., ம.பி., இராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனது வெற்றிக்கு பார்ப்பனர்கள், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் மற்றும் ஜாட், யாதவ், அஹிர், லோதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி ஓட்டுக்களையும் நம்பியிருந்தது.

எதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் என்றும், அக்கட்சிகளின் தோல்வியைச் சாதி அரசியலின் தோல்வி என்றும் கேலி செய்யும் பா.ஜ.க.வின் யோக்கியதை என்ன? இந்திய அரசியல் கட்சிகளிலேயே, பார்ப்பன- கட்சி எனச் சாதி பெயரைக்  குறிப்பிட்டு அழைக்கப்பட்ட பெருமை கொண்ட ஒரே கட்சி பா.ஜ.க.தான்.

1990-க்கு முன்பு வரை அக்கட்சிக்குப் பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தவிர, வேறு யாரும் வாக்களிக்க முன் வந்ததில்லை. பா.ஜ.க.வும் நிலவுடமை ஆதிக்க சாதிகளையும், வட்டிக்கடை நடத்திவரும் மார்வாடி சேட்டுக்களையும்தான் அண்டிப் பிழைத்து வந்தது.

1990-களுக்குப் பின்னர், இந்து என்ற போர்வையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தன் பக்கம் அணிதிரட்ட பா.ஜ.க முயன்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ, பா.ஜ.க. அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய சாதிக் கூட்டணி என அழைக்கப்படும் அளவிற்கு வட இந்திய மாநிலங்களில் யாதவ் அல்லாத மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஜாதவ் அல்லாத மற்ற தாழ்த்தப்பட்ட சாதிகளின் வாக்குகளைக் குறிவைத்தும், சாதிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டும்தான் இந்தத் தேர்தலையே சந்தித்தது.

படிக்க :
♦ ’உயர்’சாதி ‘ஏழை’களுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல்
♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக, “தான் தத்தாத்ரேய கோத்திர பிராமணன்” எனக் கூச்சமின்றிக் கூறிக் கொண்டார் என்றால், வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் புருஷ்) முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியோ, உ.பி. மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், “தான் மிக, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன்” எனக் கண்ணீர் விடாத குறையாகப் பேசி வாக்கு சேகரித்தார்.

இந்தக் கடந்த கால மற்றும் நிகழ்கால உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, தன்னைச் சாதிக்கு அப்பாற்பட்ட கட்சியாகப் பெருமை பாராட்டிக் கொள்வதற்கும்; எதிர்க்கட்சிகளைச் சாதிக் கட்சிகள் எனச் சாடுவதற்கும் பா.ஜ.க.விற்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது.

மண்டலும் பா.ஜ.க.வும்

1980-களின் இறுதியில் மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலான பிறகு, இந்தியத் தேர்தல் முடிவுகளைச் சாதி வாக்குகள் தீர்மானிப்பது ஒரு புதிய கோணத்தில் தீவிரமடைந்தது. குறிப்பாக, மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட்ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.

தமிழகத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக அவதாரமெடுத்தது. சோசலிஸ்டு ராம் மனோகர் லோகியாவின் சிஷ்யர்கள் எனப் பெயரெடுத்திருந்த முலயம் சிங் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமாஜ்வாதிக் கட்சியை உ.பி.யிலும்; லாலு பிரசாத் யாதவ், யாதவ் சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியை பீகாரிலும்; ஜார்ஜ் பெர்ணாண்டஸ் – குமார் கூட்டணி, குர்மி சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சமதா கட்சியை பீகார் உள்ளிட்ட ஒன்றிரண்டு மாநிலங்களிலும் தொடங்கினர்.

இவர்களுக்கெல்லாம் முன்பே, கன்சிராம் தாழ்த்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ஜாதவ் சாதி ஓட்டுக்களை அடித்தளமாகக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார்.

மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கத்திற்குப் பிறகுதான் குறிப்பிட்ட சாதி வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட சாதிக் கட்சிகள் இந்திய அரசியல் அரங்கில் தோன்றின.

