ந்தியாவில் பெருநிறுவனங்களும், ஆலைகளும், சுரங்கங்களும் பின்பற்ற வேண்டிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா -2006- ஐ ரத்து செய்துவிட்டு, அதனை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான வகையில் திருத்தி சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 என்ற பெயரில் ஒரு சட்ட வரைவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் பல்வேறு கட்டுமானங்களால் உண்டாகும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான விதிமுறைகளை உள்ளடக்கி கொண்டுவரப்பட்டதுதான் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2006. இந்த மசோதாவில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீக்கிவிட்டு இந்த புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.

தொழில் செய்வதை எளிமையாக்குவது மற்றும் நிறுவனங்கள், ஆலைகள், சுரங்கங்களின் விரிவாக்கத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், ஒடீசா ஆகிய மாநிலங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மீறப்படுவதால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் கொள்கை ஆய்வுக்கான மையமும் நமதி சுற்றுச்சூழல் நீதித் திட்டத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவும், தற்போதைய சு.பா.ம. மசோதா – 2020 (சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா 2020) – வரைவில் உள்ள பல்வேறு குளறுபடிகளை எதிர்த்துக் குரல் எழுப்பியிருக்கிறது.

இந்த வரைவில், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகள், நிறுவனங்கள், சுரங்கங்களுக்கான மூன்றாம் தரப்புக் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தெளிவாக கொடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
“தேசிய முக்கியத்துவம் கொண்ட அரசு நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் ஈடுபடலாம் என்று இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், சுமார் 201 திட்டங்களைக் கண்காணிப்பதில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சுணக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மை பல சமயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கொள்கை ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்த மஞ்சு மேனன்.

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

இந்த புதிய வரைவில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்கள் குறித்த தெளிவான விளக்கம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஏற்கெனவே மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் போன சுமார் 235 திட்டங்களில், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் நடந்துள்ளன. இதனால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச் சூழலிய வழக்கறிஞர் மணீஷ் ஜேஸ்வானி இது குறித்துக் கூறுகையில், ”தற்போது முன் மொழியப்படும் வரைவு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமானால், இந்த நாட்டின் சுற்றுச் சூழலுக்கு, மிகப்பெரும் சூழலியல் பேரழிவைக் கொண்டுவரும். காட்டுவாழ் விலங்குகள், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.” என்கிறார்.

சுற்றுச்சூழலியல் நடைமுறையில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு, ஆலோசனை ஆகியவை அனைத்தும் அதன் ஒருங்கிணைந்த பாகமாகும். இது பகுதி மக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அத்திட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து தங்களது அக்கறையைக் காட்டவும், குரலை எழுப்பவும் உரிமை வழங்குகிறது. சட்டத்தில் இந்த வழிமுறைகள் இருக்கும்போதே கார்ப்பரேட் நிறுவனஙக்ள் அதனை மீறிச் செயல்படுகின்றன. இந்த புதிய வரைவு பல்வேறு திட்டங்களுக்கு இத்தகைய ஒப்புதல் எதையும் நிறுவனங்கள் பெறத் தேவையில்லை என்று கூறுகிறது.

பாசனத் திட்டங்கள், கட்டிடங்கள், கட்டுமானங்கள் மற்றும் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நவீனப்படுத்துதல், உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ”சிறப்பம்ச திட்டங்கள்”, எல்லைப் பகுதிகளில் குழாய் பதிப்பு, 12 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல்சார் திட்டங்கள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு வழங்குகிறது இந்த மசோதா.

”சிறப்பம்ச திட்டங்கள்” என்ற பதம் புதியதாக இந்தமுறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவான இந்தப் பதத்தைப் பயன்படுத்தி, எந்த ஒரு திட்டத்தையும் இந்த வகையினத்திற்குள் கொண்டுவந்து பொதுமக்கள் கருத்துக் கேட்பில் இருந்து மத்திய அரசு நினைத்தால் விலக்கு அளிக்க முடியும்.

அதே போல மொத்தத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை 30 நாட்களிலிருந்து வெறும் 20 நாட்களாக சுருக்கி விட்டது அரசு. இந்த 20 நாட்களில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கொண்டு வரப்படும் புதிய திட்டத்தைப் புரிந்து கொண்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பரிசீலித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்வது சாத்தியமற்றது. கருத்துக் கேட்கக் கூடாது. ஒரு வேளை கேட்டாலும் அது பெயரளவிற்கு இருக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சு.பா.ம.மசோதாவில், திட்டங்களை செயல்முறைப்படுத்துவோர் 6 மாதத்திற்கு ஒருமுறை, சுற்றுச் சூழல் விதிமுறையை ஒழுகுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய 2020-ம் ஆண்டு மசோதா, அதனை ஓராண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் எனகுறிப்பிடுகிறது.

மேலும் கடந்த காலங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பல்வேறு உத்தரவுகளை மறுதலிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகள் இந்த சட்ட வரைவில் உள்ளன. மொத்தத்தில் இந்த புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்பு, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அந்தப் பகுதி மக்களோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை.

உலகளாவிய சூழலியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் அதீத மழை, அதீத வறட்சியால் பாதிக்கப்படப் போவது நாமும்தான் என்பதை நினைவில் கொள்வோம். !


நந்தன்
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க