லகை அரசியல், பொருளாதார ரீதியில் மேலாதிக்கம் செய்து வருகின்ற ஒரே ஒரு மேல்நிலை வல்லரசான அமெரிக்காவின் வலிமையும் செல்வாக்கும் கடந்த பத்தாண்டுகளாக குறைந்து வருகிறது. அமெரிக்காவை எதிர்க்கின்ற சக்திகளின் பலமும் குரலும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

ஆசியாவில் வடகொரியா, மத்திய கிழக்கில் ஈரான், தென்னமெரிக்காவில் வெனிசுலா என எதிரணி வலுத்துக்கொண்டு வருகிறது. அதன் நெருங்கிய கூட்டாளிகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தே குறிப்பாக ஜெர்மனி, ஃபிரான்சு ஆகிய நாடுகளிடமிருந்து தொழில், வர்த்தகப் போட்டியும் வரிவிதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. நேட்டோவின் மீதான அமெரிக்க நாட்டாமையை எதிர்த்து ஃப்ரான்சின் குடியரசுத் தலைவர், பகிரங்கமாக டிரம்பை மேடையில் வைத்துக்கொண்டே தாக்கிப் பேசியதும் அண்மை ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்துவரும் அவலங்கள்.

கொரோனா கிருமித்தொற்றின் பரவலைத் தடுக்கக் கூடத் தகுதியற்று உலகிலேயே அதிகம் பேர் கொரோனா தொற்றால் இறந்த நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது.இது அமெரிக்க அரசின் அருகதையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி மந்தத்தை (Depression) நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நான்கு கோடி பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். அதன் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் விழுந்துவிட்டது. நெருக்கடியில் இருந்து தப்பிக்க வழிவகையின்றி நிற்கிறது அமெரிக்கா. இந்நிலையில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் சரிவையும் தனது ஆட்சியின் தோல்வியையும் மறைக்க சீன எதிர்ப்புவெறியை அன்றாடம் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு தொழில், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சீனா கடும் போட்டியாளராக வளர்ந்துள்ளது. இத்துறைகளில், சீனாவின் திறனுக்கு முன் நிற்க முடியாமல் பின்தங்கியுள்ள அமெரிக்கா, தனது செல்வக்கைத் தொடர்ந்து இழந்து வருகிறது. எனவே, சீனாவின் முதலீடுகளை நிராகரித்தல், சீனப் பொருட்களின் மீதான வரிகளை உயர்த்துதல், சீனத்தின் நவீனத் தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்குள் நுழையவிடாமல் செய்தல் என அமெரிக்கா பனிப்போர் நடத்தி வருகின்றது.

தனது அமெரிக்க எஜமானனின் உத்தரவுப்படி இந்தியத் தரகு அதிகார வர்க்க பெருமுதலாளிகளின் பெரும்பிரிவினரும் அவர்களின் அரசியல் அடியாளான ஆர்.எஸ்.எஸ். –  மோடி அரசும் தீவிர சீன எதிர்ப்பு-புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புவிசார் போர்த்தந்திரரீதியில், அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய அடியாளாகவும் இந்தியா செயல்பட்டு வருகின்றது. இன்னொரு பக்கம், தனது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு கட்டுமானச் சீர்த்திருத்தங்களைச் செய்வதில் மோடி அரசு மேலும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த, இந்தியப் பொருளாதாரம் கொரோனா கிருமித் தாக்குதலை ஒட்டிய ஊரடங்கின் விளைவாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் மூழ்கிவிட்டது. இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0% தான்  இருக்குமென்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

நெருக்கடிக்குத் தீர்வாக மோடி அரசு, தனியார்மய-தாராளமய-உலகமயக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை மேலும் தீவிரமாக மேற்கொள்வதைத்தான் முன்வைக்கிறது. புதிய தாராளவாதக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை வளர்ச்சிக்கான சிறந்த வழி என்று பெருமையடித்துக் கொண்டு அமுல்படுத்துவது; அதில் நெருக்கடி ஏற்பட்டால், அதற்குக் காரணம் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை அரைகுறையாகவும் ஒருசில துறைகளிலும் மட்டும் அமுல்படுத்தியதே என்று சொல்லி, தீர்வாக புதுப்புதுத் துறைகளுக்கும் முழுமையாகவும் இன்னும் தீவிரமாக அமுல்படுத்துவதே என்று செயல்படுவதும்தான் உலகம் முழுவதும் கையாளப்பட்டு வருகிறது.

