.நா இனியான உலகின் கதையை அறிவிக்கும் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. ‘தலைக்குமேலே வெள்ளம்போனால் சாண் என்ன முழம் என்ன’ என்கிற கதையை எட்டிவிட்டோம்.

காலநிலை மாற்றம் தீவிரப்படுவதற்கான முக்கியமான பிரச்சினை எங்கு இருக்கிறது தெரியுமா? காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களில் இருக்கின்றன.

உரையாடல் 1 :  கார்பன் வாயு உமிழ்வுக்கு விவசாயமே காரணம்.

விவசாயத்தில் கார்பன் உமிழ்வு இருக்கிறதென்றாலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் விவசாயத்தால் ஏற்படும் உமிழ்வு அல்ல பிரதான காரணம். பெரும் அளவில்  காடழித்து ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நடத்தப்படும் கார்ப்பரேட் விவசாயத்தில்தான் கார்பன் உமிழ்வு அதிகம்.

படிக்க :
♦ ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
♦ முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !

உரையாடல் 2 : மாடுகள் கார்பன் உமிழ்வுக்கு முக்கிய காரணம்.

மாட்டுக் கறிக்கென வளர்க்கப்படும் மாடுகளால்தான் கார்பன் உமிழ்வு நேர்கிறது என்கிற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. மாடு வளர்ப்பு என்பது மாட்டுக்கறிக்காக மட்டும் நடப்பதில்லை. பால் முதலிய பல காரணங்களுக்காக நடக்கிறது. அதுவும் தனி விவசாயிகள் வளர்க்கும் மாடுகளில் பிரச்சினை கிடையாது.

கார்ப்பரேட் ரக பெரும் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளின் எண்ணிக்கையே அதிகம். அவற்றின் கார்பன் உமிழ்வை நிவர்த்தி செய்யும் செயல்முறை நம்மிடம் கிடையாது. அதை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அத்தகைய செயல்முறையை நிர்பந்திக்கும் வழக்கமும் நம்மிடமோ அரசுகளிடமோ கிடையாது.

உரையாடல் 3 : ஒரு மனிதன் தன்னளவில் உமிழப்படும் கார்பனை (Carbon Footprint) குறைக்க வேண்டும்.

தன்னளவில் ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வை குறைக்க அசைவம் சாப்பிட மாட்டார்கள். வாகனம் பயன்படுத்த மாட்டார்கள். தோல் காலணிகள் அணிய மாட்டார்கள். கேட்டால் இயற்கைக்கு பாதகமில்லாமல் வாழ்கிறார்களாம்.

கிரேக்கத்தில் நேர்ந்த காட்டு தீ புகைப்படம்

இந்தியாவின் தனிமனித கார்பன் தடத்துக்கான சராசரி ஒரு வருடத்துக்கு 0.6 டன்னாக இருக்கிறது. அதாவது ஒரு வருடத்தில் ஒரு இந்தியன் 0.6 டன் அளவு கார்பன் உமிழ்கிறான். அதையே சற்று பகுத்து பார்த்தால் ஏழை இந்தியன் 0.2 டன் கார்பன் உமிழ்கிறான். பணக்கார இந்தியன் 1.3 டன் கார்பன் உமிழ்கிறான். இதை அமெரிக்காவுக்கு பொருத்தி பார்த்தால் ஓராண்டில் சராசரியாக ஒரு அமெரிக்கன் 16 டன் கார்பன் உமிழ்கிறான்.

தனி நபர்கள் கார்பன் உமிழ்வை குறைத்தால் எல்லாம் சரியாகி விடுமா?

உதாரணத்துக்கு, அலுவலகம் என எத்தகைய அளவில் ஓர் அலுவலகம் தொடங்கப்பட்டாலும் அதன் ஒரு சதுர மீட்டர் அளவு 91 கிலோ கார்பனை உமிழ்கிறது. இதற்குள் அலுவலக பணியாளர் எண்ணிக்கை, கணிணிகள், ஸ்மார்ட்போன்கள் முதலிய விஷயங்களும் பிற பல விஷயங்களும் அடங்கும். ஆனால், நாம் அலுவலக வேலை பாணியை நிறுத்திவிடவில்லை. குறைக்கக் கூட இல்லை.

உரையாடல் 4 : காலநிலை மாற்றத்திற்கு மனிதனே காரணம்.

இயற்கைக்கு பாதகமாக மனிதன் இருக்கிறான் எனில் எந்த மனிதன்? பணக்கார மனிதனா, ஏழை மனிதனா, முதலாளி மனிதனா, தொழிலாளி மனிதனா? எந்த மனிதன்?

உரையாடல் 5 : காலநிலை மாற்றத்தின் சிக்கலை புரிந்த அரசியல்வாதிகள்.

பொல்சனாரோ, ட்ரம்ப் போல நேரடியாக காலநிலை மாற்றத்தை மறுப்போரை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவது எளிது. ஆனால், காலநிலை மாற்றம் இருப்பதை ஏற்றுக் கொண்டு, அதை சரிசெய்ய போராடுவதாக காட்டிக்கொண்டு காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தி அழிவை உறுதி செய்யும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்கள்தான் பிரச்சினை. சுலபமாக கண்டறியவும் முடியாது. கண்டறிந்து சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.

உதாரணமாக மோடிக்கு ஐ.நா அவை ‘சுற்றுச்சூழல் காக்கும் சாம்பியன்’ என விருதளித்து கவுரவித்த துயரத்தை சொல்லலாம்.

