ந்த நாட்டின் தற்போதைய காலத்தின் வரலாறு எழுதப்படும்போது, ஒரு நெருக்கடியை நிர்வகிப்பதில் தற்போதைய ஆட்சியின் தோல்வியை மட்டும் அது பதிவு செய்யாது; அரசாங்கத்தின் எவ்வித உதவியும் இன்றி, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற எளிய மக்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களின் போராட்டங்களையும் அது பதிவு செய்யும்.

அப்படிப்பட்ட பல கதைகளில், தைரியமும் விடாமுயற்சியும் கொண்ட ஜோதி குமாரியின் கதையும் ஒன்று. பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சுமந்து ஹரியானாவின் குர்கானில் இருந்து தனது கிராமத்திற்கு 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்திருக்கிறார்.

ஜோதியின் தந்தை மோகன் பாஸ்வான் கடந்த 20 ஆண்டுகளாக குர்கானில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஜனவரி 26 அன்று, அவர் ஒரு சாலை விபத்தை சந்தித்து காயமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜோதி மற்றும் அவரது தாயார் அவரை கவனித்துக்கொள்வதற்காக ஜனவரி 31 அன்று குர்கானுக்கு வந்தனர்.

ஜோதியின் தாயார், ஃபுலோ தேவி, அங்கன்வாடியில் சமையல்காரராக பணிபுரிவதால், அவரால் குர்கானில் 10 நாட்களுக்கு மேல் தங்க முடியவில்லை. மோகனைக் கவனிப்பதற்காக ஜோதியை அங்கேயே விட்டுவிட்டு, அவர் தர்பங்காவுக்குத் திரும்பினார்.

அனைத்தும் வழக்கமாக சென்றுகொண்டிருந்தது, மோகனும் குணமாகி வந்தார். அப்போது திடீரென்று கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 24 அன்று தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில், மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தின் முடிவில், ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பின்னர், மூன்றாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, தற்போது, நாம் நான்காவது கட்டத்தில் இருக்கிறோம்.

படிக்க:
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

மோகன் பாஸ்வானைப் போல, ஊரடங்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்களை பாதித்தது. அவருக்கு வருமான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இருந்த உணவுப் பொருட்களும் தீர்ந்துகொண்டு வந்தன. அவர்கள் வாடகை செலுத்த பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.

“ஊரடங்குக்குப் பிறகு சிக்கல்கள் அதிகரித்தன” என்கிறார் ஜோதி. “எங்கள் வீட்டு உரிமையாளர் எங்களை தங்கியிருந்த அறையிலிருந்து வெளியேற்ற விரும்பினார். நாங்கள் வாடகை செலுத்தாததால் அவர் இரண்டு முறை மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். நாங்கள் உணவில்லாமல் இருந்தோம். நாங்கள் எதை சாப்பிட முடியும்? அப்பாவுக்கு எந்த வருமானமும் இல்லை, எனவே எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என முடிவு செய்தோம்”

மே 8 ஆம் தேதி, ஜோதி குர்கானில் இருந்து தனது சைக்கிளில் தந்தையை பின்னால் அமர வைத்துக்கு கிளம்பினார். நடுவில் ஒரு லாரி ஓட்டுநர் அவர்களுக்கு ஒரு குறுகிய தூரத்தை கடக்க உதவியைத் தவிர, தனது கிராமத்துக்கு திரும்பும் முழு தூரத்தையும் சைக்கிள் மிதித்தே வந்தார்.

மே 17 அன்று இரவு 9 மணியளவில் அவர்கள், 10 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சிர்ஹுல்லியை அடைந்தனர். “டிரக் டிரைவர் எங்களுக்கு சிறிது தூரம் ஒரு லிப்ட் கொடுத்தார், ஆனால் அவர்கள் வேறு பாதையில் செல்வதால் நாங்கள் கீழே இறங்க வேண்டியிருந்தது”