இதே சறுக்குப் பாதையைத்தான் மோடி அரசும் பின்பற்றப் போகிறது என்பதை 13-05-2020 அன்று 20 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்த போது பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

படிக்க:
இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமைகளைப் பற்றி ஏப்ரல் 28-ம் தேதி நான்காவது முறை மாநில முதல்வர்களுடன் விவாதித்த மோடி தனது அறிவிப்பில் முக்கியமான ஒரு செய்தியை உற்சாகமாகக் குறிப்பிட்டார். அதாவது, பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறப் போகின்றன என்றும் அவற்றை ஒன்றுவிடாமல் வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைத்து இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றப் போவதாகவும் அறிவித்தார். அவரது பேச்சின் உட்கிடக்கை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தரகு அதிகாரவர்க்க முதலாளியப் பிரிவினரின் உள்ளக்கிடக்கையாகும். 2020 ஏப்ரல் மாதத்திற்கு முன்பே இந்தியாவில் எச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் 1%க்கும் மேற்பட்ட பங்குகளை சீன நிறுவனம் வாங்கியதை மோடி அரசு சாதாரணமாகப் பார்க்கவில்லை. சீன நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு என்று பார்த்த மோடி அரசு இந்தியாவோடு நில எல்லை ரீதியாக தொடர்பு கொண்டுள்ள ஏழு நாடுகளில் உள்ள சீன நிறுவனம் எதுவும் இந்தியாவில் அன்னிய நிறுவன முதலீடுகள் செய்ய தடை விதித்தது.

இன்னொருவகையில் பார்த்தால், மருந்து, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற சில துறைகளில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் கச்சாப் பொருட்கள், இடைநிலை உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. உலகின் உற்பத்திக் கூடமாக (Manufacturing Hub) சீனா வளர்ந்திருப்பதை இந்திய ஆளும் வர்க்கங்களால், குறிப்பாக, அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் அடிவருடிக் குழுவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவில் சீன முதலீடுகளைத் தடுப்பது, சீனப் பொருட்களை இந்தியாவிலும் அண்டைநாடுகளிலும் விற்பதை ஒழிப்பது, அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்ற பேராசையுடன் இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா கிருமித் தாக்குதலை ஒட்டி சீனா மீது அமெரிக்கா தொடுத்துவரும் தாக்குதல் – புறக்கணிப்பை அமெரிக்காவுடன் அடிபணிந்து நெருக்கமாக்கிக் கொள்வதன் மூலம் தனது இந்த நோக்கத்தைச் சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

சீனாவில் செயல்பட்டுவரும் மருத்துவத்துறைக் கருவிகளைத் தயாரிக்கும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனியான அப்பாட் லேபரேட்டரீஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள், தங்களது உற்பத்தி நிலையங்களை இந்தியாவிற்குக் கொண்டுவந்து அமைக்க வேண்டுமென்று அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளிடமும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பிடமும் பணிவுடன் கேட்டு வருகிறது மோடி அரசு. வெளியில் பெயர் சொல்ல விரும்பாத, இந்திய அதிகாரிகள் வட்டம் சொல்வது என்னவென்றால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கக் கம்பெனிகளிடமும் வெளியுறவுத்துறை உட்பட, இந்திய அரசின் நிறுவனங்கள் மூலமும் சீனாவில் இருந்து வெளியேற இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரவேண்டுமென்று ஏப்ரல் மாதத்திலேயே இந்திய அரசு கேட்டு வருகின்றது. மருத்துவத்துறை உபகரணங்களை அளிப்பவர்கள், உணவுப் பதப்படுத்தும் கம்பெனிகள், ஜவுளி, தோல், தானியங்கித்துறைப் பொருட்கள் உட்பட, 500-க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளிடம் விவாதங்கள் நடந்துள்ளன.

