ரோனா உள்ளிட்ட பெருந்தொற்று நோய்க் கிருமிகள் உருவாகிப் பரவுவதற்கும், முதலாளித்துவப் பெருவீத உற்பத்தியால் இயற்கை சூழல் மாசுபட்டிருப்பதற்கும் இடையே நெருங்கிய தொடர்பிருப்பதைச் சுட்டிக்காட்டி, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களும் வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள்.

இயற்கையையும் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்றால், சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய திட்டங்களை, தொழில்களைத் தடை செய்ய வேண்டும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள், விதிமுறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். இது பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய வழி. ஆனால், மோடி அரசோ இதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது.

ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டங்களை மிகக் கேடாகத் தளர்த்த முயற்சிப்பதோடு, சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்குச் சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாக அனுமதியும் கொடுத்திருக்கிறது, மோடி அரசு.

ஒரு மரத்தைச் சாய்ப்பதற்கு அதனைச் சிறுகச் சிறுக வெட்டுவதற்குப் பதிலாக, அதன் வேரில் வெந்நீரையோ, வேறு ஏதாவது இரசாயனத்தையோ ஊற்றிவிட்டால், அது எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் சிறுகச்சிறுகப் பட்டுப்போய் அழிந்துவிடும். அப்படிச் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் வேரில், திருத்தம் என்ற பெயரில் வெந்நீர் ஊற்றியிருக்கிறது, மோடி அரசு.

விசாகப்பட்டிணத்தில் இயங்கிவரும் எல்.ஜி. பாலிமெர் ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மூச்சுத் திணறலுக்குள்ளாகி உயிருக்கு போராடும் குழந்தை. (கோப்புப் படம்)

எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன்பாக, அத்திட்டம் அமையவுள்ள பகுதியின் சுற்றுப்புறச் சூழலில் அத்திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பதும், அத்திட்டம் குறித்து அப்பகுதி மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய விரிவான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதும் தற்போது நடைமுறையிலுள்ள சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையான விதிமுறைகள்.

இவை இரண்டையும் பெயரளவிலாவது பூர்த்தி செய்வதன் அடிப்படையில்தான் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு முறையாகச் சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெறப்படவில்லை என்ற அடிப்படையில்தான் அத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.

இந்த விதிமுறைகள் இரண்டையும் நடைமுறைப்படுத்துவதில் சில விதி விலக்குகள் உள்ளன என்றபோதும், இந்த விதிமுறைகளிலிருந்து தமக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை. 2006 -ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு விதிமுறைகளைத் திருத்தியிருப்பதன் மூலம் அம்முதலாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, மோடி அரசு.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் ஊரடங்கு அறிவிப்பதற்குச் சற்று முன்னதாக வெளியிட்ட சுற்றுப்புறச் சூழல் தாக்கம் குறித்த அறிவிக்கை 2020, ஏற்கெனவே இருந்துவரும் விதிமுறைகளில் மூன்று முக்கியமான தளர்வுகளை முன்மொழிந்திருக்கிறது.

படிக்க:
சந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் !
‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

முதலாவதாக, சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றியே, ஒரு திட்டத்தைத் தொடங்கவோ அல்லது ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் திட்டத்தை விரிவாக்கவோ அனுமதி அளிக்கிறது, இந்த அறிவிக்கை.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே, அது போல, சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கப்படும் திட்டங்கள் குறித்துப் பிற்பாடு ஒரு கமிட்டியைப் போட்டு ஆய்வு செய்வார்களாம். அந்த கமிட்டி தரும் அறிக்கை எதிர்மறையாக இருந்தால், ஒன்று திட்டத்தை ரத்து செய்வார்களாம்; இல்லையென்றால், அபராதம் விதித்துத் திட்டத்திற்கு அரசு இசைவு தெரிவிக்குமாம்.

முறைகேடுகள், விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் எப்பேர்பட்ட நியாயம்! பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளியைத் தண்டிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அக்காமுகனைத் திருமணம் செய்து வைக்கும் நிலப்பிரபுத்துவ கட்டப் பஞ்சாயத்துக்கும் இதற்கும் வேறுபாடு உண்டா?