மோகன் தற்போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருக்கிறார், ஜோதி வீட்டில் இருக்கிறார். மே 17 அன்று முசாபர்பூரை அடைந்ததும், ஜோதி தனது குடும்பத்தினரிடம் இரவில் வீட்டிற்கு வருவதாக அறிவித்தார். மற்ற கிராமங்களைப் போலவே, சிர்ஹுல்லியில் உள்ளவர்களும் கொரோனா வைரஸைப் பார்த்து பயப்படுகிறார்கள், வெளியில் இருந்து யாரையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அந்த நாளில் வேறு சிலரும் ஊருக்கு வந்த நிலையில், இவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தனது சைக்கிள் பயணத்தைப் பற்றி பேசும் ஜோதி, “நான் ஒவ்வொரு நாளும் 100 கி.மீ.க்கு மேல் சைக்கிள் ஓட்டினேன். நாங்கள் ஒரு பெட்ரோல் பம்பில் நிறுத்தி, அங்கே இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலையில் எங்கள் பயணத்தைத் தொடங்குவோம். நாங்கள் நிறுத்திய அனைத்து பெட்ரோல் பம்புகளிலும், மக்கள் எங்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கினர். அவர்கள் எங்களை நன்றாக நடத்தினார்கள்”

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

மோகன் பாஸ்வானுக்கு எந்த நிலமும் இல்லை. இவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு மகள் ஜோதியை விட மூத்தவள், மற்றவர்கள் இளையவர்கள்.

தன் தந்தையுடன் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் எண்ணம் எப்படி வந்தது? “வீட்டில் எந்த உணவுப் பொருட்களும் இல்லை, மக்கள் நடைப் பயணமாக, மிதிவண்டிகளில் வீடு திரும்பும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டு உரிமையாளர் எங்களை வெளியே தூக்கி எறிந்தால், எங்களுக்கு தங்குவதற்கு இடமும் சாப்பிட ஒன்றும் இருக்காது என்று நான் பயந்தேன்”என்கிறார் ஜோதி.

“நான் என் தந்தையிடம் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக சொன்னபோது, அவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னால் அதை சமாளிக்க முடியாது என அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்” என தொடர்ந்தார் ஜோதி.

மோகனுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம், ஆனால் ஜோதி நம்பிக்கையுடன் இருந்தார். “நான் கிராமத்தில் இருந்தபோது, அதிகமாக சைக்கிள் ஓட்டுகிறேன். தந்தை வீட்டுக்கு வரும்போது, நான் அவரை அமர வைத்து சைக்கிள் ஓட்டுவேன். எனவே, நான் அதற்குப் பழகி விட்டேன். அதனால் அவரை பாதுகாப்பாக கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என் தந்தை என்னை ஒரு மகனைப் போலவே நடத்துகிறார், எனவே ஒரு மகன் என்ன செய்வானோ அதை செய்ய நினைத்தேன்”

சாலை விபத்துக்குப் பிறகு, மோகன் பாஸ்வானால் வேலை செய்ய முடியவில்லை. “ஆட்டோவின் உரிமையாளர் எங்களை அழைத்து கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தரமுடியாது என கூறினார்” என ஃபூலோ தேவி கூறுகிறார்.

“ஆகவே, நான் ரூ. 38,000 வங்கிக் கடனை எடுத்து ஜனவரி 31 அன்று குர்கானுக்குச் சென்றேன். இதில் குறிப்பிட்ட பணம், அவரது சிகிச்சைக்காக செலவிடப்பட்டது. மீதமுள்ளதை நான் ஜோதிவிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினேன்”

“இதற்கிடையில், நான் ஒவ்வொரு மாதமும் எனது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அனுப்பிக் கொண்டிருந்தேன், ஆனால் ஊரடங்குக்குப் பிறகு இது கடினமாகி விட்டது. நான் இதைப் பற்றி அவர்களிடம் கூறினேன்” என்கிறார் அவர்.

“ஜோதி என்னிடம் சைக்கிளில் வீடு திரும்ப இருப்பதாகக் கூறினாள். ஆரம்பத்தில், நான் அவளை அனுமதிக்க மறுத்துவிட்டேன், ஆனால் வேறு வழியில்லை” என்று அவர் கூறுகிறார்.