மோடி அரசைப் பொருத்தவரையில் கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிகர உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 15% ஆக உள்ள பொருள் உற்பத்தித்துறையின் பங்கை 2022-ல் 25% ஆக உயர்த்த வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் தேவை என்று பார்க்கிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக 12.2 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனர். எனவே, வேலைவாய்ப்பை உருவாக்குவது உடனடி அவசியமாகவும் உள்ளது.

படிக்க:
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் இந்தியா கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது. இந்தப் போட்டியில் நின்று வளரவேண்டுமானால், அடிக்கட்டுமானத் துறையிலும் நிர்வாகத்துறையிலும் பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவர நிறைய முதலீடுகள் தேவையாக உள்ளன. இப்படிச் செய்வதன் மூலமே உலக விநியோகச் சங்கிலியில் இந்தியா தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், முதலீடுகளை ஈர்க்க வழக்கமாக புதிய தாராளவாத சித்தாந்தவாதிகளும் பொருளாதார நிபுணர்களும் பரிந்துரைப்பது என்னவென்றால், எந்தப் புதிய தாராளவாதக் கட்டுமானச் சீர்த்திருத்தங்கள் (தனியார்மய-தாராளமய-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள்) பொருளாதாரப் படுகுழியில் தள்ளியுள்ளனவோ, அந்தக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை இன்னும் அதிகமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமென்பதே அது.

குறிப்பாக, இந்தியாவைப் பொருத்தவரையில், நிலங்களைக் கையகப்படுத்துவது, தொழிலாளர் நலச்சட்டங்கள், வரிவிதிப்பு ஆகிய துறைகளில் சீர்த்திருத்தங்கள் செய்வது கட்டாயம் என்று தற்போது மோடி அரசு கருதுகிறது. குறிப்பாக, நடப்பில் இருக்கின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் தான் புதிய முதலீடுகள் வருவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளன என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கூறிவருகின்றனர். அதேபோல, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பரிமாற்ற வரியை நீக்க வேண்டுமென இ-வணிக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் வரிவிதிப்பு முறைகளில் தங்களுக்குச் சாதகமாக என்னென்ன மாற்றங்கள், சலுகைகள் கொண்டுவர வேண்டுமென்ற தங்களது விருப்பங்களை விரிவாக முன்வைக்குமாறு அமெரிக்கக் கம்பெனிகளிடம் இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது என அந்த அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், நீண்டகால நோக்கில் என்னென்ன தீர்வுகளை முன்வைக்கலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளிடம் ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, கம்பெனிகளை உடனடியாக தொடங்குவதற்கு ஏதுவாக தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி நிலவங்கிகளை உருவாக்க விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர், அவர் சீனாவுடன் வர்த்தகப் போரை நடத்தத் தொடங்கியதிலிருந்து அமெரிக்கக் கம்பெனிகள் சீனாவைத் தவிர்த்து இந்தியாவிற்கு வரவிரும்பின.

ஆனால், அப்போது மேலே சொன்ன துறைகளில் முதலீட்டாளர்களுக்கு உவப்பான சீர்த்திருத்தங்கள் செய்யப்படாததால் அவை வியட்நாமுக்கும் வேறு நாடுகளுக்கும் சென்றுவிட்டன. இவ்வாறு இழந்ததை மீட்டெடுக்கும் வகையில், அவர்கள் மனம் குளிரும் வகையில், அவர்களின் வேட்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் என்னென்ன சீர்த்திருத்தங்கள் வேண்டுமோ அவற்றையெல்லாம் பணிந்து, குனிந்து செய்யக் கைகூப்பி நிற்கிறது பிரதமர் மோடி – நிதியமைச்சர் லேடி கும்பல்.

