’நமோ டிவி’ என நாமகரணம் சூட்டப்படவில்லை என்றாலும் இந்திய செய்தி தொலைக்காட்சிகள் பெரும்பாலும் மோடியின் துதிபாடிகளாகத்தான் உள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பம் முதலே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. வெற்றியை உறுதி செய்துகொண்ட மோடியின் ஊடக துதிபாடிகள், தாங்களே வெற்றிகண்டது போல் குதூகலித்தார்கள்.

பாஜகவின் ஊடக குண்டர் படையின் தலைவரான அர்னாப், மோடியின் வெற்றியை தன்னை மறந்து கொண்டாடினார். ‘வெற்றி’யின் களிப்பில் தன்னையே மறந்து சன்னி தியோலுக்கு பதிலாக, சன்னி லியோன் என மாற்றி அறிவித்தார். தான் மாற்றி அறிவித்ததைக்கூட பிறகும் அவர் அறியவில்லை.

2019-ம் ஆண்டின் பொதுத் தேர்தல் முடிவுகளை  தன்னுடைய தனிப்பட்ட வெற்றியாகக் கருதிய அர்னாப் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பார்வையாளர்களிடம், “பரபரப்பான 12 மணி நேரம்… இது ஒற்றுமைக்கான வாக்கு, எங்களை பிரிப்பவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்” என முழங்கினார்.

வாக்கு எண்ணிக்கை நாளை ‘சூப்பர் வியாழன்’ என விளித்து குதூகலித்தது சி.என்.என். நியூஸ் 18.  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரத் தொடங்கியதும் ரிபப்ளிக் டிவியின் தொகுப்பாளர் ‘மோடி அலை’ என்றும் இந்தியா டுடே தொகுப்பாளர்கள் ‘மோடி புயல்’, ‘மோடி சுனாமி’ என்றும் விளித்தார்கள். சி.என்.என். நியூஸ் 18 ‘சூறாவளி’ என்றது.

சி.என்.என். நியூஸ் 18 தொகுப்பாளர் பூபேந்திர சவுபே, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அரை மணிநேரத்தில், நம்ப முடியாத வகையில் மோடி பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவதாகவும் இப்படியே போனால், உலக சாதனையை அவர் படைப்பார் எனவும் நிலை கொள்ளாமல் பேசினார்.

இந்தியா டுடேயின் ராஜ்தீப் சர்தேசாய், ஏதோ கொண்டாட்டத்துக்குச் செல்வது போல உடையணிந்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வழங்கினார். சில முன்னிலை அறிவிப்புகள் வந்த நிலையிலேயே பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என சொன்னார். பிரதமர் அலுவலகத்திலிருந்து  ’சீஸ் கேக்’-ஐ எதிர்ப்பார்ப்பதாக ராஜ்தீப் சொல்ல, அவருடன் தொகுப்பாளராக அமர்ந்திருந்த ராகுல் கன்வால், தனக்கு ‘டோக்ளா’ வரும் என எதிர்பார்ப்பதாகவும் சொல்ல… இருவரும் இதயப்பூர்வமான சிரிப்பை உதிர்த்தனர்.

காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்கி, இவர்களுடைய நடத்தையைப் பார்த்து, ‘நீங்கள் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடாது…” என சொன்னார். ஆனால், அவர்கள் அதைக் காது கொடுத்து கேட்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் மோடிக்கு ஜால்ரா அடிப்பதில் யார் சிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் விதமாகத்தான் அவர்களுடைய நடத்தை இருந்தது.

பாஜகவின் ஊடக குண்டர் படையின் தலைவரான அர்னாப்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ராகுல் ஷிவ் சங்கர், சற்றே பதட்டமாகத்தான் இருந்தார். ஆனால், நாவிகா குமார் முகத்தில் முழுநாளும் சிரிப்பு தாண்டவமாடியது.  ஜீ நியூஸின் சுதிர் சவுத்ரி, தொடர்ச்சியாக இந்தத் தேர்தல் மோடிக்கான தேர்தல் என சொல்லிக் கொண்டிருந்தபோது, பாஜகவின் கிரிராஜ் சிங் சொன்ன நன்றிக்காக கள்ளத்தனமான சிரிப்பை உதிர்த்தார். மோடியை கடந்த ஐந்தாண்டுகளாக விமர்சித்து வந்த என்.டீ.டி.வி. இந்தியாவின் ராவிஷ் குமாரும்கூட சிரிக்க மறக்கவில்லை.