ஜோதி வீடு திரும்பிய சைக்கிள் மே 8 அன்று வாங்கப்பட்டது. “அருகில் வசித்த ஒரு அறிமுகமானவரிடமிருந்து நான் அதை வாங்கினேன்” என ஜோதி நினைவு கூர்ந்தார். “அவர் அந்த சைக்கிளுக்கு ரூ. 1,600 கேட்டுக் கொண்டிருந்தார். மத்திய அரசு வங்கியில் போட்ட ரூ. 1,000 பணத்திலிருந்து அவரிடம் ரூ. 500 கொடுத்துவிட்டு, மீதமுள்ளதை பின்னர் கொடுப்பதாகக் கூறினேன். கொடுத்ததுபோக மீதியிருந்த 500 ரூபாயுடன் தந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன்”

கடினமான பயணத்தைத் தவிர, தனது தந்தையை அமர வைத்து அழைத்து வந்ததைப் பார்த்து கேலி செய்தவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது என ஜோதி கூறுகிறார். “அப்பா பின்னால் அமர்ந்திருக்கும்போது ஒரு மகள் சைக்கிளில் சவாரி செய்வதைக் கண்டதால் மக்கள் எங்களை கேலி செய்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களைக் கேட்கும்போது அப்பா வருத்தப்படுவார், ஆனால் அவர் காயமடைந்திருக்கிறார் என மக்கள் அறியமாட்டார்கள் என்பதால் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன்” என்கிறார் அவர்.

“என் அப்பாவின் காயங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததால் அவர்கள் எங்களை கேலி செய்தார்கள் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. அந்த மக்களுக்கு தெரியாது” என்கிறார் ஜோதி.

நீண்ட மற்றும் கடினமான பயணம் ஜோதியை சோர்வடைய வைத்துள்ளது. “அவள் திரும்பியதிலிருந்து, அவள் உடல் வலி பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் சோர்வாக இருக்கிறாள், தூங்க விரும்புகிறாள்” என ஜோதியின் தாய் கூறுகிறார்.

ஜோதி குமாரி எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். “எனக்கு படிப்பது பிடிக்கும், எங்கள் நிதி நிலைமை அதற்கு உகந்ததாக இல்லை” என்று அவர் கூறுகிறார். “நான் பள்ளிக்குச் சென்றால், நாங்கள் நிதி நெருக்கடியை எதிர் கொள்வோம். எனவே, நான் ஒரு வருடம் முன்பு பள்ளியை விட்டு நின்று விட்டேன். ஆனால், நான் மேலும் படிக்க விரும்புகிறேன். யாராவது எனக்கு உதவி செய்தால், நான் படிப்பேன்”

ஜோதி குமாரியின் கதை ஊடகங்களில் வெளியான பிறகு, அவருடைய அவல நிலை மகிமைப் படுத்தப்பட்டது. ஜோதியையும் அவரைப் போன்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் இந்த நிலைக்குத் தள்ளிய அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை கேள்விக் கேட்பதைத் தவிர்த்து, ஜோதியின் சைக்கிள் ஓட்டும் ‘திறமை’யை விதந்தனர். சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கு வந்து, இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித்தர அழைத்தது சைக்கிள் ஃபெடரேசன். அமெரிக்க அதிபரின் மகள், ஜோதியைப் பார்த்து இந்தியாவே பெருமைப்பட வேண்டும் என்றார்.

ஆனால், எளிய பெண்ணான ஜோதிக்கு தனக்கு எது தேவை என தெரிந்திருக்கிறது. இவர்களின் வெற்று கைத்தட்டல் ஒன்றுக்கும் உதவாது என ஒதுக்கிய அவர், தனக்கு படிப்பு கிடைத்தால் போதும் என கூறிவிட்டார். ஜோதிக்கு படிப்பாவது கிடைத்தது, மற்றவர்கள் இந்த ஆட்சியாளர்களால் 60 நாட்களுக்குப் பிறகும் நடந்தபடியே இருக்கின்றனர்.


கட்டுரையாளர் : உமேஷ் குமார் ரே

தமிழாக்கம் : கலைமதி
நன்றி : த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க