பாசிச மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே டிரம்ப்புடன் நெருக்கமான உறவைப் பேணுவதில் கண்ணுங்கருத்துமாக செயல்பட்டு வந்தார். அப்போதிருந்தே (ஏனென்றால் அப்போதே இந்தியப் பொருளாதாரம் மிகவும் பாரதூரமான, திக்குத்தெரியாத நெருக்கடியில் வீழ்ந்துவிட்டது) அமெரிக்க முதலீடுகளுக்கும் கம்பெனிகளுக்கும் இந்தியாவை அகலத் திறந்துவிட திட்டம் போட்டு செயல்பட்டு வந்தார். டிரம்புடன் சேர்ந்து மோடி அமெரிக்காவிலும் (ஹூஸ்டன்) இந்தியாவிலும் (அகமதாபாத்) நடத்திய பிரம்மாண்ட பேரணிகள், கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்தது, 300 கோடி அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து இராணுவத் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டது, கடைசியாக, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை உடனடியாக அனுப்பி வையுங்கள், இல்லாவிட்டால் எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் பகிரங்கமாக உலகறிய மிரட்டல் விடுத்ததை ஒட்டி, அடித்துப்பிடித்துக் கொண்டு அவசர அவசரமாக அவைகளை மோடி அனுப்பி வைத்தது ஆகியவையெல்லாம் இதற்கான முயற்சிகளே.

சீனத்தில் முதலீடு செய்துள்ள கம்பெனிகளைக் கவர்ந்திழுக்க தொழிலாளர் நலச்சட்டங்கள், விவசாய நிலங்களையும் தொழிற்சாலைகள் கட்டவும் பிற பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளுக்குக் கையகப்படுத்தவும் விதிகளைத் தாராளமாகத் தளர்த்த வேண்டுமென்றும் இவை தொடர்பாக கொள்கைரீதியான முடிவுகளை எடுப்பதோடு, அவற்றில் ஊன்றி நின்று அவை தொடர்ந்து நீடிக்க உத்தரவாதம் அளிப்பதும் மிகமிக அவசியம் என்றும் வல்லுநர்கள் வற்புறுத்துகின்றனர்.

கடற்கரையோர பொருளாதார மண்டலங்களை சீனா நிறுவியது வெளிநாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுப்பதில் முக்கிய பங்காற்றியது என்று நிதி ஆயோக்கின் முன்னாள் தலைவர் அரவிந்த பனகாரியா கூறியுள்ளார். இந்தியாவிற்கோ இந்தோனேசியாவுக்கோ வராமல் வியட்நாமுக்கும் பங்களாதேசத்திற்கும் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகள் செல்வதற்குக் காரணம் இந்தியா அளிக்கின்ற சலுகைகளை, ஊக்குவிப்புத் திட்டங்களைவிட தொழில் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலைகளை, எளிதான சாதகமான விதிமுறைகளை உருவாக்கித் தராததுதான்.