ஒரு வனப்பகுதியையோ அல்லது விளை நிலத்தையோ அழித்து உருவாக்கப்படும் திட்டங்கள் பிற்பாடு ரத்து செய்யப்பட்டாலும், அழிக்கப்பட்ட இயற்கையை அல்லது எளிய மக்களின் வாழ்க்கையை பழையபடி மீட்டுருவாக்கம் செய்துவிட முடியுமா? திட்டம் தொடங்கிய பிறகு ஆய்வு, அனுமதி, ரத்து என்பதெல்லாம் இயற்கை மீது, மக்களின் வாழ்க்கை மீது ஏவிவிடப்படும் சதித்தனமான நாசவேலைகள்தான்.

மேலும், இந்தியாவின் அதிகார வர்க்க கமிட்டிகளின் யோக்கியதை என்னவென்பது நாம் அறியாததா? போபால் விஷவாயு விபத்து விசாரணையை நினைவுபடுத்திப் பாருங்கள். யார் சுற்றுப்புறச் சூழலை நாசப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் அதற்குரிய தண்டத் தொகையைச் செலுத்த வேண்டும் (Polluters must pay) என்பதுதான் இயற்கை நீதி. ஆனால், உச்சநீதி மன்றமோ போபால் விஷவாயு வழக்கில் உரிய நட்ட ஈடு செலுத்துவதிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றியது. இந்த உத்தரவால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடும், தொடர் மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும் கிடைக்கவில்லை. மாசுபடுத்தப்பட்ட அந்தப் பகுதி மீட்டுருவாக்கமும் செய்யப்படவில்லை.

இதுவொருபுறமிருக்க, கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட் சுற்றுப்புறச் சூழல் குறித்த வழக்கொன்றில் அளித்த தீர்ப்பில், திட்டம் தொடங்கிய பிறகு அனுமதி (post facto approval) வழங்க மைய அரசிற்கு அதிகாரம் கிடையாதென்றும், அப்படி அனுமதி வழங்குவது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அடிப்படை நியதிகளுக்கு எதிரானதென்றும்” தீர்ப்பளித்திருக்கிறார். இத்தீர்ப்பை ஓரங்கட்டிவிட்டுத்தான் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மோடி அரசு.

இரண்டாவதாக, குறிப்பான சில திட்டங்களுக்கு அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்துக்கேட்கத் தேவையில்லை எனக் கூறுகிறது, 2020 அறிவிக்கை. மற்ற திட்டங்களுக்குப் பொருத்தவரையில், பொதுமக்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த கால அவகாசத்தை 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்துள்ளது. மேலும், இத்திருத்தத்தில் குறிப்பான திட்டங்கள் என்பதற்கு எவ்வித வரையறையும் இல்லாததால், எல்லா திட்டங்களையும் இதன் கீழ் கொண்டுவந்து விடும் மோசடியும் இதனுள் மறைந்தே இருக்கிறது.

அதிகார வர்க்கத்தால் நடத்தப்படும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்துமே நாடகங்கள்தான். போலிசைக் குவித்து அச்சமூட்டும் விதத்திலும், அதனையும் மீறி மக்கள் எழுப்பும் மாற்றுக் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிட்டும்தான் “கருத்துத் திணிக்கும் கூட்டங்கள்” நடத்தப்படுகின்றன. இந்தத் திருத்தமோ ஒப்புக்காகக்கூட அத்தகைய கூட்டங்களை நடத்தத் தேவையில்லை எனக் கூறி, அந்நாடகங்களுக்கு மங்களம் பாடிவிட்டது.

மூன்றாவதாக, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட கேந்திரமான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கும் சலுகையை வழங்குகிறது, 2020 அறிவிக்கை. ஆனால் இந்த வரைவறிக்கையில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டங்கள் என்றால் என்னவென்பதற்கு எவ்விதமான தெளிவான வரையறையும் இல்லை. கேந்திரமான திட்டங்கள் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்வதன் வழியாக, எந்தவொரு திட்டத்தையும் அதனுள் கொண்டுவந்து சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பதையே காலில் போட்டு மிதித்துவிட முடியும். இதன் மூலம் இயற்கை வளங்கள் சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்வாதாரங்களையும் கேள்வி கேட்பாரின்றிக் கபளீகரம் செய்துவிட முடியும்.

இந்த மூன்று திருத்தங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், இனி புதிய திட்டங்களுக்கோ அல்லது பழைய திட்டங்களின் விரிவாக்கத்திற்கோ சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடும் தேவையில்லை; பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பொருள்படுகிறது. இவ்வாறான திருத்தங்கள் ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலைகளுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுவது போன்றதாகும்.

படிக்க:
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !

