மார்ச் 24-ஆம் தேதி வெறும் நான்கு மணி நேர அவகாசத்துக்குள், இடம்பெயர் தொழிலாளர்கள் ஊர் போய் சேரும்படி கூறிவிட்டு ஊரடங்கை அமலாக்கினார் மோடி. 44 நாட்களாகியும் இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் போய் சேர இன்னமும் நடந்துகொண்டே இருக்கிறார்கள். பலர் வீடு போய்ச் சேர்ந்திருக்கிறார். சிலர் வீடு சேராமலேயே மரணித்திருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் 40 வயதான ராஜேஷ் சஹானி. குஜராத்தின் அங்கலேஷ்வரில் இருந்து உத்தரபிரதேசத்தின் குஷி நகர் வீட்டிற்கு சைக்கிள் சென்று கொண்டிருந்த அவர், வீடு சேரும் முன் உயிரிழந்தார்.
ராஜேஷின் உடல் மே 4 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 8 -இல் அந்த வழியே சென்ற ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மின் நிலையத்தின் பணியாளர் குடியிருப்பில் வசித்த ராஜேஷ், அங்கலேஷ்வரிலிருந்து 1,500 கி.மீ தூரத்தில் உள்ள குஷிநகரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சைக்கிளில் கிளம்பியுள்ளார்.
பயணத்தில் ஐம்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் ராஜேஷ் நிலை குலைந்து சரிந்திருக்கிறார்.
குஜராத்தில் உள்ள கர்ஜன் பொது மருத்துவமனையில் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் “சோர்வு காரணமாக இறந்தார்” என்று கூறினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் “… பிரேத பரிசோதனை குறித்த ஆரம்ப அறிக்கைகளின்படி, அவர் சோர்வு காரணமாக இறந்தார். அவருக்கு வேறு எந்த நோய்களும் இல்லை, ஆரோக்கியமாக இருந்துள்ளார். அவருக்கு கோவிட்-19 அறிகுறிகள் எதுவும் இல்லை… ” ராஜேஷின் மரணம் குறித்து கூறினார்.
ஆனால் ராஜேஷின் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவர் இறந்ததற்கான காரணம் வேறுபட்டது. “சோர்வு அவரைக் கொல்லவில்லை, இதுபோன்ற நெருக்கடி காலங்களில் குடும்பத்தினரை சந்திக்க முடியாத அவல நிலையில் இருந்துள்ளார். எங்களால் அவரை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை” என்று அவரது மனைவி இந்திராவதி கூறுகிறார்.
ராஜேஷின் மரண செய்தியை அதே அங்கலேஷ்வர் மின் நிலையத்தில் தங்கியிருந்த அவரது மூத்த சகோதரர் ராஜு மூலம் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
உ.பி.யின் கிராமத்திலிருந்து குஜராத்தின் மின் நிலையத்தில் பணிபுரிய வந்த 26 பேரில் ராஜேசும் ஒருவர். தனது சகோதரர் ஏற்கனவே வந்த நிலையில், கடந்த பிப்ரவரியில்தான் ராஜேஷ் வந்துள்ளார். சொந்த ஊரில் அவர்களுடைய தந்தை ரிக்ஷா இழுப்பவராக இருந்தபோது, இவர்கள் விவசாய தொழிலாளர்களாக இருந்தனர்.
“அவன் சைக்கிளில் வீடு திரும்பும் திட்டம் குறித்து என்னிடம் பகிர்ந்து கொள்ளவே இல்லை. பணி தொடங்கப்பட்ட நிலையில், அவன் ஏன் ஏதும் சொல்லிக் கொள்ளாமல் சென்றான் எனத் தெரியவில்லை” என்கிறார் ராஜூ.
ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இதுவரை 42 தொழிலாளர்கள் நடந்து சென்று ஊர் திரும்ப முடியாமல் இறந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மக்கள் மீது கிஞ்சித்தும் அக்கறையற்ற பாஸிஸ்டுகளி்ன் ஆட்சி, பேரிடர் காலங்களை கடுமையாக்கிக் கொண்டிருக்கிறது. பணியும் இல்லை, உணவும் இல்லை; நோய்க் குறித்த அச்சத்தில் இடம் பெயரும் தொழிலாளர்களை ஆற்றுப்படுத்த அரசாங்கங்களுக்கு அக்கறை இல்லை. கொத்துகொத்தான மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
– கலைமதி
நன்றி: த வயர் Lockdown: Gujarat Power Plant Worker Dies Trying to Cycle Home to Uttar Pradesh Village
இந்த கொடுங்கோன்மை அநீதிகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி மோடி வகையறாக்களின் மீதுள்ள தீர்ப்பு வெகு தொலைவில் இல்லை…