ந்திய வரலாற்றில் முதல்முறையாக தஞ்சம் தேடிவந்த அகதிகளை சொந்த நாட்டுக்கே திரும்பி அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.  சட்ட விரோத குடியேற்றத்துக்காக 2012-ம் ஆண்டு முதல் அசாம் சிறையில் உள்ள 7 ரோஹிங்கியாக்களை மியான்மருக்கு அனுப்பும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. அவர்கள் எழுவரும் மணிப்பூரின் எல்லை பகுதியான மொரே அருகே மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 7 ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்ப தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்தனர். ரோஹிங்கியாக்களின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாக அவர்கள் இந்தியா வந்ததாக அந்த மனுவில் கூறியிருந்தனர்.  மீண்டும் தங்களை மியான்மருக்கே அனுப்பும் இந்திய அரசின் முடிவு தனக்குள்ள சர்வதேச பொறுப்புகளை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் மீண்டும் மியான்மருக்கு திரும்பினால் தாங்கள் கொல்லப்படும் வாய்ப்புகளே அதிகம் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

ரோஹிங்கியாக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கில் வாதாடினார்.  “ரோஹிங்கியாக்களை பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமை. 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் மியான்மரில் கொல்லப்பட்டுள்ளனர். மிக மோசமான இனப்படுகொலை இது. ரோஹிங்கியாக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் பங்களாதேசுக்கும் இந்தியாவுக்கும் தஞ்சம் தேடி வந்தனர்.  அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல; அகதிகள். நீதிமன்றம் ஐநா அதிகாரிகளை அனுப்பி, சிறையில் உள்ள எழுவரையும் வெளியேற்றும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும்,  ரோஹிங்கியாக்களின் வாழ்வுக்கு நீதிமன்றம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ரோஹிங்கியாக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“எங்களுடைய பொறுப்புகளை நீங்கள் நினைவுபடுத்த வேண்டாம். எங்கள் பொறுப்புகளை நாங்கள் உணர்ந்தே உள்ளோம்” என்று கூறிய நீதிபதிகள்,  “மியான்மர் அரசு அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகச் சொல்கிறது. எனவே ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பும் அரசின் முடிவில் நாங்கள் தலையிட முடியாது” என்றனர்.

படிக்க:
♦ ரோஹிங்கியா முசுலீம் அகதிகளை வெளியேறச் சொல்லும் மோடி அரசு !
♦ ரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு

இந்திய அரசின் இந்த முடிவை ஐநா விமர்சித்துள்ளது. ரோஹிங்கியாக்கள் தங்களுடைய நாட்டில் வெறுப்புக்கும் மனித உரிமை மீறலுக்கும் ஆளானதையும், நிறுவனமயமாக்கப்பட்ட பாகுபாட்டையும் பார்க்க இந்தியா  தவறி விட்டது. அவ்வாறு பார்ப்பது அரசின் சர்வதேச கடமையாகும் என ஐநாவின் இனவெறி தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் டெண்டாயி அச்சூமி  தெரிவிக்கிறார்.

ஐநாவின் இனவெறி சிறப்பு அறிக்கையாளர், ரோஹிங்கியாக்கள் திரும்ப மியான்மரில் சுமூகமான, வாழத் தகுந்த சூழல் உருவாக்கப்படவில்லை என்கிறார். அதாவது, ரோஹிங்கியாக்கள் திரும்பினால் மீண்டும் அனைத்து ஒடுக்குமுறைக்கும் ஏன் படுகொலையாவதற்கும்கூட வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

18 ஆயிரம் ரொஹிங்கியாக்களுக்கு தஞ்சம் அளித்திருக்கிறது இந்தியா. இவர்களுடன் அந்த ஏழுவரையும் சட்ட விரோத குடியேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என ஐநா சொல்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் கூட்டமாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியா மக்கள் பெரும்பாலும் பங்களாதேசிற்கு அகதிகளாகச் சென்றனர்

ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குடேரஸ் அண்மையில் இந்திய அரசு, ரோஹிங்கியா அகதிகளை திரும்ப அனுப்பும் முன், அவர்கள் வாழத்தகுந்த சூழலை உருவாக்குமாறு மியான்மர் அரசை வலியுறுத்த வேண்டும் எனப் பேசியிருந்தார்.

“ரோஹிங்கியாக்களைப் போல மிக மோசமான ஒடுக்குமுறையை சந்திக்கும் இனத்தை உலகில் எங்கும் கண்டதில்லை. அவர்கள் வசிக்கும் ராகைன் மாநிலத்துக்குள்ளேயே கூட அவர்களால் இடம்பெயர முடியாது. அவர்களால் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர்கள் குழந்தைகள் நல்ல பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேர்ந்து படிக்க முடியாது. மேலும் அவர்களுக்கு எதிரான வன்முறையை சொல்லியாகவேண்டும். அவர்கள் வீடுகள் கொளுத்தப்படும், பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவார்கள், அவர்களுடைய கிராமங்களை நாசம் செய்வார்கள்” என காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஐநாவின் பொதுச் செயலாளர் பேசினார்.

ஐநாவின் அகதிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத போதும் கூட திபெத், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த அகதிகளை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், ரோஹிங்கியாக்களுக்கு அத்தகைய பரிவு காட்டப்படவில்லை. ஏனெனில் அவர்களுடைய மதம் இசுலாமாக இருக்கிறதே.

ஆளும் இந்துத்துவ வெறி பிடித்த அரசு, மியான்மர் அரசின் இனவெறியை உள்ளூர ரசித்து ஆதரிக்கிறது.  தஞ்சம் கேட்டு ஓடிவந்தவர்களை தீவிரவாதிகள், நாட்டுக்கு அச்சுறுத்தல் என ஓயாமல் பாஜக-சங் பரிவாரங்கள் அலறுகின்றனர். இனவெறியாளர்களிடம் அடுக்குமுறை, மனிதநேயம் குறித்து பேச முடியுமா என்ன?

செய்தி ஆதாரங்கள்:
♦ SC rejects plea, 7 Rohingya to be handed over to Myanmar in first deportation today
♦ SC Refuses to Stay Deportation of 7 Rohingya Refugees; UNHCR Says ‘Not Safe’ to Return to Myanmar

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க