இவற்றுக்கெல்லாம் அப்பால், இதே காலக்கட்டத்தில் அரசு அதிகாரத்தில் பங்கு பெறமுடியாமல், அதற்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு சாதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் முளைத்துச் செயல்படத் தொடங்கி, அவை சாதிக் கட்சிகளாகவும் உருமாறி, தமது சாதி ஓட்டுக்களை வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகளிடம் பேரம் நடத்தி ஒன்றிரண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தொகுதிகளைப் பெறவும் தொடங்கின.

மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதையும், சாதிக் கட்சிகள் தேர்தல்களில் வெற்றிபெறும் அளவிற்குச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியதையும் கண்டு, பா.ஜ.க. பெரும் பதற்றம் கொண்டது. ஏனென்றால், அதுகாறும் ஆதிக்க சாதிகளின் முற்றாளுமையின் கீழ் இருந்துவந்த அரசு அதிகாரத்தில் இக்கட்சிகள் பங்கு கேட்பதை பார்ப்பன- கட்சியான பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலமும் இதுதான்.

ஒருபுறம் தனது சமூக அடித்தளமான பார்ப்பன, பனியா உள்ளிட்ட ஆதிக்க சாதியினரைத் தூண்டி விட்டு மண்டல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம் “ராமர் எதிர் பாபர்”, “இந்து எதிர் முசுலீம்” என இந்துத்துவ அரசியலையும் கடை விரித்தது, பா.ஜ.க.

படிக்க :
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
♦ மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !

இந்து என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தம் பக்கம் அணிதிரட்டிக் கொண்டு, சாதிக் கட்சிகளை வீழ்த்திவிட முயன்ற பா.ஜ.க.வின் செயலுத்தி 1990 பிற்பகுதியில் உ.பி. மாநிலத்திலேயே படுதோல்வியடைந்தது. அங்கு மட்டுமின்றி, இத்தேர்தல் உத்தி பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் தொடர்ச்சியான, நிரந்தரமான வெற்றியைத் தரவில்லை.

இத்தோல்விகள் மற்றும் பின்னடைவுகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறும் ஒவ்வொரு தேர்தல்களுக்குத் தக்கவாறும் சாதிக் கூட்டணிகளை உருவாக்கித் தேர்தல்களைச் சந்திக்கும் தந்திரோபாயத்தில் பா.ஜ.க இறங்கியது. அதற்கான பரிசோதனைக் களமாக உ.பி.யைத் தேர்ந்தெடுத்தது.

1990- பின், உ.பி. மாநிலத்தில் காங்கிரசு பலவீனமடைந்துவிட்டதையும், மண்டல் எதிர்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனர், தாக்குர் உள்ளிட்ட ஆதிக்க சாதி வாக்குவங்கியின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட பா.ஜ.க., பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாக்குகளைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு, சாதிகளுக்கு இடையே காணப்படும் வரலாற்றுரீதியான முரண்பாடுகளையும், பதவி வேட்டைக்காக அவற்றுக்கிடையே நடந்துவரும் மோதல்களையும் பயன்படுத்திக் கொண்டது.

குறிப்பாக, யாதவ் சாதி தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ஜாதவ் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தனது அணிக்கு மடைமாற்றியதன் மூலம்தான் உ.பி.யில் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பிரம்மாண்டமான வெற்றியை பா.ஜ.க. சாதித்தது.

ஜி.எஸ்.டி., பண மதிப்பழிப்பு ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள் ஏற்படுத்திய பாதிப்புகளைக்கூடச் சாதி உணர்வு மழுங்கடித்துவிட்டதை உ.பி.யில் நாம் கண்டோம். இந்த உத்தியை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நாடு முழுவதும் விரிவுபடுத்தியிருக்கிறது.

கமண்டலத்திடம் சரண் அடைந்த மண்டல்

மண்டல் கமிசன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தபொழுது, கமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் யாதவ் சாதியினரும், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடில் ஜாதவ் சாதியினரும் அதிகப் பலன் அடைந்திருக்கும் உண்மையைப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க., மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் பலன்களைப் பெறும் வகையில் உள் ஒதுக்கீடை அமலாக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்ததோடு, அதற்கான கமிசன்களையும் அமைத்தது. இதன் வழியாக, யாதவ், ஜாதவ் அல்லாத சாதியினரின் ஓட்டுக்களைக் கவர முயன்றது.