எடுத்துக்காட்டாக, புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு கார்ப்பரேட் வரியாக 17% மட்டுமே விதிக்கிறோம். இந்தச் சலுகை, ஊக்குவிப்பைவிட தொழிலாளர் சந்தை மற்றும் நிலச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் முகம் சுழிக்கும்படி நமது ஏற்பாடுகள் உள்ளன. தன்னாட்சி பெற்ற வேலைவாய்ப்பு மண்டலங்களை இவர் வலியுறுத்துகிறார். இந்தத் தன்னாட்சி பெற்ற வேலைவாய்ப்பு மண்டலங்கள் ஏறத்தாழ 300 – 350 ச.கீ.மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய நில மற்றும் தொழிலாளர் சந்தைகளை வழங்கவும் எளிதான மற்றும் விரைந்து அனுமதியளிக்க கூடிய சுங்கச் சாவடிகளைக் கொண்டதாகவும் இந்த மண்டலங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆலோசனைகளை முன்வைக்கும் அரவிந்த பனகாரியா, சீனாவில் ஷென்ஜென் (Shenzhen) பிராந்தியத்தில் தாங்களே வரி, நிலம் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை இயற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட, சுங்கவரியில் இருந்து விலக்கு பெற்ற 300-500 ச.கீ.மீட்டர் கொண்ட தன்னாட்சி கொண்ட வேலைவாய்ப்பு மண்டலங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட கடற்கரை ஓர பொருளாதார மண்டலங்களால், நகரத்தில் இயங்கிவரும் கம்பெனிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்க முடிகின்றது என்கிறார்.

முன்பு, தென்கிழக்கு சீனாவில் அமைதியான ஒரு மீன்பிடிக் கிராமமாக ஷென்ஜென் இருந்தது. சுதந்திரப் பொருளாதார மண்டலமாக அதை ஆக்கியதன் விளைவாக இன்று மெட்ரோபாலிடன் பெருநகரமாக மாறிவிட்டது. தனது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒரு மாடலாக இந்தப் பெருநகரத்தை சீன அரசு காட்டுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள வாதவான் (Vadhawan) பகுதி, மேற்குவங்கத்தில் உள்ள சாகர் (Sagar) பகுதிகளில் 14 கடற்கரையோர பொருளாதார மண்டலங்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. தொழில் நடத்துவதை எளிதாக்குவது (Ease of Doing Business) என்பதை இந்தியா உத்தரவாதப்படுத்த வேண்டும். குறிப்பாக, இது தொடர்பான கொள்கை முடிவுகளை பதவிக்கு வருகிற கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றுவதுதான் பிரச்சினை; அப்படி மாற்றும்போது முந்தைய அரசின் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவுகளையும் மாற்றங்களையும் புதிய அரசு தனது புதிய கொள்கை காரணமாக மாற்றி அமைக்கின்றது.

இதற்கேற்ப கம்பெனிகள் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இது அவைகளுக்குப் பெருத்த இடையூறுகளையும் தொல்லைகளையும் பாதகங்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையை உருவாக்குவது மிகமிக அவசியம் என்று முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணர் பிரனோப் சென் கூறியுள்ளார்.

இன்று, உலகளாவிய அளவில் எல்லா நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ந்துவிட்டன. கீழ்நோக்கிய வளர்ச்சிதான் அதிகரித்து வருகின்றது. அதேவேளையில் சீனாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, ஐ.எம்.எஃப்.-ன் மதிப்பீட்டின்படி 2020-ல் 1.2% இருக்கும். மேலும், சீனாவின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டுமான அமைப்புகளும் தொழில்நடத்தத் தேவையான எல்லாச் சூழ்நிலைகளும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மனம் குளிரத்தக்க வகையில் உள்ளன. அந்நாட்டின் வினியோக அல்லது மதிப்புச் சங்கிலியின் அமைப்பு முன்னேறியது.

உலகளாவிய வினியோகச் சங்கிலியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. 2020-ல் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிகர உள்நாட்டு உற்பத்தி முறையே -7.2%, -7.0%, -6.5% தான் இருக்கும் என்று ஐ.எம்.எஃப். கணித்துள்ளது. எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனாவில் இயங்கும் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பான் போன்ற நாடுகளின் கம்பெனிகள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கான எந்தத் தூண்டுதலோ, தொழில் வர்த்தக ரீதியான ஆதாயத்திற்கான தர்க்கமோ ஏதும் இல்லை. உலக மேலாதிக்கப் போட்டி எனும் அரசியல் சித்தாந்தக் காரணங்களுக்காக டிரம்ப் எவ்வளவு ஆவேசமாக சீன எதிர்ப்புப் பேசி சீனாவிலுள்ள முதலீடுகளை எடுத்துக்கொண்டு அமெரிக்கக் கம்பெனிகள் வெளியேற வேண்டும் என்று கரடியாகக் கத்தினாலும் அவைகள் வெளியேற எவ்விதக் காரணமும் இல்லை. சீனாவிலேயே தங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்வதோடு தங்களது இலாப விதிதங்களை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்றுதான் அவை சிந்திக்கும்.