ஆனால், என்.டீ.டி.வி. 24*7 -ல் பிரணாய் ராய் தலைமையிலான குழு, நாடு முழுவதும் பயணித்ததில் இத்தகைய முடிவை எதிர்பார்க்கவில்லை என சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஏ.பி.பி. நியூஸிஸ், தொண்டை வறண்டு போகும் வரை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கத்திக்கொண்டே இருந்தார்கள்.  பாஜக கூட்டணி ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த நிலையில், பல நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தலைகால் புரியவில்லை. கருத்து சொல்ல வந்தவர்களை பேசவிடாமல் தாங்களே அனைத்தையும் கூறி முடித்தனர். அஜய் போஸ் சொல்ல வந்ததை சொல்லவிடாமல், சி.என்.என். நியூஸ் 18 தொகுப்பாளர் பூபேந்திரா சவுபே, “இது மோடி அலை. இதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்…வெற்றியை வெற்றி என சொல்லுங்கள்” என்றார்.

இந்தியா டுடேயின் ராஜ்தீப் சர்தேசாய், “நீங்கள் இந்த அலையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என அபிஷேக் மனு சிங்வியிடன் கட்டளையிட்டார்.  காங்கிரஸ் தலைவர்களில் அபிஷேக் மனு சிங்கி மட்டும்தான் தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்க முடிந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.

டைம்ஸ் நவ்-ன் நாவிகா குமார், தேசீன் பொன்னவாலாவியை வெளிப்படையாகவே கடிந்துகொண்டார். “மோடி சிறுபான்மையினர் அதிகமுள்ள 20 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், அவரை பிரிவினையாளர் என சொல்வீர்கள்?” என்றார் நாவிகா.

ஏ.பி.பி. நியூஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை  ‘பப்பு, 56 இன்ச் மார்பு கொண்டவரிடம் தோற்றார்’ என செய்தி வெளியிட்டது.

பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங்கிடம் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லும்படி மிரட்டிய நாவிகா, “காங்கிரசின் தலைமை மாற்றப்பட வேண்டுமா?” என்றார்.  அமரீந்தரின் பதில் ‘தேவையில்லை’ என வந்தது.

ரிபப்ளிக் டிவியின் கோஸ்வாமி, உத்தர பிரதேச மக்கள் ‘வத்ரா குடும்பத்தை’ மாநிலத்திலிருந்து வெளியே அனுப்ப நினைப்பதாகச் சொன்னார். பின்னர், சமீபகால பழக்கமாக இவரிடமிருந்து வெளிப்படும், தூண்டிவிடும் அறைகூவலை விடுத்தார். வாக்கு எந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டுக்கு அர்னாப் கதறுவதைப் பாருங்கள்…

ஒட்டு மொத்தத்தில் கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரைக் காட்டிலும் செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் அதிகப்படியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ஏனென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில், அனைத்து தொலைக்காட்சிகளும் மோடி அமோக வெற்றி பெறுவார் என்றே கூறின.  ஏ.பி.பி. மற்றும் நியூஸ் எக்ஸ் இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணி 260 இடங்களைப் பெறும் என்று கூறின. மற்ற அனைவரும் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பெறும் என்றனர்.

படிக்க:
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

தமிழகத்தின் நிலைமை இந்திய முடிவுகளோடு முற்றிலும் வேறுபட்ட நிலையில் இருந்தபோதும், ஆளும் அரசுகளுக்கு துதிபாடுவதே ஊடக அறமாய் கொண்டிருக்கும் தமிழக தொலைக்காட்சிகள் மோடியின் வெற்றியை கொண்டாடி முடித்தன.


கட்டுரை: சைலஜா பாஜ்பய்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: த பிரிண்ட்

3 மறுமொழிகள்

  1. வினவின் பொறாமை தெரிகிறது, பேசாமல் கம்யூனிஸ்ட்களுக்கு அதிக தொகுதியை கொடுத்த ஸ்டாலினை உங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டு தேசவிரோத செயல்களை செய்யுங்கள்.

  2. இந்தியாவை பாக்கிஸ்தான் சீனாவிற்காக பலவீனப்படுத்த நினைக்கும் கம்யூனிஸ்ட்கள் இனி எங்களுக்கு தேவையில்லை… தேசவிரோத மக்கள் விரோத கம்யூனிஸ்ட்கள் ஒழிக

  3. During Balakot firing your 56 inch Modi ordered for shooting down of our own MI17 Helicopter and killing our 6 soldiers. Why not celebrate this victory?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க