பாஜக சாதி வேறுபாடு பார்க்காத கட்சி எனக் காட்டிக் கொள்ளவும், தாழ்த்தப்பட்ட சாதி வாக்குகளைப் பொறுக்கும் நோக்கத்தோடும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒடிசாவிலுள்ள தியோகாவ் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் உணவருந்தும் நாடகம். (கோப்புப் படம்)

இந்த உள் ஒதுக்கீடு உத்திக்கு அப்பால், தான் குறிவைக்கும் சாதிகளைச் சேர்ந்த வரலாற்றுத் தலைவர்களை இந்து மதக் கதாநாயகர்களாகச் சித்திரிப்பதற்கு ஏற்ப வரலாற்றைத் திரிப்பது, சாதி உணர்வை முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாக வளர்த்துவிடுவது, தனக்கு ஆதரவான சாதிகளைச் சேர்ந்த பிழைப்புவாதிகளைக் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டு குளிப்பாட்டுவது என இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பல தந்திரங்களை பா.ஜ.க. கையாண்டு வருகிறது.

“பிற்படுத்தப்பட்ட சாதிகளுள் ஒன்றான ராஜ்பார் சாதியின் வரலாறே முசுலீம்களுக்கு எதிரான வரலாறாக ஆர்.எஸ்.எஸ்.-ஆல் திரித்துக் கூறப்படுவதாகவும், அச்சாதியைச் சேர்ந்த இளைய தலைமுறையிடம், இந்துயிசத்தைக் காப்பாற்றும் வீரர்கள் நாம் என்ற கருத்துத் திணிக்கப்படுவதாகவும்” கூறுகிறார், “காவோன் கே லோக்” என்ற இந்தி இதழின் ஆசிரியர் ராம்ஜி யாதவ்.

ராஜ்பார் சாதியினரால் தமது வரலாற்று நாயகனாகக் கருதப்படும் சுஹேல்தேவ், ஒரு முசுலீம் தளபதியைப் போரிட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் கதையிலிருந்து, ராஜ்பார் சாதியை முசுலீம்களுக்கு எதிரானதாகச் சித்திரிக்கும் கட்டுக்கதையை ஆர்.எஸ்.எஸ்.  உருவாக்கியிருக்கிறது. அச்சாதியினரை பா.ஜ.க.விற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியாக, காசிபூரிலிருந்து டெல்லி வரை செல்லும் அதிவிரைவு தொடர்வண்டிக்கு சுஹேல்தேவ் பெயரைச் சூட்டியிருக்கிறது, மோடி அரசு.

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியதால் முஸாஹர் சாதியினரால் தெய்வமாக வணங்கப்படும் தீனாபத்ரி; அஹிர் சாதியைச் சேர்ந்த வரலாற்று நாயகன் லோரிக் யாதவ்; ஜாதவ் சாதியைச் சேர்ந்த ரவிதாஸ் உள்ளிட்ட பலரும் இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.-ஆல் இந்துத்துவ நாயகர்களாகச் சித்தரிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்துத்துவ நஞ்சு விதைக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்கெனவே அம்பேத்கர் குறித்த பிம்பமும், கருத்துக்களும் பரவியிருப்பதால், சாதிப் படிநிலையில் அச்சாதியினரைவிட மேலேயுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் இந்த இந்துத்துவா நஞ்சு உடனடியாகவே வேலை செய்வதாக அறிவுத்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

முஸ்லீம் எதிர்ப்பு இந்துத்துவ அரசியலின் கீழ் எல்லா சாதியினரையும் கொண்டுவரும் நோக்கத்துடன் மதவெறியை உள்ளீடாகக் கொண்ட தேசவெறியை மோடி தனது பிரச்சாரம் அனைத்திலும் பயன்படுத்திய போதிலும், வேர் மட்ட அளவில் சாதிரீதியான கணக்கீடுகளின் அடிப்படையிலும் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டும்தான் பா.ஜ.க. தனது வெற்றியை சாதித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதியை மறுத்த இந்து உணர்வும் இல்லை, இந்துத்துவமும் இல்லை. இருக்கவும் முடியாது.

குப்பன்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க