ரோஹிங்கியா அகதிகளை சித்திரவதை செய்யும் பாசிச மோடி அரசு!

ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

0

ம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிரா நகர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளான நுமினா பேகம் மற்றும் அவரது கணவர் முகமது சலீம் ஆகியோர் ஜூலை 19 அன்று தங்களது குழந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கைவிலங்குடன் அழைத்துவரப்பட்டனர்.

ஜூலை 18 அன்று தடுப்பு மைய அதிகாரிகள், தங்களது அவல நிலையை எதிர்த்துப் போராடிய ரோஹிங்கியா அகதிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். அந்தப் புகையின் காரணமாக பிறந்து 40 நாட்களே ஆன நுமினாவின் குழந்தை இறந்துவிட்டதாக அங்கிருந்த ரோஹிங்கியா மக்கள் தெரிவித்தனர்.

ஆனால், தடுப்பு மைய அதிகாரிகள் அக்குழந்தை பிறந்ததுமுதலே உடல்நலம் குன்றி இருந்ததாகத் தெரிவித்தனர். இது ஹிரா நகர் தடுப்பு மையத்தில் நடைபெறும் இரண்டாவது மரணமாகும்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க நுமினா பேகம் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகியோர் கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மற்றொரு காணொலி ஒன்றில் நுமினா பேகம் கைவிலங்குடன் பெண் போலீசு ஒருவரால் அழைத்துவரப்படுவதும் சில ரோஹிங்கியா பெண்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதும் பதிவாகியுள்ளது.


படிக்க: காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!


“அவர்களை கைவிலங்குடன் பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சலீம் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோரின் கைவிலங்குகள் இறந்த குழந்தையின் இறுதிச்சடங்கு பிரார்த்தனையின் போதுகூட அகற்றப்படவில்லை. அவர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கைவிலங்குடன் வைக்கப்பட்டிருந்தனர். பின்பு, தடுப்பு மையத்திற்குத் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த மூத்த நபர் ஒருவர் கூறினார்.

“கடுமையான குற்றவாளிகளைக் கூட இவ்வாறு நடத்த மாட்டார்கள். ரோகிங்கியாக்களான நாங்கள் மனிதர்கள் இல்லையா? இந்தியாவில் இப்படி நாங்கள் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுவோம் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. இப்படி இழிவாக நடத்தப்படுவதை எதிர்த்து எங்களால் போராடக்கூட முடியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“ரோஹிங்கியா அகதிகள் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களின் நடமாட்டத்திற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அவர்களைக் கைதிகளைப் போல நடத்தக்கூடாது. கைதிகளாக இருந்தாலும் கூட, அவர்கள் தப்பிவிடுவார்கள் என்ற அச்சம் இருந்தாலோ அல்லது அபாயகரமானவர்களாக இருந்தாலோ மட்டுமே அவர்களுக்குக் கைவிலங்கிடப்படும்” என்று முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான எம்.எஸ். லோன் கூறினார். போலீசு அதிகாரி ஒருவரே ரோஹிங்கியாக்களை இவ்வாறு நடத்துவது தவறு என்று கூறுகிறார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறார் நீதி சட்டவிதிகள், 2021 பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு கைவிலங்கிடுவதைத் தடை செய்கிறது. ரோஹிங்கியா தம்பதியின் மூத்த மகனுக்கு 17 வயது மட்டுமே ஆகியுள்ளதால் இந்திய சட்டப்படி அவர் மைனராகக் கருதப்படுவார்.

2012-ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக பெரிய அளவில் வன்முறைகள் நடந்ததால் அங்கிருந்து உயிர் தப்பி சலீம் மற்றும் அவரது சகோதரர் பரீத் ஆலம் ஆகியோர் இந்தியாவுக்கு வந்ததாக சலீம் தம்பதியின் உறவினர்கள் தெரிவித்தனர்.


படிக்க: இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!


“மியான்மரில் உள்ள படைகள் எங்களை கொன்று சித்ரவதை செய்து வருகின்றன. எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு ஓடிவந்தோம்” என்று சலீமின் அண்ணி பாத்திமா பேகம் கூறினார்.

“சலீம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஜம்முவில் சிறு வேலைகளை செய்து வந்தார். நாங்கள் இங்கே பாதுகாப்பாக உணர்ந்தோம். ஆனால் அதே ஆண்டில் சலீம் போலீசால் கைது செய்யப்பட்டார். எங்கள் துயரங்களுக்கு முடிவே இல்லை. அப்போது அவரிடம் அகதி அட்டை (refugee card) இல்லை. எனவே, நாங்கள் உடனடியாக டெல்லி சென்று அகதி அட்டைகளைப் பெற்றோம்” என்று அவர் மேலும் கூறினார்.

அகதி அட்டைகள் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரால் (U.N. High Commissioner for Refugee) வழங்கப்படும்.

“2021-ஆம் ஆண்டில், சலீமின் மனைவி மற்றும் மூத்த மகன் உட்பட ஜம்முவில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட அகதிகள் சரிபார்ப்புக்கு (verification) அழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீசால் கைது (detained) செய்யப்பட்டனர்” என்று பாத்திமா கூறினார்.

அச்சமயம் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் ஹிரா நகர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறை மார்ச் 5, 2021 அன்று தடுப்பு மையமாக அறிவிக்கப்பட்டது.

பின்பு, ஜம்மு காஷ்மீர் அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் “சட்ட அமலாக்க நிறுவனங்களால் கண்டறியப்பட்ட அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் அந்த தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்படுவார்கள். மேலும், இந்த நபர்களின் குடியுரிமை சரிபார்க்கப்பட்டு பயண ஆவணங்கள் வழங்கப்பட்டவுடன் விரைவாக நாடு கடத்தப்படுவார்கள். அதற்கு அவர்கள் எல்லா நேரங்களிலும் உடல் ரீதியாக தகுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

“சலீம் ஜம்மு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். நுமினா கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருந்த போது சலீமும் ஹிரா நகர் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார்” என்று பாத்திமா கூறினார்.

அவர்கள் இருவரும் ஹிரா நகர் தடுப்பு மையத்தில் 2021-ஆம் ஆண்டில் ஒன்றிணைந்தனர். இந்த தம்பதியினருக்கு ஜூலை 19 அன்று இறந்த குழந்தை உட்பட மேலும் இரண்டு குழந்தைகள் தடுப்பு மையத்தில் பிறந்தது.

இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகளின் அவல நிலைக்கு சலீம் – நுமினா தம்பதியினரின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மியான்மரில் ஒடுக்குமுறைக்கு அஞ்சி உயிர் தப்பி வந்த ரோஹிங்கியா அகதிகளை முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக காவி பயங்கரவாத அரசு மனிதாபிமானமின்றி – தீவிரவாதிகள் போல் சித்தரிக்கிறது – அடிமைகளாக சித்திரவதை செய்கிறது. பாசிஸ்டுகளிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்!


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க