இவை ஒருபுறமிருக்க, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, அறிவிக்கை 2020 மிகவும் வெளிப்படையாக ரியல் எஸ்டேட் முதலைகளின் நலனை முன்னிறுத்திக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீடும், மக்களின் கருத்தும் கேட்கப்பட வேண்டும் என இருந்த விதியை, 1,50,000 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலும் கட்டப்படும் கட்டுமானங்களுக்குக்கூட இவையிரண்டும் தேவையில்லை என்ற திருத்தத்தை முன்வைத்திருக்கிறது.

மேலும், மிக முக்கியமாக, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்போடு தொடர்புடைய தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டுத் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வந்த பல்வேறு ஆணையங்களையும் ஒரே மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் கட்டமைப்பு சீர்திருத்தத்தையும் கொண்டுவந்திருக்கிறது, மைய அரசு. இம்மாற்றம் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஒற்றைச் சாளர அனுமதி முறை தவிர வேறில்லை.

அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டப்படவுள்ள உலகின் மிக உயரமானதும், இந்தியாவிலேயே மிகப்பெரியதுமான திபாங்க் அணைக்கட்டுத் திட்டத்தை எதிர்த்து மிஷ்மி பழங்குடியின மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

இவற்றுக்கெல்லாம் அப்பால், தற்போது ஊரடங்கியிருக்கும் சூழலைப் பயன்படுத்தி டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம், அருணாச்சலப்பிரதேசத்தில் ஈடலின் அணை கட்டும் திட்டம், வேடந்தாங்கல் பகுதியிலுள்ள மருந்து தயாரிக்கும் ஆலை விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது, அசாமிலுள்ள பட்காய் யானைகள் வழித்தடப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது, கோவாவிலுள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக நெடுஞ்சாலை அமைப்பது, கிர் தேசியப் பூங்கா பகுதியில் சுண்ணாம்பு சுரங்கம் அமைப்பது எனச் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்கிறது, மோடி அரசு.

நாடாளுமன்றம் கூடாதநிலையில், இந்த அனுமதியை எதிர்க்கட்சிகள் பிரச்சினையாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே 30 திட்டங்களைப் பற்றி விவாதிப்பதற்கென காணொலி கூட்டத்தைக் கண்துடைப்பு நடவடிக்கையாக நடத்தியிருக்கிறது. இவ்விவாதங்களில் திட்ட அனுமதிக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக, துறைசார்ந்த வல்லுநர்கள் எவரும் தமது கருத்தை முழுமையாகத் தெரிவிக்க வாய்ப்பளிக்காத வண்ணம் ஒவ்வொரு திட்டத்தின் மீதான கருத்தையும் வெறும் 10 நிமிடங்களுக்குள் தெரிவிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டதை எதிர்த்து 60 பிரமுகர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களது செயல்கள், “நீரோ மன்னனை நினைவுபடுத்துவதாக”ச் சாடியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்ட அறிவியல் அறிஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் அடங்கிய 291 பேர் கொண்ட குழு, “நாடு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கையில், எவ்வித ஆய்வுகளுமின்றி பல்வேறு திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு” மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவர்களின் கடிதங்களெல்லாம் எங்கே போயிருக்கக்கூடுமென்று சொல்லத் தேவையில்லை. நல்வாய்ப்பாக, இவர்களுள் ஒருவரையும் நகர்ப்புற நக்சல்கள் என சங்கப் பரிவாரக் கும்பல் முத்திரை குத்தவுமில்லை.

மாற்றுக் கருத்து, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது மோடிக்கு எந்தளவிற்கு வன்மமும் வெறுப்பும் உண்டோ, அதே அளவிற்கு சுற்றுப்புறச் சூழல் விதிகளின் மீதும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் அமைப்புகள், செயல்வீரர்கள் மீதும் மோடிக்கு வன்மமும் வெறுப்பும் உண்டு. அவர் 2014 பிரதமர் பதவியில் உட்கார்ந்தவுடனேயே, அவரது அரசு பெருந்திட்டங்களுக்கான சுற்றுப்புறச் சூழல் அனுமதிக்கு இணையதள வழியில் விண்ணப்பித்தால் போதும் என ஒற்றைச்சாளர முறையைக் கொண்டு வந்ததும்; சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்துக் கருத்துத் தெரிவிப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவரது அரசு அவதூறு செய்து வருவதும் இந்த வன்மத்தைப் புட்டு வைக்கின்றன.

சென்னை – எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட கச்சா எண்ணெய்க் கசிவால் படிந்த மாசை வாளிகளில் வழித்து அப்புறப்படுத்தும் தன்னார்வலர்கள் : எப்பேர்பட்ட தொழில்நுட்பம்!

