ரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருந்தபின், பெரிய நகரங்களின் தீவிர நிச்சயமற்ற தன்மையிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால், நெரிசல் மற்றும் உயரும் வெப்பநிலை காரணமாக ரயில்கள் வெவ்வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்படுவதால், இந்த ரயில்களில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ரயில் நிலையம் ஒன்றில், தனது தாய் இறந்து விட்டதைக்கூட அறியாமல், தாய் மீது போர்த்தியிருக்கும் துணியை இழுத்து, அவரை எழுப்ப முயற்சிக்கும் சிறுவனின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி, பல செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த வீடியோ பீகார் முசாபர்பூரில் உள்ள ஒரு நிலையத்தில் எடுக்கப்பட்டது என்றும், இடம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு வந்திருக்கிறார் என்றும் என்.டி.டீ.வி சேனல் கூறியது.

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் இருந்து ரயில் ஏறியதாக, அவரது குடும்பத்தினர் கூறியதாக தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. ரயிலில் தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால், அவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ரயில் முசாபர்பூருக்குள் செல்லத் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவர் மயங்கி விழுந்ததாக என்.டி.டீ.வி தெரிவித்துள்ளது.

தனது சகோதரியின் குடும்பத்தினருடன் கதிஹார் சென்ற அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் ரயிலில் இறந்துவிட்டதால், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவருடைய குடும்பத்தினரை இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

மற்றொரு, ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் டெல்லியில் இருந்து பாட்னாவுக்குச் செல்ல 39 மணிநேரம் பிடித்ததால், பசியால் அழுத நான்கு வயது சிறுவனின் மரணம் குறித்து டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியிலிருந்து பாட்னாவுக்குச் செல்ல 39 மணி நேரம் என்பது வழக்கமான நேரத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

தையல்காரராக பணிபுரிந்த பிந்து ஆலம், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன், ஊரடங்கின் மூன்றாவது நீட்டிப்புக்குப் பிறகு டெல்லியை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தார்.

மே 23 சனிக்கிழமை காலை மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர்கள் , அன்று மதியம் 2 மணிக்கு ஆனந்த் விஹார் நிலையத்திலிருந்து டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.

ரயில் லக்னோவை அடைந்ததும் உணவு விநியோகிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அவர்களின் பயணக் குழுவுக்கு ஐந்து பாக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவர்கள் அனைவரும் 10 பூரிகளை பகிர்ந்து கொண்டனர், குழந்தைகள் டெல்லியில் இருந்து கொண்டு பாலைக் குடித்தனர்.

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?

ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் பாட்னாவை அடைவதற்கு பதிலாக, ரயில் நாள் முழுவதும் ஊர்ந்து, ஆங்காங்கே நின்றது, வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் அடைந்தது. பகலில் உணவு எதுவும் விநியோகிக்கப்படவில்லை.

“இறுதியாக திங்களன்று அதிகாலை 5 மணியளவில் ரயில் பாட்னாவை அடைந்தது … என் மகன் (நான்கு வயது முகமது இர்ஷாத்) உணவுக்காக அழுகிறான், ஆனால் பாட்னா சந்திப்பில் உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை” என்று ஆலம் கூறினார்.

பாட்னாவில், பயணிகள் தங்களது ஊர்களுக்குச் செல்ல பேருந்துகளைப் பிடிக்க வேண்டியிருந்தது, போக்குவரத்து குறைவாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

“ஒரு சிறிய டிரக் வாடகைக்கு கிடைத்தது, நாங்கள் அதை தானாபூருக்கு கொண்டு சென்றோம். தானாபூரிலும் உணவு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. முசாபர்பூருக்குச் செல்ல வேண்டிய ரயிலில் ஏறினோம். இது ஒன்றரை மணி நேரம் ஆனது, நாங்கள் காலை 10 மணியளவில் அடைந்தோம். எல்லா நேரங்களிலும் குழந்தைகள் உணவுக்காக அழுது கொண்டிருந்தார்கள்” என ஆலம் கூறுகிறார்.

முசாபர்பூர் நிலையத்தை அடைந்ததும், மேற்கு சம்பாரனுக்கான பேருந்தைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவர் இர்ஷாத் நகரவில்லை என்பதைக் கண்டார். “நாங்கள் சோதித்தோம், அவன் இறந்துவிட்டான். நாங்கள் அழுதோம்; கதறினோம். அவன் பசியாலும் வெப்பத்தாலும் இறந்துவிட்டான் என நான் நினைக்கிறேன்” என்கிறார் ஆலம்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த பின்னர், ஈத்-க்கு ஒரு நாள் கழித்து இர்ஷாத் அவர்களின் கிராமமான துலரம் காட்டில் அடக்கம் செய்யப்பட்டான்.

“அவர்கள் எங்கள் மூத்த மகனை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டார்கள். அதுவும் ஈத் நாளில். இந்த விழாவை என் வாழ்க்கையில் இனி எப்போதும் கொண்டாட முடியாது, இந்த தவறான நிர்வாகத்திற்கு முதலமைச்சர் நிதீஷ் குமாரை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்” என ஆலம் மேலும் கூறினார்.

முசாபர்பூர் மாவட்ட நீதிபதி சந்திரசேகர் சிங், கடந்த சில நாட்களாக பயணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதனால் உணவு ஏற்பாடு செய்வது கடினமாகி விட்டது என்றும் கூறுகிறார்.

“பல ரயில்கள் எந்த தகவலும் இல்லாமல் வருகின்றன. எங்களுக்கு தகவல் வழங்கப்பட்ட ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன, ஒரு ரயிலில் 1,200 அல்லது 1,500 பயணிகளின் பட்டியல் இருந்தால், சுமார் 2,000 அல்லது 2,500 பேர் வருகிறார்கள்” என்று சிங் கூறினார்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் நீண்ட கால தாமதத்திற்கு, ரயில் பாதையில் நெரிசல் இருப்பதே காரணம் என ரயில்வே அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக சனிக்கிழமை, 46 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி, ஷ்ராமிக் சிறப்பு ரயிலில், ஜான்பூருக்கு பயணம் செய்யும் போது, 60 மணி நேரம் தண்ணீர் அல்லது உணவு கிடைக்காததால் இறந்தார். கோரக்பூருக்கு சென்ற மற்றொரு ரயிலில் திங்கள்கிழமை ஒரு மாத குழந்தை வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக இறந்தது.

மற்றொரு ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் புதன்கிழமை, மாண்டுவாடி ரயில் நிலையத்தில் மற்ற பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய போது, இரண்டு பயணிகள் இறந்து கிடந்ததை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இறந்தவர்களில் ஒருவர் மும்பையில் இருந்து ஜான்பூரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 20 வயது தஷ்ரத் பிரஜாபதி மற்றும் மற்றொரு 63 வயது ராம் ரத்தன் கவுட் என அடையாளம் காணப்பட்டனர்.

பிரஜாபதி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் கவுட் “பல நோய்களுடன்” போராடிக்கொண்டிருந்தார் என தெரித்துள்ளது.

மத்திய,மாநில அரசுகள் கைவிட்ட நிலையில், நடந்து சென்று செத்துமடிந்தவர்கள், இப்போது ரயிலில் செத்து மடிகிறார்கள். இதுதான் இந்த அரசுகள் மக்களை காப்பாற்றும் இலட்சணம். இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம்?


 கலைமதி
நன்றி : த வயர்.