டந்த 150 ஆண்டுகளில் கோடைகாலத்தில் வந்த மூன்று புயல்களில் ஃபானியும் ஒன்று. ஒடிசாவிலும் மேற்கு வங்கத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திய இந்த புயல் 38 பேரை பலிவாங்கியது.

பருவநிலை மாற்றம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வங்காள விரிகுடாவில் வெப்பமாதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெப்ப காலங்களை இனி எதிர்நோக்கியுள்ளோம்.

பிற எச்சரிக்கைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் வெப்பநிலை 46 டிகிரியை தொட்டிருக்கிறது. மூவர் இறந்துள்ளனர். வெப்ப அனல் வீச்சு காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. கூடுதலாக பருவ நிலை மாற்றம் இயற்கையை மட்டுமல்ல, மனிதர்களில் மரபணு பன்முகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

ஆனால், இத்தகைய அவசர பிரச்சினை குறித்து ஒன்றரை மாத நீண்ட தேர்தலில் பேசப்படவே இல்லை.

இணைய ஊடகங்களில் சிலர் எழுதியுள்ளதைப்போல, ஏழ்மையிலிருந்து பயங்கரவாதம், வேலையின்மை உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் எந்தவொரு அரசியல்வாதியும் பருவநிலை என்ற சொல்லை உச்சரிக்கக்கூட இல்லை.

படிக்க:
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
♦ கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!

பாஜக-வும் காங்கிரசும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து தெரிவித்துள்ளனதான். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்தும் காடுகளை பாதுகாக்கும் வகையில் மாநிலங்களுக்கு ‘பசுமை போனஸ்’ திட்டம் என்பது குறித்தும் பாஜக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி நாட்டின் நீராதாரங்களை புதுப்பிப்போம் எனவும் கூறியுள்ளது.

ஆனால், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம் குறித்த முன்னெச்சரிக்கை திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் 30% குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதன் காரணமாக ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே எந்தவொரு ஆய்வின் முடிவும் தெரிவிக்கும் உண்மை.

இது ஒன்றும் அணு ஆயுதப் போர் போல் இந்தியர்கள் காண முடியாத அச்சுறுத்தல் அல்ல. பருவநிலை மாற்றம் ஏற்கெனவே நம்மைச் சுற்றி நிகழ ஆரம்பித்துவிட்டது. நம்முடைய வாழ்க்கையையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது.

இதுகுறித்து அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். படுமோசமான குறிகாட்டிகளான தீவிர வானிலை நிகழ்வுகளிலிருந்து மோசமடைந்து வரும் மண், நிலத்தடி நீர் குறைவது வரை பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது.

இங்கிலாந்து இந்த மாதம் ‘பருவநிலை அவசரநிலை’ என்ற முயற்சியை எடுத்துள்ளது. இதை பெயரளவிலான செயல்பாடு என சிலர் சொன்னாலும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் இத்தகைய முயற்சிகள் மாற்றங்களை நிகழ்த்த உதவலாம்.

இந்தியாவில் ஏழ்மை, வேலையின்மை உள்ளிட்ட தீர்ப்பதற்குரிய பல பிரச்சினைகள் உள்ளன என்பது உண்மையே. ஆனால், ஃபானி புயல் ஏற்படுத்திய வலிமிக்க இழப்புகள் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளும் வாக்காளர்களும் பருவநிலை மாற்றம் என்பது பேச வேண்டிய பிரச்சினை என்பதை உணர வேண்டும்.

மாறாக, மதவாத அரசியலும் முந்தைய பிரதமர்கள் குறித்த தேவையற்ற பேச்சுக்களும்தான் தேர்தல் பிரச்சார களத்தை ஆக்கிரமித்துள்ளன.


கட்டுரை : ரோஹன் வெங்கட்ராமகிருஷ்ணன்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : ஸ்க்ரால் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க