இந்த எதார்த்தத்தை இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடி கார்ப்பரேட்-காவி பாசிசக் கும்பலும் எதிர்கொண்டுள்ளனர். 2019-ல் இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அவர்கள் எதிர்கொண்டுவரும் இந்த உலகப் பொருளாதார-முதலீட்டுச் சூழ்நிலையயை, இன்று கோவிட்-19 கொள்ளை நோய் பன்மடங்கு தீவிரமாக்கி விட்டுள்ளது. இது அவர்களை தாங்கள் ஏற்கனவே பின்பற்றி வந்த நாட்டை மறுகாலனியாக்கும் புதிய தாராளவாதக் கொள்கைகளையும் அமெரிக்க சார்பு – சீன எதிர்ப்பு நிலையையும் இன்னும் தீவிரமாகக் கொண்டுச் செல்ல நிர்பந்தித்துள்ளது. அவர்கள் முன் நிற்கும் ஒரே வழியும் இதுமட்டுமே.

பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பல்களும் கார்ப்பரேட்டுகளும் வரி, சுற்றுச்சூழல், தொழிலாளர் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்று பல துறைகளில், முனைகளில் எண்ணற்ற கட்டுமானச் சீர்த்திருத்தங்களைச் செய்ய உத்தரவிடுகிறார்கள். அவற்றை எவ்வித அடிப்படையும் இன்றி அப்படியே ஏற்று அமுல்படுத்தி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமே உகந்ததாகக் கருதப்படும் வியட்நாம், தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகள் கொடுக்கும் சலுகைகள், காட்டும் பவ்வியம், அடிவருடித்தனம் ஆகியவற்றைக் காட்டிலும் அதிகமாக வழங்கி அவர்களது மனங்களை எந்த அளவிற்கு குளிர்விக்க, குதூகலம் கொள்ளச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கும் பரிமாணத்திற்கும் செய்ய, எல்லாவற்றையும் துறக்கத் தயாராகிவிட்டார்கள். அதற்கேற்ப எந்த அளவுக்கு மக்களை ஈவிரக்கமற்ற கொடூர முறைகளில் அடக்கி ஒடுக்கி கசக்கிப் பிழிய, மக்கள் தொகையில் 10-15% பேர் மடிந்து மண்ணாகிப் போனால்தான் இது நடக்கும் என்று நன்றாகத் தெரிந்தும் மக்களின் மென்னியை நெறித்துச் சுரண்ட, கொடிய பாசிசச் சட்டங்களைப் போட்டு – சமூகத்தையும் அரசின் எல்லாத் துறைகளையும் பாசிசமயமாக்கி வருகிறார்கள்.

இதன் வெளிப்பாட்டு அறிவிப்புதான் 20 இலட்சம் கோடி மீட்புத்திட்டம். இதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர், “ஆத்மநிர்பார் பாரத் அபியான் – சுயசார்பு பாரதத் திட்டம்” ஆனால் உண்மையில் அது ஆத்மகுலாம் பாரத் அபியான்சுய அடிமை பாரதத் திட்டம் என்பதே சரி!

– புதியவன்

கட்டுரை ஆதாரங்கள்:

08-05-2020 தேதியிட்ட பிஸினஸ் ஸ்டாண்டர்ட் இதழில் வெளிவந்த கட்டுரைகள்

  • India to attract 1,000 US firms out of China – Blooberg
  • Offer Stable policy regime to woo companies: Experts – BS reporters

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க