இந்த ஐந்துவகை உரையாடல்களும் முதலாளித்துவத்தால் முதலாளித்துவத்துக்குள்ளேயே நிகழ்த்தப்படும் உரையாடல்கள்.

ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?

மொத்தப் படத்தையும் உணர்த்தும் ஒரு frame எப்போதுமே பட போஸ்டர்களாக இருக்கும். ஜுராசிக் பார்க் படத்தில் Dinosaurs ruled the planet என்கிற பதாகை மேலே விழுந்து, கத்திக் கொண்டிருக்கும் டைனோசரின் லோ ஆங்கிள் ஷாட், டைட்டானிக் படத்தில் கப்பலின் லோ ஆங்கிள் ஷாட் என்பன போல.

மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் குழாய் வெடித்து நெருப்புக் கண்ணை கொப்பளித்த புகைப்படம்

சமீப காலமாக இயற்கையும் சில போஸ்டர்களை செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. கடந்த வருடத்தில் கலிபோர்னியாவின் வானம் சிவப்பான புகைப்படம், மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் குழாய் வெடித்து நெருப்புக் கண்ணை கொப்பளித்த புகைப்படம், தற்போது கிரேக்கத்தில் நேர்ந்த காட்டு தீ புகைப்படம் போன்றவை இயற்கையின் சமீபத்திய போஸ்டர்கள்.

இந்த சூழலிலேனும் காலநிலை மாற்றம் உருவான உண்மையான காரணத்தை பேச வேண்டும்.

குற்றத்தை விசாரிக்காமல் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது. குற்றவாளிகளை அடையாளம் காணாமல் தண்டனை கொடுத்தால் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிட்டாது.

காலநிலை மாற்றத்துக்கான அடிப்படை காரணம் முதலாளித்துவம்

அவரவர் நாட்டின் வளத்தை சுரண்டுவதை தாண்டி வேறுவழியில்லாத சூழலில் முதலாளிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நீராவி எஞ்சின் 19-ம் நூற்றாண்டில்  கிடைத்தது.

பிற நாடுகளில் இருந்து வளங்களை சுரண்டி கொண்டு வரும் வாய்ப்பை ரயில் பாதைகள் உருவாக்கின. முதலாளி இருக்கும் நாட்டுக்குள்தான் சந்தை இருக்கும் என்ற நிலை போய் பல நாட்டு சந்தைகள் உருவாகவும் சூழல்கள் ஏற்பட்டது.

இன்று நாம் பேசும் கார்பன் உமிழ்வு வாழ்க்கைக்கான தொடக்கப்புள்ளி ரயில்களுக்கான கார்பனெடுக்க நிலம் தோண்டப்பட்டபோது போடப்பட்டது. பலவகை முதலீடுகளுக்காகவும் வளச்சுரண்டலுக்காகவும் மேலும் மேலும் நிலம் தோண்டப்பட்டது.

பெட்ரோல், மீதேன் என தோண்டி தோண்டி உற்பத்தி பெருக்கி இன்று நுகர்வாளர்களை விட அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையை முதலாளிகளின் வெறி உருவாக்கியிருக்கிறது.

இப்பதிவை படிக்கும் சூழலில் கடலையும் கூறு போட்டு விற்கும் மசோதாவை ஐ.நா-வின் சுற்றுச்சூழல் சாம்பியன் நிறைவேற்றி இருக்கிறார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

என்னதான் தீர்வு?

Hypothetical Question. தீர்வுக்கான காலத்தை கடந்துவிட்டோம். இருந்தாலும் தெரிந்து கொள்வோம்.

கலிபோர்னியாவின் வானம் சிவப்பான புகைப்படம்

காலநிலை மாற்றம் பற்றி கவலைப்படும் முதலாளித்துவ அறிஞர்களோ, முதலாளித்துவ அரசியல்வாதிகளோ ஐ.நா-வோ உண்மையில் சுற்றுச்சூழலை அழிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை நேரடியாக கூட ஒன்றும் சொன்னதில்லை.

நியாம்கிரி தொடங்கி தூத்துக்குடி வரை நீளும் மக்களின் போராட்டங்கள்தாம் பகாசுர நிறுவனங்களை எதிர்த்து நின்று போராடி விரட்டி விட்டிருக்கின்றன.

தம் மண்ணை, தன் மொழியை, தன் வரலாறை காக்கப் போராடுவதற்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் நிறுவனங்களையும் திட்டங்களையும் எதிர்த்து போராடுவதற்கும் வித்தியாசங்கள் இல்லை.

பெருவிகித உற்பத்தியே பேரழிவுக்கான காரணம் என்கிற இடத்தை அடைந்துவிட்டோம். பெருந்தேசியமும் முதலாளித்துவமும் பேரழிவுக்கான அடிப்படை காரணங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

படிக்க :
♦ கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
♦ பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !

எடுக்கப்படும் வளம் எடுக்கப்படும் மண்ணுக்கே திரும்ப வேண்டும். அம்மண்ணின் மக்களுக்கே பயன்பட வேண்டும்.

குறிப்பிட்ட மக்கள் தொகுதி இருக்கும் எல்லையை வளமும் உற்பத்தியும் தாண்டும் போது மக்களுக்கும் வளத்துக்கும் அந்த வளத்தை கொடுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் உறவு அறுகிறது.

அப்பகுதியில் இருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் உட்பட்டு வளம் எடுக்கப்பட வேண்டுமென்கிற கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. உயிர்ச்சூழலின் மீட்டுருவாக்கம் தடைபடுகிறது. அழிவு உறுதிபடுகிறது.

ஃபேஸ்புக் பார்வை
முகநூலில் : Rajasangeethan

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க