ஓரளவிற்குக் கட்டுக்கோப்பான சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே, நமது நாட்டின் சுற்றுப்புறச் சூழல் எந்தளவிற்கு நாசப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு மாசடைந்த நொய்யல் ஆறு தொடங்கி பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெயை வாரி எடுக்க வாளிகளைப் பயன்படுத்திய அவலத்தை நாடே கண்டது. மாசடைந்து போன சுற்றுப்புறச் சூழலை மீட்டுருவாக்க இந்திய அரசிடம் உயர் தொழில்நுட்ப அறிவு எதுவுமில்லை என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பதற்கே வேட்டு வைக்கக்கூடிய திருத்தங்களை ஊரடங்கு நேரத்தில் கொண்டுவந்து, அவற்றைச் சட்டமாக்கிவிடத் துடித்து வருகிறது, மோடி அரசு.

இத்திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டால், சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நீதிமன்றத் தடையை முடக்கிப்போட்டுவிட்டு நடைமுறைக்கு வரும். கர்நாடகா அரசு காவிரியில் கட்டத் திட்டமிட்டிருக்கும் மேகதாது அணையும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டத் திட்டமிட்டிருப்பதும் செயல் வடிவம் பெறும். மிகவும் முக்கியமாக, காவிரி டெல்டாவில் கேள்வி கேட்பாரின்றி ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு வழி திறந்துவிடப்படும். சுருக்கமாகச் சொன்னால், இத்திருத்தங்கள் தமிழகத்தைச் சுடுகாடாகவும், வறண்ட பாலையாகவும் மாற்றக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன.

தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முதலீடுகளை ஈர்ப்பது என்ற தேன் தடவிய வார்த்தைகளுக்குள் ஒளிந்துகொண்டுதான், வடமாநில பா.ஜ.க. அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களை, முதலாளிகள் நலச் சட்டங்களாகத் திருத்தியுள்ளன. நாட்டின் கேந்திரமான அனைத்துத் துறைகளிலும் இந்தியத் தரகு முதலாளிகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதிப்பதற்கு ஏற்ப சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது என்ற போர்வையில் பெரும் வியாபாரிகளின் நலனை முன்னிறுத்தி அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இலவசமாகவும் மானியக் கட்டணத்திலும் வழங்கப்படும் மின் விநியோகக் கட்டமைப்பை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாகத்தான் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களிலும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கு ஏற்றபடி திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது, மோடி அரசு.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தீர்வுகளை முன்வைத்து தனித்தனியாகப் போராடுவது எதிர்ப்புகளைப் பலவீனப்படுத்தக் கூடும். மாறாக, ஒரே தீர்வாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை மக்களின் கரங்களுக்கு மாற்றும் சமூக, பொருளாதார தீர்வை முன்வைத்துப் போராடுவதுதான் ஒரே மாற்று!

– பூங்குழலி
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

2 மறுமொழிகள்

 1. எல்லாமே பட்ட பகிரங்கமாக நடந்து வரும் சூழலில்,மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதன் அமைச்சகம் உள்ளிட்டவர்கள் வாய் திறவாமல் வரி பணத்தில் சுகபோகங்களை அனுபவித்து வரும் இவர்கள் தப்பிதவரிகூட உண்மையை பேச மறுக்கிறார்கள், அப்படி உத்தமமான இவர்கள் செயல்படுவார்களேயானால் இன்றையதினம் வரை,கொரானாவுக்கு காரணமான மாசு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை…??? மெய்ஞ்ஞான முறையில் உண்மையை கண்டு பிடிக்க வேண்டிய அமைப்புக்கள் மெத்தனமாக இருப்பார்களேயானால்…நம் முன்னுள்ள கடமைகளுக்கு கூடுதல் பொறுப்பு வந்துள்ளது என கூர்ந்து செயல்படவும்…மயித்தகட்டி மலையை இழுக்கும் வேலையான ஆன்லைன் மூலமே சாதிக்க இயலும்…

 2. திருடன் வந்தாக்கூட கொஞ்சமாவது விட்டுவச்சுட்டு போவான்

  இவனுங்க ரொம்ப பெரிய திருட்டு
  கும்பலா இருக்கானுங்களே

  இந்த கும்பலுக்கு சப்போட்டு நம்ம
  ஒவ்வொரு குடும்பத்திலேயும் இருக்காங்க.

  எடுத்து சொல்லி பாப்போம்🤨

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க